முகநூல் பக்கத்தில், 'write a post' பெட்டியில் 'க்ளிக்' செய்து அந்த சிறுகதையை எழுதி முடித்தான், 'ஜே' என்று எழுத்தாளர் வட்டத்தில் அழைக்கப்படும் ஜேசுதாஸ்.
கூகிள் பிரவுசரில் இன்னொரு 'tab' ல் ஜேசுதாஸ் ஆன்லைன் ரேடியோவில் பாடிக்கொண்டிருந்தார். ஜேசுதாஸ் பாடல்கள் என்றால் அவனுக்கு உயிர். பிற்காலத்தில், தனக்கு ஜேசுதாஸ் பாடல்கள் பிடிக்கும் என்று தெரிந்து தான் இந்த பெயரை வைத்திருப்பார்களோ என்று ஆயிரம் தடவையாவது அம்மாவிடம் கேட்டிருப்பான். ஒவ்வொரு தடவையும் ஏதாவது காரணம் சொல்லி அவனை குளிர்விப்பாள் அம்மா செண்பகவல்லி. அப்பா காவல்துறையில் எழுத்தாளர் பிரிவில் வேலை. கடந்த வருடம் தான் மாற்றலாகி நாகர்கோவிலுக்கு வந்திருந்தார். இன்னும் இரண்டு வருடங்களில் ரிடையர்டு ஆகிவிடுவார்.
எழுத்தின் மீதுள்ள ஆர்வத்தில் முகநூலில் எழுதிக்கொண்டிருக்கிறான் ஜே. ஆனாலும் அவன் இலக்கு சினிமா தான். எப்படியாவது சினிமாவில் கதாசிரியராகிவிட வேண்டும் என்பது அவனின் நீண்ட நாள் கனவு. கல்லூரி முடித்து இன்றோடு முழுசாக ஒரு வருடம் ஆகிவிட்டது. சிவகாசியில் கல்லூரி முடித்த கையோடு அப்பாவுடன் நாகர்கோவிலுக்கு வந்துவிட்டான்.
'ஏதாவது வேலைக்குப் போயேண்டா ' என்று அம்மா சொன்னால், நீ மட்டும் வீட்டிலே சும்மா தானே இருக்கே, நானும் உனக்குத் துணைக்கு இருக்கிறேன் என்பான்.
"என்னங்க! இங்க இருந்தா இவன் உருப்பட மாட்டான். இவனை சென்னைக்கு போய் எதாவது ஒரு வேலை பாக்கச் சொல்லுங்க"
'இப்போ என்ன ஆகிப்போச்சு. இன்னும் கொஞ்ச நாள் இங்க இருக்கட்டுமே. நான் தான் சம்பாதிக்கிறேனே. அவன் வெளியூருக்குப் போயிட்டா அப்புறம் நாம ரெண்டு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகிட்டு இருக்க வேண்டியது தான்' இது அப்பா நல்ல சிவம்.
"பொண்ணு பாக்க போகும் போது என்ன வேலை செய்யிறான்னு கேட்டா என்ன பதில் சொல்றீங்கனு பாக்கத்தானே போறேன்"
'ஏண்டி! இப்போ தானே 23 வயசு ஆகுது. இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும். அப்புறம் வேலைக்குப் போவான். சும்மா 'தொண தொண'னு பேசி அவனை வெறுப்பேத்தாதே'
" நான் சொன்ன கேட்கவா போறீங்க" என்றவள்
" கம்யூட்டர் 'ஆன்' பண்ணி வச்சிட்டு எங்கேயோ போயிட்டான் பாருங்க...., ஜே ...ஜே"
'வந்துட்டேன்' என்றவன், பாத்ரூம் கதவைப் பூட்டி விட்டு அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான். கைகள், கூகிளில் அவன் எழுதிய கதைக்குப் பொருத்தமான 'காப்பி ரைட் பிரீ ' புகைப்படத்தைத் தேடியது.
கம்பியூட்டர் ஸ்பீக்கரில் 'அம்மா என்றழைக்காத உயிரிழையே ....' என்று உருகும் குரலில் ஜேசுதாஸ் பாடிக்கொண்டிருந்தார்.
"நான் இங்க தானே இருக்கேன், கொஞ்சம் அந்த சவுண்டை கொறைச்சி தான் வையேன்" என்றவள், ஸ்பீக்கரில் உள்ள வால்யூம் பட்டனைத் திருகி சத்தத்தைக் குறைத்தாள்.
'வயசான காலத்துல, உன் கட்டிலின் நாலு கால்லயும் ஸ்பீக்கர் கட்டி, நாள் முழுக்க புல் சவுண்டுல பாட்டு போடுவேன், அப்போ என்ன செய்வே'
"படவா ..." என்று கையில் இருந்த சுரைக்காயால் செல்லமாக தன் மகனில் தலையில் கொட்டி விட்டு சமயலறைக்கு சென்றாள்.
புகைப்படத்தை அப்லோடு செய்து, 'share now' பட்டனை 'கிளிக்' செய்து தன் சிறுகதையை முகநூலில் போஸ்ட் செய்தான்.
வெளியே பைக் சத்தம் கேட்டது.
அப்பா மதிய சாப்பாட்டுக்கு வந்துவிட்டார்.
"கதாசிரியரே! வந்து சாப்பிட்டுட்டு உன் வேலையைப் பாரு, எனக்கு டி.வி ல சீரியல் பாக்கணும்"
கம்பியூட்டரில், தன் கதையை தினசரிமாலை பத்திரிக்கைக்கு அனுப்பிவிட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த அப்பா பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.
அம்மா அவனுக்குப் பரிமாறினாள்.
"தினமும் பாவக்கா கூட்டு தானா?, நாவல் கொட்டையும் சுகருக்கு நல்லது தான். நீ அத சாப்பிடு. எனக்கு வேற கூட்டு வை" என்றான் எரிச்சலாக.
'உனக்கு பிடிச்ச சுரைக்காய் சாம்பாரும் இருக்குடா' என்று அவன் தலையைத் தடவியவள், தட்டில் சோறு போட்டு சாம்பார் ஊற்றி அவன் முன் வைத்தாள்.
'இன்னிக்கு என்ன கத டா எழுதியிருக்கே?' நல்ல சிவம் கேட்டார்.
"சூப்பரான 'காதல் கொலை' கதப்பா" தனியாங்குளம் னு ஒரு கிராமத்துல கதை நடக்கிற மாதிரி எழுதியிருக்கேன். தினசரிமாலை பத்திரிக்கைக்கும் அனுப்பி இருக்கேன். ஏதாவது டைரக்டர் என்கிட்ட கதை கேட்டா, இந்த கதையைத் தான் முதல்ல சொல்வேன். விஜய் சேதுபதி நடிச்சா சூப்பரா ஓடும்".
'அதுக்கு இங்கே வீட்டுக்குள்ளே இருந்துகிட்டா ஒன்னும் நடக்காது, சென்னைக்குப் போகணும்' என்றாள் செண்பகவல்லி.
"அவனை குறை சொல்லாட்டி உனக்கு தூக்கம் வராதே" மகனுக்கு வக்காலத்து வாங்கினார் நல்லசிவம்.
'உன் கட்டில் காலுல ஸ்பீக்கர் உறுதிதான்மா...' சிரித்தான் ஜே. கூடவே அம்மாவும், அப்பாவும்.
சாப்பாடு மேஜையில் உள்ள அனைத்து பாத்திரங்களையும் எடுத்து கிச்சன் 'சிங்'கில் போட்டாள் செண்பகவல்லி. இனி சீரியல் பார்த்துவிட்டுத்தான் கழுவணும். மனதிற்குள் நினைத்துக்கொண்டே டிவியை ஆன் செய்தாள்.
'நான் சாயந்திரம் வர லேட்டா ஆகும் ' நல்லசிவம் சொல்லிக்கொண்டே வெளியில் வந்து பைக்கை ஸ்டார்ட் செய்தார்.
ஜே, கை கழுவிவிட்டு கம்பியூட்டர் நாற்காலியில் உட்கார்ந்தான். தன் கதைக்கு எத்தனை பேர் 'லைக்' போட்டிருக்கிறார்கள் என்று பார்க்க பேஸ்புக்கில் 'லாகின்' செய்தான். அரை மணி நேரத்தில் நாற்பத்திமூன்று பேர் லைக் செய்திருந்தனர். கீழே கமெண்ட் பகுதியில்,
"சார், நான் உங்க ரசிகன் சார், உங்க கதை எல்லாத்தையும் படிச்சிருவேன். இந்த கதையை படிச்சவுடன் எனக்கு சந்தோஷமாயிடிச்சி. எங்க ஊர் தனியாங்குளத்தை அப்படியே எழுதியிருக்கீங்க"
ஜே வுக்கு ஆச்சரியமாயிருந்தது.
தனியாங்குளம்னு ஒரு கிராமம் இருக்கா? நாம கதைக்காகத் தானே அப்படி ஒரு ஊரை எழுதினோம். உண்மையிலேயே அப்படி ஒரு கிராமம்.....எப்படி? யோசித்துக்கொண்டிருக்கும் போதே,
மீண்டும் அந்த நபரே கமெண்ட் பண்ணியிருந்தார்.
"அந்த தண்ணி டேங்க், அதில் உள்ள முன்னாள் அமைச்சர் கிரி திறந்துவைத்த கல்வெட்டு ,மேற்கு பக்கத்தூணில் ஒட்டியிருந்த சூப்பர் ஸ்டார் பேட்டை பட போஸ்டர்னு எல்லாமே கண் முன்னாடி கொண்டு வந்திருக்கீங்க. எப்போ சார் எங்க ஊருக்கு வந்திருந்தீங்க? நீங்க வர்றது தெரிஞ்சிருந்தா நான் வந்து பார்த்திருப்பேனே. இனி எப்போ வருவீங்க?"
ஜே வுக்கு தூக்கிவாரி போட்டது.
இவன் உண்மையைத்தான் சொல்றானா அல்லது கதையைப் படித்துவிட்டு என்கிட்டயே கதை விடுறானா, குழப்பம் குட்டையில் குதிக்கும் மீன்களாய் அவனின் மனதை ஆக்கிரமித்தது.
நேரடியாக அந்த ஊருக்கே போய் பார்த்துவிடுவோமா? அது எங்கே இருக்கிறது? எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? அவனுள் பல கேள்விகள்!
"உங்க மொபைல் நம்பர் தருவீர்களா?"
'98......43' என்று உடனே பதில்வந்து ஜே வுக்கு.
தன் மொபைலை எடுத்து எண்களைத் தட்டினான்.
'நான் ஜே பேசுறேன்.உங்க ஊருக்கு இன்னைக்கு வரலாம்னு இருக்கேன். இப்போ நாகர்கோவில இருக்கிறேன். இங்கிருந்து எவ்வளவு நேரம் ஆகும்?'
'ஒரு மணி நேரம் ஆகும் சார். திருவனந்தபுரம் பஸ்ல ஏறி மார்த்தாண்டம்னு டிக்கெட் எடுங்க. இறங்கி, மினி பஸ்ல தனியாங்குளம்னு கேட்டா அவனே இறக்கி வுட்டுருவான். நான் இங்க பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பண்றேன்'.
உண்மையிலேயே அப்படி ஒரு ஊர் இருக்கா அல்லது கூப்பிட்டு வைத்து என்னை எதுவும் செய்யப்போகிறானா? ஜே வுக்குள் பயம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.
அப்பா, காவல் துறையில் தானே இருக்கார். என்ன வந்தாலும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று நினைத்தவன்,
"அம்மா, நான் பிரண்டை பாக்கப் போறேன்" என்று அவள் பதிலுக்கு காத்திருக்காமல் வெளியேறினான்.
வடசேரி பேருந்து நிலையத்துக்கு வந்தவன், அங்கு நின்றுக்கொண்டிருந்த திருவனந்தபுரம் பஸ்ஸில் ஏறினான்.
பேருந்து முன்னே செல்ல, அவன் மனம் பின்னோக்கி கதைக்குள் சென்றது.
"தனியாங்குளம், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஒரு அழகான கிராமம். எங்கு நோக்கினும் பச்சை பசேல் என்று புல்வெளிகள், செடி கொடிகள், மரங்கள்...... லேசான தூறல் எப்போதும். ரியா கல்லூரி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தாள். அப்பா பெருநிலக்கிழார். அவள் அழகுக்கு அந்த ஊர் இளைஞர்கள் அனைவருமே அடிமை சாசனம் எழுதி வைக்கத்தயாராய் இருந்தார்கள்.
ஒருநாள் மாலை நேரம், ஊருக்கு பக்கத்தில் இருக்கும் மாந்தோப்புக்கு மாம்பழம் பறிக்க ரியா செல்கிறாள். அங்கே காட்டெருமை அவளைத் துரத்த, ஒரு பெரிய மரத்தில் ஏறி தப்பிக்கிறாள். எப்படி இறங்குவது என்று தெரியாமல் அவள் தவிக்க, மாலை மயங்குகிறது."
'மார்த்தாண்டம் இறங்குங்க...' கண்டக்டர் ஒருமுறை விசில் ஊத பஸ் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தது.
ஜே பேருந்திலிருந்து இறங்கினான். இடது கையைத் தூக்கி மணியைப் பார்த்தான். மணி நாலு.
பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தவன், மினி பஸ் நிற்கும் இடத்திற்கு வந்தான்.
"இந்த பஸ் தனியாங்குளம் போகுமா?"
'போகும், ஏறுங்க'
18 வயது தான் இருக்கும் அவனுக்கு. டீ ஷார்ட்டை இன் செய்திருந்தவன், அதற்கு மேலே பட்டன்கள் திறந்த காக்கிச் சட்டையைப் போட்டு, ரஜினி ஸ்டைலில் முடியை கோதி விட்டுக்கொண்டே பதில் சொன்னான்.
"தனியாங்குளம் வந்தா கொஞ்சம் சொல்லுங்க"
'சரி' என்றவன், டபுள் விசிலடிக்க சிற்றுந்து புறப்பட்டது. ஜே வின் மனசும் கதையை அசை போட்டது.
"யாராவது காப்பாத்துங்க ....." சத்தம் போட ஆரம்பித்தாள் ரியா.
சத்தம் கேட்டு அங்கு வந்தான் சந்தோஷ். அவளுக்காக அவள் அழகுக்காக அடிமை சாசனம் எழுதி வைக்கத் தயாராய் இருக்கும் அதே ஊர் விடலை அவன்.
அந்த மாலை வேளையில் அவளைப் பார்த்தவனுக்கு நாடி நரம்புகள் முறுக்கேறியது. அவளை நெருங்கினான்."
'சார், தனியாங்குளம் வந்தாச்சி, இறங்குங்க' ரஜினி ஸ்டைல் கண்டக்டர் ஜே வை உசுப்பினான்.
தன் நினைவிலிருந்து மீண்டவனாய், இருக்கையில் இருந்து எழுந்து சிற்றுந்து படிகளில் இறங்கினான்.
சிற்றுந்து புறப்பட, கண்களை சுழல விட்டவனுக்கு ஒரே ஆச்சரியம். கதையில் எழுதியது போலவே, பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு மின் கம்பம். அதில் கேபிள் வயர் சுற்றிஇருக்க, கிழிந்த திருமண பேனர் ஒன்று காற்றில் ஆடிக்கொண்டிருந்தது.அருகிலே கால்வாய். தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அதில் இரண்டு சிறுவர்கள் அம்மாவின் கிழிந்த சேலையை வைத்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
ஜே வுக்கு சற்று வியர்க்க ஆரம்பித்தது.
நான் எழுதியது அப்படியே என் கண் முன்னே நடக்கிறதே!
இந்த மின் கம்பம்- கேபிள் வயர்- கிழிந்த திருமண பேனர் இதையெல்லாம் கூட 'டே ஜா வூ' என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் , இந்த இரண்டு சிறுவர்கள் மீன் பிடிப்பது நான் எழுதியது போலவே என் கண் முன்னாலேயே நடந்து கொண்டிருக்கிறதே. அது எப்படி? பேசாமல் மீண்டும் வந்த வழியே ஊருக்கு போய் விடலாமா? என்று திரும்பியவனின் தோளில் ஒரு கை விழுந்தது.
"நீங்க தானே எழுத்தாளர் ஜே?" லுங்கி தான் கட்டியிருந்தான்.
'காலேஜ் முடிச்சிருக்கேன். படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கல. அதான் வேலை கிடைக்கிறது வரைக்கும் அப்பாவோட கடைக்கு வேண்டிய சாமான்களை வாங்குறது, வீடுகளுக்கு தண்ணி கேன் போடுறது னு அவருக்கு ஒத்தாசையா இருக்கேன். உங்க கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். எல்லாக் கதைகளையும் உடனுக்குடன் படிச்சிருவேன். இதுக்கு முன்னாடி எப்போ சார் எங்க ஊருக்கு வந்தீங்க?'
"நான் .....இப்போ தான்....முதல் முறையா வரேன்"
'சும்மா கத விடாதீங்க சார்'
"நான் அந்த தண்ணி டேங்கை பார்க்கலாமா?"
'வாங்க சார், கூட்டிட்டுப் போறேன்'
எங்கு நோக்கினும் பச்சை பசேல் புல்வெளிகள்..........
தான் எழுதியது போலவே அனைத்தும். அப்படின்னா அந்த பொண்ணு ரியா? அவள் உண்மையிலேயே இருக்கிறாளா? அவனுள் ஆர்வம் எட்டிப்பார்த்தது.
முன்னால் நடந்துகொண்டிருந்தவனைப் பார்த்துக் கேட்டான்.
"உங்க ஊர்ல ரியா னு யாரவது ........."
'ஆமா சார், கதையில நீங்க பேரையாவது மாத்தி இருக்கலாம், அவ படிச்சா மனசு சங்கடப்படுவா. ஊருக்கு போனவுடன் மாத்திருங்க சார்'
"ம்...ம், மாந்தோப்பு இருக்கா?"
'தண்ணி டேங்கை ஒட்டி தான் அந்த பெரிய மாந்தோப்பு இருக்கு, அத ரியா அப்பா தான் குத்தகைக்கு எடுத்திருக்காரு. நிறைய நிலம் அவருக்கு இருக்கு'
கேட்க கேட்க ஜே வுக்கு நடப்பதெல்லாம் கனவா நனவா என்று இருந்தது.
அவன் காலடியை பின் தொடர்ந்து அந்த ஒத்தையடி பாதையில் ஜே நடந்து கொண்டிருந்தான்.மனம் கதையை நினைத்தது.
"சூரியன் மேற்கு தொடர்ச்சி மலைக்குள் மறைய ஆரம்பித்தது. ரியா மாமர கிளையில் தவிக்க, சந்தோஷ் அவளை இறக்குவது மாதிரி பிடித்து பின்புறமாக அலேக்காகத் தூக்கினான்.
"விடு, என்னை விடு...." கால்களை உதறி கை நகங்களால் அவனின் கைகளைப் பிராண்டினாள். அவள் திமிர, அவன் வெறி கொண்ட மட்டும் அவளை இறுக்கினான். அவளின் திமிறலில் அவனின் லுங்கி அவிழ்ந்தது. அவனின் கையை அவள் கடிக்க, பிடி விலகியது. கீழே விழுந்தவள், அருகில் கிடந்த உடைந்த கண்ணாடியை எடுத்தாள்.
"கிட்ட வராதே, வந்தா குத்திடுவேன்...வராதே"
அவனின் மோகவெறி முன்னே போகச் சொல்ல, அந்த கண்ணாடி அவன் வயிற்றை பதம் பார்த்தது. அவனின் கண்கள் நிலை குத்த, உயிர் பிரிந்து போயிருந்தது. பக்கத்தில் இருந்த கிணற்றில் கண்ணாடித்துண்டை வீசியவள் வேகமாக நடந்தாள் காட்டெருமை அவனைக் குத்தியதை ஊருக்குச் சொல்ல"
'அதோ பாருங்க தண்ணி டேங்க்' அவன் காட்டிய திசையில் பார்த்தவனுக்குள் மிரட்சி. பேட்டை பட போஸ்டர் உட்பட அனைத்தும் கதையில் உள்ள படியே.
"மாந்தோப்புக்கு போகணுமா சார்"
'வேண்டாம், திரும்பிடலாம். இப்பவே மணி அஞ்சரை ஆச்சி. நான் ஊருக்குப் போகணும்.'
"இவ்வளவு தூரம் வந்தாச்சு. அடுத்தது தான் தோப்பு. ஒரு எட்டு போயிட்டு உடனே திரும்பிடலாம்"
"ஏ சந்தோஷ் அண்ணே! எனக்கு பட்டம் செய்து தரேன்னு சொன்னியே, எப்போ தருவ" தூரத்தில் ஒரு சிறுவன் யாரிடமோ கேட்பது தெரிந்தது.
சந்தோஷ் .....இந்த பெயர்.....என் கதையில .......ரியாவை ....ஓ கடவுளே.....அவன் இங்கே தான் இருக்கிறானா....யாரு...எந்த பக்கம்......ஜே மனதிற்குள் பயம் ஒட்டிக்கொண்டது.
'நாளைக்கு செய்து தர்றேண்டா' இவன் பதில் கூற ஜே வுக்கு உடலில் இரத்தம் உறைந்து போனது.
"உங்க பெயர் தான் சந்தோஷா "
'ஆமா, நீங்க கூட உங்க கதையில ரியாவை நான் கெடுக்கிறது மாதிரி எழுதியிருந்தீங்களே. நான் அப்படியெல்லாம் கிடையாதுங்க. ஊருல என்னைப் பத்தி கேட்டுப்பாருங்க. தயவு செஞ்சி உங்க கதையில எங்க ரெண்டு பேரோட பெயர்களையும் மாத்திடுங்க சார், ப்ளீஸ்'
ஜே வுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அதற்குள் மாந்தோப்புக்குள் வந்திருந்தனர்.
"காட்டெருமை........ காப்பாத்துங்க......யாரவது காப்பாத்துங்க........" ஒரு பெண்ணின் சத்தம்
இருவரும் உள்ளே ஓடினர்.
அங்கே ஒரு மாமரத்தின் மேலேயிருந்து ரியாவின் குரல்.
இருவரும் அருகில் சென்றனர்.
"பாத்து! மெதுவா என் கையை பிடிச்சிக்க" சந்தோஷ் கை நீட்டினான்.
கை பிடிக்க குனிந்தவள் நிலை தடுமாற, அவன், அலேக்காக அவளைத் தூக்கினான். மெதுவாக கீழே இறக்க இறக்க, அவனின் கைப்பிடி இறுகியது.
நொடியில் புரிந்து கொண்டவள், அவனின் கைய பிரண்ட, அவளை விடுவித்தவன், தன்னை பிடிக்க வந்த ஜே வை முழங்கையினால் இடித்து தள்ளினான். ஜே தூரப் போய் விழுந்தான். அதற்குள் சுதாரித்து சுற்றும் முற்றும் பார்த்த ரியா, அருகில் கிடந்த உடைந்த கண்ணாடியை எடுத்தாள்.
சந்தோஷ் அவள் மேல் பாய, ரியா கண்ணாடியை நீட்ட,
ஜே ஓடி வந்து மின்னல் வேகத்தில் விண்ணில் காலை வீசி சந்தோஷை புட் பால் ஆட,
ஜே ஓடி வந்து மின்னல் வேகத்தில் விண்ணில் காலை வீசி சந்தோஷை புட் பால் ஆட,
கண்ணாடியிலிருந்து தப்பித்து மாமரத்தில் போய் மோதினான் சந்தோஷ். அருகில் வந்த ஜே, சந்தோஷின் கன்னங்களில் "பளார் பளார்" என்று அறை விட்டான். பொறி கலங்கிய சந்தோஷ் இயல்பு நிலைக்கு வந்தான். மெதுவாக தலை நிமிர்ந்து பார்த்தான். ஜேவும் ரியாவும் அருகே நின்றிருந்தனர்.
கைகளை குவித்து வணங்கினான். கண்களில் கண்ணீர்.
"ஐயோ, ஒரு நொடியிலே என்னை மறந்துட்டேனே....தப்பு பண்ணிட்டேனே ....தப்பு பண்ணிட்டேனே ....ஐயோ...." தன் முகத்தில் அடித்துக் கொண்டான்.
"என்னை மன்னிச்சிரு ரியா, சாத்தியமா இனி என் நிழல் கூட உன் மேல படாது. மன்னிச்சிட்டேன்னு சொல்லு ரியா ........மன்னிச்சிட்டேன்னு சொல்லு ரியா" தன் தவறை உணர்ந்து அழுதான் சந்தோஷ்.
ரியா, அவனைப் பார்த்துக்கொண்டே தன் கைகள் இரண்டையும் தட்டி, தூசியை உதறினாள். அது காற்றில் பறந்து சந்தோஷின் முகத்தில் பரவியது.
ஜே அதை துடைத்துவிட்டான்.
சந்தோஷ் ரியாவைப் பார்த்தான்.
"நான் இதை மறந்துட்டேன், நீயும் மறந்திடு" ரியா சொல்லிக்கொண்டே, அவனுக்கு கை நீட்டி எழும்ப உதவினாள்.
ஜே அவனை தூக்கி விட்டான்.
மூவரும் மாந்தோப்பிலிருந்து வெளியே வந்தனர்.
" ஆணென்ன பெண்ணென்ன, நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான்....." ஜேசுதாஸ், ஜே வின் மொபைலின் ரிங் டோனாக பாடினார்.
பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு மொபைலை எடுத்தான் ஜே.
ரியா கை அசைத்து வீட்டுக்கு கிளம்ப, அவளுக்கு 'bye bye' சொல்லிக்கொண்டே மொபைலை ஆன் செய்தான்.
"தினசரிமாலை பத்திரிக்கைல இருந்து பேசுறேன். நீங்க அனுப்பின கதையை படிச்சி பார்த்தேன். நல்லா இருக்கு. ஆனா, அந்த கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் மாத்தினா நல்லா இருக்கும்னு எடிட்டர் சொல்றாங்க"
'என்ன மாதிரி மாத்தணும் மேடம்'
"கிளைமாக்ஸ்ல சந்தோஷ் சாகிறதுக்குப் பதிலா, அவன் மனசு மாறி, ரியா கிட்ட மன்னிப்பு கேட்கிறமாதிரி இருந்தா நல்லா இருக்கும் னு நினைக்கிறாங்க எடிட்டர். எனக்கும் அது தான் சரினு தோணுது, நீங்க தான் முடிவு எடுக்கணும். என்ன சொல்றீங்க?"
'ஆமா மேடம், அது தான் சரி, அப்படியே மாத்திக்குங்க' சொன்ன ஜே, சந்தோஷ் தோளில் கை போட்டுக்கொண்டே பேருந்து நிலையம் நோக்கி நடந்தான்.
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram