Saturday, November 9, 2019

உலகமே வியந்து பார்க்கும் OktoberFest திருவிழா


இரண்டு வாரங்களில் 60 இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள்! 60 முதல் 70 இலட்சம் லிட்டர் பீர் விற்பனை!! இதெல்லாம் எங்கே என்கிறீர்களா? ஜெர்மனியின் மூனிச் நகரில்.
உலகின் பல பகுதிகளிலும் இருந்து, நிறைய சுற்றுலாப் பயணிகள் இந்தத் திருவிழாவிற்கு வருகை தருகிறார்கள். இது என்ன விழா என்று தெரிந்து கொள்ளவேண்டுமானால், டைம் மெஷினில் 200 வருடங்களுக்கு முன், அதாவது அக்டோபர் 12, 1810 ம் வருடத்திற்கு நாம் பயணிக்க வேண்டும். அன்று தான் பவேரிய மாநிலத்தின் முதலாம் லுட்விக் அரசர், "Sachsen-Hildburghausen" இளவரசி தெரேஸே -வை திருமணம் செய்துகொண்டார்.அன்று, அது மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்பட்டது. அடுத்த வருடமே, விவசாயக் கண்காட்சியும் இதனுடன் சேர்ந்து கொள்ள, 1818ல் பீர் 'ஃபப்' கள் தங்கள் கலைஞர்களுடன் இணைந்துகொண்டனர். இன்றோ 60 முதல் 70 இலட்சம் மக்கள் இதைத் திருவிழாவாக இரண்டு வாரங்கள் உற்சாகமாய் கொண்டாடுகிறார்கள்.
30 க்கும் அதிகமான பீர் கூடாரங்கள்! ஒவ்வொன்றிலும் 4,000 முதல் 10,000 பேர் வரையிலும் அமர்ந்து பீர் பருகலாம். டான்ஸ், மியூசிக், என்று மக்களை துள்ளாட்டம் போட வைக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஒருபுறம்! பீருடன் சேர்த்து சிறிய உப்புக் கற்கள் தூவப்பட்ட ஜெர்மனியின் பிரத்தியேக "Pretzel" பிரட் சாப்பிடுவோர் மறுபுறம், என்று அந்த மைதானமே மக்களின் உற்சாக வெள்ளத்தில்!
இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்த திருவிழா, கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி இரண்டும் இணைந்த அக்டோபர் 3ம் தேதியை உள்ளடக்கிய விதமாக, ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் சனிக்கிழமை ஆரம்பித்து அக்டோபர் முதல் வாரம் ஞாயிறன்று முடிவடையும். அந்த வகையில் இந்த வருடம் செப்டம்பர் 21ம் தேதி மதியம் 12 மணிக்கு ஆரம்பித்து வரும் 6ம் தேதி நள்ளிரவு 11:30 மணிக்கு முடிவடைகிறது.
தொடக்கவிழா, Schottenhamel கூடாரத்தில் மூனிச் நகர மேயர் பீர் பேரலைத் தட்டி “O’Zapft Is!” ( இது தட்டப்பட்டது) என்று கூறி தொடங்கிவைத்தார். அதன் பின் அனைவரின் கையிலும் பீர் கோப்பைகள் தான்.மாலை வேளையிலும் விடுமுறை நாடுகளிலும் முன்பதிவு செய்யவில்லை என்றால் பீர் கூடாரங்களில் இடம் கிடைப்பது என்பது குதிரைக்கொம்புதான்."No fear - Beer is near" என்று மனதை தேற்றிக்கொள்ளவேண்டியது தான்.
விழாவின் முதல் சனிக்கிழமை மதுபான உரிமையாளர்கள் மற்றும் பெருநிலக்கிழார்களின் பரேட் நடைபெறும். இதைப் பார்க்க அன்றையநாளில் கூட்டம் அலைமோதும். வருகைதரும் பெரும்பான்மையினர் "lederhosen and dirndls" என்ற பாரம்பரிய உடையை அணிந்து தான் வருகிறார்கள். காரில் வருவோருக்கு பார்க்கிங் பிரச்சினை கண்டிப்பாக இருக்கும். பாதாள ரயில் அல்லது டாக்ஸி மூலம் எளிதாக விழா மைதானத்தை அடையலாம்.
ராட்சஷ இராட்டினங்கள் போன்ற வெளி அரங்க விளையாட்டுகள் ஒருபுறம் என்றால் செஸ் போன்ற உள் அரங்க விளையாட்டுகள் மறுபுறம். செஸ் விளையாட்டிலும் தோற்றவர், ஜெயித்தவருக்கு பீர் வாங்கிக் கொடுக்கவேண்டும். கையில் எத்தனை பீர் குவளைகளை யார் அதிக நேரம்/அதிக தூரம் கொண்டு செல்கிறார்கள் என்றும் போட்டி உண்டு. நடனம் ஆடுபவர்கள் தரையிலோ அல்லது பெஞ்ச் மேலே ஏறி நின்றோ ஆடலாம். ஆனால் மேஜை மீது ஏறி நடனமாட அனுமதி இல்லை.
நுழைவுக் கட்டணம் கிடையாது. ஆனால் பீர் அருந்த மேஜை முன்பதிவு செய்ய பணம் கட்டவேண்டும்.பீர் ஒரு லிட்டர் 10.80 ஈரோ முதல் 11.80 ஈரோ வரை. கடந்த வருடத்தை விட இது 3.1% அதிகம். தண்ணீர் மற்றும் பிற உணவு வகைகளும் விலை சற்று அதிகம் தான்.
காலநிலையைப் பொறுத்தவரையில் சில சமயம் குளிராய் இருக்கும். இந்த வருடம் 23 டிகிரி வரையிலும் இருக்கிறது. அதனால் மக்களுக்கு சந்தோசம் தான் கூடாரங்களுக்குள் புகைபிடிக்க அனுமதி இல்லை. ஆனால் இதற்காக ஒவ்வொரு கூடாரத்தில் பிரத்தியேக இடம் ஒதுக்கி இருக்கிறார்கள்.
மொத்தத்தில் கை நிறைய பணம் இருந்தால் இரண்டுவாரமும் கொண்டாட்டம் தான்.

No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram