Saturday, November 9, 2019

மழையாய் நின்றோரே!

"நாம் 3 பேருக்கு உதவி செய்தாலே போதும். அவர்களிடம் பிரதியுபகாரமாக வேறு 3 நபர்களுக்கு உதவி செய்ய வேண்டினால் மொத்த உலகமே சந்தோஷத்தில் திளைக்கும்". இது A.R முருகதாஸ் இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்த படத்தின் அடிநாதம். மூன்று பேர் என்றில்லை, உதவி என்று யார் குரல் கொடுத்தாலும் உடனடியாக முதல் ஆளாக நிற்கிற ஜெர்மனியை சேர்ந்த நாகப்பன், ஜெகதீஷ், வசந்த், பிரின்ஸ் மற்றும் தாஜுதீன் ஆகியோருக்கு இந்திய மருத்துவக்கழகம் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்திருக்கிறது.
நெய்வேலியில், நோயாளியை ஏற்றிவரச் சென்ற 108 ஆம்புலன்ஸ், எதிரே வந்த லாரியில் மோதியதால் அதன் உள்ளே இருந்த நர்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார். கைம்பெண்ணான அவரின் இரு குழந்தைகளும் அனாதைகளாக, நெய்வேலி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர். சுப்ரமணிய சிவா, ஜெர்மனியிலிருக்கும் தன் தம்பி நாகப்பனுக்கு நடந்தவற்றை விவரித்துள்ளார். உடனே, தன் நண்பர்களிடம் விஷயத்தை சொன்னவருக்கு பலரும் தோள் கொடுத்துள்ளனர்.
உதவி தான் செய்துவிட்டோமே! என்று இருந்துவிடாமல், தொடர்ந்து, திரு.வசந்த் அவர்கள் அந்த குழந்தைகளுக்கு பணம் அனுப்பிக்கொண்டிருக்கிறார். இது பற்றி கூறும் போது, "என் சம்பளத்தில் 10% எப்போதுமே உதவி செய்ய எடுத்துவைத்துவிடுவேன். அது என் மனதிருப்திக்கு மட்டுமல்ல! உதவி பெறுபவரின் தன்னிறைவுக்கும் தான்", தன்னடக்கத்துடன் பேசுகிறார்.
இதை ஒருங்கிணைத்து வழிநடத்தும் திரு. நாகப்பன் கிருஷ்ணன் அவர்களைத் தொடர்பு கொண்டோம். செய்த உதவியை வெளியே சொல்ல வேண்டாமே என்றவரிடம், இந்த செய்தியை படிப்பவர்களுக்கு உதவும் உத்வேகத்தைக் கொடுக்கும் என்றதும் பேச ஆரம்பித்தார். "2015 ஆம் ஆண்டு, சென்னை பெருவெள்ளத்தில் தத்தளித்தபோது நானும் என் நண்பர்கள் பலரும் பணம் அனுப்பி, கஷ்டப்படுவோருக்கு மருந்து மாத்திரைகள் கிடைக்க வழி செய்தோம். நெய்வேலி அரசுப் பள்ளிக் கட்டிடத்தை புதுப்பித்து மாணவ மாணவியர் சந்தோஷமாய் படிக்க வழிவகை செய்திருக்கிறோம். இது எப்போதும் தொடரும்" என்றார்.
"மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ வுலகு" என்பது இவர்களுக்கு சாலப்பொருந்தும்.

No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram