https://www.vikatan.com/arts/literature/indian-living-in-germany-shares-about-his-diwali-experience?fbclid=IwAR00tRIz8gZQZAcWgr2ra0IYFOM-MbxmH7z3_BGDqeuFLjI1QEEDasc38n4
பிராங்பேர்ட் நகரின் `காலுஸ்வார்ட்டே' பகுதியில் தீபாவளித் திருவிழா. கடந்த 19-ம் தேதி மாலை 3 மணி முதல் 7 மணி வரை. இந்த மாதிரி நிகழ்வுகளில் பிற இந்தியர்களையும் சந்திக்க, பழக ஒரு வாய்ப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் போக முடிவெடுத்திருந்தேன்.
18-ம் தேதி, பிராங்பேர்ட் zeil க்குப் போயிருந்த போது, பழைய நண்பன் ராஜூவைப் பார்த்தேன். 1997ல் பிராங்பர்ட் வந்த போது அறிமுகம். அவனும் திருநெல்வேலிதான், அம்பாசமுத்திரம். நானோ வடக்கன்குளம் அருகில் உள்ள பத்திநாதபுரம். சனி ஞாயிறுகளில் பிராங்பேர்ட் நகர வீதிகளை அளப்போம். அக்டோபர் மாதத்தில் மரங்கள் பச்சை, மஞ்சள், சிவப்பு என்று பலவண்ணங்களில் இலைகளை உதிர்ப்பதைப் பார்த்துப் பார்த்து ரசித்த நாள்கள் அவை.
Markus krankenhaus-ல் மகன் மற்றும் மகள் பிறந்த போதும் முதன் முதலாக பரிசுப் பொருள் வாங்கி வந்து என்னைப் பரவசப்படுத்தியவன். அவன் கூட இருப்பது மிகப்பெரிய மாரல் சப்போர்ட். வீடு தீ பற்றி எரிகிறதென்றால் கூட, "கொஞ்சம் இரு! காபி ஆர்டர் செய்திருக்கிறேன், குடிச்சிட்டு போறேன்" என்று சொல்கிற கூலான ஆள். நானோ, அவனுக்கு நேரெதிர்.
அமெரிக்கா சென்றவனை பலவருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பிராங்பேர்ட் நகரில் பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம். ஒரு மணிநேர உரையாடல். அடுத்தநாள் காலுஸ்வார்ட்டேயில் நடக்கும் தீபாவளி கொண்டாட்டத்திற்குச் சேர்ந்தே போவோம் என முடிவானது. மாலை 2:45க்கு அவனின் நண்பர் தியாகுவுடன் காரில் என் வீட்டுக்கு வந்து என்னை பிக்கப் செய்வதாக பிளான்.
சரியாக, தியாகுவின் கார் 2:45க்கு என் வீட்டுக்கு ராஜுவையும் சுமந்துகொண்டு வந்தது.
தியாகுவுக்கும் என் வயதுதான் இருக்கும். முன் வழுக்கு. ஆண் கடல் குதிரை, தன் வயிற்றுக்குள் குஞ்சுகளை வைத்திருப்பது போல சட்டைகுள்ளே மீடியமாய் தொந்தி. டக்-இன் செய்திருந்தார். காரில் பென் டிரைவ் உதவியால் ``போவோமா ஊர்கோலம் ....." குஷ்புவையும், கல்லூரிக் காலத்தையும் நினைவுபடுத்தியது.
"வணக்கம்" என்றார்.
பதிலுக்கு நானும் வணக்கம் சொல்லி பின் பக்க சீட்டில் ராஜுவுடன் அமர்ந்துகொண்டேன். குளிருக்கு இதமாக காரில் ஹீட்டர் 'ஆன்'னாகி இருந்தது.
"என்ன, பளிச்சினு சிவப்பு நிறத்துல சட்டை போட்டிருக்க. கம்யூனிசம் .....? ".
'அதெல்லாம் இல்லப்பா. சிவப்பு நிறம், தைரியத்தை கொடுக்கும், எதிராளியை நிலை குலைய வைக்கும்' னான் சிரித்துக்கொண்டே.
5 நிமிடங்களில், காரை ஒரு கடையில் நிறுத்தினார் சிப்ஸ் வாங்க. திரும்பி வந்தவர் காரை ஸ்டார்ட் செய்ய, அது மக்கர் செய்ய ஆரம்பித்தது. கொஞ்சம் இறங்கி காரை தள்ளுங்க, என்றார். எனக்கு 'பக்' என்றது. என் நண்பனோ, கூலாக,
"வாடா! இறங்கித் தள்ளுவோம்" என்றான்.
தள்ளுறோம்.....தள்ளுறோம்.....தள்ளிக்கொண்டே இருந்தோம்.
"டேய்! ADAC க்கு போன் பண்ணச் சொல்லு" என்றேன் நண்பனிடம் சற்று கோபமாக. ADAC என்பது, நம் கார் ரிப்பேரானால், அவர்கள் வேறு ஒரு காரை கொண்டுவந்து நமக்குத் தந்துவிட்டு நம் காரை ஒர்க் ஷாப்க்கு அவர்களே எடுத்துச் செல்வார்கள். மாதாமாதம் இன்சூரன்ஸ் கட்டியிருக்கவேண்டும்.
'நண்பா! சொர்க்கத்துல உனக்கு ஒரு புண்ணியம் கூடியிருக்கும். என்றான் சிரித்துக்கொண்டே. அவன் எப்போதுமே அப்படித்தான். கோபம் என்பதை அவனிடம் நான் பார்த்ததே கிடையாது.
அவரிடம் ADAC பற்றி கேட்டேன். அதெல்லாம் வீண் செலவு, என்றாரே பார்க்கலாம். அது சரி! அரை மணிநேரம் காரை தள்ளிய எனக்குத்தானே வலி தெரியும். அந்தக் குளிரிலும் வியர்த்தது.
"இது வேலைக்கு ஆவாது, வா. நாம் ட்ரெயினில் போவோம், என்றேன்" நண்பனிடம்.
"ஆபத்து காலத்தில் உதவுபவனே நண்பன்னு 2ங்கிளாஸ் பாடத்துல கரடி சொன்னதை மறந்திட்டியா" என்றான் அவன்.
கோபத்திலும் சிரிப்பு வந்தது எனக்கு.
தன் பக்கத்துவீட்டுக்காரருக்கு, காரை டௌ (Tow) செய்து கொண்டு போக தியாகு போன் செய்திருந்தார். "வரும் வரை கூட இருங்களேன்" என்றார். அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. பக்கத்துவீட்டுக்காரர் வரும்போது மணி மாலை 3:50.
ட்ரெயின் ஸ்டேஷன் நோக்கி நடந்தோம்.
நண்பனுக்கு போன் வரவே, எடுத்து, "செப்பண்டி" என்றான்.
பிராங்பேர்ட் வெஸ்ட்ல இருக்கிற அவனுடைய ஆந்திர நண்பர், குப்பை போட வெளியே வந்த போது கதவு பூட்டிக்கொண்டதாகவும் அவர் வெளியே குளிரில் தவிப்பதாகவும் இவனுக்கு போன் செய்ததாகச் சொன்னான். ஜெர்மனியில் வெளிக்கதவின் கைப்பிடியில், லீவர் வசதி கிடையாது. கதவு சாத்திக்கொண்டால் சாவி போட்டுத்தான் திறக்கமுடியும். அதனால், எப்போதும் சாவியை உடன்பிறப்பு மாதிரி கையிலேயே வைத்திருக்கவேண்டும்.
"schlüsseldienst க்கு போன் செய்ய சொல்லு" என்றேன்.
'அவனுக்கு ஜெர்மன் மொழி தெரியாதே!' என்றவன், இவனே போன் செய்து பேசினான்.
'பிராங்பேர்ட் வெஸ்ட்ல இருந்து காலுஸ்வார்ட்டே பக்கம்தான்! அங்கே போய்ட்டு உடனே ப்ரோக்ராமுக்குப் போயிடலாம்,' னான்.
"மணி இப்பவே நாலு" என்றேன்.
'3 மணினு சொன்னா 6 மணிக்குத்தான் ஆரம்பிப்பாங்க. நான் காமராஜர் ஹால்ல எத்தன தடவ பார்த்திருக்கேன்' னான்.
"டேய், அது சென்னைல" என்றேன்.
'இப்போ உலகம் ரொம்ப சுருங்கிடிச்சி. எல்லா இடமும் ஒண்ணுதான்' என்றான். எனக்குத்தான் எதுவும் புரியல. வேற வழியில்லாம, அவனுடன் பிராங்பேர்ட் வெஸ்ட் போனேன்.
'கதவை திறப்பவர்' வந்திருந்தார்.
போஸ்ட் கார்டு சைஸ்ல ஐவோரி கலர்ல திக்கான பிளாஸ்டிக் பேப்பரை கதவு இடுக்கு வழியா பூட்டுக்கு சற்று மேலே செருகி, மெதுவாக கீழே இறக்கி லாக்குக்கு அருகில் லேசாக நெம்பினார். உடனே கதவு திறந்தது.
உள்ளே சென்றோம். அருகில் உள்ள ஆலயத்தில் மணி அடித்து மாலை 5 மணி என்று நினைவூட்டியது.
கதவைத் திறந்தவர், ஆந்திர நண்பரின் பாஸ்போட்டை வாங்கி சரிபார்த்து, 200 யூரோ பில்லை நீட்டினார்.
ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் 200 யூரோ சம்பாத்தியம். இதுவும் உலக அதிசயம்தான்!
சரி கிளம்புவோம், என்றேன்.
'குச்சண்டி! காபி தாகி வெல்லண்டி' என்றார், அந்த ஆந்திர நண்பர்.
"காபி குடிக்காம போனா அவர் மனசு கஷ்டப்படும், நம்மளாலே ஒருவர் மனசு காயப்படணுமா?" என்றான் நண்பன். சிரிப்பு ஒருபுறம், அவனின் மாறாத குணத்தை நினைத்து பெருமிதம் மறுபுறம். அவனைப் பார்த்து வெட்கப்பட்டு என் கோபம் எங்கோ போய் ஒளிந்து கொண்டது. காபி குடித்து கிளம்பினோம்.
வேகமாக பிராங்பேர்ட் வெஸ்ட் ரயில் நிலையம் வந்தோம். விடுமுறை நாள் என்பதால், ட்ரெயின் எண்ணிக்கை மழை இரவில், வானில் காணும் நட்சத்திரங்கள் போல மிகவும் குறைவாகவே இருந்தது. காத்திருந்து S3 ல் ஏறும் போது மாலை மணி 6:22. அது மெஸ்ஸே ஸ்டாப்போடு நின்றது. அவசரமாக இறங்கி பக்கத்து பேருந்து நிலையம் வந்து பேருந்தில் ஏறி, வேக வேகமாக காலுஸ்வார்ட்டே வந்து ஹாலுக்குள் நுழைய கதவைத் திறந்தோம். உள்ளிருந்து, அலுவலக நண்பர் குடும்பத்துடன் வெளியே வந்தார்.
"நீங்களும் வீட்டுக்குக் கிளம்பிட்டிங்களா?" என்றார் என்னைப் பார்த்து.
'ஆ...மா...ம்' என்றேன்.
``சொன்னது மாதிரி, சரியா 3 மணிக்கு ஆரம்பிச்சி சரியான நேரத்துக்கு முடிச்சிட்டிட்டாங்க. சூப்பரா இருந்துச்சுல்ல" என்றார்.
நான், திரும்பி நண்பனைப் பார்த்தேன்.
காணவில்லை.
தூரத்தில், புள்ளியாய் சிவப்பு கலரில் ஒரு உருவம் ஓடி மறைந்துகொண்டிருந்தது.
-ஜே.ஞா
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram