Monday, June 15, 2015

விசுவாமித்திரரின் ரிஷி மூலம்

விசுவாமித்திரரின் ரிஷி மூலம் 


பொதுவாக நதிமூலம், ரிஷி மூலம் பார்க்க கூடாது என்பார்கள். அதாவது நதி
எங்கிருந்து ஆரம்பித்தது என்று பார்ப்பதை விட அது நமக்கு தரும்
பலன்களை மட்டுமே பார்க்க வேண்டும். அது போல முனிவர்களின்
குடும்பம், தாய் தந்தை யார்?  என்ன? ஏது? என்று பார்ப்பதை விட அவரின்
குணநலன்களையும் செயல்களையும் மட்டுமே பார்க்க வேண்டும்.


சற்று வித்தியாசமாக விசுவாமித்திரரின் குடும்பம், தாய், தந்தை என அவரின் ரிஷி மூலம்  பற்றி எனக்கு தெரிந்த விஷயங்கள் உங்களுக்காக:

 காதி என்ற  மன்னனுக்கு ஒரே ஒரு மகள். பெயர்: சத்யவதி.  மகளுக்கு  திருமணம் முடிக்க காதி விரும்பினான்.  ( எந்த நாட்டின் மன்னன் என்று  எனக்கு ஞாபகம் இல்லை. தெரிந்தால் பின்னூட்டம் இடுங்களேன்!) அதற்காக, பல நாட்டு அரசர்களுக்கும் ஓலை அனுப்பினான். அந்த சமயத்தில்  ரிசீகர் என்ற முனிவர் காதி மன்னனை காண அரசவைக்கு வந்தார். 


சத்யவதியை கண்ட ரிசீக முனிவர், அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பி அரசனிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.அதைக் கேட்ட சத்யவதியும் ரிசீக முனிவரை விரும்பினாள்.மன்னனுக்குத்தான் தன மகளை, முனிவருக்கு மணமுடித்து கொடுக்க விருப்பமில்லை. 





முனிவரை, தட்டி கழிக்க விரும்பி, அவரிடம்,

"ஒரு காது கருப்பாகவும், உடலெல்லாம் சூரியன் போல ஒளியும் வீசும் ஆயிரம் குதிரைகளை எனக்கு நீங்கள் தந்தால்  என் மகளை உங்களுக்கு நான் மணமுடித்து தருகிறேன்" என்றான்.

தவவலிமை பெற்ற முனிவரோ, வருணபக வானைப் பிரார்த்தனை செய்து, ஒரு காது கருப்பாகவும், உடலெல்லாம் சூரியன் போல ஒளியும் வீசும் ஆயிரம் குதிரைகளை உருவாக்கி மன்னருக்கு கொடுத்தார்.

பலர் முன்னிலையில் கொடுத்த வாக்காயிற்றே!

வேறு வழியின்றி காதி அரசனும் தன்  மகள் சத்யவதியை  ரிசீக முனிவருக்கு மணமுடித்து கொடுத்தார்.

நாட்கள் நகர்ந்தன. 

சத்யவதி, தன்னிடம் வைத்திருக்கும் அன்புக்கு பிரதியுபகாரமாக  ரிசீகர் அவளுக்கு ஒரு வரமளிக்க விரும்பினார். சத்யவதியிடம், அவள் கேட்ட வரத்தை தருவதாக கூறி, என்ன  வேண்டும் என்று கேட்டார். பிறிதொரு நாளில் வரத்தை கேட்பதாக சத்யவதி கூறினாள்.

மறுநாள், தன் தாயைப் பார்க்க அரண்மனைக்குச் சென்றாள் சத்யவதி. 
தன் தாயிடம் கணவரின் வரத்தை பற்றி கூறி, என்ன வரம் கேட்க வேண்டும் என்றாள்.
சத்யவதி தவிர வேறு ஆண் மகன் ஏதும் இல்லாத அவளின் தாய், "எனக்கு ஒரு ஆண் குழந்தை, அதாவது உனக்கு ஒரு தம்பி  பிறக்கவேண்டும் என்று கேள்" என்றாள்.

தன் வீட்டிற்கு வந்த சத்யவதி, தன் கணவரிடம், 
"சுவாமி! எனக்கு வரம் தருவதாகக் கூறியிருந்தீர்கள் அல்லவா?  அது மட்டுமல்ல. என் தாய்  இப்போது ஒரு மகன் பிறக்க வேண்டுமென்று விரும்புகிறாள். அதுபோல, எனக்கும்  ஒரு  நல்ல மகன்  பிறக்க வேண்டும். இதுதான், நான் கேட்க விரும்பும் வரம்’ என்று பணிவோடு கேட்டாள்.

மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்த முனிவர், சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்து விட்டு அவளிடம் வந்தார்.

‘இதோ பார்! இந்த இரண்டு பிரசாதங்களையும் அளிக்கிறேன். குறிப்பிட்ட இந்தப் பிரசாதத்தை நீ உண்ண வேண்டும். மற்றொன்றை உன் தாயிடம் கொடுக்க வேண்டும். அது மட்டுமல்ல. நாளை காலை குளித்து முடித்து விட்டு, நீ அத்தி மரத்தையும், உன் தாய் அரச மரத்தையும் தழுவிக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், நிச்சயமாக உங்களுக்கு சிறந்த மகன்கள் பிறப்பார்கள்’ என்று அருளி விட்டு, மீண்டும் உள்ளே சென்று தன் தியானத்தைத் தொடர்ந்தார்.

சொல்ல முடியாத மகிழ்ச்சியுடன் தன் தாயைப் பார்க்கச் சென்றாள் சத்யவதி. முனிவர் சொன்ன விவரங்களைத் தன் தாயிடம் கூறி, தாய்க்குரிய பிரசாதத்தை அவளிடம் நீட்டினாள்.



"மகளே! எந்தவொரு கணவனும், தன் சந்ததி சிறந்ததாக இருக்க வேண்டுமென்றே விரும்புவான். அதன்படி, உன் பிரசாதமே என்னுடையதை விட உயர்ந்ததாக இருக்கும் என்பது என்னுடைய அபிப்பிராயம். எனவே, அதை எனக்குக் கொடுத்து விடு. என்னுடையதை நீ எடுத்துக் கொள். அதே போல், நான் அத்தி மரத்தைத் தழுவிக் கொள்கிறேன். நீ அரச மரத்தைத் தழுவிக் கொள்" என்றாள் சத்யவதியின் தாய்.

மேலும்,  

"என் மகன்  உன் சகோதரன் தானே! நாளை இந்த நாட்டுக்கு அரசனாக வருபவன் அவன் தானே! அதனால் தான்  இப்படிக் கேட்கிறேன்’ என்று சத்யவதியிடம் கெஞ்சினாள்.தாயின் பேச்சைக் கேட்டு, சத்யவதியும் அவ்வாறே செய்தாள்.

மறுநாள் பொழுது விடிந்தது.

சற்று நேரம் கழித்து, சத்யவதியை பார்த்த  ரிசீக முனிவர். அவள் மீது ஏதோ ஒரு மாற்றம் இருப்பதை உணர்ந்து, தன் ஞான திருஷ்டியின் மூலம் அனைத்தையும்  அறிந்து கொண்டார்.

"சத்யவதி! நீ பெரும் தவறு செய்துவிட்டாய். நீ ஒரு அந்தணனை மணந்திருக்கிறாய். உன் தாயோ, ஒரு அரசனை மணந்திருக்கிறாள். எனவே, அவளுக்கு ஒரு சத்திரியனும், உனக்கு ஒரு அந்தணனுமே மகனாகப் பிறக்கும்படி பிரசாதம் கொடுத்திருந்தேன்.ஆனால், இது தெரியாமல் நீ உன் தாயிடம் பிரசாதத்தை மாற்றிக் கொடுத்து  விட்டாய். இதனால் உனக்குப் பிறக்கும் மகன் பிறரைக் கொல்லும் சத்திரியனாகவும், அவள் மகன் தவம் செய்யும் அந்தணனாகவும் இருப்பான் " என்றார்.

பதறிப் போன சத்யவதி,  மன்னிக்கும் படி வேண்டினாள்.

மனமிரங்கிய முனிவர், ‘உன் மகன் சிறந்த அந்தணனாக இருப்பான். ஆனால், உன் தாய்க்குப் பிறக்கும் மகன் சத்திரியனாகப் பிறந்தாலும், பின்னொரு காலத்தில் அந்தணனாக மாறி விடுவான்’ என்று கூறினார்.

அதன்படி சத்யவதி  தாய்க்குப் பிறந்தவர் தான் கௌசிகன். 

அப்படியானால் சத்யவதிக்கு பிறந்தவர் தான் விசுவாமித்திரரா? என்றால் இல்லை என்பதே என் பதில். 

அப்படியானால் சத்யவதிக்கு பிறந்தவர் யார் என்கிறீர்களா? இந்த பதிவின் கடைசி பாராவில் பார்க்கவும்.

இனி சத்யவதி  தாய்க்குப் பிறந்த கௌசிகனை பற்றி பார்ப்போமா!

அரண்மனையில் பிறந்த கௌசிகன், தன் தந்தை காதி அரசருக்கு பின் மன்னனான்.ஒரு நாள் காட்டிற்கு சென்று  தன் படைகளுடன் வேட்டையாடிவிட்டு களைப்பில் இருக்கும் போது அந்த  காட்டில் வசித்த வசிஷ்ட முனிவர் அவர்களின் களைப்பை போக்க எண்ணி அனைவரையும் அழைத்து விருந்து அளித்தார். 

 சாப்பிட்டு முடித்த கௌசிக மன்னன் வசிஷ்ட முனிவரிடமும், "காட்டில் தவம் இருக்கும் நீங்கள்  எதுவுமே இல்லாத போது இத்தனைப் பேருக்கு இவ்வளவு விரைவாக  எப்படி சமைத்துப் போட முடிந்தது" என்று  கேட்டார்.

வசிஷ்டரோ, மறுமொழியாக, "என்னிடம் நந்தினி என்ற அபூர்வ பசு ஒன்று இருக்கிறது. அது நினைத்தவுடன் அள்ளித் தரும் சக்திக் கொண்டது" என்று கூறினார்.


மன்னன், "அதை என்னிடம் கொடுத்து விடுங்களேன்" என்று கேட்க முனிவரோ, மறுக்க மன்னன் கோபம் கொண்டு வாளை உருவ, 

பல வரங்கள் பெற்ற வசிஷ்டரிடம் நடக்குமா!

தோற்று போன கௌசிக மன்னனுக்கு அவமானம் பிடுங்கி தின்றது. 

நாடு,நகரம் இருந்து என்ன பயன்? ஒரு முனிவரிடம் தோற்று விட்டேனே என்று உள்ளுக்குளே மருவினான். 

நானும் தவம் இருப்பேன்! வசிஷ்டரை வெல்வேன்!! என்று வைராக்கியம் கொண்டு அதே காட்டில் தவம் இருக்கத் தொடங்கினான்.

தவம் இருந்தது முனிவராகிய கௌசிக மன்னன் தான் விசுவாமித்திர முனிவர்.

ரிசீக முனிவர் சொன்னபடி நடந்து விட்டதா!

இதற்கு பிறகுதான், வசிஷ்டரிடம் ஏற்பட்ட போட்டியின் விளைவாக,  அரிச்சந்திர மகாராஜாவை  பொய் சொல்ல வைக்க அவரின் குடும்பத்தை பிரித்தார் விசுவாமித்திரர். அது மட்டுமா! சுடுகாட்டுக்கு வேலை செய்ய அனுப்பினார்!! இந்த கதை தான் உங்களுக்குத் தெரியுமே! 

அது மட்டுமா!

மனித உடலோடு திரிசங்கு மன்னனை சொர்கத்துக்கு அனுப்பி, அதன் பின்  அவனை அந்தரத்தில் தொங்க விட்டது, சகுந்தலையின் பிறப்பு   என்று விசிவாமித்திரரை பற்றிய செய்திகள் ஏராளம்.


விசிவாமித்திரரைப் பற்றி இன்னும்  விரிவாக தெரியவேண்டுமாயின் பின்னோட்டம் செய்யவும்.இன்னொரு பதிவு இடுகிறேன்.

முதலில் கேட்ட கேள்விக்கான விடை:

சத்யவதிக்கு பிறந்தவர்  தான் ஜமதக்னி முனிவர். இவரைப் பற்றி பின்னொருமுறை விவரிக்கிறேன்.

குறிப்பு:

எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள்  facebook page  : J5 news
எங்கள் Email: jfivenews@gmail.com


1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.


2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team

No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram