நாலு தெருக்களே உள்ள பாலாங்குளத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் பண்ணையாறு எந்த சலனமும் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. பங்கஜமும் தனமும் குளித்து முடித்து வாளியில் துவைத்த துணிகளை எடுத்துக்கொண்டு ஊருக்குள் வந்தனர்.
"ஏ..... சிவகாமி, கொஞ்சம் நில்லு" கதவை சாத்திவிட்டு, கடைக்கு செல்ல வெளியே வந்த சிவகாமியை அழைத்தாள் பங்கஜம்.
"உன் மக பிரியா, பக்கத்து தெரு பையன் கூட, அடிக்கடி பேசுறா. நேத்து என்னடானா, நீ வெளிய போயிருந்தபோ, உன் வீட்டுக்குள்ளயே அந்த பையன் போயிட்டான்" பங்கஜத்துக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் தனம் முந்திக்கொண்டாள்.
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சிவகாமி திகைக்க, தனமும் பங்கஜமும் ஏதோ சாதித்த திருப்தியில் முன்னே நடக்க, "உங்க முதுகுல உள்ள அழுக்கு அப்படியே இன்னும் இருக்கு" என்ற சிவகாமியின் குரலை பொருட்படுத்தாமல் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினார்.
சிவகாமிக்கு தலை சுற்றியது.
'என் மகளை குறை சொல்ல இவள்களுக்கு என்ன தைரியம்?' என்ற கோபம் ஒரு புறமிறுக்க, பிரியா அந்த பையனை உண்மையிலேயே காதலிக்கிறாளா? அப்படினா அவ அப்பாகிட்ட எப்படி சொல்றது? என பல குழப்பங்கள். கடைக்கு போனவள், எதுவும் வாங்காமலேயே வீடு திரும்பினாள்.
சிவகாமியின் மனம் பின்னோக்கி ஓடியது.
சுந்தரதுக்கு அரசு வேலை,பேருந்து ஓட்டுநர்.ஒருநாள் விட்டு ஒருநாள் வீட்டுக்கு வருவார். ஒருநாள் பேருந்தில் அடைக்கலம் என்றால் மறுநாள் வீட்டில் நித்திரை. ஒரே மகன் என்பதால் அவரின் அப்பா கட்டிய வீடு அவரின் காலத்திற்குப் பின் இவர்களுக்கு என்றானது. தெருவை ஒட்டி தெற்கு பார்த்த பழைய காலத்து ஓட்டு வீடு. முன் வாசலில் மேலும் கீழுமாய் இரட்டைக் கதவு. கீழ் பாதியை மட்டும் எப்பொழுதும் சாத்தி வைப்பார்கள். உள்ளே நுழைந்தவுடன் இரு புறமும் மூன்றடி உயரத்தில் "ப "வடிவ திண்ணைகள். நடுவிலே முற்றம். அதை தாண்டி உள்ளே நுழைந்தால் இடது புறம் அடுப்பங்கரை. வலப்புறம் ஒரு சிறிய அறை. பின்னால் கொஞ்சம் களம். சுற்று சுவர் கட்ட பணம் இல்லாமல், தென்னை ஓலையால் மறைப்பு ஏற்படுத்தியிருந்தார் சுந்தரம். தான் கல்லூரி படிக்கவில்லையே என்ற எண்ணத்தில் தன் ஒரே மகளை அவள் ஆசைப்பட்டதை எல்லாம் படிக்க வைத்தார். "நகை சேர்க்கவேண்டாமா, சம்பாதிக்கிற பணம் எல்லாத்தையும் படிப்புக்கே செலவு பண்ணிட்டா எப்படினு" கேட்கும் சிவகாமி வாயை ஏதாவது சொல்லி அடைத்துவிடுவார்.
இப்போது அதே மகள் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு வந்து விட்டுவிட்டாளே என்று அவள் மனம் வருந்தியது. எப்படி சுந்தரத்திடம் சொல்வது என்று யோசித்தவள் அப்டியே கட்டிலில் சாய்ந்து உறங்கிப்போனாள்.
"அம்மா............அம்மா" சத்தம் கேட்டு விழித்தாள் சிவகாமி. கதவைத் திறந்து கொண்டு வந்தாள் பிரியா.
"பசிக்குதும்மா, சீக்கிரம் சாப்பாடு போடு"
'ஏண்டி .....கொண்டு போன சாப்பாடு என்னாச்சு?'
"என் ப்ரெண்டு சுமி, இன்னிக்கு சாப்பாடு கொண்டு வரலம்மா. ரெண்டு பேரும் என் சாப்பாட்டை சாப்பிட்டோம். அதான் பசி அடங்கல, சீக்கிரம் சோறு போடும்மா" என்றவள் தாயின் நாடியை பிடித்து கொஞ்சி முத்தம் தந்தாள்.
இவளிடம் கேட்கவா வேண்டாமா என்ற குழப்பத்துடன் சிவகாமி, வழக்கமாக பிரியா சாப்பிடும் தட்டில் சோறு போட்டு பருப்பு குழம்பு ஊற்றி உருளைக்கிழங்கு பொரியல் வைத்து கொடுத்தாள்.
"அம்மான்னா அம்மா தான், இப்படி ஒரு அம்மா கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்" என்று தாயின் கன்னத்தில் செல்லமாய் ஒரு தட்டு தட்டி, கூடத்தில் இருந்த டிவியை ஆன் செய்து சாப்பிட ஆரம்பித்தாள்.
டிவியில் விஜய் சேதுபதி காதல் செய்துகொண்டிருந்தார்.
'வேற படம் ஏதாவது வையேண்டி"
"போம்மா, நீ இன்னும் பழைய காலத்திலேயே இருக்கே" என்றவள் வால்யூமை கூட்டினாள்.
'அந்த சத்தத்தையாவது குறையேண்டி'
ஏனோ எரிச்சலாய் வந்தது சிவகாமிக்கு.
இரவு படுத்தவளுக்குத் தூக்கம் வரவில்லை.
"கொக்கரக்கோ ...... கோ"
அதிகாலையிலேயே எழுந்து வீட்டின் முற்றத்தைப் பெருக்கி சாணம் தெளித்து கோலம் போட்டாள். களத்தை கூட்டி பெருக்கினாள். காபி போட்டு, சுந்தரத்துக்குப் பிடித்த புட்டு அவித்துக்கொண்டிருந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்ட்து. சுந்தரம் வந்து விட்டார். டவலையும் பேஸ்ட் வைத்த பிரஷையும் எடுத்துக்கொண்டு பின்புற களத்தில் இருந்த சிமெண்ட் தொட்டிக்கு வந்தார்.குளித்துக்கொண்டிருக்கும் போதே, சிவகாமி அருகில் வந்தாள்.
"என்னங்க, நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கவேண்டாமா?"
'நீ தானே அவ கம்பியூட்டர் படிக்கட்டும் னு சொன்னே. இன்னும் எவ்வளவு நாள் படிக்கணும்?'
"ஆறு மாசம்"
'ம் ... தரகர் கிட்ட சொல்லி வைக்கிறேன்'
"இல்லீங்க, அது .....வந்து...... அடுத்த தெரு சுதாகர் பையன், நம்ம பிரியாவை விரும்புறாம்போல இருக்கு, ரெண்டு பேரும் அடிக்கடி பேசிக்கிறாங்களாம், பங்கஜம் சொன்னாள். அதான்....."
'நல்ல பையன் தானே! அவன் அப்பா பரசுராமன் தான் கொஞ்சம் வீம்பு பிடிச்சவரு. வந்து பொண்ணு கேட்டா கட்டிக் கொடுப்போம்'
"உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. அவன் அம்மா கோமதி, அன்னைக்கு ஆஸ்பத்திரியில வச்சி ஒரு 100 ருபாய் கை மாத்தா கேட்டதுக்கு, எல்லார் முன்னாலேயும் என்ன பேச்சி பேசினா! அவ பிள்ளைக்கு என் மகளை கட்டித் தர மாடடேன்" என்று பட பட வென பொரிந்தவள் அடுப்பங்கரைக்கு சென்று விட்டாள்.
குளித்துமுடித்து வீட்டுக்குள் வந்தவர்,
"இன்னைக்கு கம்பியூட்டர் கிளாஸ் இல்லையாம்மா" என்ற அப்பாவின் குரல் கேட்டு நெளித்து எழுந்தாள் பிரியா.
'போகணும்பா. அப்பா!....கம்பியூட்டர் படிச்சா வெளிநாட்டுல வேலை கிடைக்கும். அதனால பாஸ்போட் எடுக்கணும்'
"சரிம்மா, நான் ஏற்பாடு பண்றேன்.
சிவகாமி எதுவும் பேசவில்லை.
பிரியா கம்பியூட்டர் வகுப்புக்கு கிளம்பினாள்.
"நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன்" என்றவர், கீழ்க் கதவை சாத்தி கொண்டி வைத்துவிட்டு படியிறங்கினார். ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்தவர்,
அந்த பையன், வேலைக்காக வெளிநாடு போயிட்டானாம், இனியாவது டென்ஷன் இல்லாம இரு"
'ம் ....' என்றவள்
'சீக்கிரம் பிரியாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையா பாருங்க. அவ்வளவு தான், சொல்லிட்டேன்'
ஆறு மாதங்கள் உருண்டது.
சுந்தரம் வீட்டின் முன் காலையிலேயே டெம்போ வண்டியில், களை, தென்னந்தட்டிகள், இரண்டு பெரிய வாழை மரங்கள், மண மேடை என்று திருமண பொருட்கள் வந்து இறங்கின.
பிரியாவுக்கு என்னவென்று புரியவில்லை. அவளின் எண்ண ஓட்டத்தைப் புரிந்த சிவகாமி,
'என் அண்ணன் மகன் சிவாவுக்கும் உனக்கும் நாளை மறுநாள் கல்யாணம்' என்றவள் மகளை சட்டை செய்யாமல் மற்ற வேலைகளில் மூழ்கினாள்.
பிரியாவுக்கு 'பக்' என்றது. உடனே லண்டனில் இருக்கும் சுதாகருக்கு வாட்ஸப் மெசேஜ் அனுப்பினாள்.
லண்டனில் சுதாகர், உடனடியாக சென்னையில் இருக்கும் UK தூதரகத்தில், அடுத்த நாளுக்கு அப்பாயின்மென்ட் வாங்கினான். 'மேக் மை ட்ரிப்' ல் டிக்கெட் போட்டு லண்டன் ஏர்போட்டுக்கு வந்தான்.
"பிரியா, நாளைக்கு விடியற்காலம் ஐந்து மணிக்கு ஊருக்கு வந்துடுவேன். உன் சர்டிபிகேட்டும் பாஸ்போர்ட்டும் ரெடியா எடுத்து வச்சிக்க. மேரேஜ் ரெஜிஸ்ட்டர் கிட்ட ஏற்கெனவே பேசிட்டேன்" வாட்ஸப்பில் பதில் மெசேஜ் பண்ணிவிட்டு பிளேனில் ஏறினான்.
மறுநாள்-,
'என்னங்க..., பிரியாவை காணோம்' சிவகாமியின் சத்தம் கேட்டு ஊரே முழித்தது. சுந்தரத்துக்கும் கோபம்.
ரெஜிஸ்ட்டர் மேரேஜ் முடித்து, உடனே சென்னையில் இருக்கும் UK தூதரகத்துக்கு வந்தவர்கள், அவனின் வேலைக்கான காண்ட்ராக்ட், வீட்டு காண்ட்ராக்ட், மேரேஜ் சர்டிபிகேட் அனைத்தையும் கொடுத்தனர். சுதாகர், 'பெர்மனென்ட் ரெசிடென்ஸ்' என்பதால் மதியமே விசா கிடைத்தது. அடுத்த விமானத்தில் லண்டன் வந்தனர்.
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjX7mzzkg-pgIxH1YEnEMs6Q0r2lnzrp-U78wQFyO7czdCT9PdUuLvybQyHbo1HYDn7mLxft4wv0u9W5-iO_Jt3kPgE9Q0kZk-OPvS6mNT6-yZbjRdUl1hO3Sp8kIiUNS4g-9fMyJEp9Jn6/s1200/1.jpg" style="display: block; padding: 1em 0px; text-align: center;"><img alt="" border="0" data-original-height="630" data-original-width="1200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjX7mzzkg-pgIxH1YEnEMs6Q0r2lnzrp-U78wQFyO7czdCT9PdUuLvybQyHbo1HYDn7mLxft4wv0u9W5-iO_Jt3kPgE9Q0kZk-OPvS6mNT6-yZbjRdUl1hO3Sp8kIiUNS4g-9fMyJEp9Jn6/s320/1.jpg" width="320" /></a></div>
நாட்கள் உருண்டன.
திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய சுந்தரத்திடம்,
"ஏ ...சுந்தரம், பார்ட்டி ஏதும் கிடையாதா?" கூப்பிட்டது உறவினர் கணேசன்.
சுந்தரம் எதுவும் புரியாமல் முழிக்க,
"பிரியாவுக்கு ஒரே பிரசவத்துல மூணு பிள்ளைங்களாம். ஒரு பையன், ரெண்டு பொண்ணுங்க. லண்டன்ல உள்ள பெரிய ஆஸ்பத்திரியில சுக பிரசவமாம்" பரசுராமன் எல்லாருக்கும் மிட்டாய் கொடுத்துட்டு இருக்கார். மனைவி கோமதி இறந்து போன சோகத்துல இருந்தவர், இப்போ மறுபடியும் பேத்தியா பிறந்திருக்கானு ரொம்ப சந்தோஷமா இருக்கார்.
சுந்தரத்துக்கும் உள்ளுக்குள் சந்தோஷம் பீறிட்டது. ஆனாலும் அவரின் வீராப்புங்கிற போர்வை அந்த சந்தோஷத்தை மூடி மறைத்தது.
"எப்போ?"
'நேத்து'
"சுக பிரசவக்குகிறதால நாளைக்கே வீட்டுக்கு விட்டுருவாங்களாம். அப்புறம், ஒரு நர்ஸ் தினமும் வீட்டுக்கு போய் உதவி செய்வாளாம்"
கேட்டும் கேட்காதது மாதிரி பக்கத்து டீ கடைக்கு நடந்தார் சுந்தரம்.
" லட்டு ஒண்ணு கொடுங்க"
'என்னண்ணே, வடை தானே எப்பவும் சாப்பிடுவீங்க...இன்னிக்கு என்ன .....லட்டு கேட்கறீங்க?' என்ற கடைக்காரரிடம் நீங்களும் ஒண்ணு சாப்பிடுங்க என்று இரண்டு லட்டுக்கான பணத்தை கொடுத்துவிட்டு மீண்டும் பேருந்தில் ஏறினார் சுந்தரம்.
நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாயின.
டூட்டி முடிந்து மாலை வீட்டுக்கு வந்த சுந்தரம், ஈஸி சேரில் சாய்ந்துகொண்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தார்.அவரின் மொபைல் சிணுங்கியது.
"ஹலோ"
'தாத்தா.....தாத்தா'
போனை காதில் இருந்து எடுத்து நம்பரைப் பார்த்தவர், புது நம்பராக இருக்வே, மீண்டும் காதில் வைத்தார்.
"எப்படி இருக்கீங்கப்பா, நான் பிரியா பேசுறேன்"
'என் ராசாத்தி! எப்படிம்மா இருக்கே, அப்பாவை மறந்துட்டியேம்மா' சுந்தரத்தின் குரல் தழுதழுத்தது.
'மாப்பிள்ளை எப்படிம்மா இருக்காவ, பிள்ளைங்க எப்படிம்மா இருக்காங்க?'
கண்களில் கண்ணீர்.மீண்டும் அவரே தொடர்ந்தார்.
'முதல பேசுனது என் பேரனாம்மா, இன்னிக்கு அவனுக்கும், பேத்திங்களுக்கும் ரெண்டாவது பிறந்தநாள் தானேம்மா' பேச்சில் சந்தோஷம் தெரிந்தது.
"ஆமாம்பா"
'உங்க எல்லாரையும் பாக்கனும்போல இருக்குமா, எப்போமா ஊருக்கு வருவீங்க?'
"நாளைக்கு காலையில அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுவோம். இப்போ ஏர்போட்டுல தான் இருக்கோம்பா"
சுந்தரத்தின் உற்சாக பேச்சு சிவகாமியை கூடத்துக்கு வரவழைத்தது.
'அம்மா, பக்கத்துல நிக்குறா, கொடுக்குறேன்' என்றவர், போனை சிவகாமியின் காதில் வைத்தார்.
"பாட்டி ...............எப்படி இருக்கீங்க?"
போனை தட்டி விட்டவள், 'இவ்வளவு நாளும் தெரியாத பாட்டி இப்போதான் தெரியுதோ' கோபத்தோடே அடுப்பங்கரைக்குள் நுழைந்தாள்.
"அம்மாவுக்கு இன்னும் கோபம் குறையலியாப்பா?"
'அவளைப் பத்திதான் உனக்கு தெரியுமேம்மா' என்று சமாளித்தவரிடம்
"பிளேன் கிளம்ப போகுதுப்பா, நாளைக்கு நேர்ல பேசுவோம்" என்ற பிரியா மொபைலை சுவிட்ச் ஆப் செய்தாள்.
சிவகாமி படுத்துவிட்டாள்.பேரன் கூப்பிட்ட 'பாட்டி' என்ற வார்த்தை சிவகாமியை ஏதோ செய்தது. நேரம் செல்லச் செல்ல அவளின் கண்கள், தண்ணீர் திறந்து விட்ட கார்பரேஷன் குழாயானது.
விடியற்காலை மூன்று மணிக்கு கதவு திறக்கும் சத்தம் கேட்டது. எழுந்து லைட்டைப் போட்டார் சுந்தரம்.
"அஞ்சு மணிக்கெல்லாம் மகள், மருமகன், பேரப்பிள்ளைங்க எல்லாம் வந்துடுவாங்க. மாப்பிள்ளை வீட்ல அவங்க அப்பா பரசுராமன் மட்டும் தானே. அதான், நான் போய் சீக்கிரம் சமையல் செய்து ரெடி பண்ணி வைக்கப் போறேன்" என்று சந்தோஷமாய் சொன்ன சிவகாமி, பக்கத்துத் தெருவில் இருக்கும் மாப்பிள்ளை வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தாள்.
-ஜேசு ஞானராஜ், ஜெர்மனி
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram