Wednesday, May 13, 2015

பத்திநாதபுரத்தில் VBS வகுப்புகள் -6

பத்திநாதபுரத்தில் VBS வகுப்புகள் -6

திங்களும் செவ்வாயும், மப்பும் மந்தாரமுமாக இருந்த காலநிலை இன்று காலை முதல் சிறிது நேரத்திற்கு முன்பு வரை ( இப்போது நேரம் காலை மணி 11:40 )  சூரிய வெளிச்சத்துடன் பிரகாசமாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக துவைத்துப்போட்ட துணிகள் காயவில்லையே என்று கவலைப்பட்டவர்கள் இன்று மகிழ்ந்திருப்பார்கள். அந்த மகிழ்ச்சியோடு நேற்றைய கலைநிகழ்ச்சிகளைப்பற்றி பார்ப்போம். 


மத்தேயு குழு 


நேற்றைக்கு முந்தைய நாள் எந்த கலை நிகழ்ச்சிகளும் இல்லாத நிலையில் நேற்று இரவு மீண்டும் VBS நிகழ்ச்சிகள் களை கட்டியது. நேற்றைய நிகழ்ச்சியின் தலைப்பு: வினாடி வினா போட்டி.செவிக்கு மட்டும் தானே உணவு, நம் வீட் டிலிருந்தே கேட்டுக்கொள்ளலாம் என்று நம் மக்கள் நினைத்து விட்டார்களோ என்னவோ? பல்சுவை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களைவிட  நேற்றைய விநாடி வினாவுக்கு மக்கள்  குறைவாகவே வந்திருந்தார்கள்.


நிகழ்ச்சி தொடக்கத்திலேயே செல்வி. மார்ட்டினா  பாஸ்கர் அவர்கள், ஒவ்வொரு குழுவிலிருந்தும் 15 பேரை மேடையேறும்படி அழைப்பு விடுத்தார்கள். உடனே நான்கு குழுக்களாக 60 பேரும் மேடையை ஆக்கிரமித்தனர். திருப்பாடல்கள் முழுவதும் (150 அதிகாரங்கள்)  போட்டியாளர்கள் படித்திருக்கவேண்டும் என்று முன்னரே அனைத்து குழுக்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. குழந்தைகள் அனைவரும், ஐந்து அதிகாரங்கள் எனக்கு  10 அதிகாரங்கள் உனக்கு என்று தங்களுக்குளே திருப்பாடல் அதிகாரங்களை  பிரித்து, கரைத்து குடித்து வந்திருந்தனர். ஐந்து சுற்றுகளாக போட்டி நடைபெற்றது.

முதல் சுற்றாக ஒரு கேள்விக்கு நான்கு பதில்கள் கொடுத்து அதில் ஒன்றை தேர்வு செய்யவேண்டும். முதல் கேள்வியாக

 " நேர்மையாளர் வாயிலிருந்து என்ன வார்த்தை வரும்?" 

என்று  மாற்கு குழுவினருக்கு கேட்கப்பட்டது.

கொடுக்கப்பட்ட நான்கு பதில்கள்: 

1. உண்மை 
2.நீதி 
3.ஞானம் 
4.பொய்.  

மாற்கு குழு 


லூக்கா குழு 


மாற்கு குழுவினரோ "உண்மை" என்று பொய்யான பதிலை கூறினர். இதனால் கேள்வி மத்தேயு குழுவினருக்கு pass  செய்யப்பட்டது. அவர்கள் "நீதி " எ ன்று கூறினர். அதுவும் தவறான பதில் என்பதால் அந்த கேள்வி அத்துடன் நிறுத்தப்பட்டு அடுத்த  கேள்வி கேட்கப்பட்டது. முதல் கேள்விக்கான பதில்: "ஞானம்".


யோவான் குழு 

கோடிட்ட இடத்தை நிரப்புதல், அதிகாரம் மற்றும் வசன எண்களை குறிப்பிட்டு அந்த முழு வசனத்தையும் சொல்ல சொல்லுதல், அடுத்ததாக முழு வசனத்தை சொல்லி அதன் அதிகாரம் மற்றும் வசன எண்கள் என்ன என்று கேட்டல், ஒரு வாக்கியத்தை நடித்துக்காட்டி அந்த முழு வாக்கியத்தையும் சொல்லச்சொல்லுதல் என்று மற்ற நான்கு சுற்றுகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன. 

போட்டியில் கலந்து கொண்ட இரண்டு குழந்தைகளை குறிப்பிட்டு சொல்லவேண்டும். நாம்  10 பொருட்களை கடையில் வாங்க சென்றால் எட்டு பொருட்களை மட்டுமே வாங்கி வருவோம். மற்ற இரண்டை மறந்து விடுவோம். அனால் லூக்கா  குழுவை சேர்ந்த பபில்டா, அதிகாரம் மற்றும் வசன எண்களை நடுவர் கூறியவுடன் மிகச்சரியாக அந்த வசனத்தை கூறி கைதட்டல்களை அள்ளிச்சென்றார். அதுபோலவே யோவான் குழுவை சேர்ந்த ஏஞ்சல், வசனத்தை கூறியவுடன் அதிகாரம் மற்றும் வசன எண்களை மிகச்சரியாக சொல்லி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த இருவரின் ஞாபக சக்தியை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.வசனங்களை மட்டும் படித்தது போதாது என்று அதற்கு இணையான வசன எண்களையும் ஆதிகாரங்களையும் படித்து ஞாபகத்தில் வைத்திருந்தது மிகவும் ஆச்சரியத்திற்குண்டான விஷயம்.


கடைசியாக நடந்த சுற்று: குழுவிலிருந்து ஒருவர், ஒரு வாக்கியத்தை நடித்துக் காட்டவேண்டும். மற்றவர்கள் அந்த வாக்கியத்தை பிழை இன்றி  சொல்லவேண்டும். எந்த குழுவிற்கும் இந்த சுற்றில் மதிப்பெண் கிடைக்கவில்லை.

இந்த கலைநிகழ்ச்சிகளின் பொது ஒரு விஷயம் மட்டும் தெளிவாக புரிந்தது. நம் குழந்தைகள் அனைவருமே stage fear என்ற மேடை பயத்தை விட்டொழித்து விட்டார்கள். நடிப்போ, பாடலோ, நடனமோ எந்த போட்டி என்றாலும் வெளுத்து வாங்குகிறார்கள். அது மட்டுமா?  தினமும் காலை திருப்பலி மற்றும் இரவு ஜெபம் என்று இரு வேளையும் ஆலயம் வந்து ஜெபிக்கின்றனர். பச்சை மரத்தில் அடித்த ஆணி நன்றாக பதியும் என்ற ஒரு சொலவடை உண்டு. அதற்கேற்றாற்போல் நம் குழந்தைகளை சிறு வயதிலேயே கடவுள் பக்தியில் வளர்ப்பதிலும் அவர்கள் திறமைக்கு களம் அமைத்து கொடுப்பதிலும் ஆர்வமாக உள்ள நம் பங்குத்தந்தை Rev. Fr  ராஜன்  அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

இன்றைய நிகழ்ச்சி பற்றி நாளை எழுதுகிறேன்.

பின்னூட்டம் (comment) இட மறந்திடாதீங்க.

குறிப்பு:

எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள்  facebook page  : J5 news


1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.

2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team




No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram