https://www.vikatan.com/arts/miscellaneous/story-of-a-tamil-family-residing-in-germany
ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரின் மெயின் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்தால் மிகப்பெரிய இடம். அதில் குறுக்கும் நெடுக்குமாய் மக்கள் வெள்ளம். அதன் ஒரு பக்கம் பார்க்கிங் வசதி. அக்டோபர் மாதம் என்பதால் அனைவருமே அன்னம் பிடித்து பொதிகூடிய நெற்கதிர் போல ஜெர்கின் மற்றும் மப்ளர்களுடன். அடுத்து டிராம் ஸ்டேஷன். அதையும் தாண்டி எதிரே வானளாவிய கட்டிடங்கள். கீழ்தளங்கள் அனைத்திலுமே கடைகள்.கேசவன் தன் மனைவியுடன் அந்த கடைக்குள் நுழைந்தான். சரவணா ஸ்டோர் மாதிரி மளிகை சாமான்கள் முதல் நகைகள் வரை அனைத்தையும் அங்கே வாங்கலாம்.
கடையின் கண்ணாடி கதவைத் திறந்ததும் குளிருக்கு இதமாக வெப்பக்காற்று வீசியது. கேசவன் கழுத்தை சுற்றியிருந்த மப்ளார் புடலங்காயாய் நீண்டது.ஜெர்கினின் ஜிப், விடுமுறை கிடைத்து இரட்டை தண்டவாளங்களானது. கடையின் இடப்புறம் பெரிய பெட்டிகளில் பாகற்காய், பீர்க்கங்காய் என்று இந்திய காய்கறிகள். கீழே விலை விபரங்கள்.
"அண்ணே! சின்ன வெங்காயம் திடீர்னு விலை கூடிடிச்சி. 6.99 யூரோ வா?, ஏன்?"
'இந்தியாவிலிருந்து ஏற்றுமதியை நிறுத்திட்டாங்க. இலங்கையிலிருந்து மட்டும் தான் வருது, கேட்ட பெண்மணிக்கு பதிலளித்துக்கொண்டே "வாங்க கேசவன், பார்த்து ரொம்ப நாளாச்சி" என்றார் கடைக்காரர்.
"எதுக்கு நிறுத்திட்டாங்க" மீண்டும் அதே பெண்மணி
'அங்குள்ள மக்களுக்கே தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லயாம். இனி 3 மாசத்துக்கு வராதாம்'
"ஏற்றுமதி செய்தா விவசாயிகளுக்கு கொஞ்சம் ஏந்தலா இருக்குமே" அனுசரணையாய் கேட்ட பெண்மணிக்கு பதில் சொல்லத்தெரியாமல் கடைக்காரர் கேசவனைப்பார்த்தார்.
"செயின் வேணும்"
'மாடிக்கு வாங்க'
கேசவன் தன் மனைவி மாலதியுடன் கடைக்காரர் பின்னால் முதல் மாடிக்கு நடந்தார்.
கூண்டுக்குள் அடைபட்ட சிட்டுக் குருவிகள் போல கண்ணாடி பாக்ஸ்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்படட செயின்கள், வளையல்கள், கம்மல்கள் இன்னும் பிற ......
'ஒரு பவுன் 400 யூரோ. சேதாரம் எதுக்குமே கிடையாது. செயினைப் பொறுத்த வரைக்கும் செய்கூலியும் இல்ல. மத்த நகைகளுக்கு பவுனுக்கு ஏத்தமாதிரி 25 யூரோ வரைக்கும் செய்கூலி உண்டு'
"செயின் காட்டுங்க" மாலதி ஆர்வமிகுதியில் கணவனை ஒரு சைடாக இடித்து முன்னால் சென்று பார்த்தாள்.
'எத்தனை பவுன்ல வேணும்?'
******
"எனக்கு 10 பவுனுல வேணும், உங்க பிரண்ட் கல்யாணத்துக்கு ஸ்டுட்கார்ட் போயிருந்தப்போ பார்த்தீங்கல்லே, நான் மட்டும் தான் குறைவா நகை போட்டிருந்தேன். அந்த ப்ரியா...3 செயின் போட்டிருந்தா. நெக்லஸ் வேறு, ரமா ...9 பவுனுல ரெட்டை நெக்லஸ், அவங்கள விட நான் என்ன கொறஞ்சா போயிட்டேன். எனக்கு 10 பவுனுல வேணும்" மாலதி கிச்சனில் சமைத்துக்கொண்டே கேசவனிடம் மனு போட்டாள். இல்லை சண்டை போட்டாள்.
"எனக்கு 10 பவுனுல வேணும், உங்க பிரண்ட் கல்யாணத்துக்கு ஸ்டுட்கார்ட் போயிருந்தப்போ பார்த்தீங்கல்லே, நான் மட்டும் தான் குறைவா நகை போட்டிருந்தேன். அந்த ப்ரியா...3 செயின் போட்டிருந்தா. நெக்லஸ் வேறு, ரமா ...9 பவுனுல ரெட்டை நெக்லஸ், அவங்கள விட நான் என்ன கொறஞ்சா போயிட்டேன். எனக்கு 10 பவுனுல வேணும்" மாலதி கிச்சனில் சமைத்துக்கொண்டே கேசவனிடம் மனு போட்டாள். இல்லை சண்டை போட்டாள்.
'பாவக்கா கூட்டு வையி இன்னிக்கி'
"9 பவுனுல செயினும் 1 பவுனுல டாலரும்"
'பிஞ்சி வித்து இருந்தா அதை அப்படியே போடு, சாப்பிட நல்ல இருக்கும்"
"டாலர்ல மட்டும் எனக்கு பிடிச்ச பச்சை கலர் கல்லு, பெருசா"
பல நாட்கள் இதே போலத்தான். கடைசியில் கேசவன் எதாவது சாக்கு போக்கு சொல்லி அந்த நாளை கடத்திவிடுவான்.
ஸ்டுட்கார்ட் நகரில் நடந்த அந்த கல்யாணம் தான் கேசவன் மனதை சற்று அசைத்துவிட்டது.
"பிரியாவுக்கு தமிழ் கடையிலதான் அந்த செயின் வாங்கினேன், ரொம்ப நல்லா இருக்கு" பாஸ்கர் தற்பெருமை அடித்துக்கொண்டான். அவனுக்கு ஒத்து ஊதினான் ரமாவின் கணவன் சுரேஷ். நண்பர்கள் கூட்டத்தில் தன் மனைவி மட்டும் ஒரே ஒரு செயின் ...சீக்கிரம் அவள் விருப்பப்படி பெரிய செயின் வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
கடைக்காரர் நிறைய செயின்களை எடுத்துக் காட்டினார்.
மாலதிக்கு அனைத்துமே பிடித்திருந்தன.
" அந்த பெரிய பச்சை கல் பதித்த டாலர் செயின் எடுங்க, கழுத்தில் போட்டுப் பார்க்கிறேன்"
நெக்லஸ் கை மாறியது.
"எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" மாலதிக்கு ரொம்ப சந்தோசம்.கேசவனுக்கும் தான்.
'எவ்வளவு?'
"4000 யூரோ"
கேசவன் கையில் கொண்டு வந்திருந்த பணத்தைக் கொடுத்து மீதிக்கு EC கார்டை கொடுத்தான்.
வெளியே வந்தார்கள். மோஸேல் ஸ்டிராஸா ( தமிழ்ல மோஸேல் தெரு)வை கிராஸ் செய்து 'டீ குட்' கடை அருகே வரும் போது,
"ஏ மாலதி! எப்படி இருக்கே?"
'ஏஏஏ.....சுபா! இங்கே எப்படி?. எப்போ பிராங்பேர்ட் வந்தே... ஒரு போன் பணியிருக்கலாமே'
நண்பர்கள் குசலம் விசாரிப்பில் கேசவன் சற்று ஒதுங்கியே நின்றான்.
"நீ நம்பர் தந்திருந்தா பாரு, எனக்கு மேரேஜ் ஆகிடிச்சி. அவர் இங்கே தான் பேங்க் ல ஒர்க் பன்றார். அவர் கூடவே நானும் வந்துட்டேன். நாளைக்கு கிர்ச் பிளாட்ஸ் பக்கத்துல இருக்கிற பாலர் ஹால்ல ரிசப்ஷன் வச்சிருக்கோம், மறக்காம வந்துடு. வழியில பார்த்து சொல்றேன்னு நினைக்காத. அம்மாவும் அப்பாவும் எங்கூட வந்திருக்காங்க"
வாட்சப் எண்கள் பரிமாறப்பட்ட, கேசவனும் மாலதியும் வீடு வந்தனர்.
"என்னங்க! அவ யார் தெரியுமா?"
'சொல்லு'
"நான் இந்தியாவுல சாப்ட்வேர் கம்பனில வேலை பார்த்தப்போ என்னோட கேபின் மேட். அதுக்கப்புறம் கான்டாக்ட் இல்லாம போயிடுச்சி. நீங்க என்னை கல்யாணம் பண்ணி இங்கே கூட்டிட்டு வந்துட்டீங்க. இப்போ அவளும் இங்கே வந்துட்டா. நாம போவோம்ங்க" கேசவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்ட அவளின் கை விரல்களில் சட்டையின் முதல் பட்டன் மாட்டிக்கொண்டு சதுராட்டம் ஆடியது.
'ஒரு நாளும் உனைப் பிரியாத இனிதான வரம் வேண்டும்' என்று கேசவனின் மொபைல் பாடியது.
"ஹலோ"
'கேசவா! நான் பட்டு மாமி பேசுறேன்!'
"மாமி, எப்படி இருக்கீங்க! ஜெர்மன் நம்பரா இருக்கு"
'ஏன்டா! நானெல்லாம் ஜெர்மனி வரமட்டேனா'
"அப்படியெல்லாம் இல்ல மாமி!"
'நம்ம ரமேஷ் அமெரிக்காவுல இருந்து இங்கே பிராங்பேர்ட் வந்துட்டான். இனிமே இங்கே தான். என்னையும் மாமாவையும் ஒரு மாச விசாவுல இங்கே கூப்பிட்டிருக்கான்'
"நாளைக்கு ஞாயிற்றுகிழமை தானே மாமி, என் வீட்டுக்கு வாங்க"
'இல்லடா அம்பி! கிர்ச் பிளாட்ஸ்ல ஒரு ரிசப்ஷன் இருக்கு'
கேசவனின் சட்டை பட்டனுக்கு விடுமுறை கிடைத்தது.
ஞாயிற்றுகிழமை மதியம். வீடை பூட்டிக்கொண்டு கேசவனும் மாலதியும் பாதாள இரயில் நிலையம் வந்தனர். U6 ட்ரெயின் பிடித்து கிர்ச் பிளாட்ஸ் வந்தனர்.
கூகிள் உதவியுடன் ஹாலுக்குள் நுழைந்தனர் கேசவனும் மாலதியும்.
மேடையில் புதுமணத்தம்பதியினர் அமர்ந்திருக்க, ஒரு ஓரத்தில் ஆர்கெஸ்ட்ரா.
"இன்பமே உந்தன் பேர் பெண்மையோ......" TMS குரலில் அந்த நடுத்தர வயதுக்காரர் பாடிக்கொண்டிருந்தார். பாடலின் அர்த்தம் புரியாமல் குழந்தைகள் மேடையில் ஆடிக்கொண்டிருந்தனர்.
கீழே, 50 வட்ட வடிவ மேசைகள்! ஒவ்வொன்றும் நான்கு சேர்களுடன் ரோஸ் வண்ணத்தில் சட்டை போட்டிருக்க, மேசையின் நடுவே ஒரு பிளவர் வாஷ்.
மாலதியின் கழுத்தில் அந்த 10 பவுன் செயின்! தன் செயினை இடக்கையில் பிடித்துக்கொன்டே வலக்கையை மற்றவர்களுடன் குலுக்கினாள். பிரியாவின் பார்வையில் பொறாமை எட்டிப்பார்த்தது மாலதிக்கு புரிந்தது.
கேசவனின் கண்கள் பட்டு மாமியைத் தேடின. இரண்டு மேசை தள்ளி பட்டு மாமி, கிட்டு மாமா, ரமேஷ் என்று சந்தோஷமாக சிரித்துப பேசிக்கொண்டிருந்தனர். கேசவனும் அவர்களுடன் இணைந்து கொண்டான். பிரியா, ரமா என்று பேசிவிட்டு மாலதியும் இவர்கள் ஜோதியில் கலந்துகொண்டாள். கேசவனின் சிறுவயது குறும்புகளை பட்டு மாமி கூற மாலதி சந்தோஷமாய் கேட்டுக் கொண்டிருந்தாள்.
சாப்பிட்டு முடிக்கவும் கேசவனுக்கு போன்.
"கடந்த வாரம் பண்ணின ப்ரோக்ராம் டிப்ளாய்மெண்ட்ல எதோ பிரச்சினை. அவசரமா பார்க்கணுமாம். நான் வீட்டுக்குப் போறேன்" சாவியை மாலதியிடம் இருந்து வாங்கிக்கொண்டு கேசவன் வெளியே வந்தான்.
வீட்டுக்கு வந்து கம்பியூட்டரை ஆன் செய்தவன், புரோகிராமை நோண்டிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. சாயந்திரம் நாலு மணி இருக்கும். ரமேஷிடம் இருந்து போன்.
'செயினை காணல, எல்லோரும் தேடிட்டு இருக்கும், சீக்கிரம் வரியா'
கேசவனுக்கு 'திக்' என்றது.
மனைவிக்கு போன் செய்தான். எடுத்தது பிரியா.
"மாலதி எங்கே?"
'செயினை மேடையில் தேடிகிட்டு இருக்கா. 10 பவுன் செயின்னு சொன்னதும் எனக்கே என்னவோ செய்யுது' பிரியா உண்மையிலேயே பரிதாபப் பட்டாள்.
"சரி, நான் இப்போ உடனே வர்றேன்".
கம்பியூட்டரை மூடிவிட்டு உடனே கிளம்பினான்.
ஹால் பரபரப்பாக காணப்பட்டது. அழகாக வரிசையாக இருந்த மேசைகளும் நாற்காலிகளும் குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் மாறியிருந்தன.பலரும் செயினை தேடிக்கொண்டிருந்தனர்.
கேசவன் உள்ளே நுழையவும் பட்டு மாமி ஓடிவந்து கேசவனை கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
"இப்படி ஆயிடுச்சே கேசவா, புது செயினாச்சே"
கேசவனுக்கு தொண்டை அடைத்துக் கொண்டது. வார்த்தை வரவில்லை. கண்கள் மாலதியைத் தேடியது.
"அந்த மேசைக்கு கீழே எதோ கிடக்குது பாரு" சத்தம் கேட்டு கேசவன் தன் அருகில் இருந்த மேசையை நகர்த்தினான். ஏதோ மஞ்சள் நிறத்தில் தெரிய, இன்னும் அதிகமாக மேசையை நகர்த்தினான்.
அது தான், அதே தான்....."இது டெக்கரேட் பேப்பர் மாமா", என்ற சிறுமி அதை எடுத்துக் காட்டினாள்.
கேசவனுக்கு தலை சுற்றியது. சட்டை பட்டனை பிய்த்து எரிய வேண்டும் போல் இருந்தது. நாலாயிரம் யூரோ அவ்வளவு தானா? ஒரு மாச சம்பளம். கடவுளே எப்படியாவது கிடைச்சிரணும்.மனதிற்குள் வேண்டிக்கொண்டான்.
தூரத்தில் மாலதி மேடையிலிருந்து இறங்கி இவனை நோக்கி வந்தாள். அவள் கழுத்தில், கழுத்தில்.........
கேசவனின் கண்கள் விரிந்தன.
அருகில் வந்த மாலதி சொன்னாள் " பட்டு மாமியோட 10 பவுன் செயினைக் காணோம்"
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram