Saturday, November 9, 2019

முட்டை வாசம்: சிறுகதை

https://www.vikatan.com/oddities/miscellaneous/short-story-of-a-good-hearted-old-man

பறக்கும் ஹெலிகாப்டரிலிருந்து பைனாகுலரில் பார்த்தால் நாலைந்து தெருக்கள் தான் எங்க ஊர்.அதில் கிழக்கு மேற்குமான தெருவில் வடக்கு பார்த்த வீடு தான் எங்க வீடு. ஆளுயர சுவர். கேட்டை திறந்து உள்ளே போனால் 20க்கு 30 அடி இடத்தில் ரோஜா மற்றும் பூச்செடிகள். தாண்டி போனால் 30 வருடங்களுக்கு முன்பு கட்டிய 2 மாடி வீடு.வீட்டுக்கு முன்னால் 15 க்கு 15 பந்தல் போட்டு அதில் பூங்கொடிகள் படரவிடப்பட்டிருக்கும். வாசலை ஒட்டி ஒரு நாற்கட்டில். பனை நாரால் பின்னினது. அப்பா அதில் தான் இரவு உறங்குவார்.பகலில் வீட்டுக்கு வருபவர்கள் முதலில் அதில்தான் உட்காருவார்கள். கதவைத் திறந்து உள்ளே சென்றால் 10 க்கு 20 முன்ரூம். அடுத்து அதைவிட சற்று பெரிதாக ஒரு ரூம்.இதை இரண்டாகப்பிரித்து ஒன்றில் பீரோ மற்றும் துணிகள் அடுக்கி வைக்கப்பட்ட VIP பெட்டிகள்.அடுத்ததில் மரக்கட்டில் மற்றும் மாடிக்கான ஏணிப்படி. மூன்றாவது ரூமில் சாப்பாட்டு மேஜை. அடுத்து கிச்சன்.
அப்பாவுக்கு வயது 75. சராசரி இந்தியனின் உயரம். சற்று தடித்த உடல் வாகு. தலை நரைத்திருந்தாலும் கணிசமான அளவு முடியிருக்கும். தினமும் ஷேவ் செய்து இடது பக்க வகிடெடுத்து தலை வாரி வெள்ளை வேட்டியுடன் தான் எப்போதும் இருப்பார்.பள்ளியில் படிக்காவிட்டாலும் மனிதர்களைப் படித்தவர். விஞ்ஞானியின் மூளை அப்பாவுக்கு. விசில் அடித்தாலே மூடிக்கொள்ளும் எலிப்பொறி கண்டுபிடிப்பாளர். அதுவும் அவர் விசில் அடித்தால் மட்டுமே. ஷேவிங் பிளேடுகளைப் பாதியாக உடைத்து மீன் பிடிக்கும் வலையுடன் அவர் செய்த பருந்துத் தடை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பேடெண்ட் பண்ணிவிடலாம் என்றால் "அதெல்லாம் எதுக்குப்பா! " என்பார். வீட்டிலிருந்து வெளியே இறங்கி "L" வடிவ தெருவில் நடந்தால் 50 அடி தூரத்தில் களம். இரண்டு ஆள் உயர மதில் சுவர் நாலாபுறமும். மா, கொய்யா, சப்போடடா, தென்னை இன்னும் நிறைய மரங்கள். உள்ளே நுழைந்தாலே குளுகுளுனு இருக்கும். ஒரு பக்கத்தில் மோட்டார் பம்புடன் கிணறு. அப்பா பெரும்பாலும் இங்கு தான் இருப்பார். அம்மா மதிய சாப்பாடு வீட்டிலிருந்து கொண்டுபோய்விடுவார். ஏதாவது வேலை இருந்தாலொழிய மாலையில் தான் அப்பா வீட்டுக்கு வருவார். அவரின் 40-வது வயதில் தான் நான் பிறந்தேன்.
"நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்" சமையலறையில் இருந்த மனைவியிடம் சொல்லிவிட்டு கதவை சாத்திவிட்டு செருப்பு மாட்டினேன். கேட் திறக்கும் சத்தம் கேட்டது.
அப்பா தான்! கையில் கட்டிங் பிளேயர், ஸ்குரூட்ரைவர் இன்ன பிற உபகரணங்கள். அடுப்பங்கரையில் உள்ள பைப்பில் தண்ணீர் ஒழுகுகிறது என்று காலையில் மனைவி சொன்னது ஞாபகம் வந்தது. அனைத்து வேலைகளையும் அப்பாவே செய்து விடுவார். சுவரில் ஏதாவது உடைந்திருந்தால், கடையில் போய் சிமெண்ட் வாங்கி வந்து சாந்து குழைத்து கொத்தனார் அவதாரம் எடுப்பார். மரபலகைகள் வாங்கிவந்து ஸ்டூல் வகையறாக்கள் செய்வதில் அவர் தச்சு ஆசாரி. சமையலில் ஸ்டார் ஓட்டல் "குக்"குகள் அவரிடம் பாடம் படிக்கவேண்டும். மற்றவர்களை கணிப்பதில் மகா புத்திசாலி.
நான் கேட் அருகில் வரவும், அப்பா கேட்டை நன்றாகத் திறந்து எனக்கு வழிவிட்டார்.
நான் தெருவில் இறங்கவும்,
"ஏடே எப்படி இருக்கே! கொஞ்ச நாளா ஆளை காணோமே"
'சென்னை போயிருந்தேன் மச்சான்!' என்றேன். மச்சான் என்னைக் கடந்து போக, அப்பா இன்னமும் கேட் அருகிலேயே நின்றுகொண்டிருந்தார். அப்பாவின் பார்வை என்னை உள்ளே கூப்பிட்டது.உள்ளே நுழைந்தேன்.
"இவன் கிடட இருந்து ஒதுக்கி இருனு எத்தனை தடவை சொல்லி இருக்கேன், இவெனெல்லாம் நல்லவனில்லை"
'என்கிட்ட நல்லா தானே பேசுறாரு'
"சொன்னா புரியாது உனக்கு" என்ற அப்பாவின் கண்களில் கோபம். உள்ளே சென்றுவிட்டார். அப்பாவின் கோபம் சில நொடிகள் தான். உடனடியா பின்னாலே போய் பேசினா கூட முந்தின நிமிஷம் இருந்த கோபத்திற்கும் இப்போ பேசுவதற்கும் சம்பந்தமே இருக்காது. அவ்வளவு சாதாரணமாக பேசுவார். இது அனுபவமா அல்லது அப்பாவிற்கு கிடைத்த வரமா என்று சொல்லத் தெரியவில்லை.
சாயங்காலம் களத்திற்கு சென்றேன்.சப்போட்டா மரத்துக்கு கீழே, தான் பின்னிய கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து அப்பா காப்பி குடித்துக்கொண்டிருந்தார்.உபயம்: அம்மா
"கண் ஏன் வீங்கியிருக்கு" என்றார் அப்பா.
'கம்பு குத்திடிச்சி'
" எப்போ, எங்க வச்சி?"
'வர்ற வழியில இருக்கிற ஓலை குடிசையில் இருந்த கம்பு'
"பாத்துவரக்கூடாதா" பாசம் வார்த்தையாய்.
'அது ஒன்னும் செய்யாது'
"எதுக்கும் நாளைக்கு ஆஸ்ப்பத்திரிக்கு போய் பாத்துட்டுவா"
'சரி' என்று தலையசைத்தேன்.
"காப்பி குடிக்கிறியா"
'வீட்ல குடிச்சிட்டேன், பீரோ சாவி வேணும்'
இடுப்பில் வேஷ்டி மடிப்பில் வைத்திருந்த சாவியைத் தந்தார்.
வீட்டுக்கு வந்தேன். கொஞ்ச நேரத்தில் அப்பாவும் அம்மாவும்.
அப்பாவின் வார்த்தையில் கோபம் தெரிந்தது.
"அந்த வெளங்காதவெ தான் கம்பாலே உன் கண்ணுல குத்துனானாம், அப்படியா?"
'மச்சான் கையில இருந்த கம்பு தெரியாமத்தான் என் கண்ணுல பட்டுச்சி'
"உங்களுக்கு சொன்ன புரியாது"
அப்பா இப்படி பன்மையில் சொன்னால் வீட்டில் உள்ள அனைவருக்கும் சேர்த்துதான் என்று அர்த்தம்.
மறுநாள் அதிகாலை. அம்மா வழக்கம் போல எழுந்து கேட்டில் தொங்கும் பூட்டைத் திறக்க சாவியை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்தார். அடுத்த சில நொடிகளில்,
"எய்யா ராசா! இங்க ஓடியா" அம்மாவின் குரலில் நடுக்கம்.
நான் எழுந்து ஓட, வெளியே நாற்கட்டிலில் படுத்திருந்த அப்பாவும் என் பின்னாலேயே.
கேட்டின் வெளிப்பக்க படிகளைப் பார்த்ததும் எனக்கு 'பக்'கென்றது. முட்டையை உடைத்து படிகள் முழுவதும் தேய்ததற்கான அடையாளங்கள்.அருகிலேயே உடைந்த முடடை ஓடுகள். வெளியிலிருந்து கேட் வழியாக கை விட்டு உட்பக்க சுவற்றில் கையை முட்டையில் தோய்த்து தேய்ததற்கான அடையாளங்கள்.
மூன்றாவது நாள். காலை 10 மணி இருக்கும்.மழையின் காரணமாக அடர்த்தியாக வளர்ந்திருந்த வீட்டின் முன் பக்க பந்தலில் படர விட்டிருந்த பூங்கொடிகளை ஸ்டூலில் ஏறி நின்று கத்திரியால் அப்பா வெட்டிக்கொண்டிருந்தார். 'டமால்' என்று சத்தம். ஓடிவந்து வெளியே பார்த்தேன். அப்பா கீழே விழுந்து கிடந்தார். அவரால் வலது கையை அசைக்கமுடியவில்லை. தோள்பட்டையில் பயங்கர வலி. உடனே பக்கத்து ஊரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போனேன். தசை முறிவு. கையை அசைக்காமல் இருக்க மாவுக்கட்டு. தினமும் வந்து காட்டச் சொன்னார் டாக்டர். வீட்டிற்கு வந்தோம்.
"யாரோ செய்வினை வைத்து முட்டையை உடைத்திருக்கிறார்கள். அதான் மூன்றாவது நாள் உங்களுக்கு இப்படி ஆயிடிச்சு" என்றார் நலம் விசாரிக்க வந்த பக்கத்துவீட்டுக்காரர்.அம்மாவும், அதுதான் காரணம் என்றார். அப்பா மட்டும் எதையோ யோசித்துக்கொண்டிருந்தார்.
மூன்று வாரம் கழித்து ஆஸ்பத்திரியில் மாவுக் கட்டை பிரித்தார்கள்.அப்பாவின் முகத்தில் சந்தோசம். கையை நன்றாக அசைக்க முடிந்தது.வாசலில் நின்ற ஆட்டோவில் அப்பாவை உட்கார சொல்லிவிட்டு பணம் கட்ட நகர்ந்தேன்.
"ஏடேய்!"
சத்தம் கேட்டு திரும்பினேன்.
டாக்டர் ரூமிலிருந்து வீல் சேரில் மச்சான் வெளியே வந்து கொண்டு இருந்தார். முழங்காலில் பெரிய கட்டு.
'என்னாச்சு, எப்ப நடந்தது? எப்படி?' அதிர்ச்சியில் கேள்விகளை அடுக்கினேன்.
"கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தான். ட்ராக்டரில் இருந்து இறங்கும்போது வழுக்கி, கால்முட்டைத் தரையில் ஊன்றிவிட்டேன்"
'டாகடர் என்ன சொன்னார்'
"ஒரு மாசம் ஆகும்னார். உங்கிடட ஒன்னு சொல்லணும்"
'சொல்லுங்க மச்சான்'
என் வலது கையை அவரின் இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டார். உதடு ஏதோ சொல்லத்துடித்தது. வார்த்தைகள் கண்ணீராய் கண்களில்.
என் கையை இன்னும் கெட்டியாய் பிடிப்பதை என்னால் நன்றாக உணர முடிந்தது. அவரின் கண்ணீர் என் கைகளில்.
ஆட்டோவில் இருந்து அப்பா கூப்பிடும் சத்தம் கேட்ட்து.
"அப்பாவை நல்லா பாத்துக்க" வெடித்து அழுதார், மச்சான்.
நர்ஸ் வந்து அவரை ஊசி போட அழைத்துக்கொண்டு போனார். நான் ஆடோவை நோக்கி நடந்தேன்.
பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து கையில் பட்டிருந்த அவரின் கண்ணீரைத் துடைத்தேன். அது முட்டை வாசனை வீசியது.

No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram