https://www.vikatan.com/arts/literature/story-about-caste-discrimination-and-realization
ஆற்றில் தண்ணீர் 'சலசல' வென ஓடிக்கொண்டிருந்தது.
இருபுறமும் ஆளை மறைக்கும் நாணல்கள். பெரு வெள்ளத்தின் போது மலையிலிருந்து அடித்து வரப்பட்ட பெயர் தெரியாத மரத்தின் விதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்து விண்ணை முட்டிக்கொண்டு நின்றது. சின்னக் கருத்தப்பட்டியிலிருந்து திருநெல்வேலிக்கு போகும் வழியில், ஊருக்கு சற்று வெளியே ரோட்டிலிருந்து ஆற்றிற்கு பிரிந்து செல்லும் ஒத்தயடிப் பாதையில் ரஞ்சன் நடந்துகொண்டிருந்தான்.அரசு விடுதியில் தங்கி, கல்லூரியில் படிக்கும் அவன் விடுமுறை நாளில் ஊருக்கு வரும் போது, வீட்டில் இருப்பதை விட அந்த பெரிய மரத்தின் தெற்கு பக்க வேர் பகுதியில் தான் அதிகம் இருப்பான். ஐந்து ஆட்கள் ஒன்றாக சேர்ந்து நின்றால் மட்டுமே கட்டிபிடிக்க முடிகிற மிகப்பெரிய மரம் அது.
"மின்சாரம் கண்டு பிடித்த மைக்கிள் பாரடே படிச்சிருப்பாரா? அந்த 18ம் நூறாண்டில், இந்த அளவுக்கு வசதிகள் கிடையாதே. அப்புறம் எப்படி கண்டு பிடித்தார்? ஒரு வேளை அதுதான் உள்ளுணர்வின் சக்தியோ? ஆர்க்கிமிடிஸ் பாத்ரூமிலிருந்து 'யுரேகா' னு அம்மணமா ஓடிவந்தாரே, தண்ணீர் அளவு உயர்ந்து வெளிவந்ததை வைத்து எப்படி 'ஆர்க்கிமிடிஸ் ப்ரின்சிபிள்'ளை கண்டு பிடிக்கத் தோணிச்சு? இப்படி பல கேள்விகள் ரஞ்சனுக்கு அந்த மரத்தின் நிழலில் தான் தோன்றும். பதில்களை அவனின் அதிக நியூரான் அடர்த்தி உள்ள ஒன்னேகால் கிலோ ஐன்ஸ்டீன் மூளை அலசி ஆராயும். அந்த வகையில் இந்த மரம் அவனுக்கு புத்தனின் போதி மரம் மாதிரி தான்.
அவ்வப்போது திரும்பி அந்த ஒத்தையடி ப் பாதையை பார்த்துக்கொண்டிருந்தான். யாரையோ எதிர்பார்க்கிறான் என்பது அவனின் பார்வையின் ஏக்கம் உணர்த்தியது. "நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன் " பாடல் விசிலாக அவனிடத்தில் வெளிப்பட்டது. சற்று நேரம் காத்திருந்தவன், நியூட்டன், ஆல்வா எடிசனையெல்லாம் மறந்து சற்று கோபமானான். இனி வீட்டுக்குப் போகலாம் என்று எழும்பி பேண்டின் பின் பக்கத்தை இரண்டு கைகளாலும் தட்டி தூசியை உதறினான். திரும்பி ஒத்தையடி பாதையில் நடக்கையில் மரத்தின் பின் புறத்தில் இருந்து அந்த சிரிப்பு சத்தம் கேட்டது.
"ஹா ..ஹா...ஹா ..."
இது மகிமாவின் சத்தம் தான். அவனுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது.
"ஊசி மணி பாசியோவ் ...
எங்கிருக்காவியோவ் .....
ஊசி மணி பாசியோவ் ..." இயல்பாய் வந்தது அவனுக்கு.
எங்கிருக்காவியோவ் .....
ஊசி மணி பாசியோவ் ..." இயல்பாய் வந்தது அவனுக்கு.
"கண்ணான கண்ணனுக்கு அவசரமோ....." எதிர் பாட்டுப் பாடினாள் மகிமா
ரஞ்சன் மரத்தின் பின் பக்கம் ஓடினான்.
"செல்லக் குட்டி, எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா?"
'தெரியுமே'
"அப்போ, முன்னாடியே வந்துட்டியா?"
'ம்ம்ம். நீ என்ன செய்யிறானு பாத்துக்கிட்டேயே இருந்தேன்..... உன்னை பாத்துகிட்டே இருக்கனும் போல இருக்கு ரஞ்சன்'
ரஞ்சன் அவளை கட்டிக்கொண்டான்.
'எங்க அப்பாவ நினைச்சா தான் பயமாயிருக்கு'
அவள் விழிகளில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.
"கண்டிப்பா என் மாமனார், உன்னை எனக்கு கட்டித் தரமாட்டார். நீ பெரிய இடம் .....என் சாதி வேற"
அவள் அவன் வாயைப் பொத்தினாள்.
அவன் கையை விலக்கினான்.
"உண்மை அது தானே?"
'அப்போ என்னை கல்யாணம் கட்டிக்க உனக்கு விருப்பம் இல்லையா?' விசும்பல் அவளிடம் வெளிப்பட்டது
"ஏய் ...மகிகுட்டி ....பயந்துட்டியா? நீ இல்லாம நான் மட்டும் உயிரோடு இருந்துடுவேனா?"
'அப்படினா இப்பவே இந்த ஊரை விட்டு போய் விடுவோம்'
" இன்னும் ஒரு ஆறு மாசம் தான். என் அம்மா ஆசைப்படி, மாஸ்டர் டிகிரி முடிச்சிடுவேன். நீயும் UG முடிச்சிருவே. அதுக்கப்புறம் அம்மாவோட சேர்ந்து நாம மூணு பேரும் வெளியூருக்குப் போய் சந்தோஷமா வாழலாம், அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்க"
கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள், தூரத்தில் தனக்காகக் காத்து நின்ற தோழியைக் கை காட்டி அழைத்தாள்.
சரி, நான் கிளம்புறேன், என்ற ரஞ்சன் ரோட்டுக்கு நடந்தான்.
மகிமாவும் ரம்யாவும் குடத்தில் தண்ணீரை நிரப்பி, இடுப்பில் சுமந்துகொண்டு வீட்டுக்கு வந்தனர்.
படிப்பு முடிந்து ரஞ்சன் ஊருக்கு வந்திருந்தான்.மறுநாள் மகிமா, ரஞ்சன் மற்றும் ரஞ்சனின் அம்மா மூவரும் வெளியூர் செல்வதாய் ஏற்பாடு. மாலை 4 மணிக்கு ஆற்றங்கரைக்கு மகிமாவை வரச்சொல்லியிருந்தான்.
"அப்பா, நான் தண்ணி எடுத்துட்டு வரேன் " என்றவள் வாசல் கதவின் நிலைக்கு மேலே சுவரில் மாட்டியிருந்த அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்தாள். பிளாஸ்டிக் மாலை தொங்கிக்கொண்டிருந்தது. கருகமணி செயினுடன் மங்களகரமாக அம்மா புன்னகைத்துக்கொண்டிருந்தாள்.தொட்டுக் கும்பிட்டாள்.
'சரிம்மா' என்ற ராகவன் அதைப் பார்த்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஒன்னும் தெரியாதது போல் முன் ஹாலில் கட்டிலில் உட்க்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார். குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு பாதியாக மூடியிருந்த கீழ் கதவைத் திறந்துகொண்டு தெருவில் நடந்தாள்.
'உள்ளமெல்லாம் கொள்ளை கொள்ள ப் போகுதே ' பாடல் அவள் மனம் முழுக்க ஆக்கிரமித்திருந்தது.
அந்த பெரிய மரம் தான். அதை நெருங்கி விட்டாள். அதை நெருங்க நெருங்க, நெஞ்சம் படபடத்தது. ஆர்வம், சந்தோசம் என்று அவள் மனதில் பல ரசங்களின் கலவை கூத்தாடியது.
"ரஞ்சன்...."
பதில் இல்லை
"ரஞ்சன்....நான் மகிமா வந்துட்டேன்"
மரத்தின் இலைகள் காற்றில் அசைவதைப் பார்க்க உள்ளத்தில் முதல்முறையாக பயம் எட்டிப்பார்த்தது. மரத்தை சுற்றி தெற்குப்பக்கத்திற்கு வந்தாள். யாரையும் காணோம்.
"ரஞ்சன்... ரஞ்சன்.....அம்மா...."
'ஏன் இன்னும் வரவில்லை? ஏதும் பிரச்சினையா?' அவள் மனதில் பல கேள்விகள்.அப்படியே ரஞ்சன் உட்காரும் இடத்தில் அமர்ந்தாள்.
சூரியன் மேற்கு வானில் மெல்ல மறைந்து கொண்டிருந்தான்.
குடத்தில் தண்ணீர் நிரப்ப மறந்துபோய் அப்படியே வீட்டுக்குத் திரும்பினாள்.
அப்பா இன்னமும் டிவி தான் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பாவுக்கு சாப்பாடு போட்டு கொடுத்தாள்.
"என்னமா, முகம் ஏதோ மாதிரி இருக்கு . உடம்பு ஏதும் சரியில்லையா?"
'இல்லப்பா'
"நீயும் சாப்பிட்டேன்மா"
'கொஞ்சம் கழித்து சாப்பிடுறேன்பா' சுஜாதாவின் நாவலை கையில் எடுத்துக்கொண்டு நடு ஹாலில் ஈஸி சேரில் உட்கார்ந்தாள். கண்கள் புத்தகத்தில் இருந்தாலும் மனம் முழுவதும் ரஞ்சனே நிறைந்திருந்தான். "ஏன் வரவில்லை" என்ற கேள்வியே மீண்டும் மீண்டும் அவள் மனது அவளை கேட்டுக்கொண்டிருந்தது.அப்படியே தூங்கிப் போனாள்.
காலையில் முதல் வேலையாக தோழி ரம்யாவைப் போய் பார்த்தாள்.
"ரஞ்சனைப் போய் பார்த்துட்டு வரியா. ப்ளீஸ் " என்றாள் மகிமா.
'நேத்து மத்தியானமே அவரும் அவர் அம்மாவும் சென்னை போயிட்டாங்களே. உனக்குத் தெரியும்னு தான் நான் நினைத்தேன். அது இருக்கட்டும், ஊர்த்தலைவர் மகள் விஷயம் தெரியுமா உனக்கு' என்றாள் ரம்யா
கேட்க விருப்பம் இல்லாதவளாய் வீட்டுக்குத் திரும்பியவள் நடை பிணமானாள். அன்றைக்கே ராகவன் கீழே விழுந்து காலின் கரண்டை நரம்பில் அடிபட்டு படுக்கையிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்க ஆரம்பித்தார். திருமணம் பற்றிய பேச்சை எடுக்கும் போதெல்லாம் வேண்டாம் என்று தள்ளி போட்டுக்கொண்டே வந்தாள். மனதுக்குள் அழுது அழுது ராகவன் நொந்து நூலாகிப் போனார்.
ஒவ்வொரு நாளும் ரஞ்சனிடமிருந்து ஏதாவது தகவல் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. அப்பாவுக்கும் மகளுக்கும் அந்த வீடே சிறையானது. வெளியுலகம் பிடிக்கவேயில்ல. ராகவனின் மனதில் மட்டும் ஏதோ ஒன்று கட்டை மாதிரி உள்ளத்தை அழுத்திக்கொண்டே இருக்கிறது. மகளிடம் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தன் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார். முன் ஹாலின் கட்டிலே அவருக்கு எல்லாமுமாகிப் போனது.
"ரஞ்சன்....."
சைதாப்பேடையில் அந்த தனியார் ஆஸ்பத்திரியிலிருந்து மருந்து பாட்டிலுடன் வெளியே வந்த ரஞ்சன், குரல் கேட்டுத் திரும்பினான்.
'ஹே... ரவி, எப்படிடா இருக்கே, பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு?' சந்தோஷத்தில் ரஞ்சன் ரவியை கட்டிக்கொண்டான்.
"10 வருஷம் ஆச்சு. ஏண்டா, என்கிட்ட கூட சொல்லாம அப்படி என்னடா திடீர்னு சென்னைக்கு வந்துட்டீங்க"
என்ற ரவி, ரஞ்சனை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்குள் நுழைந்தான். காபி ஆர்டர் செய்தனர்.
"இப்போ என்ன பண்ணிடிருக்க? அம்மா எப்படி இருக்காங்க" என்றான் ரவி
'டாலஸ் எஸ்போர்ட்ஸ் கம்பனில மேனேஜரா இருக்கேன், நீ என்ன பண்றே?'
"நான், ஊர்ல ரியல் எஸ்ட்டேட் பண்ணிட்டிருக்கேன். ஒரு பார்ட்டிகிட்ட பணம் வாங்குறதுக்காக இங்க வந்தேன். நாளைக்கு ஊருக்கு கிளம்புறேன். ஒரு பையன், ஒரு பொண்ணு. உனக்கு எத்தனை பிள்ளைங்க?"
'நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை.அதெல்லாம் இருக்கட்டும். ஊருல மகிமா எப்படி இருக்கா?'
"உனக்கு விஷயமே தெரியாதா? அவங்கெல்லாம் இப்போ வெளிய வர்றதே குறைவு தான்" என்ற ரவி, அனைத்தையும் சொல்லி முடித்தான். காபி டம்ளர் காலியாகியிருந்தது.
ரஞ்சன் பில்லுக்கான பணத்தை கொடுத்துவிட்டு ரவியின் வாட்சப் நம்பரை பரிமாறிக்கொண்டான்.
வீட்டுக்குள் நுழைந்த ரஞ்சன் அம்மாவிடம் மருந்து பாட்டிலைத் தந்தான்.
"அம்மா.....நான் ஊருக்குப் போயிட்டு வரேம்மா " பேக்குக்குள் துணிகளை அடைக்க ஆரம்பித்தான்.
அம்மா பதறினாள்.
'நடந்ததை எல்லாம் மறந்துட்டியா' பதட்டம் அவள் குரலில் தெரிந்தது
இப்போ எல்லாமே மாறிப் போச்சு. ரவி சொன்னவற்றையெல்லாம் அம்மாவிடம் கூறினான்.
"சரி..." என்று அரைகுறையாய் சம்மதித்தாள்.
கோயம்பேட்டில் பஸ் ஏறி மறுநாள் அதிகாலையிலேயே திருநெல்வேலி வந்தடைந்தான். பேருந்து நிலையத்தில் இருந்த பாத்ரூமில் குளித்து உடை மாற்றி அங்கிருந்த கிளாக் ரூமில் தன் பேக்கை வைத்து ரசீது பெற்றுக்கொண்டான். முன்புறம் இருந்த ஆட்டோ ஸ்டேண்ட்டுக்கு வந்தவன், சின்னக் கருத்தப்பட்டிகு போகணும் என்றான்.
ஆட்டோ ஊரை நெருங்கும் வேளையில் வலது புறத்தில் அந்த ஒற்றை அடிப் பாதையை பார்த்தான்.
"நிறுத்துங்க.......நிறுத்துங்க...இங்கேயே இறங்கிக்கறேன்"
ஆட்டோ ரோட்டில் ஒரு 'U' டர்ன் அடித்து ஒதுங்கி நின்றது.
பர்சில் இருந்து பணத்தை எடுத்துக்கொடுத்தவன், மெதுவாக அந்த ஒத்தையடிப் பாதையில் இறங்கி நடந்தான்.மனம் ஏனோ கனத்தது. அந்த பெரிய மரம் அப்படியே இருந்தது. ஓடிப்போய் அதைக் கட்டிக்கொண்டான். கண்களில் கண்ணீர். மெதுவாக அதைத் தடவினான். முத்தம் கொடுத்தான். சத்தமாக அழுதான். அவனின் அழுகை மரத்துக்கும் கேட்டிருக்கவேண்டும். காற்றில் தன் இலைகளை உதிர்த்து அவனுக்கு ஆறுதல் கூறியது. தெற்குப் பக்கத்துக்கு வந்தான். அவன் இருக்கும் இடத்தில் ஆட்டுப் புழுக்கைகள் கிடந்தன. முந்தின நாள் ஆடுகள் அங்கே இருந்திருக்கவேண்டும்.
தன் கையால் அவைகளை ஒதுக்கி மெதுவாக உட்கார்ந்தான். பழைய நினைவுகள் ஆற்றின் நீரோட்டத்துக்கு இணையாய் மனதில் பசுமையாய் ஓடிக்கொண்டிருந்தன.
"யாருப்பா அது?"
திடுக்கிட்டு எழுந்தவன் சத்தம் வந்த திசையில் பார்த்தான். ஆடு மேய்க்கும் பெரியவர் கையில் நெம்புகோலுடன் நின்றுகொண்டிருந்தார்.
ஆபீசர் தோரணையில் இருந்த அவனைப் பார்த்ததும் பெரியவர் சற்று பயந்துதான் போனார்.
"நேத்திலிருந்து ஒரு ஆட்டைக் காணோம் அதான், தேடிட்டு இருக்கேன் " என்றார் அவனைப்பார்த்து.
பதில் சொல்லாமல் அங்கிருந்து ஊரை நோக்கி நடந்தான் மகிமாவைத் தேடி.
பத்து வருடத்தில் ஊர் ரொம்பவே மாறியிருந்தது. அவனின் வீடு இடிந்து கிடந்தது. தெரு முனையில் இருந்த பெட்டிக்கடை சூப்பர்மார்க்கெட்டாக மாறியிருந்தது. கடையின் வெளியே, மேலே பல வண்ணங்களில் வரிசையாகத் தொங்கிக்கொண்டிருந்த பிளாஸ்டிக் குடங்கள் பாசிமாலையை நினைவுபடுத்தியது. வேகமாக நடந்து நேராக மூன்றாவது தெருவுக்கு வந்தான். அந்த அஞ்சாவது வீடுதான். மெதுவாக வாசற்படி ஏறினான். கால்கள் தடுமாறியது.கதவை பிடித்துக்கொண்டான். அரைக்கதவு மட்டும் சாத்தியிருந்தது.
"ஐ....யா .... ஐ.....யா" ரஞ்சனின் குரலில் நடுக்கம் தெரிந்தது.
"ஐயா ......." மீண்டும் கொஞ்சம் சத்தமாகக் கூப்பிட்டான்.
கதவுக்கு இடது பக்கத்தில் கட்டிலில் படுத்திருந்த ராகவன் சத்தம் கேட்டு எழுந்து உட்கார்ந்தார். பக்கவாட்டில் திரும்பி வாசலைப் பார்த்தவர்,
'யாரு?'
"நான்......வந்து......நான்......"
கண்களை சுருக்கி கண்ணாடியை சரிசெய்த ராகவன், அவனைப் பார்த்தார்.
'ர...ஞ்....ச...ன், ரஞ்....சன், ரஞ்சன்.....'
"ஆமாய்யா"
கட்டிலில் இருந்துகொண்டே கதவைத் திறக்க முயற்சித்தார். முடியவில்லை.
'உள்ள வாப்பா' அவர் முகத்தில் பத்து வருஷத்திற்குப் பிறகு சந்தோசம் எட்டிப் பார்த்தது.
செருப்பை கழற்றிய ரஞ்சனைப் பார்த்து
'செருப்பை போட்டுகிட்டு வாப்பா'
அருகில் வந்தான்.
அவன் கையைப் பிடித்து அவனைக் கட்டிலில் உட்கார வைத்தார்.
'எப்படிப்பா இருக்கே?'
ராகவன், ரஞ்சனின் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டார்.
"நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?"
'இருக்கேன், இருக்கேன்' விரக்தி அவர் பேச்சில் தெரிந்தது.
எதையோ நினைத்தவராக,
'உனக்கு எத்தனை பிள்ளைங்க?'
"நான் இன்னும் கல்யாணம் கட்டலைங்கய்யா...."
ராகவனின் முகத்தில் சந்தோசம் ஊற்றெடுத்தது.
தன் வலது கையால் அவன் தலையைக் கோதினார். அப்படியே அவனின் முதுகைத் தடவிக்கொடுத்தார். சந்தோசம் அவரின் கண்களில் ஆனந்தக் கண்ணீராய் பெருகியது. தன் நடுங்கும் கரங்களால் அவனின் கன்னங்களை வருடினார். குனிந்து அவனின் கால்களில் உள்ள செருப்பைக் கழற்ற முற்ப்பட்டார். அவசரமாக காலை கட்டிலின் உட்பக்கமாய் இழுத்தவன் அவரின் கைகளை பிடித்துக்கொண்டான். அவனின் கண்ணீர் அவரின் கையை நனைத்தது. ராகவனுக்கு நினைவுகள் பின்னோக்கிப் போனது.
"நீ என் கையைப் பிடிக்கிறியா, கீழ் சாதிக்கார நாயே!", ரஞ்சனை தன் இடது கையால் தள்ளிய ராகவன், காலால் எட்டி உதைத்தார். அந்த பெரிய மரத்தில் மோதி கீழே விழுந்தான் ரஞ்சன்.
"உனக்கு என் பொண்ணு கேட்குதா, பரதேசி நாயே, உன்னை உயிரோட விட்டாதானே இந்த மாதிரி ஆசையெல்லாம் மனசுல வரும்" என்றவர், அருகில் நின்ற ஊர்த் தலைவரைப் பார்த்தார். முதுகுக்கு பின் மறைத்து வைத்திருந்த அரிவாளை ராகவனிடம் கொடுத்தார் ஊர்த்தலைவர்.
'ஆட்கள் யாரும் வர்றதுக்குள்ள சீக்கிரம் காரியத்தை முடிச்சுடு ராகவா, இவனை மாதிரி கீழ்சாதிப் பயலுகளை வளர விட்டா நம்ம வீட்டுப் பெண்களுக்குத் தான் கெட்டப்பேரு. அப்புறம் நமக்கு சரிசமமா நம்ம வீட்டுள்ள நம்ம பக்கத்துலேயே உட்கார்ந்திருவானுக ...ம்ம்ம் சீக்கிரம்' ஊர்த்தலைவர் சொல்ல, ஆளில்லாத அந்த ஆத்தங்கரையில் ராகவன், ரஞ்சனை நோக்கி அரிவாளுடன் ஓடினார்.
"தலைவர் ஐயா, சீக்கிரம் வீட்டுக்கு வாங்க, சின்னம்மாவைக் காணோம்" ஊர்தலைவரின் வேலைக்காரன் ரோட்டிலிருந்து கத்தினான். அந்த சத்தம் கேட்டு ராகவனும் திரும்ப ரஞ்சன் நாணல்களுக்குள் மறைந்து போனான்.
ஊர்த்தலைவர் வீட்டுக்கு வந்தனர் இருவரும்.
ராகவன், நீ உன் வீட்டுக்குப் போ. நான் அப்புறம் பேசுறேன் என்ற ஊர்த்தலைவர், வீட்டுக்குள் நுழைந்தார்.
அடுத்தநாள் காலையிலேயே ஊர் முழுவதும் தெரிந்துவிட்டது ஊர்த்தலைவர் மகள் பக்கத்துக் காலனி பையனுடன் ஓடிவிட்டாள் என்று. விஷயம் கேள்விப்படட ராகவன், வேகமாக ஊர்த்தலைவர் வீட்டுக்குள் நுழைந்தார். ஊர்த்தலைவர் நாற்காலியில் சோகமாய் அமர்ந்திருக்க, அவரின் மனைவி அருகில் தரையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள்.
"தலைவரே, நாம ஊரே திரண்டுபோய் அவனை வெட்டிப் போடுவோம்" என்றார் ராகவன்
'வேண்டாம் ராகவன்'
"ஏன் தலைவரே. அந்த கீழ் சாதிக்கார பயலுவளை சும்மா விடக்கூடாது" ராகவனின் பேச்சில் கோபம் கொப்பளித்தது.
'ஒரு நாள் ராத்திரி முடிஞ்சிடிச்சு. இனி ஒரு பயனும் இல்ல. என் மகள், அவ விரும்பித் தானே அவன் கூடப் போனா. அவ ஆசைப்படி அவன் கூடவே வாழட்டும். நீ இதை இப்படியே விட்டுடு'
ராகவனுக்கு 'சுருக்' என்றது. வெளியே வந்தார். தன் வீட்டுக்கு வரும் வழியில் அவருக்குள் பல கேள்விகள். அவர் மகளுக்கு ஒரு நியாயம், என் மகளுக்கு ஒரு நியாயமா? இவருக்காகத்தானே நானும் சாதியைத் தூக்கிப் பிடித்தேன். என் மகள் வாழ்க்கையையே பாழாக்கி விட்டேனே. துக்கம் தொண்டையை அடைத்தது. நெஞ்சு வலித்தது. நெஞ்சை இடது கையால் பிடித்துக்கொண்டே தரையில் உட்காரப் போனவர், நிலை தடுமாறி கீழே விழுந்தார். ஒரு பெரிய கல் காலின் கரண்டையை பதம் பார்த்தது. அப்படியே கொஞ்ச நேரம் உட்கார்ந்தவர், நொண்டிக்கொண்டே வீட்டுக்கு வந்தார். அதற்குப் பின் அந்த கட்டிலே அவருக்கு எல்லாமுமானது.
"அப்பா ..." உள்ளே இருந்து குரல் கேட்டு ராகவன் இயல்பு நிலைக்கு வந்தார். அவனின் கைகளைப் பற்றிக்கொண்டார்.
'இங்க வாம்மா'
வேகமாக முன் வீட்டுக்கு வந்தவள் கண்களில் இனம் காணமுடியாத அதிர்ச்சி. உடனே உள்ளே சென்றுவிட்டாள்.
ராகவன், ரஞ்சனின் கைகளை விடுவித்தார். அவரின் கண்கள் சொல்வது ரஞ்சனுக்குப் புரிந்தது. உள்ளே சென்றான். ஓடிவந்து அவனை கட்டிக்கொண்டாள். ராகவன், தன் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
"மாப்பிப்ளைக்கு சாப்பாடு குடுமா" என்றவர், சுவர் பக்கமாகத் திரும்பிப் படுத்துக்கொண்டார்.
அவரின் கை, வெளிக்கதவை சாத்தியது.
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram