Thursday, June 11, 2015

நானும் ஜெர்மனியும் லண்டனும்

நானும் ஜெர்மனியும் லண்டனும்  

1997 முதல் 2007 வரை 11 வருடங்கள்  ஜெர்மனியில் இருந்தபோது 
 லண்டனுக்கு சென்றிருக்கிறேன். அதன்பின் சமீபத்தில் தான்  லண்டன் செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. மீண்டும் பழைய நண்பர்களை பார்க்க போகிறோம் என்ற சந்தோசம் மனதில் நிழலாடியது. அப்போது நான் சென்ற இடங்கள், குறிப்பாக தமிழ் கடைகள் அதே இடத்தில் இருக்கின்றனவா அல்லது வேறு இடம் மாற்றப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்ள கூகிள் வரைபடத்தில் தேடினேன். 

ஏனென்றால் ஐரோப்பா நாடுகளை பொருத்தமட்டில் குளிர் அதிகம் உள்ளதால்  தமிழ் கடைகள் தான் மீட்டிங் பாயிண்ட். அங்கு தான் அனைத்து  தமிழ் மக்களும் சந்தித்துக் கொள்வார்கள். தமிழ் கடைக்குள் நுழைந்ததுமே  ஏதோ நம் தாய் வீட்டிற்கு வந்து விட்டது போன்ற ஒரு உணர்வு!அப்படி ஒரு சந்தோஷம் நம்மை தொற்றிகொள்ளும். அதை அனுபவித்து பார்க்கும் போதுதான் புரிந்து கொள்ள முடியும்.காய்கறிகள், மசாலா பொருட்கள், பாத்திரங்கள் துணிகள் என்று அனைத்து பொருட்களையுமே   ஒரே கடையில் நாம் வாங்கிகொள்ளலாம். மனதையும் சந்தோஷத்தால் நிறைத்துக்கொள்ளலாம்.

ஐரோப்பா முழுவதுமே, அதாவது லண்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி போன்ற பல நாடுகளில்  பல தமிழ் கடைகளை  இலங்கையிலிருந்து வந்து அங்கே செட்டிலான  தமிழர்கள் தான் நடத்துகிறார்கள். 

லண்டனில் தங்குவதற்கு, ஜெர்மனியில் உள்ள தமிழ் நண்பரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது ஏற்பாட்டின் பேரில் அவரது  உறவினர் வீட்டில், ஏற்பாடு செய்திருந்தேன்.இவரும் இலங்கையிலிருந்து  வந்து நெடுங்காலமாக குடும்பத்துடன் லண்டனில் வசிப்பவர் தான்.குழந்தைகள் லண்டனில் பிறந்திருந்தாலும் நன்றாக தமிழ் பேசுகிறார்கள். வீட்டில் அனைவரும் பேசுவது தமிழ் தான். நாம் தான் வலுக்கட்டாயமாக நம் குழந்தைகளை ஆங்கிலம் பேச வற்புறுத்திகொண்டிருக்கிறோம்.என்ன செய்வது! தமிழ் மட்டும் தெரிந்தால் போதாதே! வேலைக்காக வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளிநாட்டிற்கோ செல்லத்தானே வேண்டியிருக்கிறது!  என்று தமிழ் நாட்டில் அனைத்து தமிழர்களுக்கும் வேலை கிடைக்கிறதோ / தொழில் செய்ய வாய்ப்பு கிடைக்கிறதோ  அன்று நாமும் தைரியமாக நம் குழந்தைகளை தமிழை மட்டுமே படிக்கவேண்டும், பேச வேண்டும் என்று சொல்லலாம். நடக்குமா? நடந்தால் அனைவருக்குமே மகிழ்ச்சி தான். 

தமிழ் மொழி, இன்று உலகம் முழுவதுமே பேசப்படுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் உலகம் முழுவதுமே பரவி இருக்கிற இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழர்கள் தான். ஐரோப்பா கண்டம் மட்டுமன்றி ஆஸ்திரேலியா, வளைகுடா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள், கனடா என்று உலகம் முழுவதிலும் இவர்கள் வாழ்கிறார்கள்.ஜெர்மனியில் பேருந்தில் தமிழில் பெயர்பலகை இருக்கிறதென்றால் அந்த பெருமைக்குரியவர்கள் சந்தேகமில்லாமல் இவர்கள் தான்.







                ஜெர்மனியில்  பேருந்தில் தமிழில்                            பெயர்பலகை 


ஜெர்மனியில் இருக்கும்   ஹம் (Hamm is in North Rhine-WestphaliaGermany ) என்ற இடத்தில் உள்ள புகைவண்டி நிலையத்திற்கு செல்லும் பேருந்தில் தமிழில் பெயர்பலகை
உள்ளது. புகைப்படம் பார்க்கவும். அதனால் தானோ என்னவோ, இவர்களை கவர தமிழ் படங்களில் பல வித்தைகள் செய்கிறார்கள்.குறிப்பாக, ஹீரோ அல்லது ஹீரோயின்  இலங்கை தமிழ் பேசுபவராக இருப்பார் அல்லது இலங்கையை பூர்விகமாக கொண்டவராக இருப்பார். அப்போது தானே படங்கள் வெளிநாடுகளில் விற்பனையாகும்! 

தமிழ் பண்பாடுகளில் ஒன்றான விருந்தோம்பலில் இவர்களை அடித்துக் கொள்ளமுடியாது. அப்படி ஒரு பரிவு! பாசம்!! வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு விதவிதமாக சமைத்து கொடுத்து  ஆனந்தத்தில் விருந்தினர்களை திக்கு முக்காட செய்துவிடுவார்கள்.


 1997-ல் ஜெர்மனிக்கு சென்ற புதிதில்( நான் இருந்தது பிராங்பர்ட்(Frankfurt )  நகரம்) தமிழ் கடைக்காரரிடம் மீன் குழம்பு சாப்பிட்டு வெகு நாட்களாகிவிட்டது என்று சொல்லிகொண்டிருந்தேன். ( இறைச்சியும் காய்கறிகளும் எளிதாக சமைத்துவிடுவேன். மீன் குழம்பு இன்றும் சற்று கடினம் தான் எனக்கு). அதை கேட்டுக்கொண்டிருந்த ஒரு நண்பர் ( அதன் பின்னர் ஜெர்மனியில் இருந்த 11 வருடங்களும் என் நெருங்கிய நண்பர்களுள் ஒருவராகினார். இப்போதும் அடிக்கடி  தொலைபேசியில் பேசிக்கொள்வோம் ), என்னை சனிக்கிழமை  தன்  வீட்டிற்கு சாப்பிட அழைத்தார். சனி மற்றும் ஞாயிறு மட்டுமே தங்களுக்கென்று நேரம் ஒதுக்கி உறவினர்களுடன்  தொலைபேசியில் பேசி மகிழ்ந்து, வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி, பிடித்த உணவுகளை சமைத்து உண்டு மகிழும் நாட்கள்.அடுத்த நாள் திங்கட்கிழமை மீண்டும் காலில் சக்கரம் கட்டியது போல் வேலைக்கு ஓடவேண்டும். 

சற்று ரிலாக்ஸ் ஆகி கொள்ள இந்த வீடியோவை பாருங்களேன்.



சனிக்கிழமையும் வந்தது. தமிழ் கடையில் பேசும் போது, தன்  வீட்டு முகவரியும் எந்த புகைவண்டியில் சென்று எந்த இடத்தில்இறங்கவேண்டும் என்றும் ஏற்கனவே  அவர் என்னிடம் சொல்லியிருந்தார்.அந்த கால கட்டத்தில்  என்னிடமோ அவரிடமோ மொபைல் போன் இல்லை. ஜெர்மனியில் கூட  அந்த சமயத்தில் நான்  நிறைய பேரிடம் கைபேசிகள் பார்த்ததில்லை. 2000 ஆண்டுக்கு பின்னர் தான் கைபேசிகள்  பலரது கைகளை ஆக்கிரமித்தது.

                                 பூமிக்கு அடியில் செல்லும்  புகைவண்டி

நம் ஊர்களில்  ஒவ்வொரு இடத்திலும் நின்று செல்லும் டவுன் பஸ் போல ஜெர்மனியில் பூமிக்கு அடியில் ஓடும் புகை வண்டிகள் நிறைய உண்டு (புகைப்படம் பார்க்கவும்). பூமிக்கு அடியில் செல்லும் இந்த புகைவண்டி பாதை, நகரத்தின் அனைத்து முக்கிய இடங்களையும் இணைத்திருக்கும்.எனவே குறிப்பிட்ட இடத்தை குறிப்பிட்ட நேரத்தில் அடைந்து விடலாம்.நமது ஊரில் ட்ராபிக்கில் அதிக நேரம் நிற்கவேண்டி இருப்பதுபோல் அங்கு காத்திருக்கத்  தேவை இல்லை.  டிரெயின்களும் 10:02, 10:08, 10:13 என்று மிகச்சரியான நேரத்தில் வந்துவிடும். காலம் பொன் போன்றது என்பதை ஜெர்மானியர்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.

புகை வண்டியில் ஏறி அவர் குறிப்பிட்ட  இடத்தை அடைந்ததும் வெளியில் இறங்கினேன். அவர் எனக்காக பயணிகள் இருக்கையில் காத்திருந்தார். வீட்டிற்கு சென்றோம்.  "கதிரையில் உட்காருங்கள்",  என்றார். எனக்கு சிறிது குழப்பம்!

குதிரை தெரியும், ஆனால் கதிரை....?

ஒருவேளை குதிரையை தான் கதிரை என்று சொல்லிவிட்டாரோ? அப்படிஎன்றால் குதிரை மாடலில் சேர் இல்லையே என்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.அந்த சில நொடிகளில் எனக்குள் ஏராளமான கேள்விகள்!

அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சிரித்துக்கொண்டே நின்றேன். அவரும் விடாமல்,

"என்ன நிற்கிறீர்கள்? கதிரையில் உட்காருங்கள்" என்று அருகிலிருந்த நாற்காலியை  என்னருகில் இழுத்து வைத்தார். அப்போது தான் எனக்கு புரிந்தது கதரை என்றால் சேர் என்று. நாம் தான் ஆங்கிலத்திலேயே சொல்லி பழகி விட்டோமே!

அடுத்து அவர் என்னிடம் கேட்டது, "தோடம் பழம் சாப்பிடுகிறீர்களா?"

இந்த முறை வெட்கத்தை விட்டு வாயத்திறந்து கேட்டேவிட்டேன்,

"வாழைப்பழம் தெரியும், ஆப்பிள் பழம் தெரியும், ஆரஞ்ச் பழம் கூட தெரியும். ஆனால் நீங்கள் சொன்ன  தோடம் பழம்  இதுவரை சாப்பிட்டதில்லை. அது எப்படி இருக்கும் ?" - என்றேன்

அவர் சிரித்தார்.

 "நீங்கள் கடைசியாக சொன்னேர்களே அந்த பழம் தான்".- இது அவர்


"ஆரஞ்ச் பழமா?" - நான்

"ஓம்" - அவர் ( அவர்கள் பேசும் ஒரு சில தமிழ் வார்த்தைகள் சிறிது வித்தியாசப்படுகிறது. 'ஆம்' என்பதற்கு 'ஓம்' என்று தான் சொல்கிறார்கள்).


நம் ஆங்கில மோகத்தை நொந்துகொண்டேன்.

அதன் பின் மீன் குழம்பு சாப்பிட்டது தனி கதை.அவர்களின் சாப்பாடு முறை கூட சிறிது வித்தியாசம் தான். நம்மை போல் குழம்பு என்று தனியாக வைப்பது அபூர்வம்.  மீன் மற்றும் பாலை சேர்த்து  'சொதி'( நம்மூர் மீன் இரசம்  போல) என்று வைக்கிறார்கள். மற்றபடி கூட்டுகள் தான் அதிக அளவில் அவர்கள் சாப்பாட்டில் இடம் பெறுகிறது. குறைந்தது மூன்று கூட்டுகளாவது இருக்கும். அதில் ஒன்று கண்டிப்பாக இறைச்சி வகை. புட்டு மற்றும் இடியாப்பத்திற்கு கூட காய்கறி ( அவர்கள் மரக்கறி என்று சொல்கிறார்கள்) மற்றும் இறைச்சி வகை கூட்டுகள் வைத்து தான் சாப்பிடுகிறார்கள்.

லண்டனில் ஆரம்பித்து ஜெர்மனி வந்துவிட்டேன். மீண்டும் லண்டன் செய்திக்கு வருவோம்.

லண்டன் செல்லும் நாளும் வந்தது. எமிரேட்ஸ் பிளைட்டில் டிக்கெட் எடுத்திருந்தேன். துபாயில் இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பின் இரவு 7 மணி அளவில் லண்டன் ஹீத்ரு விமானநிலையத்தை அடைந்தேன். இமிக்ரேஷன் இத்யாதிகள் முடிந்து காத்திருப்பு ஹாலுக்கு வரும் போது இரவு மணி  8 மணி ஆகிவிட்டது.

நான் தங்கபோகும் வீட்டுக்காரருக்கு  'நானே தனியாக வந்துவிடுவேன்' என்று தொலை பேசியில் கூறியிருந்ததால் யாரும் என்னை  கூட்டிபோக வரவில்லை. காத்திருப்பு ஹாலுக்கு வந்தபிறகு தான் 'வரச்சொல்லியிருக்கலாமோ' என்று தோன்றியது.பிரயாணகளைப்பு அந்த அளவுக்கு வாட்டி எடுத்தது. ஏறத்தாழ  11 மணி நேர பயணம். அதுமட்டுமல்ல "ஜெட் லாக்" வேறு.

மொபைலை  எடுத்து 'ஆன்' செய்தேன்.(  இந்தியாவில் இருக்கும் போதே என்னுடைய வோடபோன் சிம்மை "international roaming" -கிற்கு மாற்றி இருந்தேன்.)  சிக்னல் கிடைக்கவில்லை.



vending machine

மீண்டும் 'ஆப்' செய்து 'ஆன்' செய்தேன். எந்த பலனும் இல்லை. சிறிது பயம் தொற்றியது.( அடுத்த நாள் முதல் வோடபோன் சிம் வேலை செய்தது தனி கதை).அருகில் இருந்த  "vending machine" -ல் சிம் கார்டு  இருந்தது.  விலை 20 பவுண்ட் என்று இருந்தது. பர்சிலிருந்து 20 பவுண்டை எடுத்து மெஷினில் வைத்தேன். சிம்கார்டு கீழே விழுந்தது. எடுத்து மொபைலில் செருகினேன். வீட்டுக்காரருக்கு டயல் செய்தேன். பணம் இல்லை என்று என்று அழகான ஆங்கிலத்தில் ஒரு பெண் பேசினாள்.மீண்டும் சோதனையா? என்று நினைத்துக்கொண்டே அருகில் இருந்த கடைக்கு சென்று 20 பவுண்ட்  நோட்டை கொடுத்து  Top-Up"  செய்ய சொன்னேன்.

அவன் சொன்ன பதிலால் எனக்கு மயக்கம் வந்தது.

ஏன் என்று தெரிந்து கொள்ள, அடுத்த பதிவு போடும் வரை பொறுத்திருங்களேன்.






குறிப்பு:


எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள்  facebook page  : J5 news





1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.



2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team




























No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram