வாசகர் பதிவு: பதிந்தவர்: அலங்கார பெனெடிக்ட்
தலைப்பு :அடர்ந்த காடும், கந்தர்வ அழகியும்!
அடர்ந்த கானகத்தின் ஆழ்ந்த மௌனத்துள் அவ்வப்போது முளைக்கும் சில சில்வண்டுகளின் ரீங்காரமும், அதனோடு கலந்து கானம் படைக்கும் என் அருமைப் புரவி கல்யாணியின் அன்னநடையில் உருவாகும் ‘டொக் டொக்’கும்
திரு.அலங்கார பெனெடிக்ட்
தான் இச்சமயம் என் மனதிற்கு அற்புத தேவகானம். “அடேய், தேவகானத்தை இதற்குமுன் நீ கேட்டிருக்கிறாயா?” என்கிறீர்களா? ஏன் கேட்க மாட்டீர்கள்? என்னைப் போல், இந்த இருள் சூழ்ந்த அடர்ந்த காட்டுக்குள் நள்ளிரவில் பயணம் செய்தீர்களானால், தேவகானத்தின் மானம், எதுவரையில் இறங்கிவிட்டிருக்கிறது என்பது உங்களுக்கு நான் சொல்லாமலேயே தானாய்ப் புரியவரும். அது சரி, “உன்னைப்பற்றி இதுவரை நீ ஒன்றும் சொல்லவில்லையே” எனக் கேட்பதும் காதில்விழுகிறது. சொல்கிறேன்.
ராஜாதி ராஜ, சூராதி சூர, வீராதி வீர, ரத, கஜ, துரக, பதாதி படைகளுக்கெல்லாம் மாவேந்தனாய்த் திகழ்கின்ற குதர்க்க நாட்டு மன்னன் ம'ண்'மதன் நான். இன்று ஓர் சிங்கத்தையேனும் சங்க முழக்கத்தோடு நிச்சயம் வேட்டையாடியே ஆகவேண்டுமெனும் சபதத்தில் மும்முரமாய் நிலைபெற்றிருக்கின்றபடியால், காலாட்படை, வாலாட்டும் படை என எல்லாவற்றையும் இருக்கின்ற இடத்திலேயே இருக்கச்செய்துவிட்டு, மாவீரனுக்கேயுடைத்த மாண்புடன், தனிமையில் வேட்டையாட கிளம்பி வந்துவிட்டேன்.
சின்ன வயதில், நான் சிங்கத்தின் வாலில் வளையம் கட்டி விளையாடின கதையை என் தந்தை எனக்குச் சொல்லி, அதே கதையை நானும் எத்தனைக் காலம்தான் என் மந்திரசபை மகாமந்திரிகளிடமும், மக்களிடமும் சொல்லித் திரிவது?! எனக்கு புத்தி சிறிதாய் வளர்ந்து, நான் விளையாடிய சிங்கம் மண் சிங்கமா, இல்லை காட்டில் திரிந்த பெண் சிங்கமா என்பதைத் தந்தையிடம் கேட்டுத் தெரிந்து தெளிந்து கொள்ளுமுன்னரே, என் அப்பாவித் தந்தை அவசரம் அவசரமாய் பரலோகப் ப்ராப்தியடைந்துவிட, என் மண்டைக்குள் எனக்கு, இப்போது பம்பரங்கள் நூறு சுழல்வதைப் போலிருக்கிறது.
இப்போதெல்லாம் என்னைப்பற்றி, “அந்தப்புரத்தில் அம்மா தருகின்ற கொண்டைக்கடலையைத் தின்றுகொண்டே காலத்தைக் கடத்துபவன்” என என் காதுபடவே காவலாளிகள் கலகலத்துப் பேசுவதை நினைத்துப் பார்த்தால், நெஞ்சம் கொஞ்சம் தீயாய் எரிகிறது. அந்தத் தீயை விரைவில் அணைத்தொழிக்க வேண்டும் என்ற அடங்காத வேட்கையை நிறைவேற்ற, இதோ நான் கானகம் வந்து விட்டேன். வந்ததும்தான் வந்தேன், அப்படியே கானகத்தின் வெளிப்புறத்தே வலம்வந்து, அங்கே காடாளும் சிங்கம் ஏதாவது இந்த நாடாளும் மண்மதச் சிங்கத்தை வரவேற்க வந்தால், அப்படியே அதை லபக்கென்று வேட்டையாடி, கல்யாணியின்மேல் தொங்கும் மூட்டையில் கட்டித் தபக்கென்றுத் தூக்கிப் போயிருக்கலாம்தானே? அதைவிடுத்து அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு இப்போது நெடுந்தூரம் நடுக்கானகத்துள் வந்து வசமாகச் சிக்கிக் கொண்டுவிட்டேன். கல்யாணியும் கூட, தான் களைத்துப் போனதைக் கனைத்துக் கனைத்து என்னிடம் அவ்வப்போது தெரிவிக்கிறாள். எனக்கும் கூட அயர்வாய்த் தானிருக்கிறது. இந்தக் கானகத்தில் பருகி இளைப்பாற ஒருகுவளை தண்ணீர் கூட கிடைக்கவில்லை. ஒரு அரச மிடுக்கில், உடன் வர யத்தனித்த வீரர்களையும் கூட வேண்டாம் என மறுத்துவிட்டேன். அம்மா கட்டிக்கொடுத்த கொண்டைக் கடலையையும் கூட கொண்டு வர மறந்தாயிற்று. இனி என்ன செய்ய?
பசி உயிர்போகிறது. அதனினும் அதிகமாய் கானகத்தின் அழுத்தமான அமைதி குடலைப் பறிக்கிறது. பேசாமல் நாட்டிற்குத் திரும்பி, சிங்கம் விடுமுறைக்கு வெளியூர் போயிருக்கிறது, அது திரும்பிவந்ததும் வேட்டைக்குச் சென்றுவருகிறேன் என்று சொல்லித் தப்பித்துக் கொள்வோமா? நாட்டுமக்களும் மந்திரிகளும் தூவென முகத்தில் துப்பிவிட மாட்டார்கள்?
ஐயோ..!
பசி உயிர்போகிறது. அதனினும் அதிகமாய் கானகத்தின் அழுத்தமான அமைதி குடலைப் பறிக்கிறது. பேசாமல் நாட்டிற்குத் திரும்பி, சிங்கம் விடுமுறைக்கு வெளியூர் போயிருக்கிறது, அது திரும்பிவந்ததும் வேட்டைக்குச் சென்றுவருகிறேன் என்று சொல்லித் தப்பித்துக் கொள்வோமா? நாட்டுமக்களும் மந்திரிகளும் தூவென முகத்தில் துப்பிவிட மாட்டார்கள்?
ஐயோ..!
ஒரு எலியாவது கண்ணுக்குப் படுகிறதா.....? அதையேனும் வேட்டையாடி, இது சிங்கக்குஞ்சு என்று சொல்லி தப்பித்துக்கொள்ளலாமே. அது சிங்ககுஞ்சா? சிங்கக் குட்டியா? ம்ம்.. எதையெதையெல்லாம் ஆராயும் நிர்ப்பந்தத்திற்கு நான் உள்ளாகிவிட்டேன்? என்கதி ஏன் இப்படி ஆகிவிட்டது? எல்லாம் இந்த பாழாய்ப்போன இயற்கையின் சதி. அது, இந்த மண்மதச் சிங்கத்தை வேண்டுமென்றே சீண்டிப் பார்க்கிறது. பார்க்கட்டும்! பார்க்கட்டும்! எத்தனைக் காலம் வேண்டுமோ அத்தனைக் காலம் அது சீண்டிப் பார்க்கட்டும். சீண்டிப்பார்ப்பவர்களை இந்தச் சிங்கம் சீறிப்பார்த்து சின்னாபின்னமாக்கிவிடும் என்ற உண்மை அதற்கு விரைவிலேயே தெரியவரும்.
இவ்விதமாய், ஒரு சிம்மத்துக்கே உரித்தான எனது இந்த படுபயங்கரக் கோபம், என் தலைமேல் ஆசனமிட்டு அட்டகாசமாய் அமர்ந்திருந்தாலும், அது அட்டைக்கத்தியைப்போல் ஆட்டம்கண்டு புஸ்வானமாய் போய்விட்ட அதிசயத்தைச் சொன்னால் நீங்கள் ஆச்சர்யம் கொள்ள மாட்டீர்கள்? அந்த அதிசயத்திற்குக் காரணம், என்முன் திடீரெனத் தோன்றின அந்த மானன்ன மருள்விழியாள்தான் என்றால் நீங்கள் நம்புவீர்களா? “ஹெஹே ஹெஹே! பார்த்தீர்களா? நீங்கள் நம்பமாட்டீர்கள் என்று சொன்னேனே. நடுக்காட்டுக்குள் எப்படி நங்கை வந்தாள் என்று கேள்வி தானே கேட்கிறீர்கள்? நம்புங்கள். வலக்கால்பாதம் தரைமீது முழுதும் படிந்து, இடக்காலை வலக்காலுக்குக் குறுக்கில் வைத்து, அதன் முன்பாதத்தை மட்டும் தரையிலூன்றி நின்றவாறு, தன் கழுத்தில் தொங்கும் மாவடிவைக் கோர்த்த தோரணமாய் விளங்கின பொன்நகையை வலக்கை பிடித்து வாய்க்குத்தர, அதைக் கடித்தவாறே எனை நோக்கிப் புன்னகைத்தாளந்த பேரழகி.
கால்களிரண்டிலும் சதங்கையைப் போலொரு அணிகலன். வைடூரியம், அந்த பொன்னால் செய்த ஆபரணத்தில் பதிக்கப்பெற்றுள்ளதோ? அவள் நிற்கும் நிலையில், எங்கோ இருக்கும் ஒளியைத் தன்னுள் ஈர்த்துப் பதிந்துள்ளமணிகள் பிரகாசிக்க, என் கண்ணையும் கருத்தையும் அவை மிகவே கவர்ந்தன. முற்றின வாழைமரத்து மேல்பட்டைகளை அகற்றினால் அதனுள்ளே வெளிப்படும் வெண்தண்டின் நிறத்தை தன் நிறமாய்க்கொண்ட அவளது மேனியை மறைத்து அழகு செய்யும் அந்த ஆடை பொன்னால் நெய்யப்பட்டதுவோ எனும் எண்ணம், என் நெஞ்சத்துள் எழாமல் இல்லை. இடையைத்தாண்டி அசைந்தாடும் கருங்குழல் பின்னலும், அவற்றின் மேல் அணிகலனாய்ச் செருகப்பட்ட மலரலங்காரமும், முன்னே தெளிந்த முழுமதியாய் முகமும், அம்முழுமதி முகத்தின்கண் வீற்றிருக்கும் முட்டைக் கண்களும், நீள் நாசியும் இனிக்கும் அதரங்களும் என்மனத்தை ஏகபோகமாய் வதைசெய்துவிட்டன. கழுத்திலும் இடையிலும் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பெற்ற அவள் கட்டுடல் சவுந்தர்யங்களைக் கண்களால் பருகினவன், அடக்கவொண்ணாமல் சட்டென அவளை நோக்கி, “யார் நீ பெண்ணே” என்றேன். அவளிடத்தினின்று பதிலேதும் இல்லை. ஆனால், “க்ளுக்” எனச் சிரித்து, பின் நாணத்தால் தரைபார்த்தாள்.
அப்ப்பா... அவளின் 'க்ளுக்'கெனும் சிரிப்பும் நாணமும் கூட எத்தனை போதையைத் தருவதாய் இருக்கிறது? யார்தான் இவள்? ஒருவேளை, வானத்துத் தாரகையோ? அரம்பை, திலோத்தமை, ஊர்வசி என்றெல்லாம் சொல்வார்களே.... அந்தப் பேரழகுப் பெட்டகங்களுள் ஒருத்தியோ? நினைத்ததை அவளிடமே கேட்டுவிட்டேன். கேட்டதும் சிரித்தாள். என் வர்ணனையை ரசிக்கிறாள் என்று நினைத்தபோது, உண்மைதான் என்றுரைத்து என்னை ஆச்சர்யம் கொள்ளச்செய்தாள்.
“நான் கந்தர்வப்பெண்”
திகைத்தேன் நான்.
“நீ நிஜமாகத்தான் சொல்கிறாயா?”
“ஆமாம். அதிலென்ன சந்தேகம்?”
“இந்த நேரத்தில் இத்தனை அழகான பெண்ணொருத்தி இந்த அடர்ந்த கானகத்தில் நிற்பதை என்னால் நம்பமுடியவில்லை”
“அப்படியென்றால் பேய் என்கிறீர்களா?”
“சே அப்படியும் தோன்றவில்லையே. உனக்குத்தான் கால்களிருக்கின்றனவே?”
“ஓ! அப்படியென்றால் தேவலோகப்பெண்களுக்குக் கால்களிருக்குமென்கிறீர்கள்...”
“இருக்காதா?! தெரியவில்லை... என் முன்னோர்கள் எனக்கு, பேய்களின் கால்களைப் பற்றி மட்டும்தான் சொல்லி இருக்கிறார்கள்....”
“ம்”
“ம் என்றால் என்ன அர்த்தம்? நீ சொல்வது உண்மைதானா?”
“மீண்டும் சந்தேகமா?
“சந்தேகப்படும்படியாகவும் இருக்கிறது. நம்பும்படியாகவும் இருக்கிறது”
“ம்ம்.”
“மீண்டும் ம்ம்ம்-மா?”
“சரி. என்ன செய்தால் நம்புவீர்கள்?”
“என்ன செய்தால் நம்புவது? ம்ம்ம்ம்ம்ம்..... நீ தான் தேவதையாயிற்றே? எனக்குக் கொண்டைக்கடலை வருவித்துத் தாயேன்?” கேட்டவுடன் எனக்கும் கூட அது கேவலமாகப்பட்டது.
“இவ்வளவுதானா? இதோ வந்தது” என அவள் சிட்டிகைப்போட, கடவுளே! கிண்ணத்தில் கொண்டைக் கடலை!
“ஓ! கந்தர்வப்பெண்ணே, கடலை வேகவில்லையே?”
“நீங்கள் வேகவைத்த கடலை கேட்கவில்லையே? வேண்டுமானால், வேறு எதாயினும் கேளுங்கள்”
சரி. இந்தமுறை சொதப்பாமல் சரியாக கேட்கவேண்டும்.
“ம்.. சோமபானம் ஒரு கோப்பை. பெரிய கோப்பையாக இருக்கட்டும். சுரா பானம் ஒரு கோப்பை. அதுவும் பெரிய கோப்பையில். பிறகு கொஞ்சமாக நொறுக்குத் தீனி, பெரிய தட்டில்...”
“இதோ வந்தது” மறுபடியும் சிட்டிகை போட்டாள் கந்தர்வப்பெண்.
“இவ்வளவு தான் வேண்டுமா?” கந்தர்வப்பெண்ணின் கேள்வியின் தொடுதலால் சோமபான அருந்தலைச் சட்டென நிறுத்தினேன் நான். குவளையைத் தரையில் வைத்துவிட்டு...
“அதெப்படி இத்துடன் முடித்துக்கொள்வேன்? இன்னும் வேண்டும். இதோ குடித்ததும் சொல்கிறேன். அதற்குள் எங்கும் ஓடிவிடமாட்டாயே?”
“ஐயோ... தின்பதிலேயே இருங்கள். உங்களுக்கு நான் வேண்டாமா?”
“ஆ!”
என் திறந்த வாய் இன்னமும் மூடவேயில்லை. இவள் சத்தியம் தான் சொல்கிறாளா? சிங்கத்தைத் தேடி வந்த எனக்கு, இப்படி ஒரு தேவலோகத் தங்கத்தைப் பெறுவதுதான் யோகமா? ஆஹா! ஆஹா! ஆஹா!!
“வேண்டும். வேண்டும். வேண்டும்..”
“ம்க்கும். எல்லாம் உங்களுக்கு வாய்ப் பேச்சுதான். நான் வேண்டுமென்று நினைத்திருந்தீர்களென்றால் இந்நேரம் சோமபானத்தையா குடித்துக் கொண்டிருப்பீர்கள்?”
“ஐயோ, கந்தர்வ அழகி! கந்தர்வ அழகி...! என்னை மன்னித்துவிடு!! எனக்கு சோமபானம் வேண்டாம்!! நீதான் வேண்டும்! நீதான் வேண்டும்!”
சிரித்தாள் கந்தர்வப்பெண். சொக்கினேன் நான்.
“கந்தர்வ அழகி! உன் சக்தியால் இப்போது இங்கே மெத்தையையும், வானில் முழு நிலவையும் வரவழையேன்?”
சிட்டிகைப்போட்டாள்.
“ஆஹா! ஆஹா!! கந்தர்வ அழகி! கந்தர்வ அழகி! இப்போது இங்கே தேவகானம் இசைத்தால் எத்தனை நன்றாய் இருக்கும்? தேவகானம் இசைக்கச் செய்யேன்....”
சிட்டிகைப்போட்டாள்.
“கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்”
நான் கந்தர்வ அழகியைப் புரியாமல் பார்த்தேன்.
“கந்தர்வ அழகி, தேவகானம் கேட்டேனே..?”
“ஆமாம். தெய்வத்தைத் துயிலெழுப்பும் சுப்ரபாதமும், தேவகானம் தானே?”
அவள் சொன்னதும் சரிதான். அதுவும் தேவகானம் தானே? நான்தான் அவளிடம் குறிப்பாக கேட்டிருக்க வேண்டும். திரும்பவும் சொதப்பிவிட்டேன். சரி போகட்டும். இப்போது அவளை நோக்கிக் கனிவுடன் பார்த்து, அருகில் வாவென அன்புடன் அழைத்தேன். அவளும் அன்னநடை நடந்து காதல்பெருக என் அருகில் வந்தாள்.
“இன்னும் அருகில் வா, கந்தர்வ அழகி!”
வந்தாள்.
“இன்னமும் வா கந்தர்வ அழகி!”
வந்தாள்.
“இன்னமும்தான் வாயேன்”
இப்போது மிகவும் அருகில் வந்ததால், அவள் உடம்பின் மீதிருந்த உரோமங்கள் என் உடம்பைத் தொட்டன.
ஆஹ்! ஆனால், இவளது உரோமங்கள் ஏன் என்னை முள்ளாய்க் குத்துகின்றன?
“கந்தர்வ அழகி! கந்தர்வ அழகிகளெல்லாம் வித்யாசமானவர்கள் தான் போலும். அவர்களது உரோமங்களும் கூட உருக்கி வார்த்த இரும்பில் செய்த ஈட்டியைப்போல் கூர்மையாக அல்லவா இருக்கிறது. ரோமஞ்சனம் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் இப்படி ரோமம் குத்தி வலிப்பதை இப்போதுதான் அனுபவிக்கிறேன்” என்றேன்.
“ஆமாம். ஆமாம். கந்தர்வப் பெண்களுக்கெல்லாம் ரோமம் இப்படித்தான் இருக்கும்” என்றாள் கந்தர்வப் பெண்.
“இருக்கட்டும்! இருக்கட்டும்! நன்றாக இருக்கட்டும்! அதுசரி.....இப்படியேதான் நாம் இப்போது பேசிக்கொண்டிருக்க வேண்டுமா? இன்னும் கொஞ்சம் அருகில்தான் வாயேன் என் அருகில் அமர்ந்துகொள்ளேன்..” அதற்கு மேல் என்பொறுமை எல்லைகொள்ளாதென்பதை மனம் உணர்ந்ததோ இல்லையோ, நொடியும் தாமதியாமல் அவளை அவளின் சம்மதமின்றியே இழுத்து வாரியணைத்தேன்.
என்ன இது? இன்ப மழையை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவளே மழையாய் இப்படிப்பொழிகிறாளே என வியந்து நனைந்து ஒழுகும்நீரை வழித்து விழிகளைத் திறந்தால்.........
ஐயோ, அம்மா! அவள் கையில் இருந்த வாளியின் நீரெல்லாம் என்மேல் அபிஷேகமாகிவிட்டிருந்தது. அவளது மற்றுமொரு கையில் இருந்த துடைப்பத்தின் முனைகள், என் மேனியை முத்தமிட்டுக் கொண்டிருந்தன. எல்லாம் கனவா? அடக்கடவுளே.
“ஏண்டா முண்டம், கட்டைல போறவனே...! எத்தனவாட்டி காட்டுக்கத்து கத்தறேன்? அப்டி என்னா தூக்கம்? அப்டி என்னா தூக்கம்ன்றேன். தொடப்பக்கட்ட. நீ கெட்டக்கேட்டுக்கு உனக்கு கந்தர்வஅழகி கேக்குதோ... கந்தர்வ அழகி? அடி செருப்பால, எந்த ஊர்லயும் நான் பக்கட் சைஸ்ல கந்தர்வ அழகிய பாக்கலடா” என்றவாறே கையில் வைத்திருந்த துடைப்பத்தால் அவள் எனக்குச் சாமரம் வீச ஆயத்தமாக, TVயில் வழியும் சுப்ரபாதத்தைக் காதில் வாங்கியவாறே, வெளிப்புறமிருக்கும் மாமரம் நோக்கி வேகமாய் ஓடினேன் நான்.
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram