https://www.vikatan.com/arts/miscellaneous/short-story-of-a-energetic-man-who-got-afraid-of-smoke-detector
"பிச்சுமணி அண்ணே!, இந்த பேஷண்ட்டோட பில்லை ரெடி பண்ணி வைக்கணுமாம், டாக்டர் இன்னிக்கி வீட்டுக்கு போக சொல்லிட்டார்" சொன்ன நர்ஸ் கோவிந்தமாளோட சார்டை அந்த கம்பியூட்டர் மேசையில் வைத்துவிட்டு நகர,
"நர்ஸம்மா! என் பேரனுக்கு குளுக்கோஸ் முடிய போகுது, அதை எடுத்துவிடுங்கம்மா"
'என்ன பாட்டி, பேரன் எப்படி இருக்கான்' தன் அறையில் இருந்து பாட்டியின் குரல் கேட்டு வெளிவந்த பிச்சுமணி கேட்டான்.
"நல்லா இருக்கான் ராசா, நாளைக்கு அவனுக்கு 3 வயசு பெறக்கப்போவு, நீ எப்படி இருக்க? அந்த கடவுள் தான் உனக்கு ஒரு பிள்ளையை தராம போயிட்டான. நீ இங்க கிளார்க் வேலையில சேர்ந்து 25 வருஷம் இருக்குமா ராசா?"
'ம்..' என்ற பிச்சுமணி நகர்ந்தான்.
20 ரூம்கள் உள்ள அந்த மருத்துவமனைக்கு தினமும் 50 அவுட் பேஷண்ட்டுகளாவது வருவார்கள். 20 அறைகளும் எப்போதும் நிறை குடம் போல தான். அத்தனை கணக்குவழக்குகளையும் பார்ப்பதற்கு பிச்சுமணி மட்டுமே. அந்தக்கால B.com. ஆஸ்பத்திரியின் ஆல் இன் ஆல் பிச்சுமணி தான். யாராவது "இதெல்லாம் யாரும் செய்ய முடியாது, கஷ்டம் " என்று சொன்னால் போதும். பிச்சுமணிக்கு ரோஷம் வந்துவிடும். நான் 'செய்துகாட்டுகிறேன் பார்' என்று களத்தில் இறங்கிவிடுவான். அதனாலேயே, கட்டில்களை மாடிக்கு கொண்டு போறது, மருந்து வேனை தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்ய வைக்கிறதுனு ஆஸ்பத்திரியில் உள்ள அனைத்து வேலைகளையும் இவன் தலையில் கட்டி விடுவார்கள்.அதற்காக பிச்சுமணி என்றைக்குமே வருத்தப்பட்டதே இல்லை.
"தம்பி பரசுராமன் எப்படி இருக்கான். சாப்ட்வேர் அனலிஸ்ட் தானே" டாக்டர் கேட்டார்.
'ஆமா, அடுத்தவாரம் ஒய்ப் மாலதியோட கம்பனி மூலமா ஜெர்மனி போறான்' பிச்சுமணியின் குரலில் சந்தோசம்.
ஒரு நல்ல நாளில் ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகருக்கு பிச்சுமணியின் தம்பி பரசுராமனும் மாலதியும் வந்தார்கள். கம்பெனி கொடுத்த 2 பெட்ரூம் அபார்ட்மென்டில் வாசம்.
கணவன் வேலைக்கு செல்ல, மாலதி டிவி பார்த்து பொழுதைக் கழித்தாள். ஒருநாள் லேசாக தலை சுற்றல். கணவனுக்கு போன் செய்தாள். பரசுராமன் உடனே லேடி டாக்டரிடம் அப்பாயின்மென்ட் வாங்கி மருத்துவனைக்கு சென்றார்கள்.
"வாழ்த்துக்கள், நீங்க அப்பா ஆகப்போறீங்க" லேடி டாக்டர் கைகுலுக்கினாள். பரசுராமன் உடனே அண்ணனுக்கு போன் செய்தான்.
"அண்ணே, எப்படி இருக்கே?"
'யாரு! பரசுராமனா!, எப்படிப்பா இருக்கே! நான் தான் கிட்டு மாமா.'
"நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க, அண்ணனை எங்கே?"
'பஞ்சாயத்து தலைவர் கிட்ட பேசிட்டு இருக்கான்'
"சரி மாமா, நான் கொஞ்சம் கழிச்சி பேசுறேன்" போனை கட் செய்தான்.
நாலைந்து 'ஆமாம்' ஆசாமிகளுடன் பஞ்சாயத்து தலைவர் அந்த தெருமுனையில் தண்ணீர் லீக் ஆகும் பைப்பை எப்படி சரிபண்ணுவது என்று டிஸ்கஸ் பண்ணிக்கொண்டிருக்க, அங்கு வந்த பிச்சுமணி,
"என்னண்ணே, இவ்வளவு தூரம்?"
'இந்த நல்லி நேத்துல இருந்தே ஒழுகிட்டு இருக்கு. புது நல்லி மாத்தணும். தண்ணி கஸ்டத்துல இப்படி லீக் ஆகிறத அப்படியே உட்டுட முடியுமா. இதை கழற்றவும் முடியல. இவனுக எல்லாருமே ட்ரை பண்ணிடானுக'
உடனே, பிச்சுமணியின் உள்ளுணர்வு முழித்துக்கொண்டது.
"இப்போ பாருங்கண்ணே " என்றவன், சாரத்தை மடித்துக்கட்டிக்கொண்டு குதிகால் போட்டு பைப் அருகே அமர்ந்து நல்லியைத் திருகினான்.
ம்கூம். அசையவில்லை.
தன் பலத்தை எல்லாம் கூட்டி, மீண்டும் எதிர்புறம் திருகினான்.
"ம்ம்ம்ம்ம்ம் ......."
நல்லி கழன்று கையோடு வர, அந்த வேகத்தில் முகம் குப்புற கீழே விழுந்தான் பிச்சுமணி. பைப்பிலிருந்து தண்ணீர் 3 அடி உயரத்தில் எழும்பி பிச்சுமணியின் சட்டையை நனைத்தது.
எழும்பி அதே தண்ணீரில் முகம் கழுவினான். பஞ்சாயத்து தலைவர் அவனைக் கட்டிக்கொள்ள "ஆமாம் " கள் ஒவ்வொருவராய் கை கொடுக்க, அவன் முகத்தில் பெருமிதம்.
"ஏன் சட்டை நனைஞ்சிருக்கு" வீட்டுக்கு வந்தவனிடம் கேட்டாள், மனைவி பர்வதம்.
' அந்த முக்குத்தெரு பைப்பு நல்லிய யாராலயும் கழற்ற முடியல, நான் தான் கழற்றி புது நல்லி மாட்டினேன் தெரியுமோ" பீற்றிக்கொள்வதில் அவனுக்கு ஒரு சந்தோசம்.
பர்வதமும் அவனை மெச்சிக்கொண்டாள். அவளின் உலகமே அவன் தான். வெளியுலகம் அறியாத அப்பாவி.
எட்டு மாதங்கள் கழிந்தன. மாலதிக்கு 9 வது மாதம். பிரசவத்தின் போது யாரவது பெரியவர்கள் உடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பரசுராமன் எண்ணினான். மாலதியின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் பிச்சுமணியையும் பர்வதத்தையும் ஜெர்மனிக்கு அழைக்க முடிவெடுத்தான்.
சென்னையிலிருக்கும் ஜெர்மன் தூதரகத்தில் அப்பாயின்மென்ட் வாங்கி, விசாவுக்கான அனைத்து டாக்குமென்டுகளையும் பிச்சுமணிக்கு அனுப்பிவைத்தான்.
கன்னியாகுமரி எஸ்பிரஸில் வள்ளியூரிலிருந்து சென்னை எக்மோர் ரயில்நிலையத்துக்கு காலை 7 மணிக்கு இருவரும் வந்தனர். அருகில் உள்ள லாட்ஜில் 100 ருபாய் கொடுத்து, குளித்து துணி மாற்றிக்கொண்டனர். 11 மணிக்கு தான் அப்பாயின்மென்ட். பக்கத்து ஹோட்டலுக்குள் நுழைந்து பொங்கல் வடையும் காபியும் குடித்துவிட்டு வெளியே வந்தனர்.
"போர்ட் கிளப் ரோட்டுல இருக்கிற ஜெர்மனி தூதரகத்துக்கு போகணும் எவ்வளவு கேக்குற" பக்கத்தில் வந்து ஓரம் கட்டி நின்ற ஆட்டோவை கேட்டான் பிச்சுமணி.
"100 ருபாய்"
'போனவாரம் போன போது 80 ரூபாய் தானே கொடுத்தேன்'
பிச்சுமணியின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து பர்வதத்துக்கு சந்தோசம்.
பிச்சுமணியின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து பர்வதத்துக்கு சந்தோசம்.
"உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம், 90 ரூபாய் கொடு" என்ற ஆட்டோக்காரரிடம்
'சரி' என்று தலையாட்டிய பிச்சுமணி, பர்வதத்தை முதலில் ஏறச்சொன்னான்.அவனும் ஏற, தூதரகம் வந்து அனைத்து டாக்குமென்டுகளையும் கொடுத்தனர்.
ஒருவாரத்தில் ஈமெயில் வந்தது.
பிச்சுமணி மட்டும் சென்னை போய் இரண்டு பேருக்குமான விசாவை வாங்கி வந்தான்.
பாஸ்போர்ட்டில் இருந்த விசாவை பார்க்க பார்க்க பர்வதத்துக்கு சந்தோசம் பிடிபடவில்லை. அந்த தெரு முழுவதுக்கும் பாஸ்போட்டை கொண்டு காட்டினாள்.
"அவர் தான் இங்கிலீஸ்ல பேசி விசா வாங்கினார் தெரியுமோ!" முகமெல்லாம் சந்தோசம் பர்வதத்துக்கு.
பரந்தாமன், ஏர் இந்தியா டிக்கெட் இரண்டு அனுப்பிவைத்தான்.
சென்னையில் விமானம் ஏறினர். உள்ளே நுழைந்ததும்,
"என்னங்க! நம்ம வீட்டை விட பெருசா இருக்கே!"
'இதை விட பெரிய பிளேனெல்லாம் உண்டு தெரியுமோ!'
தன் கணவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது என்பதில் பர்வதத்துக்கு பெருமை.போடிங் பாசை விமான பணிப்பெண்ணிடம் கொடுக்க, அவர், இவர்களை அவர்களின் சீட்டிற்கு அழைத்துசென்றார். 9 மணி நேர பயணத்திற்குப் பிறகு பிராங்பேர்ட் வந்து இறங்கினர்.
விமானத்திலிருந்து இறங்கி ஏர்போர்டுக்குள் வந்ததும் எங்கு பார்த்தாலும் வெள்ளைக்காரர்கள்.
" நம்ம ஊருல இரட்டைப் பிள்ளைகளைக் கூட அடையாளம் கண்டு பிடிச்சிடுவேன். இங்கே எல்லோரும் ஒரே சைஸ்ல இருக்காங்களே" தன் கவலையை சொன்னாள் பர்வதம்.
'கொஞ்சம் இரு' என்றவர், தன் ஆங்கிலப் புலமையில் லக்கேஜ் இருக்கும் இடம் கேட்டறிந்தான். இமிக்கிரேஷன் முடிந்து இருவரும் வெளியே வந்தனர். பரந்தாமன் வரவேற்றான்.
காரில் வீடு வந்தனர்.
மாலதி சமைத்திருந்தாள். சாப்பிட்டனர். அந்த நாள் முழுக்க, தன் பிளேன் அனுபவத்தையும் பிச்சுமணியின் இங்கிலிஷ் புலமையையும் சொல்லிச் சொல்லி பர்வதம் களைத்துவிட்டாள்.
மறுநாள் காலை. மாலதிக்கு லேடி டாக்டரிடம் அப்பாயின்மென்ட்.
"ஒரு மணி நேரத்துல வந்துடுவோம். வந்து நான் சமையல் செய்றேன்" என்றாள் மாலதி.
"சரி" என்று தலையாட்டினர் பிச்சுமணியும் பர்வதமும்.
எப்பொழுதும் வெளியே சுற்றிப் பழகிய பிச்சுமணிக்கு வீட்டுக்குள் அடைந்து கிடப்பது பிடிக்கவில்லை.
"பர்வதம்! தம்பிக்கும் மாலதிக்கும் பாயாசம் செய்யப் போறேன்"
பர்வதம் உடனே, பாயாசத்துக்குத் தேவையான அனைத்தும் இருக்கிறதா என்று பார்த்தாள். இருந்தன.
"நானே செய்கிறேன், நீ போய் லேப்டோப்ல படம் பாரு" என்று பர்வதத்தை ஹாலுக்கு அனுப்பினான்.
அடுப்பை ஆன் செய்து வாணலியை வைத்தான்.முதலில் முந்திரியை வறுத்துவிடுவோம் என்று எண்ணி, சிறிது நெய் விட்டு, முந்திரியைக் கொட்டினான். கரண்டியை வைத்து முந்திரிகளை முன்னும் பின்னும் கிளறி வறுக்க ஆரம்பித்தான். திடீரென்று "பீப் ....பீப்" என்று 80 டெசிபலில் பயங்கர சத்தம்.
பயத்தில் கரண்டி கை நழுவியது.
"என்னங்க, என்னாச்சு" பர்வதம் ஹாலிலிருந்து கிச்சனுக்கு ஓடிவந்தாள்.
உடனே அடுப்பை அணைத்தான்.
மீண்டும் அதே "பீப் ....பீப்".
இரண்டுபேரும் மிரண்டனர்.
"லேப்டாப் ல இருந்துதான் சத்தம் வருது. சீக்கிரம் ஆப் பண்ணு"
பர்வதம் ஹாலுக்கு ஓடி கம்பியூட்டரை அணைத்தாள்.
அப்பாடா! பெருமூச்சு விட்டனர் இருவரும்.
அடுத்த நொடியே மீண்டும் "பீப் ....பீப்".
"ஏன்னா, கிச்சன்ல இருந்துதான் சத்தம் வருது"
இருவரும் மீண்டும் கிச்சனுக்கு ஓடினார்கள்.சுற்றும் முற்றும் பார்த்தார்கள். மீண்டும் அதே சத்தம்.
" மேலே பாருங்க! அதிலிருந்து தான் சத்தம் வருது"
'அந்த துணியை எடு'
கீழே கிடந்த துணி பிச்சுமணி கைக்கு மாறியது. ஸ்டூலை இழுத்துப்போட்டு, மேற்கூரையில், உள்ளங்கை அளவு வெள்ளை நிறத்தில், வட்ட வடிவமாக இருந்த அந்த டப்பாவை மூடினான்.
ம்கூம். சத்தம் நிற்கவில்லை.
பிச்சுமணியின் மனதில் தெருமுனை நல்லியை கழற்றிய நினைவுகள் அலையடித்து.
திருகினான். அழுத்தினான். எதிர்புறம் திருகிப்பார்த்தான்.
கையோடு வந்தது அந்த வட்ட டிபன் பாக்ஸ் டப்பா.
ஆனாலும் அந்த பெரும் சத்தம் மட்டும் நிற்கவில்லை.
"ஏன்னா, இந்த பிளாஸ்டிக் கவர்ல பொதிஞ்சி பெட்டிக்குள்ள போட்டு மூடிருவோமா"
டிரிங் .....டிரிங்.......டிரிங்....
'நான் இதை பெட்டிக்குள்ள வைக்கிறேன், நீ போனை எடு'
"ஹலோ ....யாரு....ஹலோ....."
போன்ல யாருமில்லங்க" பர்வதம் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மீண்டும்
டிரிங் .....டிரிங்.......டிரிங்....
டிரிங் .....டிரிங்.......டிரிங்....
"அதெப்படி, போன் என் கைல இருக்கு, ஆனாலும் ரிங் வருது, எனக்கு பயமாயிருக்கு"
"டொக் ...டொக்...." கதவு தட்டும் சத்தம் கேட்டது.
'அப்பாடா, தம்பி வந்துட்டான்' கதவைத் திறந்த பிச்சுமணி மிரண்டு போனான்.
வெளியே ஒரு வெள்ளைக்காரர்.
"ஸ்மோக்கி டிடெக்டர் இஸ் ரிங்கிங்" என்றார் வந்தவர். பிச்சுமணிக்கு பயத்தில் ஒன்றுமே புரியவில்லை. போனை வைத்துவிட்டு, பர்வதம் ஓடிவந்து பிச்சுமணியிடம் ஒட்டிக்கொண்டாள்.
பக்கத்து பிளாட்காரரான அவர் ஆங்கிலத்தில் சொன்னார்.
"காலிங்பெல்லை அழுத்தினேன். நீங்கள் இந்த ஆடியோ டோர் போனை எடுக்காததினால் கதவைத் தட்டவேண்டியதாயிற்று என்று கதவருகே இருந்த ஆடியோ போனை காட்டினார். இந்த ரிஸீவரை காதில் வைத்து கீழே இருக்கும் பட்டனை அழுத்தினால் வெளியே இருந்து நான் பேசுவது உங்களுக்கு கேட்கும்" என்றார்.
பர்வதத்திற்கு தலை சுற்றியது.
"பீப் ....பீப்" ஒலித்துக்கொண்டே இருந்தது.
"உள்ளே வரலாமா"
வந்தவர், கிச்சனுக்கு சென்றார். மேலே ஸ்மோக்டிடெக்டர் இல்லை.
"இது எங்கே?"
தன் சூட்கேசை காட்டினான் பிச்சுமணி.
கிச்சன் மற்றும் அனைத்து அறைகளின் ஜன்னல்களையும் அவர் திறந்தார்.முந்திரி வறுத்ததினால் உண்டான புகை அனைத்தும் வெளியே போனது.
சூட்கேசை திறந்து ஸ்மோக்டிடெக்டரை பிச்சுமணி கொடுக்க, அவர் அதை ஆப் செய்தார்.
அதிக புகை இருந்ததினால் தான் இந்த ஸ்மோக்டிடெக்டர் சத்தம் போட்டது. இனி சமைக்கும் போது, எப்பொழுதும் ஸ்மோக் அப்சர்வரை ஆன் செய்யுங்கள் என்று சொல்லிக்கொடுத்துவிட்டுப் போனார்.
சரி என்று தலையாட்டினர் இருவரும்.
அதன் பின் ஒருநாளும் பிச்சுமணி கிச்சன் பக்கம் எட்டிப்பார்ப்பதே இல்லை.
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram