Saturday, November 9, 2019

சிவசுப்பிரமணியபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

https://www.dinamalar.com/nri/details_others.asp?id=1634&lang=ot

நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டம் சிவசுப்பிரமணியபுரத்தில் டெங்கு & பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று(07.11.2019) பிற்பகல் 3 மணிக்கு சிவசுப்பிரமணியபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் ஆலய கலையரங்கத்தில் கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் பள்ளிக்குழந்தைகள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் திரு.திரவியம், திரு.கணபதி நாடார் மற்றும் திரு.நடராஜன் ஆகியோர் தலைமை ஏற்க, இராதாபுரத்தைச் சேர்ந்த நம்மால் முடியும் குழுவினர் வந்திருந்து மக்களிடம் டெங்கு பற்றிய தகவல்களை விளக்கிக்கூறினர். விழாவின் தொடக்கத்தில் 'நம்மால் முடியும் குழு' வைச் சேர்ந்த திரு. கா.காமராஜ் அவர்கள் டெங்கு எவ்வாறு பரவுகிறது என்பதைப் பற்றியும் நாம் நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் விளக்கினார். மேலும், ஆபத்து காலத்தில் ஏற்படும் பேரிடரில் இருந்து மக்கள், தங்களை காப்பாற்றி கொள்வது குறித்தும் விளக்கமாக சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த திரு. த.சந்திரகுமார் அவர்கள் கூறும் போது, "வருமுன் காப்போம் என்ற ஸ்லோகன் தான் எங்களின் இந்த முயற்சிக்கு முக்கியக் காரணம். எங்கள் ஊர் மக்கள், டெங்கு காய்ச்சல் மற்றும் அது தொடர்புடைய நோய்களின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான் இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்து நடத்தி வருகிறோம். கடந்த வருடமும் இது மாதிரி விழிப்புணர்வு முகாம் நடத்தினோம். இந்த ஆண்டும் தொடர்கிறோம். மக்கள் மத்தியிலும் முன்பை விட நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. என் நண்பர்கள் கபிரியேல், ஜெய் கார்த்திக், ரோகன், S.தங்ககுமார், நவராஜா, கிருஷ்ண குமார், பாரத், சதீஷ் மற்றும் விஜிகுட்டி ஆகியோரும் இந்த விழிப்புணர்வு முகாம் வெற்றிகரமாக மக்களை சென்றடைய உதவினார்கள். எல்லாவற்றுக்கும் அரசை குறை கூறாமல் நாமே நம்மால் முடிந்தவற்றை செய்யவேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய காரணம்" என்றார்.
மேலும் அவர் கூறும் போது, "பனை விதை நடும் நிகழ்ச்சிக்கு எங்கள் தொகுதி MLA திரு.இன்பதுரை அவர்கள் வந்திருந்து சிறப்பித்ததோடு அங்கன்வாடிப் பள்ளியைத் திறந்து வைத்ததில் எங்கள் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ரோட்டோரங்களில் மரங்களை நடுவதோடு நின்றுவிடாமல் அதை பராமரித்தல், சீமை உடை மரங்களை வேரோடு அகற்றுதல், உடைந்த ரோடுகளை சரிசெய்தல் போன்றவற்றையும் செய்துவருகிறோம்" என்றார்.
முடிவில் ஸ்ரீ முத்தாரம்மன் தொடக்கப் பள்ளி குழந்தைகள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

நினைவில் தெரிந்த நிஜங்கள் : சிறுகதை

முகநூல் பக்கத்தில், 'write a post' பெட்டியில் 'க்ளிக்' செய்து அந்த சிறுகதையை எழுதி முடித்தான், 'ஜே' என்று எழுத்தாளர் வட்டத்தில் அழைக்கப்படும் ஜேசுதாஸ்.
கூகிள் பிரவுசரில் இன்னொரு 'tab' ல் ஜேசுதாஸ் ஆன்லைன் ரேடியோவில் பாடிக்கொண்டிருந்தார். ஜேசுதாஸ் பாடல்கள் என்றால் அவனுக்கு உயிர். பிற்காலத்தில், தனக்கு ஜேசுதாஸ் பாடல்கள் பிடிக்கும் என்று தெரிந்து தான் இந்த பெயரை வைத்திருப்பார்களோ என்று ஆயிரம் தடவையாவது அம்மாவிடம் கேட்டிருப்பான். ஒவ்வொரு தடவையும் ஏதாவது காரணம் சொல்லி அவனை குளிர்விப்பாள் அம்மா செண்பகவல்லி. அப்பா காவல்துறையில் எழுத்தாளர் பிரிவில் வேலை. கடந்த வருடம் தான் மாற்றலாகி நாகர்கோவிலுக்கு வந்திருந்தார். இன்னும் இரண்டு வருடங்களில் ரிடையர்டு ஆகிவிடுவார்.
எழுத்தின் மீதுள்ள ஆர்வத்தில் முகநூலில் எழுதிக்கொண்டிருக்கிறான் ஜே. ஆனாலும் அவன் இலக்கு சினிமா தான். எப்படியாவது சினிமாவில் கதாசிரியராகிவிட வேண்டும் என்பது அவனின் நீண்ட நாள் கனவு. கல்லூரி முடித்து இன்றோடு முழுசாக ஒரு வருடம் ஆகிவிட்டது. சிவகாசியில் கல்லூரி முடித்த கையோடு அப்பாவுடன் நாகர்கோவிலுக்கு வந்துவிட்டான்.
'ஏதாவது வேலைக்குப் போயேண்டா ' என்று அம்மா சொன்னால், நீ மட்டும் வீட்டிலே சும்மா தானே இருக்கே, நானும் உனக்குத் துணைக்கு இருக்கிறேன் என்பான்.
"என்னங்க! இங்க இருந்தா இவன் உருப்பட மாட்டான். இவனை சென்னைக்கு போய் எதாவது ஒரு வேலை பாக்கச் சொல்லுங்க"
'இப்போ என்ன ஆகிப்போச்சு. இன்னும் கொஞ்ச நாள் இங்க இருக்கட்டுமே. நான் தான் சம்பாதிக்கிறேனே. அவன் வெளியூருக்குப் போயிட்டா அப்புறம் நாம ரெண்டு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகிட்டு இருக்க வேண்டியது தான்' இது அப்பா நல்ல சிவம்.
"பொண்ணு பாக்க போகும் போது என்ன வேலை செய்யிறான்னு கேட்டா என்ன பதில் சொல்றீங்கனு பாக்கத்தானே போறேன்"
'ஏண்டி! இப்போ தானே 23 வயசு ஆகுது. இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும். அப்புறம் வேலைக்குப் போவான். சும்மா 'தொண தொண'னு பேசி அவனை வெறுப்பேத்தாதே'
" நான் சொன்ன கேட்கவா போறீங்க" என்றவள்
" கம்யூட்டர் 'ஆன்' பண்ணி வச்சிட்டு எங்கேயோ போயிட்டான் பாருங்க...., ஜே ...ஜே"
'வந்துட்டேன்' என்றவன், பாத்ரூம் கதவைப் பூட்டி விட்டு அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான். கைகள், கூகிளில் அவன் எழுதிய கதைக்குப் பொருத்தமான 'காப்பி ரைட் பிரீ ' புகைப்படத்தைத் தேடியது.
கம்பியூட்டர் ஸ்பீக்கரில் 'அம்மா என்றழைக்காத உயிரிழையே ....' என்று உருகும் குரலில் ஜேசுதாஸ் பாடிக்கொண்டிருந்தார்.
"நான் இங்க தானே இருக்கேன், கொஞ்சம் அந்த சவுண்டை கொறைச்சி தான் வையேன்" என்றவள், ஸ்பீக்கரில் உள்ள வால்யூம் பட்டனைத் திருகி சத்தத்தைக் குறைத்தாள்.
'வயசான காலத்துல, உன் கட்டிலின் நாலு கால்லயும் ஸ்பீக்கர் கட்டி, நாள் முழுக்க புல் சவுண்டுல பாட்டு போடுவேன், அப்போ என்ன செய்வே'
"படவா ..." என்று கையில் இருந்த சுரைக்காயால் செல்லமாக தன் மகனில் தலையில் கொட்டி விட்டு சமயலறைக்கு சென்றாள்.
புகைப்படத்தை அப்லோடு செய்து, 'share now' பட்டனை 'கிளிக்' செய்து தன் சிறுகதையை முகநூலில் போஸ்ட் செய்தான்.
வெளியே பைக் சத்தம் கேட்டது.
அப்பா மதிய சாப்பாட்டுக்கு வந்துவிட்டார்.
"கதாசிரியரே! வந்து சாப்பிட்டுட்டு உன் வேலையைப் பாரு, எனக்கு டி.வி ல சீரியல் பாக்கணும்"
கம்பியூட்டரில்,   தன் கதையை தினசரிமாலை பத்திரிக்கைக்கு  அனுப்பிவிட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த அப்பா பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.
அம்மா அவனுக்குப் பரிமாறினாள்.
"தினமும் பாவக்கா கூட்டு தானா?, நாவல் கொட்டையும் சுகருக்கு நல்லது தான். நீ அத சாப்பிடு. எனக்கு வேற கூட்டு வை" என்றான் எரிச்சலாக.
'உனக்கு பிடிச்ச சுரைக்காய் சாம்பாரும் இருக்குடா' என்று அவன் தலையைத் தடவியவள், தட்டில் சோறு போட்டு சாம்பார் ஊற்றி அவன் முன் வைத்தாள்.
'இன்னிக்கு என்ன கத டா எழுதியிருக்கே?' நல்ல சிவம் கேட்டார்.
"சூப்பரான 'காதல் கொலை' கதப்பா" தனியாங்குளம் னு ஒரு கிராமத்துல கதை நடக்கிற மாதிரி எழுதியிருக்கேன். தினசரிமாலை பத்திரிக்கைக்கும் அனுப்பி இருக்கேன். ஏதாவது டைரக்டர் என்கிட்ட கதை கேட்டா, இந்த கதையைத் தான் முதல்ல சொல்வேன். விஜய் சேதுபதி நடிச்சா சூப்பரா ஓடும்".
'அதுக்கு இங்கே வீட்டுக்குள்ளே இருந்துகிட்டா ஒன்னும் நடக்காது, சென்னைக்குப் போகணும்' என்றாள் செண்பகவல்லி.
"அவனை குறை சொல்லாட்டி உனக்கு தூக்கம் வராதே" மகனுக்கு வக்காலத்து வாங்கினார் நல்லசிவம்.
'உன் கட்டில் காலுல ஸ்பீக்கர் உறுதிதான்மா...' சிரித்தான் ஜே. கூடவே அம்மாவும், அப்பாவும்.
சாப்பாடு மேஜையில் உள்ள அனைத்து பாத்திரங்களையும் எடுத்து கிச்சன் 'சிங்'கில் போட்டாள் செண்பகவல்லி. இனி சீரியல் பார்த்துவிட்டுத்தான் கழுவணும். மனதிற்குள் நினைத்துக்கொண்டே டிவியை ஆன் செய்தாள்.
'நான் சாயந்திரம் வர லேட்டா ஆகும் ' நல்லசிவம் சொல்லிக்கொண்டே வெளியில் வந்து பைக்கை ஸ்டார்ட் செய்தார்.
ஜே, கை கழுவிவிட்டு கம்பியூட்டர் நாற்காலியில் உட்கார்ந்தான். தன் கதைக்கு எத்தனை பேர் 'லைக்' போட்டிருக்கிறார்கள் என்று பார்க்க பேஸ்புக்கில் 'லாகின்' செய்தான். அரை மணி நேரத்தில் நாற்பத்திமூன்று பேர் லைக் செய்திருந்தனர். கீழே கமெண்ட் பகுதியில்,
"சார், நான் உங்க ரசிகன் சார், உங்க கதை எல்லாத்தையும் படிச்சிருவேன். இந்த கதையை படிச்சவுடன் எனக்கு சந்தோஷமாயிடிச்சி. எங்க ஊர் தனியாங்குளத்தை அப்படியே எழுதியிருக்கீங்க"
ஜே வுக்கு ஆச்சரியமாயிருந்தது.
தனியாங்குளம்னு ஒரு கிராமம் இருக்கா? நாம கதைக்காகத் தானே அப்படி ஒரு ஊரை எழுதினோம். உண்மையிலேயே அப்படி ஒரு கிராமம்.....எப்படி? யோசித்துக்கொண்டிருக்கும் போதே,
மீண்டும் அந்த நபரே கமெண்ட் பண்ணியிருந்தார்.
"அந்த தண்ணி டேங்க், அதில் உள்ள முன்னாள் அமைச்சர் கிரி திறந்துவைத்த கல்வெட்டு ,மேற்கு பக்கத்தூணில் ஒட்டியிருந்த சூப்பர் ஸ்டார் பேட்டை பட போஸ்டர்னு எல்லாமே கண் முன்னாடி கொண்டு வந்திருக்கீங்க. எப்போ சார் எங்க ஊருக்கு வந்திருந்தீங்க? நீங்க வர்றது தெரிஞ்சிருந்தா நான் வந்து பார்த்திருப்பேனே. இனி எப்போ வருவீங்க?"
ஜே வுக்கு தூக்கிவாரி போட்டது.
இவன் உண்மையைத்தான் சொல்றானா அல்லது கதையைப் படித்துவிட்டு என்கிட்டயே கதை விடுறானா, குழப்பம் குட்டையில் குதிக்கும் மீன்களாய் அவனின் மனதை ஆக்கிரமித்தது.
நேரடியாக அந்த ஊருக்கே போய் பார்த்துவிடுவோமா? அது எங்கே இருக்கிறது? எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? அவனுள் பல கேள்விகள்!
"உங்க மொபைல் நம்பர் தருவீர்களா?"
'98......43' என்று உடனே பதில்வந்து ஜே வுக்கு.
தன் மொபைலை எடுத்து எண்களைத் தட்டினான்.
'நான் ஜே பேசுறேன்.உங்க ஊருக்கு இன்னைக்கு வரலாம்னு இருக்கேன். இப்போ நாகர்கோவில இருக்கிறேன். இங்கிருந்து எவ்வளவு நேரம் ஆகும்?'
'ஒரு மணி நேரம் ஆகும் சார். திருவனந்தபுரம் பஸ்ல ஏறி மார்த்தாண்டம்னு டிக்கெட் எடுங்க. இறங்கி, மினி பஸ்ல தனியாங்குளம்னு கேட்டா அவனே இறக்கி வுட்டுருவான். நான் இங்க பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பண்றேன்'.
உண்மையிலேயே அப்படி ஒரு ஊர் இருக்கா அல்லது கூப்பிட்டு வைத்து என்னை எதுவும் செய்யப்போகிறானா? ஜே வுக்குள் பயம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.
அப்பா, காவல் துறையில் தானே இருக்கார். என்ன வந்தாலும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று நினைத்தவன்,
"அம்மா, நான் பிரண்டை பாக்கப் போறேன்" என்று அவள் பதிலுக்கு காத்திருக்காமல் வெளியேறினான்.
வடசேரி பேருந்து நிலையத்துக்கு வந்தவன், அங்கு நின்றுக்கொண்டிருந்த திருவனந்தபுரம் பஸ்ஸில் ஏறினான்.
பேருந்து முன்னே செல்ல, அவன் மனம் பின்னோக்கி கதைக்குள் சென்றது.
"தனியாங்குளம், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஒரு அழகான கிராமம். எங்கு நோக்கினும் பச்சை பசேல் என்று புல்வெளிகள், செடி கொடிகள், மரங்கள்...... லேசான தூறல் எப்போதும். ரியா கல்லூரி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தாள். அப்பா பெருநிலக்கிழார். அவள் அழகுக்கு அந்த ஊர் இளைஞர்கள் அனைவருமே அடிமை சாசனம் எழுதி வைக்கத்தயாராய் இருந்தார்கள்.
ஒருநாள் மாலை நேரம், ஊருக்கு பக்கத்தில் இருக்கும் மாந்தோப்புக்கு மாம்பழம் பறிக்க ரியா செல்கிறாள். அங்கே காட்டெருமை அவளைத் துரத்த, ஒரு பெரிய மரத்தில் ஏறி தப்பிக்கிறாள். எப்படி இறங்குவது என்று தெரியாமல் அவள் தவிக்க, மாலை மயங்குகிறது."
'மார்த்தாண்டம் இறங்குங்க...' கண்டக்டர் ஒருமுறை விசில் ஊத பஸ் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தது.
ஜே பேருந்திலிருந்து இறங்கினான். இடது கையைத் தூக்கி மணியைப் பார்த்தான். மணி நாலு.
பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தவன், மினி பஸ் நிற்கும் இடத்திற்கு வந்தான்.
"இந்த பஸ் தனியாங்குளம் போகுமா?"
'போகும், ஏறுங்க'
18 வயது தான் இருக்கும் அவனுக்கு. டீ ஷார்ட்டை இன் செய்திருந்தவன், அதற்கு மேலே பட்டன்கள் திறந்த காக்கிச் சட்டையைப் போட்டு, ரஜினி ஸ்டைலில் முடியை கோதி விட்டுக்கொண்டே பதில் சொன்னான்.
"தனியாங்குளம் வந்தா கொஞ்சம் சொல்லுங்க"
'சரி' என்றவன், டபுள் விசிலடிக்க சிற்றுந்து புறப்பட்டது. ஜே வின் மனசும் கதையை அசை போட்டது.
"யாராவது காப்பாத்துங்க ....." சத்தம் போட ஆரம்பித்தாள் ரியா.
சத்தம் கேட்டு அங்கு வந்தான் சந்தோஷ். அவளுக்காக அவள் அழகுக்காக அடிமை சாசனம் எழுதி வைக்கத் தயாராய் இருக்கும் அதே ஊர் விடலை அவன்.
அந்த மாலை வேளையில் அவளைப் பார்த்தவனுக்கு நாடி நரம்புகள் முறுக்கேறியது. அவளை நெருங்கினான்."
'சார், தனியாங்குளம் வந்தாச்சி, இறங்குங்க' ரஜினி ஸ்டைல் கண்டக்டர் ஜே வை உசுப்பினான்.
தன் நினைவிலிருந்து மீண்டவனாய், இருக்கையில் இருந்து எழுந்து சிற்றுந்து படிகளில் இறங்கினான்.
சிற்றுந்து புறப்பட, கண்களை சுழல விட்டவனுக்கு ஒரே ஆச்சரியம். கதையில் எழுதியது போலவே, பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு மின் கம்பம். அதில் கேபிள் வயர் சுற்றிஇருக்க, கிழிந்த திருமண பேனர் ஒன்று காற்றில் ஆடிக்கொண்டிருந்தது.அருகிலே கால்வாய். தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அதில் இரண்டு சிறுவர்கள் அம்மாவின் கிழிந்த சேலையை வைத்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
ஜே வுக்கு சற்று வியர்க்க ஆரம்பித்தது.
நான் எழுதியது அப்படியே என் கண் முன்னே நடக்கிறதே!
இந்த மின் கம்பம்- கேபிள் வயர்- கிழிந்த திருமண பேனர் இதையெல்லாம் கூட 'டே ஜா வூ' என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் , இந்த இரண்டு சிறுவர்கள் மீன் பிடிப்பது நான் எழுதியது போலவே என் கண் முன்னாலேயே நடந்து கொண்டிருக்கிறதே. அது எப்படி? பேசாமல் மீண்டும் வந்த வழியே ஊருக்கு போய் விடலாமா? என்று திரும்பியவனின் தோளில் ஒரு கை விழுந்தது.
"நீங்க தானே எழுத்தாளர் ஜே?" லுங்கி தான் கட்டியிருந்தான்.
'காலேஜ் முடிச்சிருக்கேன். படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கல. அதான் வேலை கிடைக்கிறது வரைக்கும் அப்பாவோட கடைக்கு வேண்டிய சாமான்களை வாங்குறது, வீடுகளுக்கு தண்ணி கேன் போடுறது னு அவருக்கு ஒத்தாசையா இருக்கேன். உங்க கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். எல்லாக் கதைகளையும் உடனுக்குடன் படிச்சிருவேன். இதுக்கு முன்னாடி எப்போ சார் எங்க ஊருக்கு வந்தீங்க?'
"நான் .....இப்போ தான்....முதல் முறையா வரேன்"
'சும்மா கத விடாதீங்க சார்'
"நான் அந்த தண்ணி டேங்கை பார்க்கலாமா?"
'வாங்க சார், கூட்டிட்டுப் போறேன்'
எங்கு நோக்கினும் பச்சை பசேல் புல்வெளிகள்..........
தான் எழுதியது போலவே அனைத்தும். அப்படின்னா அந்த பொண்ணு ரியா? அவள் உண்மையிலேயே இருக்கிறாளா? அவனுள் ஆர்வம் எட்டிப்பார்த்தது.
முன்னால் நடந்துகொண்டிருந்தவனைப் பார்த்துக் கேட்டான்.
"உங்க ஊர்ல ரியா னு யாரவது ........."
'ஆமா சார், கதையில நீங்க பேரையாவது மாத்தி இருக்கலாம், அவ படிச்சா மனசு சங்கடப்படுவா. ஊருக்கு போனவுடன் மாத்திருங்க சார்'
"ம்...ம், மாந்தோப்பு இருக்கா?"
'தண்ணி டேங்கை ஒட்டி தான் அந்த பெரிய மாந்தோப்பு இருக்கு, அத ரியா அப்பா தான் குத்தகைக்கு எடுத்திருக்காரு. நிறைய நிலம் அவருக்கு இருக்கு'
கேட்க கேட்க ஜே வுக்கு நடப்பதெல்லாம் கனவா நனவா என்று இருந்தது.
அவன் காலடியை பின் தொடர்ந்து அந்த ஒத்தையடி பாதையில் ஜே நடந்து கொண்டிருந்தான்.மனம் கதையை நினைத்தது.
"சூரியன் மேற்கு தொடர்ச்சி மலைக்குள் மறைய ஆரம்பித்தது. ரியா மாமர கிளையில் தவிக்க, சந்தோஷ் அவளை இறக்குவது மாதிரி பிடித்து பின்புறமாக அலேக்காகத் தூக்கினான்.
"விடு, என்னை விடு...." கால்களை உதறி கை நகங்களால் அவனின் கைகளைப் பிராண்டினாள். அவள் திமிர, அவன் வெறி கொண்ட மட்டும் அவளை இறுக்கினான். அவளின் திமிறலில் அவனின் லுங்கி அவிழ்ந்தது. அவனின் கையை அவள் கடிக்க, பிடி விலகியது. கீழே விழுந்தவள், அருகில் கிடந்த உடைந்த கண்ணாடியை எடுத்தாள்.
"கிட்ட வராதே, வந்தா குத்திடுவேன்...வராதே"
அவனின் மோகவெறி முன்னே போகச் சொல்ல, அந்த கண்ணாடி அவன் வயிற்றை பதம் பார்த்தது. அவனின் கண்கள் நிலை குத்த, உயிர் பிரிந்து போயிருந்தது. பக்கத்தில் இருந்த கிணற்றில் கண்ணாடித்துண்டை வீசியவள் வேகமாக நடந்தாள் காட்டெருமை அவனைக் குத்தியதை ஊருக்குச் சொல்ல"
'அதோ பாருங்க தண்ணி டேங்க்' அவன் காட்டிய திசையில் பார்த்தவனுக்குள் மிரட்சி. பேட்டை பட போஸ்டர் உட்பட அனைத்தும் கதையில் உள்ள படியே.
"மாந்தோப்புக்கு போகணுமா சார்"
'வேண்டாம், திரும்பிடலாம். இப்பவே மணி அஞ்சரை ஆச்சி. நான் ஊருக்குப் போகணும்.'
"இவ்வளவு தூரம் வந்தாச்சு. அடுத்தது தான் தோப்பு. ஒரு எட்டு போயிட்டு உடனே திரும்பிடலாம்"
"ஏ சந்தோஷ் அண்ணே! எனக்கு பட்டம் செய்து தரேன்னு சொன்னியே, எப்போ தருவ" தூரத்தில் ஒரு சிறுவன் யாரிடமோ கேட்பது தெரிந்தது.
சந்தோஷ் .....இந்த பெயர்.....என் கதையில .......ரியாவை ....ஓ கடவுளே.....அவன் இங்கே தான் இருக்கிறானா....யாரு...எந்த பக்கம்......ஜே மனதிற்குள் பயம் ஒட்டிக்கொண்டது.
'நாளைக்கு செய்து தர்றேண்டா' இவன் பதில் கூற ஜே வுக்கு உடலில் இரத்தம் உறைந்து போனது.
"உங்க பெயர் தான் சந்தோஷா "
'ஆமா, நீங்க கூட உங்க கதையில ரியாவை நான் கெடுக்கிறது மாதிரி எழுதியிருந்தீங்களே. நான் அப்படியெல்லாம் கிடையாதுங்க. ஊருல என்னைப் பத்தி கேட்டுப்பாருங்க. தயவு செஞ்சி உங்க கதையில எங்க ரெண்டு பேரோட பெயர்களையும் மாத்திடுங்க சார், ப்ளீஸ்'
ஜே வுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அதற்குள் மாந்தோப்புக்குள் வந்திருந்தனர்.
"காட்டெருமை........ காப்பாத்துங்க......யாரவது காப்பாத்துங்க........" ஒரு பெண்ணின் சத்தம்
இருவரும் உள்ளே ஓடினர்.
அங்கே ஒரு மாமரத்தின் மேலேயிருந்து ரியாவின் குரல்.
இருவரும் அருகில் சென்றனர்.
"பாத்து! மெதுவா என் கையை பிடிச்சிக்க" சந்தோஷ் கை நீட்டினான்.
கை பிடிக்க குனிந்தவள் நிலை தடுமாற, அவன், அலேக்காக அவளைத் தூக்கினான். மெதுவாக கீழே இறக்க இறக்க, அவனின் கைப்பிடி இறுகியது.
நொடியில் புரிந்து கொண்டவள், அவனின் கைய பிரண்ட, அவளை விடுவித்தவன், தன்னை பிடிக்க வந்த ஜே வை முழங்கையினால் இடித்து தள்ளினான். ஜே தூரப் போய் விழுந்தான். அதற்குள் சுதாரித்து சுற்றும் முற்றும் பார்த்த ரியா, அருகில் கிடந்த உடைந்த கண்ணாடியை எடுத்தாள்.
சந்தோஷ் அவள் மேல் பாய, ரியா கண்ணாடியை நீட்ட,
ஜே ஓடி வந்து மின்னல் வேகத்தில் விண்ணில் காலை வீசி சந்தோஷை புட் பால் ஆட,
கண்ணாடியிலிருந்து தப்பித்து மாமரத்தில் போய் மோதினான் சந்தோஷ். அருகில் வந்த ஜே, சந்தோஷின் கன்னங்களில் "பளார் பளார்" என்று அறை விட்டான். பொறி கலங்கிய சந்தோஷ் இயல்பு நிலைக்கு வந்தான். மெதுவாக தலை நிமிர்ந்து பார்த்தான். ஜேவும் ரியாவும் அருகே நின்றிருந்தனர்.
கைகளை குவித்து வணங்கினான். கண்களில் கண்ணீர்.
"ஐயோ, ஒரு நொடியிலே என்னை மறந்துட்டேனே....தப்பு பண்ணிட்டேனே ....தப்பு பண்ணிட்டேனே ....ஐயோ...." தன் முகத்தில் அடித்துக் கொண்டான்.
"என்னை மன்னிச்சிரு ரியா, சாத்தியமா இனி என் நிழல் கூட உன் மேல படாது. மன்னிச்சிட்டேன்னு சொல்லு ரியா ........மன்னிச்சிட்டேன்னு சொல்லு ரியா" தன் தவறை உணர்ந்து அழுதான் சந்தோஷ்.
ரியா, அவனைப் பார்த்துக்கொண்டே தன் கைகள் இரண்டையும் தட்டி, தூசியை உதறினாள். அது காற்றில் பறந்து சந்தோஷின் முகத்தில் பரவியது.
ஜே அதை துடைத்துவிட்டான்.
சந்தோஷ் ரியாவைப் பார்த்தான்.
"நான் இதை மறந்துட்டேன், நீயும் மறந்திடு" ரியா சொல்லிக்கொண்டே, அவனுக்கு கை நீட்டி எழும்ப உதவினாள்.
ஜே அவனை தூக்கி விட்டான்.
மூவரும் மாந்தோப்பிலிருந்து வெளியே வந்தனர்.
" ஆணென்ன பெண்ணென்ன, நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான்....." ஜேசுதாஸ், ஜே வின் மொபைலின் ரிங் டோனாக பாடினார்.
பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு மொபைலை எடுத்தான் ஜே.
ரியா கை அசைத்து வீட்டுக்கு கிளம்ப, அவளுக்கு 'bye bye' சொல்லிக்கொண்டே மொபைலை ஆன் செய்தான்.
"தினசரிமாலை பத்திரிக்கைல இருந்து பேசுறேன். நீங்க அனுப்பின கதையை படிச்சி பார்த்தேன். நல்லா இருக்கு. ஆனா, அந்த கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் மாத்தினா நல்லா இருக்கும்னு எடிட்டர் சொல்றாங்க"
'என்ன மாதிரி மாத்தணும் மேடம்'
"கிளைமாக்ஸ்ல சந்தோஷ் சாகிறதுக்குப் பதிலா, அவன் மனசு மாறி, ரியா கிட்ட மன்னிப்பு கேட்கிறமாதிரி இருந்தா நல்லா இருக்கும் னு நினைக்கிறாங்க எடிட்டர். எனக்கும் அது தான் சரினு தோணுது, நீங்க தான் முடிவு எடுக்கணும். என்ன சொல்றீங்க?"
'ஆமா மேடம், அது தான் சரி, அப்படியே மாத்திக்குங்க' சொன்ன ஜே, சந்தோஷ் தோளில் கை போட்டுக்கொண்டே பேருந்து நிலையம் நோக்கி நடந்தான்.

சாதி : சிறுகதை

https://www.vikatan.com/arts/literature/story-about-caste-discrimination-and-realization

ஆற்றில் தண்ணீர் 'சலசல' வென ஓடிக்கொண்டிருந்தது.
இருபுறமும் ஆளை மறைக்கும் நாணல்கள். பெரு வெள்ளத்தின் போது மலையிலிருந்து அடித்து வரப்பட்ட பெயர் தெரியாத மரத்தின் விதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்து விண்ணை முட்டிக்கொண்டு நின்றது. சின்னக் கருத்தப்பட்டியிலிருந்து திருநெல்வேலிக்கு போகும் வழியில், ஊருக்கு சற்று வெளியே ரோட்டிலிருந்து ஆற்றிற்கு பிரிந்து செல்லும் ஒத்தயடிப் பாதையில் ரஞ்சன் நடந்துகொண்டிருந்தான்.அரசு விடுதியில் தங்கி, கல்லூரியில் படிக்கும் அவன் விடுமுறை நாளில் ஊருக்கு வரும் போது, வீட்டில் இருப்பதை விட அந்த பெரிய மரத்தின் தெற்கு பக்க வேர் பகுதியில் தான் அதிகம் இருப்பான். ஐந்து ஆட்கள் ஒன்றாக சேர்ந்து நின்றால் மட்டுமே கட்டிபிடிக்க முடிகிற மிகப்பெரிய மரம் அது.
"மின்சாரம் கண்டு பிடித்த மைக்கிள் பாரடே படிச்சிருப்பாரா? அந்த 18ம் நூறாண்டில், இந்த அளவுக்கு வசதிகள் கிடையாதே. அப்புறம் எப்படி கண்டு பிடித்தார்? ஒரு வேளை அதுதான் உள்ளுணர்வின் சக்தியோ? ஆர்க்கிமிடிஸ் பாத்ரூமிலிருந்து 'யுரேகா' னு அம்மணமா ஓடிவந்தாரே, தண்ணீர் அளவு உயர்ந்து வெளிவந்ததை வைத்து எப்படி 'ஆர்க்கிமிடிஸ் ப்ரின்சிபிள்'ளை கண்டு பிடிக்கத் தோணிச்சு? இப்படி பல கேள்விகள் ரஞ்சனுக்கு அந்த மரத்தின் நிழலில் தான் தோன்றும். பதில்களை அவனின் அதிக நியூரான் அடர்த்தி உள்ள ஒன்னேகால் கிலோ ஐன்ஸ்டீன் மூளை அலசி ஆராயும். அந்த வகையில் இந்த மரம் அவனுக்கு புத்தனின் போதி மரம் மாதிரி தான்.
அவ்வப்போது திரும்பி அந்த ஒத்தையடி ப் பாதையை பார்த்துக்கொண்டிருந்தான். யாரையோ எதிர்பார்க்கிறான் என்பது அவனின் பார்வையின் ஏக்கம் உணர்த்தியது. "நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன் " பாடல் விசிலாக அவனிடத்தில் வெளிப்பட்டது. சற்று நேரம் காத்திருந்தவன், நியூட்டன், ஆல்வா எடிசனையெல்லாம் மறந்து சற்று கோபமானான். இனி வீட்டுக்குப் போகலாம் என்று எழும்பி பேண்டின் பின் பக்கத்தை இரண்டு கைகளாலும் தட்டி தூசியை உதறினான். திரும்பி ஒத்தையடி பாதையில் நடக்கையில் மரத்தின் பின் புறத்தில் இருந்து அந்த சிரிப்பு சத்தம் கேட்டது.
"ஹா ..ஹா...ஹா ..."
இது மகிமாவின் சத்தம் தான். அவனுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது.
"ஊசி மணி பாசியோவ் ...
எங்கிருக்காவியோவ் .....
ஊசி மணி பாசியோவ் ..." இயல்பாய் வந்தது அவனுக்கு.
"கண்ணான கண்ணனுக்கு அவசரமோ....." எதிர் பாட்டுப் பாடினாள் மகிமா
ரஞ்சன் மரத்தின் பின் பக்கம் ஓடினான்.
"செல்லக் குட்டி, எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா?"
'தெரியுமே'
"அப்போ, முன்னாடியே வந்துட்டியா?"
'ம்ம்ம். நீ என்ன செய்யிறானு பாத்துக்கிட்டேயே இருந்தேன்..... உன்னை பாத்துகிட்டே இருக்கனும் போல இருக்கு ரஞ்சன்'
ரஞ்சன் அவளை கட்டிக்கொண்டான்.
'எங்க அப்பாவ நினைச்சா தான் பயமாயிருக்கு'
அவள் விழிகளில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.
"கண்டிப்பா என் மாமனார், உன்னை எனக்கு கட்டித் தரமாட்டார். நீ பெரிய இடம் .....என் சாதி வேற"
அவள் அவன் வாயைப் பொத்தினாள்.
அவன் கையை விலக்கினான்.
"உண்மை அது தானே?"
'அப்போ என்னை கல்யாணம் கட்டிக்க உனக்கு விருப்பம் இல்லையா?' விசும்பல் அவளிடம் வெளிப்பட்டது
"ஏய் ...மகிகுட்டி ....பயந்துட்டியா? நீ இல்லாம நான் மட்டும் உயிரோடு இருந்துடுவேனா?"
'அப்படினா இப்பவே இந்த ஊரை விட்டு போய் விடுவோம்'
" இன்னும் ஒரு ஆறு மாசம் தான். என் அம்மா ஆசைப்படி, மாஸ்டர் டிகிரி முடிச்சிடுவேன். நீயும் UG முடிச்சிருவே. அதுக்கப்புறம் அம்மாவோட சேர்ந்து நாம மூணு பேரும் வெளியூருக்குப் போய் சந்தோஷமா வாழலாம், அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்க"
கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள், தூரத்தில் தனக்காகக் காத்து நின்ற தோழியைக் கை காட்டி அழைத்தாள்.
சரி, நான் கிளம்புறேன், என்ற ரஞ்சன் ரோட்டுக்கு நடந்தான்.
மகிமாவும் ரம்யாவும் குடத்தில் தண்ணீரை நிரப்பி, இடுப்பில் சுமந்துகொண்டு வீட்டுக்கு வந்தனர்.
படிப்பு முடிந்து ரஞ்சன் ஊருக்கு வந்திருந்தான்.மறுநாள் மகிமா, ரஞ்சன் மற்றும் ரஞ்சனின் அம்மா மூவரும் வெளியூர் செல்வதாய் ஏற்பாடு. மாலை 4 மணிக்கு ஆற்றங்கரைக்கு மகிமாவை வரச்சொல்லியிருந்தான்.
"அப்பா, நான் தண்ணி எடுத்துட்டு வரேன் " என்றவள் வாசல் கதவின் நிலைக்கு மேலே சுவரில் மாட்டியிருந்த அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்தாள். பிளாஸ்டிக் மாலை தொங்கிக்கொண்டிருந்தது. கருகமணி செயினுடன் மங்களகரமாக அம்மா புன்னகைத்துக்கொண்டிருந்தாள்.தொட்டுக் கும்பிட்டாள்.
'சரிம்மா' என்ற ராகவன் அதைப் பார்த்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஒன்னும் தெரியாதது போல் முன் ஹாலில் கட்டிலில் உட்க்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார். குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு பாதியாக மூடியிருந்த கீழ் கதவைத் திறந்துகொண்டு தெருவில் நடந்தாள்.
'உள்ளமெல்லாம் கொள்ளை கொள்ள ப் போகுதே ' பாடல் அவள் மனம் முழுக்க ஆக்கிரமித்திருந்தது.
அந்த பெரிய மரம் தான். அதை நெருங்கி விட்டாள். அதை நெருங்க நெருங்க, நெஞ்சம் படபடத்தது. ஆர்வம், சந்தோசம் என்று அவள் மனதில் பல ரசங்களின் கலவை கூத்தாடியது.
"ரஞ்சன்...."
பதில் இல்லை
"ரஞ்சன்....நான் மகிமா வந்துட்டேன்"
மரத்தின் இலைகள் காற்றில் அசைவதைப் பார்க்க உள்ளத்தில் முதல்முறையாக பயம் எட்டிப்பார்த்தது. மரத்தை சுற்றி தெற்குப்பக்கத்திற்கு வந்தாள். யாரையும் காணோம்.
"ரஞ்சன்... ரஞ்சன்.....அம்மா...."
'ஏன் இன்னும் வரவில்லை? ஏதும் பிரச்சினையா?' அவள் மனதில் பல கேள்விகள்.அப்படியே ரஞ்சன் உட்காரும் இடத்தில் அமர்ந்தாள்.
சூரியன் மேற்கு வானில் மெல்ல மறைந்து கொண்டிருந்தான்.
குடத்தில் தண்ணீர் நிரப்ப மறந்துபோய் அப்படியே வீட்டுக்குத் திரும்பினாள்.
அப்பா இன்னமும் டிவி தான் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பாவுக்கு சாப்பாடு போட்டு கொடுத்தாள்.
"என்னமா, முகம் ஏதோ மாதிரி இருக்கு . உடம்பு ஏதும் சரியில்லையா?"
'இல்லப்பா'
"நீயும் சாப்பிட்டேன்மா"
'கொஞ்சம் கழித்து சாப்பிடுறேன்பா' சுஜாதாவின் நாவலை கையில் எடுத்துக்கொண்டு நடு ஹாலில் ஈஸி சேரில் உட்கார்ந்தாள். கண்கள் புத்தகத்தில் இருந்தாலும் மனம் முழுவதும் ரஞ்சனே நிறைந்திருந்தான். "ஏன் வரவில்லை" என்ற கேள்வியே மீண்டும் மீண்டும் அவள் மனது அவளை கேட்டுக்கொண்டிருந்தது.அப்படியே தூங்கிப் போனாள்.
காலையில் முதல் வேலையாக தோழி ரம்யாவைப் போய் பார்த்தாள்.
"ரஞ்சனைப் போய் பார்த்துட்டு வரியா. ப்ளீஸ் " என்றாள் மகிமா.
'நேத்து மத்தியானமே அவரும் அவர் அம்மாவும் சென்னை போயிட்டாங்களே. உனக்குத் தெரியும்னு தான் நான் நினைத்தேன். அது இருக்கட்டும், ஊர்த்தலைவர் மகள் விஷயம் தெரியுமா உனக்கு' என்றாள் ரம்யா
கேட்க விருப்பம் இல்லாதவளாய் வீட்டுக்குத் திரும்பியவள் நடை பிணமானாள். அன்றைக்கே ராகவன் கீழே விழுந்து காலின் கரண்டை நரம்பில் அடிபட்டு படுக்கையிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்க ஆரம்பித்தார். திருமணம் பற்றிய பேச்சை எடுக்கும் போதெல்லாம் வேண்டாம் என்று தள்ளி போட்டுக்கொண்டே வந்தாள். மனதுக்குள் அழுது அழுது ராகவன் நொந்து நூலாகிப் போனார்.
ஒவ்வொரு நாளும் ரஞ்சனிடமிருந்து ஏதாவது தகவல் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. அப்பாவுக்கும் மகளுக்கும் அந்த வீடே சிறையானது. வெளியுலகம் பிடிக்கவேயில்ல. ராகவனின் மனதில் மட்டும் ஏதோ ஒன்று கட்டை மாதிரி உள்ளத்தை அழுத்திக்கொண்டே இருக்கிறது. மகளிடம் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தன் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார். முன் ஹாலின் கட்டிலே அவருக்கு எல்லாமுமாகிப் போனது.
"ரஞ்சன்....."
சைதாப்பேடையில் அந்த தனியார் ஆஸ்பத்திரியிலிருந்து மருந்து பாட்டிலுடன் வெளியே வந்த ரஞ்சன், குரல் கேட்டுத் திரும்பினான்.
'ஹே... ரவி, எப்படிடா இருக்கே, பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு?' சந்தோஷத்தில் ரஞ்சன் ரவியை கட்டிக்கொண்டான்.
"10 வருஷம் ஆச்சு. ஏண்டா, என்கிட்ட கூட சொல்லாம அப்படி என்னடா திடீர்னு சென்னைக்கு வந்துட்டீங்க"
என்ற ரவி, ரஞ்சனை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்குள் நுழைந்தான். காபி ஆர்டர் செய்தனர்.
"இப்போ என்ன பண்ணிடிருக்க? அம்மா எப்படி இருக்காங்க" என்றான் ரவி
'டாலஸ் எஸ்போர்ட்ஸ் கம்பனில மேனேஜரா இருக்கேன், நீ என்ன பண்றே?'
"நான், ஊர்ல ரியல் எஸ்ட்டேட் பண்ணிட்டிருக்கேன். ஒரு பார்ட்டிகிட்ட பணம் வாங்குறதுக்காக இங்க வந்தேன். நாளைக்கு ஊருக்கு கிளம்புறேன். ஒரு பையன், ஒரு பொண்ணு. உனக்கு எத்தனை பிள்ளைங்க?"
'நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை.அதெல்லாம் இருக்கட்டும். ஊருல மகிமா எப்படி இருக்கா?'
"உனக்கு விஷயமே தெரியாதா? அவங்கெல்லாம் இப்போ வெளிய வர்றதே குறைவு தான்" என்ற ரவி, அனைத்தையும் சொல்லி முடித்தான். காபி டம்ளர் காலியாகியிருந்தது.
ரஞ்சன் பில்லுக்கான பணத்தை கொடுத்துவிட்டு ரவியின் வாட்சப் நம்பரை பரிமாறிக்கொண்டான்.
வீட்டுக்குள் நுழைந்த ரஞ்சன் அம்மாவிடம் மருந்து பாட்டிலைத் தந்தான்.
"அம்மா.....நான் ஊருக்குப் போயிட்டு வரேம்மா " பேக்குக்குள் துணிகளை அடைக்க ஆரம்பித்தான்.
அம்மா பதறினாள்.
'நடந்ததை எல்லாம் மறந்துட்டியா' பதட்டம் அவள் குரலில் தெரிந்தது
இப்போ எல்லாமே மாறிப் போச்சு. ரவி சொன்னவற்றையெல்லாம் அம்மாவிடம் கூறினான்.
"சரி..." என்று அரைகுறையாய் சம்மதித்தாள்.
கோயம்பேட்டில் பஸ் ஏறி மறுநாள் அதிகாலையிலேயே திருநெல்வேலி வந்தடைந்தான். பேருந்து நிலையத்தில் இருந்த பாத்ரூமில் குளித்து உடை மாற்றி அங்கிருந்த கிளாக் ரூமில் தன் பேக்கை வைத்து ரசீது பெற்றுக்கொண்டான். முன்புறம் இருந்த ஆட்டோ ஸ்டேண்ட்டுக்கு வந்தவன், சின்னக் கருத்தப்பட்டிகு போகணும் என்றான்.
ஆட்டோ ஊரை நெருங்கும் வேளையில் வலது புறத்தில் அந்த ஒற்றை அடிப் பாதையை பார்த்தான்.
"நிறுத்துங்க.......நிறுத்துங்க...இங்கேயே இறங்கிக்கறேன்"
ஆட்டோ ரோட்டில் ஒரு 'U' டர்ன் அடித்து ஒதுங்கி நின்றது.
பர்சில் இருந்து பணத்தை எடுத்துக்கொடுத்தவன், மெதுவாக அந்த ஒத்தையடிப் பாதையில் இறங்கி நடந்தான்.மனம் ஏனோ கனத்தது. அந்த பெரிய மரம் அப்படியே இருந்தது. ஓடிப்போய் அதைக் கட்டிக்கொண்டான். கண்களில் கண்ணீர். மெதுவாக அதைத் தடவினான். முத்தம் கொடுத்தான். சத்தமாக அழுதான். அவனின் அழுகை மரத்துக்கும் கேட்டிருக்கவேண்டும். காற்றில் தன் இலைகளை உதிர்த்து அவனுக்கு ஆறுதல் கூறியது. தெற்குப் பக்கத்துக்கு வந்தான். அவன் இருக்கும் இடத்தில் ஆட்டுப் புழுக்கைகள் கிடந்தன. முந்தின நாள் ஆடுகள் அங்கே இருந்திருக்கவேண்டும்.
தன் கையால் அவைகளை ஒதுக்கி மெதுவாக உட்கார்ந்தான். பழைய நினைவுகள் ஆற்றின் நீரோட்டத்துக்கு இணையாய் மனதில் பசுமையாய் ஓடிக்கொண்டிருந்தன.
"யாருப்பா அது?"
திடுக்கிட்டு எழுந்தவன் சத்தம் வந்த திசையில் பார்த்தான். ஆடு மேய்க்கும் பெரியவர் கையில் நெம்புகோலுடன் நின்றுகொண்டிருந்தார்.
ஆபீசர் தோரணையில் இருந்த அவனைப் பார்த்ததும் பெரியவர் சற்று பயந்துதான் போனார்.
"நேத்திலிருந்து ஒரு ஆட்டைக் காணோம் அதான், தேடிட்டு இருக்கேன் " என்றார் அவனைப்பார்த்து.
பதில் சொல்லாமல் அங்கிருந்து ஊரை நோக்கி நடந்தான் மகிமாவைத் தேடி.
பத்து வருடத்தில் ஊர் ரொம்பவே மாறியிருந்தது. அவனின் வீடு இடிந்து கிடந்தது. தெரு முனையில் இருந்த பெட்டிக்கடை சூப்பர்மார்க்கெட்டாக மாறியிருந்தது. கடையின் வெளியே, மேலே பல வண்ணங்களில் வரிசையாகத் தொங்கிக்கொண்டிருந்த பிளாஸ்டிக் குடங்கள் பாசிமாலையை நினைவுபடுத்தியது. வேகமாக நடந்து நேராக மூன்றாவது தெருவுக்கு வந்தான். அந்த அஞ்சாவது வீடுதான். மெதுவாக வாசற்படி ஏறினான். கால்கள் தடுமாறியது.கதவை பிடித்துக்கொண்டான். அரைக்கதவு மட்டும் சாத்தியிருந்தது.
"ஐ....யா .... ஐ.....யா" ரஞ்சனின் குரலில் நடுக்கம் தெரிந்தது.
"ஐயா ......." மீண்டும் கொஞ்சம் சத்தமாகக் கூப்பிட்டான்.
கதவுக்கு இடது பக்கத்தில் கட்டிலில் படுத்திருந்த ராகவன் சத்தம் கேட்டு எழுந்து உட்கார்ந்தார். பக்கவாட்டில் திரும்பி வாசலைப் பார்த்தவர்,
'யாரு?'
"நான்......வந்து......நான்......"
கண்களை சுருக்கி கண்ணாடியை சரிசெய்த ராகவன், அவனைப் பார்த்தார்.
'ர...ஞ்....ச...ன், ரஞ்....சன், ரஞ்சன்.....'
"ஆமாய்யா"
கட்டிலில் இருந்துகொண்டே கதவைத் திறக்க முயற்சித்தார். முடியவில்லை.
'உள்ள வாப்பா' அவர் முகத்தில் பத்து வருஷத்திற்குப் பிறகு சந்தோசம் எட்டிப் பார்த்தது.
செருப்பை கழற்றிய ரஞ்சனைப் பார்த்து
'செருப்பை போட்டுகிட்டு வாப்பா'
அருகில் வந்தான்.
அவன் கையைப் பிடித்து அவனைக் கட்டிலில் உட்கார வைத்தார்.
'எப்படிப்பா இருக்கே?'
ராகவன், ரஞ்சனின் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டார்.
"நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?"
'இருக்கேன், இருக்கேன்' விரக்தி அவர் பேச்சில் தெரிந்தது.
எதையோ நினைத்தவராக,
'உனக்கு எத்தனை பிள்ளைங்க?'
"நான் இன்னும் கல்யாணம் கட்டலைங்கய்யா...."
ராகவனின் முகத்தில் சந்தோசம் ஊற்றெடுத்தது.
தன் வலது கையால் அவன் தலையைக் கோதினார். அப்படியே அவனின் முதுகைத் தடவிக்கொடுத்தார். சந்தோசம் அவரின் கண்களில் ஆனந்தக் கண்ணீராய் பெருகியது. தன் நடுங்கும் கரங்களால் அவனின் கன்னங்களை வருடினார். குனிந்து அவனின் கால்களில் உள்ள செருப்பைக் கழற்ற முற்ப்பட்டார். அவசரமாக காலை கட்டிலின் உட்பக்கமாய் இழுத்தவன் அவரின் கைகளை பிடித்துக்கொண்டான். அவனின் கண்ணீர் அவரின் கையை நனைத்தது. ராகவனுக்கு நினைவுகள் பின்னோக்கிப் போனது.
"நீ என் கையைப் பிடிக்கிறியா, கீழ் சாதிக்கார நாயே!", ரஞ்சனை தன் இடது கையால் தள்ளிய ராகவன், காலால் எட்டி உதைத்தார். அந்த பெரிய மரத்தில் மோதி கீழே விழுந்தான் ரஞ்சன்.
"உனக்கு என் பொண்ணு கேட்குதா, பரதேசி நாயே, உன்னை உயிரோட விட்டாதானே இந்த மாதிரி ஆசையெல்லாம் மனசுல வரும்" என்றவர், அருகில் நின்ற ஊர்த் தலைவரைப் பார்த்தார். முதுகுக்கு பின் மறைத்து வைத்திருந்த அரிவாளை ராகவனிடம் கொடுத்தார் ஊர்த்தலைவர்.
'ஆட்கள் யாரும் வர்றதுக்குள்ள சீக்கிரம் காரியத்தை முடிச்சுடு ராகவா, இவனை மாதிரி கீழ்சாதிப் பயலுகளை வளர விட்டா நம்ம வீட்டுப் பெண்களுக்குத் தான் கெட்டப்பேரு. அப்புறம் நமக்கு சரிசமமா நம்ம வீட்டுள்ள நம்ம பக்கத்துலேயே உட்கார்ந்திருவானுக ...ம்ம்ம் சீக்கிரம்' ஊர்த்தலைவர் சொல்ல, ஆளில்லாத அந்த ஆத்தங்கரையில் ராகவன், ரஞ்சனை நோக்கி அரிவாளுடன் ஓடினார்.
"தலைவர் ஐயா, சீக்கிரம் வீட்டுக்கு வாங்க, சின்னம்மாவைக் காணோம்" ஊர்தலைவரின் வேலைக்காரன் ரோட்டிலிருந்து கத்தினான். அந்த சத்தம் கேட்டு ராகவனும் திரும்ப ரஞ்சன் நாணல்களுக்குள் மறைந்து போனான்.
ஊர்த்தலைவர் வீட்டுக்கு வந்தனர் இருவரும்.
ராகவன், நீ உன் வீட்டுக்குப் போ. நான் அப்புறம் பேசுறேன் என்ற ஊர்த்தலைவர், வீட்டுக்குள் நுழைந்தார்.
அடுத்தநாள் காலையிலேயே ஊர் முழுவதும் தெரிந்துவிட்டது ஊர்த்தலைவர் மகள் பக்கத்துக் காலனி பையனுடன் ஓடிவிட்டாள் என்று. விஷயம் கேள்விப்படட ராகவன், வேகமாக ஊர்த்தலைவர் வீட்டுக்குள் நுழைந்தார். ஊர்த்தலைவர் நாற்காலியில் சோகமாய் அமர்ந்திருக்க, அவரின் மனைவி அருகில் தரையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள்.
"தலைவரே, நாம ஊரே திரண்டுபோய் அவனை வெட்டிப் போடுவோம்" என்றார் ராகவன்
'வேண்டாம் ராகவன்'
"ஏன் தலைவரே. அந்த கீழ் சாதிக்கார பயலுவளை சும்மா விடக்கூடாது" ராகவனின் பேச்சில் கோபம் கொப்பளித்தது.
'ஒரு நாள் ராத்திரி முடிஞ்சிடிச்சு. இனி ஒரு பயனும் இல்ல. என் மகள், அவ விரும்பித் தானே அவன் கூடப் போனா. அவ ஆசைப்படி அவன் கூடவே வாழட்டும். நீ இதை இப்படியே விட்டுடு'
ராகவனுக்கு 'சுருக்' என்றது. வெளியே வந்தார். தன் வீட்டுக்கு வரும் வழியில் அவருக்குள் பல கேள்விகள். அவர் மகளுக்கு ஒரு நியாயம், என் மகளுக்கு ஒரு நியாயமா? இவருக்காகத்தானே நானும் சாதியைத் தூக்கிப் பிடித்தேன். என் மகள் வாழ்க்கையையே பாழாக்கி விட்டேனே. துக்கம் தொண்டையை அடைத்தது. நெஞ்சு வலித்தது. நெஞ்சை இடது கையால் பிடித்துக்கொண்டே தரையில் உட்காரப் போனவர், நிலை தடுமாறி கீழே விழுந்தார். ஒரு பெரிய கல் காலின் கரண்டையை பதம் பார்த்தது. அப்படியே கொஞ்ச நேரம் உட்கார்ந்தவர், நொண்டிக்கொண்டே வீட்டுக்கு வந்தார். அதற்குப் பின் அந்த கட்டிலே அவருக்கு எல்லாமுமானது.
"அப்பா ..." உள்ளே இருந்து குரல் கேட்டு ராகவன் இயல்பு நிலைக்கு வந்தார். அவனின் கைகளைப் பற்றிக்கொண்டார்.
'இங்க வாம்மா'
வேகமாக முன் வீட்டுக்கு வந்தவள் கண்களில் இனம் காணமுடியாத அதிர்ச்சி. உடனே உள்ளே சென்றுவிட்டாள்.
ராகவன், ரஞ்சனின் கைகளை விடுவித்தார். அவரின் கண்கள் சொல்வது ரஞ்சனுக்குப் புரிந்தது. உள்ளே சென்றான். ஓடிவந்து அவனை கட்டிக்கொண்டாள். ராகவன், தன் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
"மாப்பிப்ளைக்கு சாப்பாடு குடுமா" என்றவர், சுவர் பக்கமாகத் திரும்பிப் படுத்துக்கொண்டார்.
அவரின் கை, வெளிக்கதவை சாத்தியது.

ஏக்கம் : சிறுகதை

https://www.vikatan.com/oddities/miscellaneous/short-story-about-a-woman-who-lost-his-husband

'கொக்கரக்கோ .....கோ'
காலைச் சூரியன் தன் கதிர்களால் புதுப்பட்டியை நனைத்துக்கொண்டிருந்தான். சிவப்பு கலந்த மஞ்சள் ஒளியில் அந்த ஓட்டு வீடு தங்கம் போல தக தக வென ஜொலித்துக் கொண்டிருந்தது. அன்னம்மாள் பாட்டி வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். 'கவ்சல்யா சுப்ரஜா ராமபூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே..' பக்கத்து தெரு அம்மன் கோவிலில் ஒலித்துக்கொண்டிருந்தது.
"ஏலே! இன்னிக்கு பள்ளிக்கூடம் கெடையாதாம்" உருவி விழப்போகும் கால்சட்டையை ஒரு கையில்
பிடித்துக்கொண்டே இரண்டாங் கிளாஸ் படிக்கும் குமரேஷ் தெருவழியே சந்தோஷமாய் கூவிக்கொண்டு ஓடினான்.
"ங்கள....ட்ரு.....ட்ரு" தெருவில் தன் இரண்டு பசு மாடுகளை ஓட்டிக்கொண்டு ராஜமாணிக்கம் தோட்டத்துக்கு போய்க் கொண்டிருந்தார்.
"என்ன மாப்பிள! இன்னும் முழிக்கலியா?, ங்கள....ட்ரு.....ட்ரு "
ராஜமாணிக்கத்தின் சத்தம் கேட்டு, முன் அறையில் படுத்திருந்த குமார் படுக்கையில் நெளித்தான். நேற்று சாயந்திரம் தான், ஆஸ்பத்திரிக்கு போய் காய்ச்சலுக்கு ஊசி போட்டுக்கொண்டு வந்திருந்தான். அந்த அசதி முகத்தில் தெரிந்தது.
ஓட்டு வீடு தான். ஒரு மேஜை, நாற்காலி, மூங்கில் சோபா மற்றும் கட்டில் போடப்பட்டிருந்த முன் ஹாலை ஒட்டி நாலுக்கு ஆறு ஸ்டோர் ரூம், அதுக்கு எதுத்தாப்ல பத்துக்கு பத்து அடியில் பெட்ரூம். பின்பக்கத்தில் சின்ன சமையல் அறை, கொஞ்சம் தொலைவில் காம்பவுண்ட் சுவரை ஒட்டி பாத்ரூம். இது தான் குமாருக்கும் சுகந்திக்கும் பரந்தாமன் விட்டுச் சென்ற சொத்து. பரந்தாமனை விட்டுப் பிரிய மனமில்லாமல் பார்வதியும் உடன் சென்றுவிட்டாள்.
சுகந்திக்கு 2 வயது மூத்தவன் குமார். 29 வயது ஆகிறது. பக்கத்தில் இருக்கும் நாகார்க்கோவிலில் தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக பணிபுரிகிறான்.மாதம் இருபதாயிரம் சம்பளம். வாரத்தில் ஒருநாள் விடுமுறை. சுகந்தி கல்லூரி படிப்பு முடித்ததும் பேங்க்கில் இருந்த கொஞ்சம் பணத்தைக் கொண்டு தங்கைக்குத் திருமணம் செய்துவைத்தான்.அவளுக்கு இது போதாத நேரமோ என்னவோ, திருமணமான மூணாவது மாதத்திலேயே கணவன் வேலைக்குப் போகும் போது பைக்கில் லாரி மோதி .......அண்ணன் வீட்டுக்கே திரும்பவும் வந்துவிட்டாள். இப்போது உள்ளூரிலேயே xerox கடையில் வேலை பார்க்கிறாள்.
"அண்ணா, காபி ரெடி"
சுகந்தி சமையல் அறையில் இருந்து குரல் கொடுத்தாள். சீக்கிரம் சமைத்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் தோல் உரித்த சின்ன வெங்காயத்தை, காப்பி பாத்திரத்தில் போட்டுவிட்டாள். காபியும் தன்னை மாதிரி ஆகிவிட்டதே என்று நொந்து கொண்டே, வேறு காப்பி போட ஆரம்பித்தாள்.
குமார் குளித்துவிட்டு வந்திருந்தான்.
சுகந்தி, புட்டும் சிறுபயிறும் செய்து முன் ஹாலில் மேசையில் வைத்திருந்தாள்.
இடுப்பில் கட்டிய ஈர டவலுடன், அப்பா அம்மா படத்துக்கு முன் வந்து நின்று, பத்தி கொளுத்தி வணங்கினான். பெட்ரூமில் போய் துணி மாற்றிக்கொண்டு வந்தவன், நாற்காலியில் உட்கார்ந்து சுகந்தி செய்த புட்டை சாப்பிட ஆரம்பித்தான். சுகந்தி, காப்பியை எவர்சில்வர் டம்ளரில் ஊற்றிக்கொண்டுவந்து மேசையில் அவன் சாப்பிடும் தட்டு அருகே கொண்டு வந்து வைத்தாள்.
"இன்னிக்கு உனக்கு கம்யூனிட்டி சர்டிபிகேட் வாங்க VAO ஆபீஸ் போயிட்டு அப்படியே கம்பெனிக்குப் போய் விடுவேன். ஏதாவது தேவைப்ட்டா அன்னம்மாள் பாட்டிய கேளு, வேறெங்கேயும் வெளியில் போகாத" கரிசனை கூடிய கண்டிப்புடன் தங்கையிடம் சொன்னான்.
கம்யூனிட்டி சர்டிபிகேட்டைக் காட்டித்தான் விதவைக்காக அரசு தரும் பணத்தை வாங்கவேண்டும். பக்கத்தில் இருக்கும் வண்டல் பாறையில் தான் VAO ஆபீஸ். அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் பெருங்குளத்தில் RI ஆபீஸ். VAO ஆபீசில் இருந்து மனுவை வாங்கிக் கொண்டு போய் RI ஆபீசில் கொடுக்கணும்.
சட்டை பட்டனை பூட்டிகொண்டே கதவைத் திறந்து வெளியே வந்த குமார், வாசலில் கிடந்த செருப்பை கால்களில் மாட்டிக்கொண்டு கிளம்பினான்.
"அண்ணே! பையை மறந்துட்டுப் போறியே" என்ற சுகந்தி அந்த A4 சைஸ் ரெக்ஸின் பையை அவனிடம் தந்தாள். அவளின் திருமணத்தின் போது நகைகள் வாங்கியதற்காக பாலு ஜூவலரியில் கொடுத்த 'பேக்' அது. புதிதாக இருந்தது.
பையைத் திறந்து பார்த்தான். இரண்டு பேருடைய ஆதார் காடு, வோட்டர் ஐடி, ஒரு சில வெள்ளை பேப்பர்கள் எல்லாம் இருந்தன. ஒருமுறை RI அலுவலகத்துக்கு சென்றிருந்த போது, மனு எழுதிக்கொண்டு வரச்சொன்னார். பக்கத்தில் ஒரே ஒரு பெட்டிக்கடை மட்டும் இருந்தது. அங்கும் பேப்பர் இல்லை. அன்றிலிருந்து, ஒரு சில பேப்பர்கள் எப்போதும் கைவசம் வைத்திருப்பான்.
பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
"அண்ணே, நாகர்கோயிலுக்கு தான! நானும் வரட்டுமா, இன்னிக்கு காலேஜ்ல எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு"
'நான் வண்டல் பாறைக்குலா போறேன்' அங்கெருந்து பெருங்குளத்துக்குப் போகணும். அதுக்கப்புறம் தான் நாகர்கோவில்'
"எடேய், வண்டல் பாறையில என்ன விசேஷம்! பொண்ணு பாக்க போறியா?" எதிர் வீட்டு வாசலில் காலை சூரியனில் குளித்துக்கொண்டிருந்த கண்ணப்பன் தாத்தா கேட்டார்.
'உங்களுக்கு இதை விட்டா வேற வேலையே கிடையாது' சின்ன எரிச்சலுடன் கிளம்பினான் குமார்.
காலை 8 மணிக்கே VAO ஆபீசுக்கு வந்து விட்டான். VAO ஆபீசில் தலையாரி மட்டும் இருந்தார்.
"சார் இன்னும் வரலியா?"
' தாசில்தார் ஆபீசுக்கு போயிருக்கிறாங்க. 10 மணிக்கு மேல தான் வருவாங்க'
வெளியில் வந்தான்.
எதிரே சற்று தள்ளி ஒரு வீட்டில் சாணி மெழுகிய திண்ணை இருந்தது. வீடு பூட்டிக்கிடந்தது. அருகில் பெரிய வேப்பமரம்.
திண்ணையில் போய் உட்கார்ந்தான். வேப்பமரக் காற்று இதமாக இருந்தது. பேண்ட் பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்து கம்பனிக்கு போன் போட்டான். சூப்பர்வைசர் முருகேசன் போனை எடுத்தார்.
"சார், ஒரு சின்ன வேலை, இன்னிக்கு நான் வர கொஞ்சம் லேட்டா ஆகும்"
'இன்னிக்கு அர்ஜென்டா 'போல்ட் லேத் ஒர்க்' எல்லாம் முடிச்சி கொடுக்கணுமேப்பா'
"சாயந்திரம், கூட கொஞ்ச நேரம் இருந்து எல்லாத்தையுமே முடிச்சிடறேன் சார்"
'அப்போ சரி. சீக்கிரம் வந்துடு' முருகேசன் போனை வைத்தார்.
குமாருக்கு நேரம் போகவில்லை. மொபைலில் சீட்டு விளையாட ஆரம்பித்தான்.
"வீஓ இல்லியோ?" சத்தம் கேட்டு நிமிர்ந்தான்.
முப்பது வயது தான் இருக்கும் அவளுக்கு. ரேசன் கடையில் பொங்கலுக்குக் கொடுத்த சேலை கட்டியிருந்தாள். தலையில் எண்ணெய் வழிய தேய்த்து ஒத்தை பின்னல் போட்டு அதை கொண்டையாக்கியிருந்தாள். காதில் பெயிண்ட் போன கவரிங் கம்மல். மொட்டைக் கழுத்து. வலது கையில் கம்மல் மாதிரியே ஒரு வளையல். இடது கையில் சிவப்பு கலரில் கயிறு கட்டியிருந்தாள்.கையில் ஒரு மஞ்சப்பை. அதனுள் ஆதார் காடு மற்றும் இன்ன பிற அட்டைகள் இருக்கலாம்.
'10 மணிக்குத்தான் வருவாராம்'
"அப்படியா" என்றவள் கொஞ்ச நேரம் அதிலேயே நின்றாள். கால் வலித்ததோ என்னவோ, திண்ணையில் குமாருக்கு சற்று தள்ளி அமர்ந்தாள்.
குமார், மொபைலில் விளையாடிக்கொண்டிருக்க அவள் அமைதியாய் யோசனையில் ஆழ்ந்தாள். குழப்பமாய் இருந்தது அவளுக்கு. மனதை வேறு திசையில் திருப்பினால் நன்றாய் இருக்கும் போல தோன்றியது.
"என் பையனும் இப்படித்தான். எப்பவும் போன்லெ தான் இருக்கான்"
நிமிர்ந்தான் குமார்.
'என்ன படிக்கிறான் உங்க பையன்?'
"மூத்தவென் மூணாப்பு, இளையவென் ஒண்ணாப்பு. பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டுதான் இங்கெ வாரேன். ஸ்மார்ட் கார்டுல என் மாமியார் பேர சேக்கணும்"
'வீட்டுக்காரர்'
"தோட்ட வேலைக்குப் போனவரு சாயந்திரம் குடிச்சிட்டு கிணத்துல உழுந்துட்டாரு. போதையில சத்தம் போடவும் தெம்பு இல்ல. மறுநாள் காலையில தூக்கினப்போ ஒடம்புல உசிரு இல்ல. நாலு வருஷம் ஆச்சி"
அவள் பேச்சில் எந்த வருத்தமும் தெரியவில்லை. அழுது அழுது மனம் மரத்துப் போயிருக்கவேண்டும். இந்த சமுதாய பிரச்சினைகளை எதிர் கொள்ள பழகிவிட்டாள் என்பது பேசும் போது புரிந்தது.
"கொஞ்சநாள் அழுதுகிட்டு வீட்டு மூலையில முடங்கிக் கிடந்தேன். குடிசை வீடுதான். மாமனார் இல்ல. மாமியார் படுக்கையில. ரெண்டு பசங்க. வாழ்ந்தாகணுமே. 12 வரைக்கும் படிச்சிருக்கேன். எங்க அப்பா தான் ப்ரெசிடெண்டு கைய கால பிடிச்சி பால் வாடில சின்ன குழந்தைகளை பார்க்கிற வேலை வாங்கித் தந்தாரு"
ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை என்று குமார் மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.
"அப்பா பக்கத்து ஊர்லதான் இருக்காரு. கொஞ்சம் நெலம் உண்டு. கடல போட்டிருக்காரு. ஒவ்வொரு பருவத்துலயும் விளையுறத வித்து எனக்கும் கொஞ்சம் பணம் தருவாரு. போன வருஷம் வத்தல்ல கொஞ்சம் லாபம் கிடைச்சுது. தரையில படுத்தா பல்லி வருதுன்னு என் பையன்க சொன்னாங்கனு ஒரு கட்டில் வாங்கித் தந்தாரு.எங்க அப்பா எனக்கு எல்லாம் தருவார்" அப்பாவின் பெருமை அவள் பேச்சில் தெரிந்தது.
"இப்ப கூட, தரையில் இருந்து எழுத கஸ்டமாயிருக்கு, மேசையும் நாற்காலியும் வேணும்னு என் பசங்க கேட்டாங்க. கடல வித்த பணத்துல வாங்கித்தர்றதா சொல்லியிருக்காரு. நான் கேட்காமலேயே எனக்கு என்ன வேணும்னு அவருக்குத் தெரியும். எதுனாலும் உடனே செய்து தருவார்". அடுத்தவரிடத்தில் தானும் கொஞ்சம் வசதியான இடம் என்று காட்டவேண்டும் என அவள் மெனக்கெடுவது அவனுக்குப் புரிந்தது.
'அப்போ பரவாயில்லை! உங்க அப்பா இருக்கும் போது உங்களுக்கென்ன கவலை' என்றான் குமார்.
அவள் அமைதியாக இருந்தாள். அருகில் கிடந்த வேப்பங் குச்சியை எடுத்து விரல்களில் பிடித்து சாணி மெழுகிய திண்ணையில் கோலம் வரைந்தாள்.
இரண்டு கைகளையும் தலைக்கு மேல் நீட்டி, நெட்டி முறித்தவள், அண்ணாந்து வாய்த்திறந்து கொட்டாவி விட்டாள். முந்தானை நடுவில் சுருங்கி அவளின் இளமை அப்பட்டமாய் தெரிந்தது.
அவன், அவள் கண்களைப் பார்த்தான்.
கைகளை கீழே இறக்கி, குனிந்து கொண்டாள்.
"கட்டில் மேஜையெல்லாம் வாங்கித் தர்றதுக்குப் பதிலா எங்க அப்பா எனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கலாம்"
வேப்பமரத்தில் இருந்த காக்கா 'கா....கா.....' என்று கரைந்து அவள் பேச்சை ஆமோதித்தது.
'என்னங்க...' அவள் மவுனத்தைக் கலைத்தான் குமார்.
நிமிர்ந்தவள் கண்களில் கண்ணீர். கன்னத்தில் வழிந்து அவள் சேலையை நனைத்தது. தன் ஆட்காட்டி விரலால் கண்ணீரைத் துடைத்து தூர விசிறினாள். அதில் ஒரு துளி குமாரின் மேல் பட்டது.
அது சூடாக இருந்தது.

விகடன் டாப்10ல் நான்

விகடனில் வெளிவந்த டாப்10 சிறுகதைகளில் என்னுடைய இரண்டு கதைகள் இடம் பெற்றுள்ளது.
1. முட்டை வாசம்
2. ஸ்மோக் டிடெக்டர்
ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

முகம் மாறிய கொலைகாரன் - பகுதி 1 : தொடர் கதை


"ஆ ......."
மதுமிதாவின் பயம் கலந்த பெருங்குரல் அந்த பங்களா முழுவதும் எதிரொலித்தது.
கிச்சனில் மதிய சாப்பாட்டுக்கு சாம்பார் செய்ய முருங்கைக்காய் வெட்டிக்கொண்டிருந்த சமையல்காரி தனம் அப்படியே போட்டுவிட்டு சத்தம் வந்த முதலாளியின் ரூமுக்கு ஓடி வந்தாள். அதற்குள் தோட்டக்காரன் முனுசாமி அறையை நெருங்கிவிட்டிருந்தான்.
மதுமிதா, அந்த அறையின் உட்பக்கத்தில் வாசலருகே மல்லாந்த நிலையில் மயங்கிக் கிடந்தாள். இருபது வயதின் இளமை அவளின் முகத்திலும் தெரிந்தது.
"அம்மா .... மதுமிதாம்மா ......"
'ஓடிப் போய் தண்ணி கொண்டா'
தனம் வேகமாய் சென்று தண்ணி கொண்டுவந்தாள். முகத்தில் தெளித்தார்கள்.
தண்ணீர் பட்டதும் மெதுவாக கண்ணைத் திறந்த மதுமிதா,
"அப்பா...அப்பா...."
அவள் கை காட்டிய இடத்தில் கட்டிலில் ராஜமாணிக்கம் ஒருக்களித்த நிலையில் கிடக்க, அவரின் வயிற்றில் ஒரு அடி பெரிய கத்தி! முழுவதும் உள்சென்ற நிலையில் கைப்பிடி மட்டும் வெளியே தெரிந்தது.
சிங்க உருவம் பொறிக்கப்பட்ட அந்த கைப்பிடி முழுவதும் ராஜமாணிக்கதின் இரத்தம் பீறிட்டு அடித்து குளிப்பாட்டிக்கொண்டிருந்தது.
மதுமிதா தன் மொபைலை தேடினாள்.
அருகே இருந்த கம்ப்யூட்டர் மேஜையின் கால் அருகே விசிறியடித்ததைப் போல அநாமத்தியாக கிடந்தது அது.
மெதுவாக எழுந்து போய் அதை எடுத்தாள்.
முனுசாமியும் தனமும் தாங்கள் என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் மதுமிதாவின் கட்டளைக்காக காத்திருந்தனர்.
ராஜமாணிக்கம் ஏதோ முனங்கிகொண்டே இருந்தார். அவரின் இரத்தம் மெத்தையை குளிர்வித்துக்கொண்டிருந்தது.சுவரில் அழகுக்காக மாட்டப்பட்டிருந்த கேடயம், கத்தியை இழந்து அரை நிர்வாணமாய் காட்சியளித்தது.
மொபைல் பட்டனைத் தொட்டு 'பேஸ் ரெகக்னிஷன் ஆப்' மூலம் ஆன் செய்தாள்.
அந்த சில வினாடிகளில் அவளின் மனம் எதையோ உணர்ந்தது. சப்-கான்சியஸ் மனதில் எதுவோ புதிதாக நுழைந்தது போன்ற உணர்வு.
"அம்மா, உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவோம்மா" தனம் அழுதுகொண்டே பேசினாள்.
இயல்பு நிலைக்குத் திரும்பிய மதுமிதா, பக்கத்து டவுண் நாகர்புதூர் மருத்துவமனைக்கு தகவல் தந்துவிட்டு மூவரும் சேர்ந்து ராஜமாணிக்கத்தை காரில் தூக்கி வைத்தனர். மதுமிதா பின்னிருக்கையில் உட்கார, ராஜமாணிக்கத்தின் தலை அவளின் மடியில் இருந்தது. அதற்குள் டிரைவர் வந்துவிட, பூஞ்சோலை கிராமத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாகர்புதூருக்கு வேகமாக கார் விரைந்தது. ராஜமாணிக்கம் எதையோ மீண்டும் மீண்டும் முனகிக்கொண்டிருந்தார்.
"சீக்கிரம் போங்க டிரைவர்" என்ற மதுமிதா, மொபைலை 'பேஸ் ஆப்' மூலம் மீண்டும் ஆன் செய்ய அந்த சில நொடிகள் அவள் மனதிற்குள் என்னவோ செய்தது.
காண்டாக்ட் லிஸ்ட்லில் நம்பர் தேடி, இன்ஸ்பெக்டர்க்கு போன் செய்தாள்.
"அங்கிள்... அப்பாவை...... யாரோ குத்திட்டாங்க ...."
'வாட்?'
"கற்பகம் ஹாஸ்பிட்டல் இருக்கிறேன், நீங்க சீக்கிரம் வாங்க அங்கிள், எனக்கு பயமாயிருக்கு"
'அழாதேம்மா, உடனே வர்றேன்' என்றவர், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தியிடம் பூஞ்சோலையில் உள்ள ராஜமாணிக்கம் வீட்டுக்கு போகுமாறு சொல்லிவிட்டு வெளியே வந்து ஜீப்பில் ஏறி நாலாவது ரோட்டில் உள்ள அந்த மருத்துவமனைக்கு விரைந்தார்.SPக்கு போன் பறந்தது.
மருத்துவமனை வராண்டாவில் மதுமிதா ஒரு நர்ஸின் தோளில் சாய்ந்துகொண்டு அழுதவாறு இருந்தாள். நர்ஸ் அவளைத் தேற்றிக்கொண்டிருந்தார்.
மருத்துவமனை வளாகத்திற்குள் இன்ஸ்பெக்டர் பரசுராமனின் ஜீப் நுழைந்தது. ஆறடி உயரம், நன்றாக ஷேவ் செய்த முகத்தில், மூக்குக்கு கீழே வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட செங்கல்கள் போல டை அடிக்கப்படட திக்கான மீசை முடிகள், அழகாக ட்ரிம் செய்யப்பட்டிருந்தன. எக்சர்சைஸ் உடம்பு, கஞ்சி போட்டு அயன் செய்த சீருடை, நடையில் மிடுக்கு, கடமையில் எப்போதுமே நேர்மை!
பூஞ்சோலை கிராமமும் இன்ஸ்பெக்டர் பரசுராமனின் கண்ட்ரோலில் தான் வருகிறது. எலெக்க்ஷன், அரசியல்வாதிகளின் வரவு தவிர்த்து இன்ஸ்பெக்டருக்கு மற்ற நேரங்களில் அங்கே வேறெந்த வேலையும் வராது. அந்த சமயத்தில் ராஜமாணிக்கத்துடன் ஏற்பட்ட பழக்கம் இன்று வரை தொடர்கிறது. எல்லாவற்றையும் ராஜமாணிக்கம் பார்த்துக்கொள்வார். பூஞ்சோலைக்கு எல்லாமே ராஜமாணிக்கம் தான் எல்லாமும் ராஜமாணிக்கத்திற்குத்தான். மொத்தமே மூன்று தெருக்கள் தான். எண்ணி ஐம்பது வீடுகள். அனைவருமே ராஜமாணிக்கத்திற்காக அவர் எஸ்டேட்டில் உழைக்கிறார்கள். பூஞ்சோலையிலிருந்து சில கிலோமீட்டர்களில் 300 ஏக்கரில் தோட்டம்.
வேலை செய்பவர்களின் குழந்தைகள் படிக்க பக்கத்து டவுனுக்கு செல்ல வேன் வசதி செய்து கொடுத்திருக்கிறார். அனைவருக்கும் மெடிக்கல் இன்சூரன்ஸ் வசதி செய்து கொடுத்திருக்கிறார். பூஞ்சோலையைப் பொறுத்தவரை அந்த மக்களுக்கு இவர் தான் தெய்வம். பூஞ்சோலையில் இரண்டு ஏக்கரில் மிகப்பெரிய பங்களா. சென்னையில் கல்லூரி படிப்பு முடித்து கடந்த மாதம் தான் மதுமிதா ஊருக்கு வந்தாள். அவ்வளவு பெரிய பங்களாவில் இவர்கள் இருவரும் தான். மனைவி செண்பகவல்லி புகைப்படத்தில் மாலையுடன் சிரித்துக்கொண்டிருந்தாள். தோட்டக்காரன், டிரைவர், சமையல்காரி எல்லோருக்குமே எதிர்த்தெருவில் தான் வீடு. கம்பியூட்டர் தவிர்த்த மற்ற நேரங்களில் பக்கத்துவீட்டு குழந்தைகள் தான் மதுமிதாவுக்கு பொழுதுபோக்கு. அதனாலேயே அவளுக்கு சீக்கிரம் திருமணம் முடித்துவிடவேண்டும் என்று ராஜமாணிக்கம் மாப்பிளை பார்க்க ஆரம்பித்தார்.
இன்ஸ்பெக்டர் பரசுராமன் டாக்டர் அறைக்குள் நுழைந்தார்.
டாக்டரின் பதிலை எப்படி மதுமிதாவிடம் சொல்வது என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே அவரின் மொபைல் சிணுங்கியது.
"சார், பாரென்சிக் டிபார்ட்மென்ட்டிலிருந்து நான்கு பேர் வந்திருக்காங்க" என்றார் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி
கான்ஸ்டபிள் முருகனை மதுமிதாவை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் பூஞ்சோலைக்கு விரைந்தார்.
அங்கே பாரென்சிக் ஆபீசர் விஜய் தன் டீமுடன் பங்களா முழுவதையும் இஞ்ச் பை இஞ்சாக அலசிக்கொண்டிருந்தார்.
பங்களாவுக்குள் நுழைந்த இன்ஸ்பெக்டர் பரசுராமன், காரிலிருந்து இறங்கி தோட்டக்காரனை அருகில் கூப்பிட்டார்.
"என்ன நடந்தது?"
'நா இந்தா நிக்குதுங்களே குரோட்டன்ஸ், இதுகளுக்கு தண்ணி பாய்ச்சிக்கிட்டிருந்தீங்க. திடீருனு மதுமிதாம்மா பயங்கரமா அலறுனாங்க. நா உடனே ஓடி போனே'
"வேற யாரும் வீட்டுக்கு வந்திருந்தாங்களா?"
'இல்லேங்க, சத்தம் கேட்டு நான் உள்ளே போகவும் தனமும் வந்துட்டா.ரூமுக்குள்ளே வாசல் பக்கத்துல மதுமிதாம்மா மயங்கி கிடந்தாங்க. தண்ணி தெளிச்சு எழுப்பினோம். அப்போ தான் கட்டில ஐயா குத்து பட்டு கிடக்கிறத பார்த்தோம்'.
கைரேகை மற்றும் சந்தேகப்படும் வகையில் இருந்த பொருட்களை விஜய் & டீம் எடுத்துக்கொண்டு இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிட்டு கிளம்பியது.
தனத்தை கூப்பிட்டார். பயந்துகொண்டே தனம் வந்தாள்.
"உன் வீடு எங்கே இருக்கு?"
'தோ ... எதுத்த தெரு தாங்க'
"தினமும் எத்தனை மணிக்கு இங்கே வருவே?"
'காலையில 6 மணிக்கெல்லாம் வந்துடுவேன். உடனே காபி போட்டுடு ஐயா ரூமுக்கு கொண்டு போய் குடுப்பேன். அப்புறம் சமையல் செய்ய போயிடுவேன்'
"தினசரி ராஜமாணிக்கம் என்னவெல்லாம் செய்வாரு, அவரை பார்க்க யாரெல்லாம் வருவாங்க?"
"ஐயா டிபன் சாப்பிட்டுடு ரெடியாவும் போதே தோட்டக்காரரும் டிரைவரும் 9 மணிக்கெல்லாம் வந்துடுவாங்க. டிரைவர் காரை தொடச்சி ரெடியா வச்சிருப்பாரு. உடனே தோட்டத்துக்கு போவாங்க. மத்தியானம் வந்து சாப்பிட்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பாங்க. சாயந்திரம் அஞ்சு மணிக்கெல்லாம் ஒரு மணி நேரம் வாக்கிங் போவாங்க. எப்பவாவது உர கம்பனிக்காரங்க வருவாங்க, டவுன்ல இருந்து நெல் கொள்முதல் மொத்த வியாபாரிங்க வருவாங்க. அவ்வளவு தாங்க'.
போஸ்ட்மார்டம் முடிந்து உடல் மதுமிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆம்புலன்ஸில், அப்பா அருகில் அமர்ந்து மதுமிதா அழுது கொண்டே இருந்தாள்.
பங்களா உள்ளே ஆம்புலன்ஸ் நுழைந்ததும், இன்ஸ்பெக்டர் அருகில் சென்று கதவைத் திறந்தார்.
தனம் மதுமிதாவைத் தாங்கிப் பிடித்துகொண்டாள்.
பங்களாவின் பின்புற வளாகத்தில் ராஜமாணிக்கம் அடக்கமானார்.
இன்றைய சூழ்நிலையில் மதுமிதாவிடம் எதுவும் கேட்கவேண்டாம் என்று நினைத்தவர், ஒரு கான்ஸ்டபிளை மட்டும் அங்கே காவலுக்கு நிறுத்திவிட்டு வீட்டுக்கு கிளம்பினார்.
மறுநாள் அதிகாலை 6 மணிக்கே இன்ஸ்பெக்டர் அங்கே வந்து விட்டார். கான்ஸ்டபிளை விறைப்பாக சல்யூட் அடித்தார். வீட்டுக்குள் சோபாவில் மதுமிதா உட்க்கார்ந்திருப்பது தெரிந்தது. காலிங்பெல்லை அழுத்தினார். திரும்பிய மதுமிதா கொஞ்சம் தெளிவு பெற்று இருப்பதாக அவருக்குப் பட்டது.
"எப்படிம்மா இருக்கே?"
மீண்டும் ஆழ ஆரம்பித்தாள்.
"நேற்று என்ன நடந்தது? நீ பார்த்ததை சொல்லு"
'அப்பா கத்துற சத்தம் கேட்டு நான் அவர் ரூமுக்கு வந்தேன். அப்போ ஒருவன் அவசரமாக வெளியே ஓடினான்.
"நீ அவனைப் பார்த்தியா?"
'ஆமா அங்கிள். எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு'
லேப்டாப் கொண்டுவரப்பட்டு மதுமிதா சொன்னது மாதிரி கண், காது, மூக்கு என்று வரையப்பட்டது.
' இவன் தான் , இவனே தான் அங்கிள், இவன் தான் அப்பாவை கொன்றவன், சீக்கிரம் அரெஸ்ட் பண்ணுங்க அங்கிள்' லேப்டாப் திரையைப் பார்த்து கத்தினாள் மதுமிதா.
அனைத்து ஸ்டேசன்களுக்கும் அவனின் புகைப்படம் அனுப்பப்பட்டது.
அன்று மாலை நாகர்புதூரில் ட்ராபிக் சரி செய்துகொண்டிருந்த ஹான்ஸ்டபிள் முருகன், அவசரமாக இன்ஸ் பெக்டருக்கு போன் செய்தான். ஸ்டேஷனில் பைல்களை பார்த்துக்கொண்டிருந்த பரசுராமன் மொபைலை எடுத்துப்பேசினார்.
"சார், அந்த போட்டோல இருக்கிறமாதிரியே ஒருத்தன் பைக்ல வந்தான். ஏன் ஹெல்மெட் போடலனு நிறுத்தி வைச்சிருக்கேன், சீக்கிரம் வாங்க"
போன் பேசிவிட்டு அவன் அருகில் வந்தார் கான்ஸ்டபிள் முருகன். அவனுக்கு 25 வயது இருக்கும். எண்ணெய் தேய்க்காத தலை. கட்டிடம் போட்ட சட்டை. அயன் பண்ணாத பாண்ட். காலில் சற்று கிழிந்த லூனார் செருப்பு.
"பேரென்ன?"
'மித்ரன் சார்'
(தொடரும்)