Thursday, June 11, 2015

விசித்திர மீசைகள்


விசித்திர மீசைகள் 






தென் இந்தியாவைப்  பொருத்தவரை, மீசை வளரவேண்டாம்  என்று நினைக்கின்ற   இளைஞனை  பார்ப்பது அபூர்வம். அந்த அளவிற்கு மீசை மேல் ஒரு ஈர்ப்பு அனைத்து இளைஞர்களுக்குமே உண்டு. மீசையின் இரண்டு ஓரத்தையும்  சிறிது முறுக்கி விட்டு தானும் போலிஸ் என்ற நினைப்பில் உலாவரும் டீன் ஏஜ் பருவத்தினரின் கனவுகள்  பல.

பூனைக்கும் கூட மீசை உண்டு. அந்த பூனை குட்டியை பற்றிய பாடலுக்கு

என் குட்டி பொண்ணு ஆடிய நடனத்தை கீழே 

கிளிக் செய்து பார்க்கவும்.






 ஆனால், 40 வயதை  தாண்டும் போது, கருப்பும் வெள்ளையுமாக கலந்து  இருக்கும் மீசை மேல் சிறிது வெறுப்பு வரத்தான் செய்கிறது. நமக்கு வயதாகிவிட்டதை  நினைவுபடுத்துவத்தால் இருக்குமோ!

இதற்காகவே சிலர், முத்தம் கொடுக்கும் போது,  என் குழந்தை 'மீசை குத்துகிறது என்று சொல்கிறான்' என்ற  ஒரு காரணத்தை சாக்காக சொல்லி மீசையை மளித்து விடுகின்றனர். ஆணென்றால் மீசை வேண்டும் என்று சொல்கின்றவர்கள் குழந்தை பிறந்ததும் அதை  ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை. தந்தையானதும் தலைக்கு மேலே பல பிரச்சனைகள் இறக்கை கட்டி பறப்பதாலோ  என்னவோ! 



20 வயதில் மீசைக்கு ஆசைப்படும் நாம் 40 வயதில் அதை எடுக்க ஆசைபடுகிறோம். ஏன்? 20 வயதில் காதலிக்கும் போது சந்தோஷப்படும் ஒருவன்  40 வயதில் அதே மனைவியுடன் சண்டை தானே அதிகம் போடுகிறான். இரண்டு ஆசைகளுக்கும் இடையே 20 வருட கால இடைவெளி மட்டுமே வித்தியாசம்!. மற்றபடி அதே ஆண்! அதே மீசை!! அதே மனைவி!!! காலம் மட்டுமே சிறிது ஓடியிருக்கிறது.அது தான் நம் ஆசைகளையும் மாற்றுகிறது. இதைத்தான் காலம் செய்த கோலம் என்கிறார்களோ?
                                                       
                                                              திலகர்

மீசையை பொருத்தவரையில் விதிவிலக்காக ஒரு சிலர் உண்டு. முறுக்கிய மீசையுடன் வெள்ளை வெட்டி சட்டையில் தங்களை எதற்கும் பயப்படாத தைரியசாலியாக காட்டிக்கொள்வதை பெருமையாக எண்ணுவார்கள். அது அவர்களின் எண்ணம்! நம் வீட்டு தாத்தா, பூட்டன் போன்ற பெரியவர்களின் புகைப்படங்களை பார்த்தால் இரண்டு பக்கமும் மீசையை அழகாக சீவி மேல் நோக்கி வளைத்து விட்டிருப்பார்கள். அந்த மீசையின் அடர்த்தியே அவைகளின் நாட்டாமையை பறைசாற்றும்.


பெரியவர்களை எதாவது ஒரு , சவாலுக்கு தயாரா என்றால் கூட உடனே "தோத்துட்டா ஒரு பக்க மீசையை எடுத்திருவியா"  என்று தான் முதலில்  கேட்ப்பார்கள்.

முறுக்கிய மீசை வானத்தை பார்த்தவண்ணம் இருந்தால் வீரத்தின்
அடையாளம் என்று சொல்வார்கள். அப்படியானால்  சீனர்களுடைய மீசை பூமியை பார்த்து  தொங்கிய வண்ணம் இருக்கிறதே  அவர்களில்   வீரர்கள்  இல்லையா?  



























                                                சீனர்களின் மீசை 


நமது ஏரியாவை பொருத்தவரை வீட்டிற்கு மூத்தவர் மட்டுமே பெரிய மீசை வைக்கவேண்டும்/ வைப்பார்கள்  என்று கேள்வி  பட்டிருக்கிறேன். அதற்கேற்றாபோல் நமது ஊரில் இப்போது உள்ள பல பெரியவர்களை நினைத்துப் பார்க்கையில் அது உண்மை என்றே தோன்றுகிறது.என் அப்பா குடும்பத்தில் என் மூத்த பெரியப்பா மட்டுமே பெரிய மீசை வைத்திருந்தார். அதே போல என் அம்மா குடும்பத்தில், அவர்களின் அப்பா( ஐயா என்று நான் கூப்பிடுவேன்) மட்டுமேபெரிய மீசை வைத்திருந்தார். இதில் மாறு பட்ட கருத்து இருந்தால் பின்னூட்டம் இடுங்களேன்!

வட நாட்டினரையோ வெளிநாட்டினரையோ எடுத்துக்கொண்டால் மீசை வைத்திருப்பவர்களை எண்ணி விடலாம்.உலகை அழவைத்த

 ஹிட்லருக்கும் அரை மீசை! 
உலகை சிரிக்க வைத்த சார்லி சாப்ளினுக்கும் அரை மீசை!!
என்ன ஒரு முரண்பாடு!!!




         ஹிட்லர்                                                                சார்லி சாப்ளின் 


மீசையை பொருத்தவரையில் பல பழமொழிகளும் முதுமொழிகளும் வழக்கத்தில் உள்ளன.

குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டலை"

"கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை"

"மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை"

"அத்தைக்கு மீசை முளைத்தால்...."

வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தில் கூட ஒரு வசனம் வரும்,
" என்ன மீசையை முறுக்குகிறாயா! அது ஆபத்தின்  அறிகுறி" 


திருச்சி மாவட்டத்தில் மங்கலம் என்னும் ஊரில் மீசையுடன் இருந்த ஒரு புத்தர் சிலையைக் சில மாதங்களுக்கு முன் கண்டுபிடித்ததாக பேபரில் படித்த ஞாபகம்(புகைப்படம் பார்க்கவும்).



                                                மீசை வைத்த புத்தர் 


விவேகனந்தரின் மாணவியான  நிவேதிதையை  தமது குருவாக கொண்டவரான நம் தமிழ்  கவி பாரதியின் மீசையை மறக்கமுடியுமா? ஐயர் வீட்டிலும் மீசை உண்டு என்பதை நான் பாரதியிடம் மட்டும் தான் பார்த்திருக்கிறேன்.  புரட்சி கவி என்றால் சும்மாவா?எட்டையபுரம் அரண்மனையிலேயே வேலை கிடைத்தும் சில காலம் மட்டுமே அதில் இருந்து பின் தன விருப்பப்படி கவி புனைவதிலேயே முழு மூச்சாய்  இருந்தார்.


                                                                    பாரதி


யானைக்கு வெள்ளை நிறம் தான் பிடிக்காது. ஆனால் தமிழுக்கு வந்த சோதனை! இவரின் கருப்பு மீசையும் கோட்டும் கூட பிடிக்காமல் போனது தான்  சோகத்தின் உச்சம்.


டோசி மெட்ரிக் முறையில் தெற்கு குவீன்ஸ்லாந்து (ஆஸ்திரேலியா) 
 பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சியின்படி, மீசை, தாடிகளை வளர்ப்பவர்களுக்கு புற்றுநோய்க்கு காரணமன கதிரியிக்கத்தின் பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளது.முக சருமத்தில் ஏற்படும் சூரியக்கதிர்களின் பாதிப்பு குறித்து கண்காணிக்கப்பட்டதில் பெரிய மீசை வளத்திருப்பவர்களின் சரும பாதிப்பு, மீசையை மழித்துவிட்டிருக்கும் நபர்களின் பாதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே மீசை வளர்த்தால் புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம்.

கடைசியாக மீசையை பற்றி ஒரு கவிதை:

ஊசிக்கே 
பயந்தவள் நான் 
உன் மீசை முத்தத்தில் 
மயங்கினேன்... 


இப்போது சொல்லுங்கள்! மீசை வேண்டுமா வேண்டாமா?

குறிப்பு:


எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள்  facebook page  : J5 news



1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.



2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team








1 comment:

  1. மீசை வளர்த்து புற்று நோயில் இருந்து தப்பிக்க வெள்ளையர்களுக்கு தேவையுண்டு ...நமக்கல்ல ...ஏனென்றால் அது அவர்களை பாதிக்கும் ....

    ReplyDelete

This is Jesu from Pathinathapuram