Tuesday, July 7, 2015

கருப்பு காணம் குழம்பு

கருப்பு காணம் குழம்பு 

கருப்பு காணக் குழம்பு  பற்றி எழுதப் போகிறேன் என்று  நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன். சற்று குழம்பித்தான் போனான். ஒருவேளை ஒரு சில வட்டார வழக்குகளில் வேறு பெயர்களில் அழைக்கிறார்களோ என்னவோ!

அதற்காகவே கருப்பு காணம் எப்படி இருக்கும் என்று சொல்லிவிடுகிறேன். உளுந்து போன்று சற்று தட்டையாக இருக்கும். ( புகைப்படம் பார்க்கவும்)





இளைத்தவனுக்கு  எள்ளு கொழுத்தவனுக்கு  கொள்ளு என்று சொல்வார்கள். அதாவது உடல் மெலிந்து இருப்பவர்கள் சற்று சதைப்பிடிப்போடு இருக்க எள்ளு சாப்பிடவேண்டும். அதுபோல், உடல் கொழுப்பு  குறைந்து சற்று மெலிய,  கொள்ளு அதாவது கருப்பு காணம் சாப்பிடவேண்டும்.

என் வீட்டில் வாரம் ஒரு முறை கண்டிப்பாக இந்த குழம்பு இடம் பெறும். சாப்பிட மிகவும் சுவையாகவும் இருக்கும்.சின்ன வயதில் என் அம்மா அடிக்கடி இந்த குழம்பு செய்வார்கள். அதன் பின் அக்கா வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன். திருமணத்திற்கு பிறகு மனைவியிடம் இந்த குழம்பு செய்யச்  சொன்னேன்.

தெரியாது! என்ற பதில் தான் கிடைத்தது.

அக்காவிடம் ரெசிபி வாங்கி கொடுத்தேன்.

அதுமுதல் இன்று வரை  ஒவ்வொரு வாரமும் புதன் அல்லது வியாழக் கிழமைகளில்  என் வீட்டில் தவறாது இந்த  குழம்பு இடம் பெறும்.

கருப்பு காணம் கொழுப்பு குறைக்க மட்டுமல்ல!கல்லடைப்பு, இருமல் போன்றவற்றையும் குணப்படுத்தும்.  உடலில் தேவையில்லாத சதைகள் குறையும்.  உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும்.  இதை   கொதிக்க வைத்து குடிக்கும் போது  ஜலதோஷம் குணமாகும்.  மிக முக்கியமாக பிரசவ அழுக்கை வெளியேற்றும்.

இப்போது குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போமா!



தேவையானவை:
கருப்பு காணம் - மூன்று  டேபிள் ஸ்பூன் ( டீஸ்பூனை விட சற்று பெரியது)
தேங்காய் துருவல் -மூன்று  டேபிள் ஸ்பூன்
காய்ந்த வத்தல் -ஐந்து
பூண்டு - ஐந்து பல்
தக்காளி - மூன்று ( நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்)


செய்முறை:

காணத்தை வெறும் வாணலியில்( எண்ணெய் இல்லாமல்) சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவேண்டும்.சிறிது நேரம் ஆறவைத்து அதனுடன் துருவிய தேங்காய், மற்ற அனைத்தையும்( தக்காளி தவிர)  சேர்த்து மிக்ஸியில் நீர் ஊற்றி  பட்டு போல அரைத்துக்கொள்ளவேண்டும்.மிகவும் பட்டு போல அ ரைத்துக்கொள்ளவேண்டும்.     பட்டு போல   அரைத்தபின்
  மிக்ஸியிலிருந்து  வெளியே எடுத்து இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும்.

அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரைத்து வைத்துள்ள கருப்பு காண கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.கெட்டியாக இருந்தால் இன்னும் சற்று  நீர் சேர்த்துக் கொள்ளவும்.நன்கு கொதித்தபின் உப்பு போட்டு இறக்கவும்.

சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


பின் குறிப்பு:

எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள் facebook page : J5 news
எங்கள் Email: jfivenews@gmail.com

1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும்.

2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team



No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram