Sunday, March 7, 2021

ஈட்டி குத்திய பேராசை (திரைக்கதை சுருக்கம்)

சர்ர்ர்ர்ர்ர்ர் .............க்ரீச்............

அந்த 10 மாடி ஹோட்டலின் போர்டிகோவில் சிறிய உருமலுடன் அந்த போலீஸ் ஜீப் வந்து நின்றது. இன்ஸ்பெக்டர் ஜீவா வேகமாக இறங்கி உள்ளே சென்றார். ரிசப்ஷனில், ஜெர்மனியின் பிளாக் ஃபாரெஸ்ட்டில் வாங்கிய 'கூக்கூ' கடிகாரம் காலை 9 மணி என்று கூவியது. லிப்ட்க்கு வந்தார். கான்ஸ்டபிள் இருவர் அவருடன் இணைந்து கொண்டனர்.
1...2...3...4...5. லிப்ட் கதவு திறந்தது. காரிடாரில் வேகமாக நடந்து ரைட் சைடில் திரும்பி மூன்றாவது அறைக்குள் நுழைந்தனர். உள்ளே ஹோட்டல் மேனேஜர் ஷிவ்ராஜ் பேரருடன் நின்றுகொண்டிருந்தார். கட்டிலில் ஒருவர், கால் மேல் கால் போட்டபடி தலையணைக்கு முதுகை அணை கொடுத்த நிலையில் மயக்கத்திற்கு சிந்தனையை லீசுக்கு கொடுத்திருந்தார்.அவரின் இடது கை, 'பெட் சைடு டேபிளி'ல் உள்ள ஒரு மனித தலையின் மேல் இளைப்பாறிக்கொண்டிருந்தது. தன் உயிர், ஏழு கடல் தாண்டி பெரிய மலையின் சிறிய குகையில் வாழும் கிளியின் உடலில் உள்ளது என்று அந்த தலையின் கண்கள் பயம் கலந்த மிரட்சியுடன் சொல்லிக்கொண்டிருந்தது.
உள்ளே நுழைந்த இன்ஸ்பெக்டரிடம்,
"சார், இவர் கண்ணன், இந்த ஃபுளோரோட பிரேக்பாஸ்ட் இன்-சார்ஜ் பேரர். இவர் தான் முதல்ல பார்த்தது" என்றார் மானேஜர்.
' இண்டர்காம்ல பக்கத்து ரூமிலிருந்து தண்ணீர் கேட்டாங்கனு கொண்டு போகும் போது இந்த கதவு திறந்திருந்தது சார். 'டூ நாட் டிஸ்டர்ப்' டேக் கும் இல்ல. அதனால கூப்பிட்டுப் பார்த்தேன். அனக்கம் ஏதும் இல்லாததால் உள்ளே வந்தேன். கொலை நடந்திருந்தது' பேசிய பேரர் கண்ணன் பயத்தில் உறைந்திருந்தான்.
டொக் ...டொக்...
"கம்....மின்" இன்ஸ்பெக்டர் குரலில் 'யார்?' என்ற கேள்வி இருந்தது.
போரென்சிக் டிபார்ட்மெண்டிலிருந்து இருவர் உள்ளே நுழைந்தனர்.
'பாடி, கட்டிலுக்கு அடியில் இருக்கு சார்' மேனேஜர் சொன்னார்.
அவர்கள் தடயங்களை சேகரிக்கத்தொடங்கினர்.
கதவைத் தள்ளிக்கொண்டு ஒரு இளம்பெண் வேகமாக உள்ளே வந்தாள்.
"என்னங்க.............என்னங்க............ இப்படி ஆகிடுச்சே, உங்க அண்ணன் கூட வெளிய போகாதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா?.........................." அழுதுகொண்டே அந்த தலையை கட்டிப்பிடிக்க போனவளை கான்ஸ்டபிள் பிடித்துக்கொண்டார்.
'யாருமா நீ? இது யாரு உன் புருஷனா?'
"ஆமாங்க" அழுதுகொண்டே பதிலளித்தாள் ஸ்வப்னா.
'கட்டில்ல இருக்கிறவரு?'
"அது என் வீட்டுக்காரரோட அண்ணன் சார்"
குடும்பப் பிரச்சினை தான் காரணம் என்று இன்ஸ்பெக்டர் ஜீவாவுக்கு சுலபமாகப் புரிந்துவிட்டது. அவர், கான்ஸ்டபிளிடம்
"மயக்கத்தில் இருக்கிறவரை உடனடியா ஹாஸ்பிடல்ல சேருங்க. அந்த பொண்ணுகிட்ட, வீட்டு அட்ரஸை வாங்கிக்குங்க, போஸ்ட் மார்டத்துக்குப் பிறகு, பாடிய மார்ச்சுவரில வாங்கிக்க சொல்லுங்க" என்றவர் மினிஸ்டரின் மரம் நடுவிழாவுக்கு வேகமாக கிளம்பினார்.
விழா முடிந்து இன்ஸ்பெக்டரிடம் வந்த மினிஸ்டர், "எனக்கு பாதுகாப்பு வேண்டாம்னு நிறைய தடவை கமிஷனர் கிட்ட சொல்லிட்டேன். ஆனாலும் அவர் கேட்க மாட்டேங்குறார்" என்றார்.
'இது எங்க கடமை சார்'
"பணமும் பொண்ணும் தான் ஒருத்தனை தப்பு பண்ண வைக்குது. எனக்கு அந்த ரெண்டு மேலயும் ஆசை இல்ல. அதனால எதிரிகளும் இல்ல!" என்று சிரித்துக்கொண்டே சொன்ன மினிஸ்டர் காரில் ஏறி கிளம்பினார்.
மினிஸ்டரின் வார்த்தைகள் இன்ஸ்பெக்டருக்கு ஏதோ சொன்னது. கான்ஸ்டபிள் முருகனுக்குப் போன்செய்து,
"கான்ஸ்டபிள் குமாரை, ஹோட்டல்ல அந்த பேரர் கண்ணன் தங்கி இருக்கிற ரூமை சர்ச் பண்ண சொல்லுங்க.................நீங்க ஸ்வப்னாவை பாலோ பண்ணுங்க" என்றார்.
மதியம் 2 மணி. ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஜீவா முன்னால் மண்டியிட்ட நிலையில் பேரர் கண்ணன்.
"இந்த 10 இலட்சரூபாய் உனக்கு யார் கொடுத்தது? மறைக்காம எல்லாத்தையும் சொல்லிடு. இல்லனா உன் குடும்பம் மொத்தத்தையும் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்துடுவேன்" ஜீவா மிரட்டினார்.
உடலில் அடிபட்ட இடங்கள் தணுத்திருக்க, நிற்க திராணியில்லாமல் தரையில் உட்கார்ந்த பேரர் கண்ணன் சொல்ல ஆரம்பித்தான்.
"கோமாவுல இருக்கிறவர் பேரு சூரஜ், இறந்தவர் ஷங்கர். ரெண்டு பேரும் பிசினெஸ் பார்ட்னர்ஸ். அடிக்கடி எங்க ஹோட்டலுக்கு வருவாங்க. ஷங்கர் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக். அவர் மனசுக்கு பிடிச்சிருச்சின்னா அது யாரா இருந்தாலும் எப்படியாவது வளைச்சிடுவார். அப்படித்தான் சூரஜ் மனைவியும் ஷங்கர் வலையில் விழுந்தாங்க" சற்று நிறுத்தி தண்ணீர் குடிக்க,


அதே சமயம்-
கான்ஸ்டபிள் முருகன் பின்தொடர, ஸ்வப்னா அவள் வீட்டுக்குள் நுழைந்தாள். பக்கவாட்டு ஜன்னல் பக்கம் விரைந்தார் முருகன்.
சோபாவில் 28 வயது மதிக்கத்தக்க ஒருவன்.
கதவை தாளிட்டவள், வேகமாக ஓடிவந்து அவனை கட்டிக்கொண்டாள்.
"இனி எந்த பிரச்சினையும்இல்லீங்க. நீங்க கவலைப்படாதீங்க"
அவன் முகத்தில் சற்று நிம்மதி.
கான்ஸ்டபிள் முருகன் முகத்தில் குழப்பம்.
புருஷன் இறந்த துக்கம் இவளுக்கு கொஞ்சம் கூட இல்லையே! இவன் கள்ள புருஷனா? உள்ளே நுழையலாமா? என்று நினைத்தவர், பின் மனதை மாற்றிக்கொண்டு, அவர்கள் சந்தோஷத்தில் நாம் ஏன் கரடியாக இருக்கவேண்டும் என்று ஸ்டேஷனுக்கு கிளம்ப தயாரானார்.
போலீஸ் ஸ்டேஷனில் பேரர் தொடர்ந்தான்
"சூரஜை கொன்றுவிட்டால், பிசினஸ் முழுவதும் ஷங்கருக்கே கிடைக்கும் கூடவே போனஸாக சூரஜ் மனைவியும் கிடைப்பாள் என்பதால் என்னிடம் சூரஜுக்கு நிறைய தூக்கமாத்திரை போட்டு கூல்டிரிங்ஸ் கொடுக்க சொன்னார். அதற்காக எனக்கு 10 இலட்சரூபாய் தந்தார். நானும் அது மாதிரியே காலையில 8 மணிக்கு ஆப்பிள் ஜூஸில் தூக்கமாத்திரைகளை கலந்துகொடுத்தேன். அப்போது ஷங்கர் பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்தார். அப்புறம் அரை மணி நேரம் கழித்து ஷங்கருக்கு டிபன் என்ன வேண்டும் என்று கேட்கப்போனேன். அப்போது தான் ஷங்கர் தலையில் சூரஜ், கை வைத்தபடி மயங்கி கிடந்தார்" இது தாங்க நடந்தது என்றான்.
இன்ஸ்பெக்டர் ஜீவா குழப்பத்தின் உச்சத்துக்கே போய் விட்டார். அப்படியானால்,
அந்த பெண் ஸ்வப்னா? யார் அவள்? ஷங்கருக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? பல கேள்விகள் அவருக்குள்.
அங்கே ஸ்வப்னா வீட்டில்-
கான்ஸ்டபிள் முருகன் ஸ்டேஷனுக்கு கிளம்ப எத்தனித்த சமயம், அவர் பார்வை எதேச்சையாக
சோபா அருகில் இருந்த மேஜையில்படிந்தது. உடனடியாக ஜீப்பை அனுப்பி வைக்குமாறு ஸ்டேஷனுக்குப் போன் செய்தார்.
ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் மற்றும் அனைவரும் குழப்பத்தில் இருக்க, முருகன் ஜீப்பில் இருந்து இறங்கினார். கூடவே கையில் விலங்குடன் ஸ்வப்னா மற்றும் அவள் கணவன்.
இருவர் முகமும் அழுததால் வீங்கிப்போயிருந்தது.
ஸ்வப்னாவின் கணவன் ரகு பேச ஆரம்பித்தான்.
"என் கடைக்கு அடிக்கடி வருவார் ஷங்கர். என் மனைவியை பார்த்த நாள் முதல் அவரின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. ஒருநாள் நான் இல்லாத நேரம், வீட்டுக்கே வந்து ஸ்வப்னாவுக்கு தொந்தரவு செய்தார். ஸ்வப்னா ரொம்ப மனமொடிந்துவிட்டாள்.இதற்கு ஒரே வழி ஷங்கரை இந்த உலகத்தை விட்டே அனுப்புவது தான் என்று முடிவு பண்ணினேன். சில நாட்கள் அவனை பின் தொடர்ந்தேன். இன்று காலையில் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்த நான், நேராக அவன் ரூமுக்கு சென்றேன். குளித்துவிட்டு வெளியே வந்தான். கொண்டு போயிருந்த கத்தியால் என் ஆத்திரம் தீர அவன் தலையை தனியாக்கினேன். அவன் தலை கீழே உருளாமல் இருக்க, கட்டிலில் மயக்கத்தில் இருந்தவரின் கையை அதன் மேல் வைத்து சப்போர்ட் கொடுத்தேன். உடலை கட்டிலின் அடியில் தள்ளினேன். பின் வெளியேறிவிட்டேன்" தன் மனைவி ஸ்வப்னாவைப் பரிதாபமாக பார்த்தான் ரகு.
ஸ்வப்னா தொடர்ந்தாள்.
"போலீசில் மாட்டாமல் இருக்க, இதை குடும்ப பிரைச்சினை போல சித்தரிக்கவே நான் அங்கு வந்து அழுது அப்படி நாடகம் ஆடினேன், ஆனா மேஜையில் இவர் வைத்திருந்த இரத்தம் படிந்த கத்தி காட்டிக்கொடுத்துவிட்டது, எங்களை மன்னிச்சிடுங்க" அழுதாள் ஸ்வப்னா.
அப்போது, "சூரஜ் இறந்துவிட்டார்" என்று மருத்துவமனையிலிருந்து போன் வந்தது.
இன்ஸ்பெக்டர் ஜீவா ஒரு முடிவுக்கு வந்தார்.
அன்று மாலை-
ஸ்வப்னா தன் கணவன் ரகுவுடன் கோவிலில் சந்தோஷமாக சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தாள். பேரர் கண்ணன் தன் பேராசை மனதை சாமியின் ஈட்டிக்கு அடியில் சமர்பித்துக்கொண்டிருந்தான். போலீஸ் குற்றப்பத்திரிகையில் சூரஜ், ஷங்கரை கொன்றுவிட்டார்.
ஜீவா, ஜீப்பில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். தூரத்தில், மேடையில் மினிஸ்டர் பேசிக்கொண்டிருந்தார்.
"பணமும் பொண்ணும் தான் ஒருத்தனை தப்பு பண்ண வைக்குது. எனக்கு அந்த ரெண்டு மேலயும் ஆசை இல்ல".
மினிஸ்டர் பேச்சைக் கேட்டு, இன்ஸ்பெக்டர் ஜீவாவின் அருகில் இருந்த அந்த 10 இலட்ச ரூபாய் சூட்கேஸ் அமைதியாய் சிரித்தது.

No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram