"அம்......ம்ம்ம்மே....ஆ ..." என்ற குரலுடன் கோளையும் சேர்ந்தே வாயிலிருந்து வழிந்தது ஐந்து வயது ரியாவுக்கு. கண்களின் பார்வையும், தொடர்ந்த தலையாட்டுதலுமே அவள் சராசரி குழந்தை இல்லை என்று சொல்லாமல் சொல்லிற்று.
மகளின் குரல் கேட்டு சமையலறையிலிருந்து ஓடிவந்த விமலா, ரியாவின் வாயில் வடியும் கோளை நீரை தன் முந்தானையால் துடைத்துவிட்டாள்.
அம்மாவைப் பார்த்ததும் கன்ன சதைகள் லேசாகி விரிந்தது ரியாவுக்கு. அவள் சிரிக்கிறாள் என்பது விமலாவுக்குப் புரிந்தது. ஆனால் உதட்டிலும் வாயசைவிலும் எந்த ஒரு மாறுதலுமில்லை. தன் மகளை வாரி எடுத்து அணைத்துக்கொண்டாள்.
"அம்மா, சமைக்கவேண்டாமா செல்லம்!" மகளின் நாடியைப் பிடித்து கொஞ்சினாள்.
"வா...கிச்சனில் இருந்து விளையாடு" என்றவள் மகளை தூக்கிக்கொண்டு கிச்சனுக்கு சென்றாள். பொம்மைகளை தரையில் பரப்பி, ரியாவை நடுவில் இருத்தினாள்.
நிமிர்ந்தவள் கண்களில் கண்ணீர்.
மருத்துவராயிருந்தும் தன் மகளை குணப்படுத்தமுடியவில்லையே என்ற கவலை, தன் மேலேயே அவளுக்கு வெறுப்பை உண்டாக்கியது. முன் ஹாலில் டிவியில் ஓடிக்கொண்டிருந்த செய்தி, அவள் காதுகளுக்கு வேலை கொடுத்தது.
"கடந்த வாரம் நாகர்கோவில் வந்திருந்த, ஜெர்மனி குடியுரிமை பெற்று அங்குள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம் விஞ்ஞானி மிஸ்.மரியா, லாரி மோதி உயிரிழந்தார். அன்னாரின் பூதவுடல், புனித அந்தோனியார் சர்ச் வளாகத்தில் உள்ள கல்லறைத்தோட்டத்தில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது".
தனியார் தொலைக்காட்சியில் இரவு எட்டரை மணி செய்தியை 'பாப் கட்' செய்திருந்த இளம்பெண் வாசித்த மறுகணமே 'டொட்டொடொய்' ம்யூஸிக்குடன் விளம்பரம் ஒளிபரப்பானது. செய்தி வாசித்த அதே அரிவை, "என் நீளமான தலைமுடிக்கு 'டார்ஸ்' தேங்காய் எண்ணெய் தான் காரணம்" என்று 'விக்' முடியுடன் காதலனிடம் கொஞ்சிக் கொண்டிருந்தார்.
******
அதே டிவி செய்தியை டாக்டர் மதனும் தன் இருப்பிடத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
தொலைக்காட்சி செய்தியிலிருந்து கண்களை எடுக்காமலேயே "பிரேம்......நீ ரெடியாகிட்டியா?" என்றார்.
'இதோ கிளம்பறேன் சீனியர்' என்ற பிரேம் உடனே வெளியேறினான். அவனின் நடையில் வேகம் தெரிந்தது.
முன்னிரவு-
பத்து முறை ஆலய மணியடித்து “உனது நாட்டில் வாழும் அயல்நாட்டுக்காரர்களுக்குக் கெடுதல் செய்யாதே, லேவியராகமம் 19:33" என்ற வாசகம் ஸ்பீக்கரில் ஒலித்தது.
அவன் மெதுவாக கல்லறை தோட்டத்து வாயில் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தான். பகலில் பெய்த மழை, கீழே விழுந்து கிடந்த காய்ந்த சருகுகளை நனைத்திருந்தது. வேகமாகவே நடந்தான். தூரத்தில் எங்கோ நாய் குறைத்தது. பெரிதாக வளர்ந்திருந்த வேப்பமரத்தின் வடக்கு நோக்கிய கிளையில் இரண்டு ஆந்தைகள் கொஞ்சிக்கொண்டிருந்தது. மரியாவின் கல்லறையை அடைந்தான்.
நிறைய மாலைகள்! ரோஜா, அரளி, சம்பங்கி, கேந்தி என்று ஒரு மலர் குடும்பமே அங்கு சட்டசபை நடத்தியது. மாலைகளை ஒதுக்கி குழியைத் தோண்ட ஆரம்பித்தான். அப்போதுதான் மூடியிருந்த குழியாதலால் சீக்கிரமே தோண்டிவிட்டான். சவப்பெட்டியை உடைத்து மரியாவை வெளியே எடுத்தான். தன் மூளையில் பதிவாகியிருந்த டாக்டர் படிப்பு அவனுக்கு இந்த சமயத்தில் மிகவும் உதவியாக இருந்தது. ஒரு மணி நேரத்தில் வேலையை முடித்தவன், மீண்டும் குழியை மூடி, மாலைகளைப் போட்டான். இரையெடுத்த பாம்புகள் போல அவைகள் ஆங்காங்கே சுருண்டு விழுந்தன.
வேகமாக நடந்து கேட் அருகே வந்தபோதுதான் அங்கே நின்றிருந்தவனை கவனித்தான். அதிர்ச்சியில் உறைந்தே போனான். இந்த நிகழ்வை இரண்டு மீன் விழிகள் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தன. வலது கண்ணின் ஓரத்தில், ஆண்ட்ராய்டு போன் காமிரா அளவு மச்சம் அந்த கண்களை இன்னும் அழகாக்கியது. அவர்கள் இருவரையும் அந்த மச்சக்காரியின் ஆப்பிள் போன் 'கிளிக்'கியது.
நள்ளிரவு 12:30 மணி-
"சக்ஸஸ் சீனியர்" என்ற உற்சாகக் குரலுடன் நுழைந்தான் பிரேம். அவன் கைகளில் ஃபார்மால்டிஹைடு திரவத்தில் கண்ணாடி சீசாவில் மூழ்கியிருந்தது விஞ்ஞானி மிஸ். மரியாவின் மூளை.
அதை தன் கைகளில் வாங்கிய டாக்டர் மதனின் முகம், ராக்கெட் கிளம்பும் போது வெளிப்படும் தீக்குழம்பின் வெளிச்சம் போல பிரகாசமாக ஒளிர்ந்தது. இந்த மூளையில் இருக்கிற 100 பில்லியன் நரம்பில், ஒரு நரம்பின் முழு செயல்பாடுகளையும் 'எண்டு டு எண்டு' கண்டுபிடிச்சாக் கூட போதும்! உலகின் தலை சிறந்த நியூராலஜிஸ்ட் நான்தான். அவரின் பேச்சில் ஆர்வமும், துடிப்பும், வெறியும் கலந்திருந்தது.
"பிரியா எங்கே சீனியர்?" தன் வேஷ்டியையும் தலையில் கட்டிஇருந்த முண்டாசையும் கழற்றிக்கொண்டே கேட்டான் பிரேம்.
'அவ இப்போ தான் வீட்டுக்கு கிளம்பினா'
"சரி, டாக்டர், நானும் கிளம்பறேன், நாளைக்கு காலையில வர்றேன்" என்றவன், பேண்ட் ஷர்டுக்கு மாறி மூக்குக்கு கீழே ஒட்டி வைத்திருந்த முறுக்கு மீசையையும் கழற்றி மேஜை டிராயரில் வைத்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்.
காலையில் பிரேமுக்கு முன்னமே வந்திருந்த பிரியா, டாக்டரின் லாபரேட்டரியில் உள்ள கம்பியூட்டரில் மூளை பற்றிய அவரின் குறிப்புகளைப் படித்துக்கொண்டிருந்தாள்.
'ஹே பிரியா' உற்சாகத்துடன் உள்ளே நுழைந்தான் பிரேம்.
"வா .......உனக்காகத்தான் வெயிட்டிங்....நேற்றைய த்ரில் அனுபவம் எப்படி இருந்தது, சொல்லு" ஆர்வமானாள் பிரியா.
'சீனியர் எங்கே?'
"வெளிய போயிருக்கார்..... நீ சொல்லு"
'வெட்டியான் வேடத்துல உள்ளே போனா யாருக்கும் சந்தேகம் வராதுன்னு பெரிய மீசை, முண்டாசு, வேட்டி சகிதம் கல்லறை தோட்டத்துக்கு போனேன்' என்றவன் ஜன்னல் வழியே வெளியே பார்த்து 'மழை வரும் போல இருக்குல்ல' என்றான்.
"டேய் ....சீக்கிரம் சொல்லுடா" ஆர்வத்தில் சிணுங்கினாள் பிரியா.
'மரியாவோட மூளையை எடுத்து பாட்டில்ல போட்டுக்கொண்டு வெளிய வரும்போது ஒருத்தர் வந்துட்டார். எனக்கு 'திக்'னு ஆயிடிச்சு. பேண்ட் சட்டை, டை னு பாக்க 'டிப்டாப்பா இருந்தார். என்னை வெட்டியான்னு நினைச்சுகிட்டு,
"ஐயா, நான் கம்பியூட்டர் என்ஜினியர், 'விர்ச்சுவல் ரியாலிட்டி' அப்ளிகேஷன் ப்ராஜெக்ட் ஒண்ணு பண்ணிக்கிட்டிருக்கேன். அதுக்கு இந்த கல்லறை தோட்டத்தை நைட் எபெக்ட்ல 360 டிகிரி கோணத்துல படம் எடுக்கணும். நான் உள்ளே போய் புகைப்படம் எடுக்கலாமானு கேட்டார்".
நான் பதில் சொல்றதுக்குள்ளே, 'இந்த பணத்தை வைச்சுக்குங்க' என்றவர், நடுப்பகுதிக்கு கூட்டிட்டுப் போகச்சொன்னார். நான், மண்வெட்டியையம் பாட்டிலையும் கீழே வச்சுட்டு உள்ளே கூட்டிட்டுப்போனேன்.
ஜன்னலுக்கு வெளியே மழை சடசடவென பெய்ய ஆரம்பித்தது.
'நீங்க போட்டோ புடிச்சுக்குங்க, நான் அவசரமா வீட்டுக்கு போகனும்'னு அவர்கிட்ட சொல்லிட்டு பாட்டிலையும் எடுத்துக்கிட்டு இங்கே வந்துட்டேன் என்றவன்,
பாக்கெட்டுக்குள் கைவிட்டு 500 ரூபாய் நோட்டுக்கட்டை காட்டினான்.
'எனக்குக் கிடையாதா பிரேம்?'
"எல்லாமே உனக்குத்தான்" என்றவன், அவள் கன்னத்தில் முத்தம் பதித்தான்.
'டாக்டர் மதனோட இந்த மூளை ஆராய்ச்சி மட்டும் சக்சஸ் ஆச்சுன்னா, அவர் கிட்ட அசிஸ்டண்ட்டாக இருக்கிற நாமளும் உலகம் முழுக்க பிரபலமாயிடுவோம்' சந்தோக்ஷமாய் சொன்ன பிரேமின் வார்த்தைகளை ஆமோதித்தவளாய் அவனுடன் ரிஷப்ஷனுக்கு நடந்தாள்.
அப்போது பிரேமின் போன் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தான்.
புது எண்ணிலிருந்து அவனின் வாட்ஸப்புக்கு ஒரு போட்டோ வந்திருந்தது.
நேற்றிரவு கல்லறைத்தோட்ட கேட் வாசலில் அவனும் அந்த கம்பியூட்டர் இன்ஜினியரும் பேசும் போது எடுக்கப்பட்ட புகைப்படம். அந்த படத்தில், வாயை பெரிதாக பிளந்து, கோரமாய் சுட்டெரிக்கும் பார்வையுடனான மரியாவின் முகத்தை, கம்பியூட்டர் கிராபிக்ஸ் மூலம் ஒன்றிணைத்திருந்தது. பார்த்தவன் அதிர்ந்தான். பிரியாவும் தான்!.
அதே சமயம், உள்ளே லேபராட்டரிக்குள்-
பீரோவுக்குள் இருந்து மெதுவாக வெளியே வந்தாள் விமலா.
தன்னுடன் கொண்டுவந்திருந்த பென் டிரைவை கம்பியூட்டரில் சொருகினாள். கீபோர்டில் அவள் விரல்கள் விளையாடின. சில நிமிடங்களிலேயே முக்கிய ஃபைல்கள் இடம் மாறின. பென் டிரைவை உருவியவள், வேகமாக கதவை நெருங்கினாள். அப்போது உள்ளே வந்த பிரேம்,
"யார் நீ.....இங்கே என்ன பண்றே? ......" குழப்பத்தில் எதுவும் புரியாமல் அவளை விசாரிக்க, அதற்குள் அவளின் இடது கைமுட்டி அவனின் தொடை இடுக்கைப் பதம் பார்த்தது. பிரேம் நிலைகுலைந்து கீழே விழுந்தான்.
"பிரியா ............" அலறியவனின் கன்னத்தில் 'பளார்' என்று அறைந்தாள்.
தடுமாறியவன், அவளை இறுகப் பிடித்தான். இருவரும் தரையில் உருண்டனர். மஞ்சள் நிற சேலைக்கு மேட்ச்சாக அவள் அணிந்திருந்த செயின் அவன் கையில் மாட்டி கீழே விழுந்தது.
சத்தம் கேட்டு ஓடிவந்த பிரியா, ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து அதிர்ந்தாள். உள்ளே ஓடி வருவதற்குள், விமலா அவனைத் தள்ளி விட்டு வெளியே ஓடிப்போனாள்.
பிரியாவும் பிரேமும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
சற்று நேரத்தில் டாக்டர் மதன் குடையை மடக்கிக்கொண்டே உள்ளே நுழைந்தார். உடனே பிரேம், அந்த புகைப்படத்தை காட்டினான்.
நேற்று பிரேம், மூளையை எடுத்ததை யாரோ கவனித்திருக்கிறார்கள் என்று மதனுக்குப் புரிந்தது..
'யாராய் இருக்கும்' என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே பிரியா, சற்று முன் அங்கு நடந்த களேபரங்கள் அனைத்தையும் கூறி கீழே கிடந்த அந்த சங்கிலியையும் மதனிடம் கொடுத்தாள். அதில் இருந்த "வி" என்ற ஆங்கில எழுத்து டாலரைப் பார்த்தவுடன் டாக்டருக்கு முழுவதும் புரிந்துபோயிற்று.
வந்தவள் விமலா தான்.
உங்களுக்கு முன்னர், என்னிடம் அசிஸ்டன்டாக வேலை பார்த்தவள். இப்போது அவளும் இந்த மூளை ஆராய்ச்சியில் தான் ஈடுபட்டிருக்கிறாள். விஞ்ஞானி மரியாவின் மூளையை எடுக்கத்தான் வந்திருப்பாள்.
"மூளை பத்திரமாக இருக்கிறதா?" பதட்டத்துடன் வினவினார் டாக்டர்.
'அது பத்திரமாத்தான் இருக்கு'
வேகமாக லேபுக்குள் சென்றவர், பாட்டில்லைத் திறந்து கண்ணாடி குச்சியால் மூளையைத் தொட்டவர் அதிர்ந்தார். அது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட டம்மி மூளை.
*****
விமலா வீட்டில்-
நெற்றியில் கூகுள் ஹெட் செட்டுடன் விர்ச்சுவல் ரியாலிட்டியில், நேற்றிரவு எடுத்த கல்லறைத் தோட்ட புகைப்படத்துக்குள் உலவிக்கொண்டிருந்த விஜயிடம்,
"காபி....." என்றாள் மனைவி விமலா.
ஹெட் செட்டை கழற்றியவன், மடியில் இருந்த மகள் ரியாவை கீழே இறக்கிவிட, அப்போது....
கதையின் முடிவைத் தெரிந்து கொள்ள எனக்கு PM செய்யவும்.
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram