Tuesday, March 2, 2021

சந்நியாசி (திரைக்கதை சுருக்கம்)

கொக்கரக்கோ .........கோ......

நாகர்கோவில் பால் பண்ணை பெரியதெருவை தன் 90 டெசிபல் கரகரக் குரலில் எழுப்பியது சேவல்.
கோமளம் வாயிற் கேட்டில் போடப்பட்டிருந்த பூட்டைத் திறந்து, பூட்டையும் சாவியையும் வீட்டுக்குள் கொண்டு வந்து மேஜையில் வைத்தாள். காலையிலேயே குளித்து ஈரத்தலையை டவலால் சுற்றியிருந்தாள். வெளியே எட்டிப்பார்த்த முடிகளில் ஒன்றிரண்டு வெண்பனி உடுத்தி அவள் வயதை ஐம்பது என்றுரைத்தது. சுவர்கடிகாரத்தில் குக்கூ பறவை வெளியே வந்து இரண்டுமுறை 'பீ ...பீ' என்று கூவி மணி அதிகாலை 5:30 என்று காட்டியது. இரண்டு பெட்ரூம் வீட்டின் இரண்டு பக்கமும் சிறிய முடுக்கு. மாடியிலும் ஒரு பெட்ரூம். பின்பக்கம் சற்று விசாலமான இடம். நான்கு தென்னை மரங்கள். வீட்டின் முன்புறம் 10 க்கு 10 அடி இடத்தில் ரோஜா, மல்லிகை, பவளமல்லி என பூஞ்செடிகள் ஒரு புறமும் மாதுளை, அரிநெல்லி, சப்போட்டா, என குறு மரங்கள் மறுபுறமுமாய் நடுவில் நடைபாதையில் சுட்ட ஓடு பதித்திருந்தார்கள். பெட்ரூமில் லைட் எரிந்தது. நல்லசிவமும் முழித்துவிட்டார்.
"அண்ணே......"
வெளியே குரல் கேட்டது.
நல்லசிவம் வெளியே வந்தார். இன்னும் நான்கு வருடத்தில் புதூர் போலீஸ் ஸ்டேஷனில் எழுத்தாளர் பணியிலிருந்து ஓய்வு. வெளியே அவருடன் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் கான்ஸ்டபிள் சந்தானம் நின்றிருந்தார். வேலைக்கு சென்றுவர வசதி என்று மனைவியுடன் நாகர்கோவிலிலேயே செட்டில் ஆகிவிட்டார் சந்தானம். திருமணமாகி ஐந்து வருடம் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை.அவரின் அப்பாவும் அம்மாவும் சொந்த ஊரான காளியக்காவிளையில் இருக்கிறார்கள்.
நல்லசிவத்துக்கு சிரமம் கொடுக்காமல் சந்தானம் தொடர்ந்தார்.
"பார்வதிபுரத்துல ஒரு விவாகரத்து பிரச்சினை. இன்ஸ்பெக்டர் போய் பார்க்கச்சொன்னார். அப்படியே களியக்காவிளையில் இருக்கிற அப்பா வீட்டுக்குப் போயிட்டு இரண்டு நாள் கழிச்சிதான் வருவேன். அதான், நேத்து நீங்க கேட்ட மூலிகை எண்ணையை கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்" என்றவர் எண்ணெயை நல்லசிவம் கைகளில் கொடுத்தார்.
"இப்போ மூட்டுவலி பரவாயில்லையாண்ணே?"
நல்லசிவம் 'ஆமாம்' என்று தலையசைத்தார்.
"நேரமாயிடுச்சு, வர்றேன்" என்ற கான்ஸ்டபிள் சந்தானம், பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்தார்.
'அந்த சிவப்பு வண்டிகிட்ட பார்த்து போங்க'
காதில் வாங்கியவர், பைக் ஸ்டார்ட் ஆனதால் திரும்பி பார்க்கமுடியாமல் 'வரேன்' என்று சொல்லிவிட்டு வண்டியைத் திருப்பி ரோட்டில் ஏறினார்.
எந்த சிவப்பு வண்டியை அண்ணன் சொன்னார்? என்ற கேள்வி சந்தானத்துக்குள் எழுந்தாலும், நேரமாவதால் வண்டியின் ஆக்சிலேட்டரில் கவனம் செலுத்தினார்.
"நீங்க காபி குடிக்கிறீங்களா? கோமளம் கேட்டாள்.
நல்லசிவம் சுவரில் மாட்டியிருந்த தினசரி காலண்டரைக் காட்டினார்.
காலண்டர் அருகில் சென்றவள் 'ஓ ....நேத்து அமாவாசையா' என்று சொல்லிக்கொண்டே சுவரில் கடிகாரத்தைப் பார்த்தாள்.
மணி 5:55.
"இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு. அதுக்குள்ள இந்த காபியை குடிங்க" என்று காபி கப்பையை நல்லசிவத்திடம் கொடுத்தாள்.
சந்தானம் பார்வதிபுரம் பேருந்து நிலையத்தை அடைய சில மீட்டரே உள்ள நிலையில் அந்த சிவப்பு நிற தீயணைப்பு வண்டி வலது பக்க ரோட்டிலிருந்து நாகர்கோவில் மெயின் ரோட்டில் நுழைந்துகொண்டிருந்தது.
பூச்சாண்டிக்குப் பயந்து அம்மாவின் முந்தானையின் பின்னால் ஒழிந்த குழந்தை, சிறிது நேரம் கழித்து மெதுவாக சேலையை விலக்கிப் பார்பதுபோல, சூரியன் மெதுவாக பூமியை எட்டிப்பார்க்க ஆரம்பித்தான்.
ஜெர்மனியின் ப்ளாக் பாரெஸ்ட்ல் தயாரித்த குக்கூ பறவை கடிகாரம் ஆறுமுறை கூவி, மணி அதிகாலை ஆறு என்றது.
'சீனி கொஞ்சம் அதிகம்' என்று சொல்லிக்கொண்டே குடித்து முடித்திருந்த காபி கப்பை கோமளத்திடம் கொடுத்தார் நல்லசிவம்.
"அம்மாவாசை ராத்திரிக்கு மட்டுமில்லாம, எல்லா பகல்லையும் நீங்க மௌனவிரதம் இருக்கணும்" என்று சிரித்துக்கொண்டே நல்லசிவத்துக்கு தோசை ஊத்த தயாரானாள்.
ஏதோ சத்தம் கேட்டு சந்தானம் பக்க வாட்டில் திரும்பிப் பார்க்க, ரோட்டில் உள்ள குழியில் பைக்கின் முன் சக்கரம் விழுந்தது. ஹான்டில்பாரை பாலன்ஸ் பண்ணமுடியாமல் நிலை தடுமாறி சந்தானம் கீழே சரிய, அவரின் வலது கையில் அந்த சிவப்பு வண்டியின் டயர் ஏறி இறங்கியது.
காலை ஏழு மணிக்கு ஸ்டேஷனில் இருக்கவேண்டுமென்பதால் நல்லசிவம் குளிக்க பாத்ரூமிற்குள் நுழைந்தார்.அவர் குளித்துவிட்டு வருவதற்குள் டைனிங் டேபிளில் தோசை வெங்காய சட்னியுடன் தயாராக இருந்தது.
"சிவா, முழிச்சிட்டானா?" தோசையை பிய்த்து சட்னியில் தொட்டுக்கொண்டே கேட்டார் நல்லசிவம்.
'இன்னும் இல்ல, காலேஜ் படிக்கிறப்போ தான் அவனை தூங்கவிட மாட்டீங்க. இப்போதான் படிச்சி முடிச்சிட்டானே, கூட கொஞ்ச நேரம் தூங்கட்டுமே'
"டவர் ஜங்ஷன் பக்கத்துல இருக்கிற ஸதர்ன் கம்ப்யூட்டர் கம்பெனியில் ஜாவா புரோகிராமர் வேலை ஒண்ணு இருக்குனு பரந்தாமன் சொன்னார். அவர் மகனும் அதுல தான் சேர்ந்திருக்கானாம். பத்து மணிக்குப் போல போய் பார்க்கச்சொல்லு" என்றவர் தன்னுடைய பைக்கில் ஸ்டேஷனுக்கு கிளம்பினார்.



சந்தானத்தின் அலறல் சத்தம் கேட்டு பார்வதிபுரம் பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் ஓடிவந்தனர்.
ஒருவர் எதிரில் வந்த ஆட்டோவை கைகாட்டி நிறுத்த, சந்தானம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
"உள்ளே வரலாமா கதாசிரியரே?"
சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தான் சிவா.
'வாங்க மேடம்'
தன் மகன் யாரை 'மேடம்' என்று கூப்பிடுகிறான் என்று சமையல் கட்டில் மதிய சாப்பாட்டுக்கு சாம்பார் செய்ய முருங்கைக்காய் வெட்டிகொண்டிருந்த கோமளம், ஒரு கையில் கத்தியும் மறு கையில் முருங்கைக்காயுமாய் முன் ஹாலுக்கு வந்தாள்.
உள்ளே வந்தவள் நிலா. கோமளத்தின் தம்பி மகள். நாகர்கோவிலில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கிறாள்.
"வாம்மா, உள்ள வா, இன்னிக்கு காலேஜ் போகலையா?"
'இல்ல ஆண்டி, ஸ்டடி ஹாலிடேஸ்'
"அப்படின்னா, ஒழுங்கா வீட்டிலிருந்து படிக்கவேண்டியது தானே" செல்லமாய் நிலாவை சீண்டினான் சிவா.

"நீ தான் படிச்சி முடிச்சிட்டியே, ஒழுங்கா வேலைக்கு போகவேண்டியதுதானே, அங்கிளுக்கும், கூட கொஞ்சம் வருமானம் கிடைக்கும்" பதிலுக்கு அவன் காலை வாரினாள் நிலா.
'நான் கதை எழுதியே JK ரௌலிங் மாதிரி பெரிய கோடீஸ்வரனாகப் போறேன் பாரு'
"அப்போ, அந்த கோடிகளுக்கெல்லாம் நான் தானே சொந்தக்காரி" என்ற நிலாவை,
"இந்தா, இந்த சேருல உட்கார்" நாற்காலியை இழுத்து போட்டுஅவளை உட்கார சொல்லிவிட்டு, விட்ட சமயலைத் தொடர சமயலறைக்குள் நுழைந்தாள் கோமளம்.
"நேத்து பேஸ்புக்ல போஸ்ட் பண்ணின கதைக்கு 1000 லைக்ஸ் வந்திருக்கு. நிறைய பேர் என் கதையை அப்ரிஸியேட் பண்ணியிருக்காங்க, என் கதைக்குன்னு ஒரு ரசிகர் பட்டாளமே பேஸ்புக்ல இருக்கு தெரியுமா" சந்தோஷத்தில் பேசினான் சிவா.
'எனக்கும் சந்தோசம் தான் சிவா' சேரை இழுத்து அதில் உட்கார்ந்தாள் நிலா.
"விஷயம் இல்லாம மேடம் வர மாடீங்களே, என்ன விஷேசம்?"
'ம்...க்கும். அதையும் நான் தான் சொல்லணுமா. உன்னை கல்யாணம் கட்டிக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேனோ?'
"பத்தாவது மாசத்திலேயே பிள்ளை பெத்துக்குவா. போதுமா"
'சீ ...... உன்னை........இன்னிக்கு என்ன தேதி?'
மொபைலில் தன் ஆட்க்காட்டி விரலை வைத்து ஸ்கிரீனை அன்லாக் செய்தவன்,
"ஏப்ரல் ஃபிப்த் ...... ஓ .......மெனி மோர் ஹாப்பி ரிட்ட்னஸ் ஆப் த டே" என்று அவள் கையை குலுக்கினான்.
'ம் .......அவ்வளவு தானா?'
"அம்மா இருக்காங்கடி......."
'சாருக்கு எப்பவும் அதே நினைப்புதான். நான் கேட்டது, பார்ட்டி எப்போ தருவேனு'
"அது பெர்த் டே பேபி நீ தானே எனக்குத் தரணும்?"
'ம்ம்ம்ம்ம்.....வீட்டுக்காரர் தான் தரணும்'
"ஓகே, 'அண்ணா பஸ் ஸ்டாண்ட்' பக்கத்துல இருக்கிற மிலன் த்ரீ ஸ்டார் ஹோட்டலுக்குப் போவோமா?"
'அவ்வளவு தானா? கிப்ட் எதுவும் தரமாட்டியா?'
"அங்கே போனவுடன் உனக்கே புரியும். மிகப் பெரிய கிப்ட் உனக்காக காத்துக்கிட்டிருக்கு. வா, போலாம்"
'இன்னிக்கு வேண்டாம். இனி நாகராஜா கோவிலுக்குப் போகணும். அப்புறம், தாத்தா பாட்டி கிட்ட ஆசீர்வாதம் வாங்க தேரூர் போகணும்'
"அப்போ சனிக்கிழமை போவோமா?"
'ஓகே, டன். நான் கிளப்புறேன். ஆண்ட்டி, நான் போயிட்டு வரேன்'
"இருந்து சாப்பிட்டுட்டு போ"
'தேரூர் போகணும், தாத்தா வீட்டுக்கு. சனிக்கிழமை வரேன்'
"சரிம்மா, பாத்துப் போ"
புது பாஸ்போர்ட் அப்ளை பண்ணியிருந்த குமார், வெரிஃபிகேஷனுக்காக தன் தந்தையுடன் போலீஸ் ஸ்டேஷனில் நல்லசிவம் மேசையின் முன் நின்றிருந்தான்.
"என்னப்பா படிக்கிறே?"
'BE- EEC செகண்ட் இயர்'
"அவன் பெயரில் ஏதேனும் கேஸ் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்த நல்லசிவத்திடம் பதட்டத்துடன் ஹெட் கான்ஸ்டபிள் சத்யமூர்த்தி வந்தார்.
" நல்லசிவம், கான்ஸ்டபிள் சந்தானத்துக்கு பார்வதிபுரம் பக்கத்துல ஆக்சிடெண்ட் ஆயிடுச்சி. ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க"
'காலையில கூட என்கிட்ட பேசிட்டு தானே போனான், எதுல அடி? இப்போ எப்படி இருக்கு? பேசுறானா?' கேள்விகளை அடுக்கினார் நல்லசிவம்.
"கைல தான் அடி. எலும்பு முறிஞ்சிருக்கு. ஆபரேஷன் பண்ணி கட்டு போட்டிருக்காம். சுய நினைவெல்லாம் இருக்கு. நான் இப்போ போய் பார்க்கபோறேன். நீ வர்றியா"
சற்று யோசித்தார் நல்லசிவம். குமார், அவனின் அப்பா, இன்னும் நான்கு பேர் பார்போர்ட் வெரிஃபிகேஷனுக்காக காத்திருந்தனர். அவர்களை மேலும் காக்க வைக்க அவர் விரும்பவில்லை.
'ஒண்ணும் பிரச்சினை இல்ல தானே. அதனாலே, நான் சாயந்திரம் வீட்டுக்குப் போகும் போது போய் பார்த்துக்கறேன்' என்றவர் தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார்.
மாலையில் ஆறுமணிக்கு ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தவர், அருகில் இருந்த டீ கடைக்கு சென்றார்.
"நாயரே, சீனி குறைச்சலா ஒரு டீ"
'வடை வேணுமா சார், உளுந்தவடை சூடா இருக்கு'
கையில் எடுத்தவர், அருகில் அளவாக வெட்டித் தொங்கவிட்டிருந்த நியூஸ் பேப்பரில் ஒன்றை கிழித்து அதில் வடையை வைத்து அழுத்தி எடுத்தார்.
"சார், நம்ம சந்தானம் சாருக்கு ஆக்சிடென்ட்டாமே, இப்போ எப்படி இருக்கு"
'பரவாயில்லையாம், முழங்கை பக்கத்துல எலும்பு முறிஞ்சிருக்காம். நான் இனி தான் போய் பார்க்கணும்' என்றவர், 'ஒரு கிலோ ஆரஞ்சு பழமும் கொடுங்க' என்றார்.
டீ குடித்துமுடித்து, பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை எடுத்து பணத்தைக் கொடுத்துவிட்டு பைக்கில் ஏறி பார்வதிபுரத்துக்கு விரைந்தார்.
ரிசப்ஷனில் சந்தானம் பற்றி விசாரித்தவர், இரண்டாவது மாடியில் 28 ம் ரூம் என்று தெரிந்துகொண்டு படிகளில் ஏறினார். டெட்டால் வாசனை மூக்கைத் துளைத்தது. வராண்டாவை, வயதான பெண் ஒருவர் டெட்டால் கொண்டு தரையைத் துடைத்துக்கொண்டிருந்தார்.
"28ம் நம்பர் ரூம் எங்க இருக்கு?"
'நேரா போய் வலது பக்கம் திரும்புங்க சார்'
கையில் ஆரஞ்சு பழ பார்சலுடன் அறைக்குள் நுழைந்தார். சந்தானத்தின் மனைவி கட்டிலில் சந்தானத்தின் அருகில் சோகமாக உட்கார்ந்திருந்தார்.
"வாங்க அண்ணே" என்ற சந்தானம் எழுந்து உட்கார முற்பட்டார்.
'இல்லல்ல, நீ படுத்துக்க' என்ற நல்லசிவம் பக்கத்தில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு சந்தானத்தின் அருகில் அமர்ந்தார்.
'எப்படி நடந்துச்சு?'
"பார்வதிபுரம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல பைக் பாலன்ஸ் தவறி ரோட்டில இருந்த பெரிய பள்ளத்துல இறங்கிடுச்சு. நான் கீழே சரியவும், எதுத்தாப்புல வந்த ஃபையர் சர்வீஸ் வண்டி கையில ஏறிடுச்சு"
'எல்லாம் நேரம் தான். இனி எப்போவும் கொஞ்சம் பாத்து நிதானமாவே போ' நல்லசிவத்தின் வார்த்தையில் கனிவு தெரிந்தது.
"அண்ணே, காலையில நீங்க சொன்னமாதிரியே அந்த சிவப்பு வண்டிய நான் கவனிக்காம போனது தப்புதான்"
நான் காலையில சொன்னேனா, இவன் காலையில வரும்போது நான் மௌன விரதத்துல தானே இருந்தேன்.
நல்லசிவத்துக்கு தூக்கி வாரிப் போட்டது.

"நான் சொன்னதை நீ பார்த்தியா, சந்தானம்?"

'நான் பைக்கை ஸ்டார்ட் பண்ணிட்டு திரும்பும் போது நீங்கதான அண்ணே, அந்த சிவப்பு வண்டிகிட்ட பாத்துப்போனு சொன்னீங்க. நான் பார்க்கலேன்னாலும் உங்க குரல் எனக்குத் தெரியாதாண்ணே'

இந்த நிலையில் அவனை மேலும் குழப்பவேண்டாம் என்று நினைத்தார்.

"சரி, உடம்பை பார்த்துக்கோ, நான் கிளம்புறேன்" என்றவர், ஆரஞ்சுபழ பார்சலை சந்தானத்தின் மனைவியிடம் கொடுத்துவிட்டு வெளியே கிளம்பினார்.

இரவு நல்லசிவத்துக்கு தூங்கம் வரவில்லை. புரண்டு பார்த்தார். ம்கூம். யார் சொல்லியிருப்பார்கள்?. உண்மையிலேயே யாரவது பேசினார்களா அல்லது கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சந்தானத்துக்கு ஏதும் ஆகிவிட்டாதா? யோசிக்க யோசிக்க நல்லசிவத்துக்கு தலை வலித்தது. ஜண்டுபாம் எடுத்து தடவிக்கொண்டு மீண்டும் படுத்தார். எப்போது தூங்கினார் என்றே தெரியவில்லை.

"கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ உத்திஷ்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்களம் குரு மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்"

காலையிலேயே குளித்துவிட்டு கோமளம் பூஜை அறையில் மனமுருக பாடிக்கொண்டிருந்தாள்.

மனைவியின் பாடல் கேட்டு முழித்தவர், கையை நீட்டி மேசையில் வைத்திருந்த மூக்கு கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டு எழுந்தார். ஹாங்கரில் நேற்று தொங்க விட்டிருந்த பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு எதையோ தேடினார்.
காணோம்.

பேண்டை கையில் எடுத்து இரண்டு பக்கவாட்டு பாக்கெட்களிலும் பின் பக்க பாக்கெட்டிலும் தேடினார். இல்லை. சற்று அதிர்ந்தவர், சட்டை பாக்கெட்டில் பார்த்தார். ம்கூம். கிடைக்கவில்லை.

"நான் குளிக்கணும், பழைய டவலை அழுக்குல போட்டுட்டேன். புது டவல் ஒண்ணு வேணும்" கண்களில் இருந்த பூளையை விரலால் தடவிக் கொண்டே மாடிப்படிகளில் இறங்கி வந்த சிவா கேட்டான்.

பூஜை அறையிலிருந்து வெளியே வந்த கோமளம், "உங்க ரெண்டு பேர் கிட்டேயும் எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன். இரண்டு பேர் குரலும் ஒரே மாதிரி இருக்கு. அதனால, யாருக்கு என்ன வேணும்னு எப்பவும் தெளிவா சொல்லுங்கன்னு. இப்போ யாருக்கு டவல் வேணும், அப்பாவுக்கா, பிள்ளைக்கா?"

நல்லசிவத்துக்கு ஏதோ புரிவது மாதிரி தோன்றியது.

"சிவா, நேத்து காலையில சந்தானம் நம்ம வீட்டுக்கு வந்துட்டு போகும் போது, சிவப்பு வண்டி கிட்ட பாத்து போங்கன்னு மாடியில இருந்து நீ சொன்னியா?"

'ஆமாப்பா, முந்தாநாள் சாயந்திரம் நான் பைக்கில் பார்வதிபுரம் போயிட்டு வரும் போது பஸ்டாண்ட் பக்கத்துல ஒரு ஃபயர் சர்வவீஸ் வண்டி பிரேக் டவுண் ஆகி நின்றுக்கொண்டிருந்தது. பக்கத்துல இருக்கிற கால்வாயில் ஊமத்தை செடிகள் நல்ல உயரமாக வளர்ந்து இருப்பதால, இங்கிருந்து போகும்போது வண்டி நமக்கு ஒழுங்கா தெரியாது. நானே கொஞ்சம் குழம்பிட்டேன். அதான் அவர்கிட்ட சொன்னேன், என்னாச்சு அப்பா?'

ஒண்ணுமில்லை என்று சமாளித்தவர், சற்று தெளிந்தார். எதேச்சையாய் நடந்த ஒரு விஷயத்தை நினைத்து அந்த சந்தானம் குழம்பி என்னையும் குழப்பிட்டானே என்று நினைத்துக்கொண்டார்.

அலுவலகம் கிளம்ப பேண்ட் போடும் போது தான் பர்ஸை கானோம் என்பது மீண்டும் நல்லசிவத்துக்கு ஞாபகம் வந்தது. மீண்டும் பழைய பேண்ட் பாக்கெட்டில் நன்றாகத் தேடினார். கிடைக்கவில்லை.

"என்னப்பா தேடுறீங்க?"

'பர்ஸை காணோம்டா'

"அதுவா, நேத்து ஆரஞ்சு பழம் வாங்கிட்டு பைக்கில் உள்ள டேங்க் கவர்ல வச்சிருப்பீங்க"

'இல்லடா. எப்பவும் பேண்டு பாக்கெட்ல தான் வைப்பேன்' என்றவர், வெளியே பால்கனியில், சென்டர் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியிருந்த புல்லட்டின் டேங் கவரைத் திறந்துப் பார்த்தார். பர்ஸ் அதனுள் இருந்தது. கையில் எடுத்தவருக்கு ஆச்சரியம். சிவாவுக்கு பர்ஸ் இதனுள் இருப்பது எப்படி தெரியும்? அப்படியே தெரிந்திருந்தாலும் நான் ஆரஞ்சு பழம் வாங்கியது எப்படி தெரிந்தது? குழப்பத்துடன் வீட்டுக்குள் நுழைந்தவர்,

"அது எப்படிடா நேத்து நான் ஆரஞ்சுபழம் வாங்கினது உனக்குத் தெரியும்?"

'இது என்ன உலக அதிசயமாப்பா. உங்க ஸ்டேஷனுக்கு எதுத்தாப்புல உள்ள டீ கடை நாயர், ஆரஞ்சு பழம் மட்டும் தான் வாங்கி வச்சிருக்காருனு தினமும் நீங்க அந்த பழத்தை தானே வாங்கிட்டு வருவீங்க. நம்ம டைனிக் டேபிளுக்கு மட்டும் வாய் இருந்தா 'வேற பழமே உங்களுக்கு கிடைக்காதா'னு சண்டைக்கு வரும். பழத்தை வாங்கி டேங் கவருக்குள் வைக்கும் போது பர்ஸையும் சேர்த்து வச்சிருப்பீங்க. இதை கண்டு பிடிக்க ஸ்காட்லாந்து போய் 'கிரிமினல் லா' படிச்சிட்டா வரணும்பா?'

வயதானாலே இப்படித்தான் எடக்கு மடக்கா நினைக்கத்தோணும் போல என்று தன்னையே நினைத்து சிரித்துக்கொண்டார் நல்லசிவம்.

சாப்பிட்டு உடை மாற்றிவிட்டு ஸ்டேஷன் கிளம்பினார்.

"சிவா, டவர் ஜங்ஷன் பக்கத்துல இருக்கிற ஸதர்ன் கம்ப்யூட்டர் கம்பெனியில் போய் பார்க்க சொல்லி நேத்தே அப்பா சொன்னாங்க. கதை எழுதுறேன் பேர்வழின்னு அங்க போகாம இருந்துடாதே. இன்னிக்கு கண்டிப்பா போய் பாரு"

'சரிம்மா' என்றவன், நேற்று டைப் பண்ணி பாதியில் விட்ட கதையை தொடர ஆரம்பித்தான்.

"டேய், நான் மீன் கடைக்கு போய் மீன் வாங்கிட்டு வந்துடறேன், அதுவரைக்கும் வீட்டைப் பார்த்துக்க, ப்ரெண்ட்ஸ் கூப்பிட்டாங்கன்னு வெளியே எங்கேயும் போயிடாத, சீக்கிரம் வந்துடறேன்" என்ற கோமளம், மீன் வாங்க, கையில் சிறிய கூடையை எடுத்துக்கொண்டு இரண்டு தெரு தள்ளி இருந்த மீன் கடைக்கு கிளம்பினாள்.

தான் எழுதிய புதிய கதையை முகநூலில் போஸ்ட் செய்த சிவா சாப்பிடஆரம்பித்தான்.

மதியம் சாப்பிட வீட்டுக்கு கிளம்பும் சமயம் நல்லசிவத்தின் மொபைல் போன் ஒலித்தது.

எடுத்துப் பார்த்தவர் புது நம்பராக இருக்கவே, சற்று தயக்கத்துடன்,
"ஹலோ" என்றார். மறுமுனையில் ஒரு பெண் குரல்.

'சார், நான் பிரேமா மருத்துவமனையிலிருந்து பேசுறேன். உங்க ஒய்ப் இங்கே தான் இருக்காங்க, நீங்க வந்து கூட்டிக்கொண்டு போங்க'. உடனே கனெக்க்ஷன் துண்டிக்கப்பட்டது.

நல்லசிவத்துக்கு தூக்கி வாரிப் போட்டது.

யாராவது விளையாடுகிறார்களா? ஒரு வினாடி அப்படி யோசித்தாலும் தன் மனைவி சம்பந்தப்படட விஷயம் என்பதால் வேறு எதுவும் யோசிக்கத்தோன்றாமல் பைக்கை வேகமாக உதைத்தார். அடுத்த பத்தாவது நிமிஷம் அவரது புல்லட் பிரேமா மருத்துவமனைக்குள் நுழைந்தது. வேகமாக இறங்கி ரிஷப்ஷனை நோக்கி சென்றார்.

அங்கே....
கோமளம் ஒரு சேரில் உட்கார்ந்திருந்தாள். அவளை சுற்றிலும் கோட் சூட் அணிந்த நாலைந்து பேர். அவர்களிடம் கோமளம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள். வேகமாக உள்ளே சென்ற நல்லசிவம் அவர்களை விலக்கி, கோமளம் அருகில் சென்றார்.

"உனக்கு ஒன்னும் ஆகலியே, என்னாச்சு, எப்படி இங்க வந்தே?" கோமளத்திடம் வரிசையாக கேள்விகளை அடுக்கினார் நல்லசிவம் . அவர் குரலில் ஒருவித பதட்டம் தெரிந்தது. சுற்றி நின்ற கோட் அணிந்தவர்களைப் பார்த்து கொஞ்சம் மிரட்சியாகவும் இருந்தது.

'எனக்கு ஒண்ணுமில்லைங்க, நான் மீன் வாங்க மீன் கடைக்கு ரோட்டு ஓரமா நடந்து போய்க்கிட்டிருந்தேன். அப்போ, எதிர் பக்கத்துல நடுத்தர வயசுக்காரர் ஒருத்தர், காரை நிறுத்திவிட்டு, இந்த பக்கம் இருந்த பேக்கரியை நோக்கி வந்தார். அதற்குள் வேகமா வந்த லாரி இடித்துத்தள்ளிவிட்டது. கீழே விழுந்த அவரை நான் தான் ஆட்டோவில் இங்கே ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தேன். போன் கொண்டு வராததுனால இங்க ரிசப்ஷனில் உங்க நம்பரை கொடுத்து உங்களுக்கு போன் பண்ண சொன்னேன்'.

கோட் அணிந்த நபரில் ஒருவர் தொடர்ந்தார்.

"நல்ல சமயத்துல உங்க மனைவி எங்க கம்பனி முதலாளிய இங்க கொண்டு வந்து சேர்த்தாங்க. இப்போ சுய நினைவு வந்துவிட்டது. உங்களை பார்க்கணும்னு விருப்புகிறார், வாங்க சார், வாங்க மேடம்"

'இல்ல, பரவாயில்ல, நாங்க கிளம்புறோம்' என்று மனைவியை கூட்டிக்கொண்டு வெளியே வர முற்படடவரை ஒரு பெண்ணின் கை தடுத்தது.

நிமிர்ந்து பார்த்தார்.

அந்த பெண்ணின் கண்களில் கண்ணீர். கோமளத்தையும் நல்லசிவத்தையும் கையெடுத்துக் கும்பிட்டார்.

'என் தாலியை காப்பாத்திட்டீங்க, நான் என் வாழ்நாள் முழுக்க உங்களுக்கு கடமைப்படிருக்கேன்' என்றவர் மீண்டும் தொடர்ந்தார்.

'தன்னை காப்பாத்தினவரை பார்க்கணும்னு அவர் விருப்புகிறார், கொஞ்சம் ரூமுக்கு வந்துட்டு போங்க, பிளீஸ்'

அந்த பெண்ணின் கண்ணீர், அவர்கள் இருவரையும் அந்த ரூமுக்குள் கொண்டு சென்றது.

தலையில் கட்டு போடப்பட்ட நிலையில் அந்த முதலாளி படுத்திருந்தார்.

இவர்களை பார்த்ததும்,
"வாங்கம்மா, உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் என் கடன் தீராது. நீங்க என்னை மட்டும் காப்பாத்தல. என்னை நம்பி இருக்கிற நூறு குடும்பங்களையும் காப்பாத்தியிருக்கீங்க"
நல்லசிவம் குறுக்கிட்டார்.

"கவலைப்படாதீங்க சார், இனி ஒண்ணும் செய்யாது. சீக்கிரமே குணமாயிடும்"


'ஆமா சார், எனக்கும் நம்பிக்கை இருக்கு, நீங்க தப்பா நினைக்கலைனா நான் தர்ற இந்த சின்ன பரிசை வாங்கிக்கணும்னு ஒரு சிறு பையை நீட்டினார். இதுல ஒரு லட்ச ரூபாய் இருக்கு. அந்த சமயத்துல, அந்த இடத்துல அவ்வளவு கடைகள் இருந்தும், அவ்வளவு பேர் இருந்தும் யாரும் என்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரலை. எல்லாரும் போலீஸ் பிரச்சினையாகிடும் னு பயந்து ஒதுங்கிட்டாங்க. ஆனா, உங்க ஒயிப் தான் துணிந்து என்னை ஆட்டோல ஏற்றி இங்க கொண்டு வந்து காப்பாத்தியிருக்காங்க. அதற்கான ஒரு சின்ன நன்றி பரிகாரம். நீங்க இதை வாங்கிக்கிட்டா தான் என் மனசு திருப்தி அடையும் பிளீஸ்'

"இல்ல சார், பரவாயில்ல, இந்த பணம் உங்க கிட்டயே இருக்கட்டும், செய்த உதவிக்கு பணம் வாங்கினா எங்க மனசாட்சி உறுத்தும், நாங்க கிளம்பறோம்" என்று சொன்னா நல்லசிவம் தன் மனைவியுடன் வெளியே வந்தார்.

பைக்கில் கோமளம் ஏறியதும், 'போலாமா' என்று கேட்டவர், மெதுவாக வண்டியை கிளப்பினார். ஆஸ்பத்திரிக்குள்ளிருந்து வேகமாக ஓடிவந்த அந்த முதலாளியின் மனைவி கோமளத்தின் கையில் பணம் அடங்கிய அந்த சிறிய பையை கொடுத்துவிட்டு வேகமாக மீண்டும் ஆஸ்பத்திரிக்குள் சென்றுவிட்டாள்.

கண் இமைக்கும் நேரத்திற்குள் இது நடந்துவிட, அதை நல்லசிவத்திடம் சொல்வதற்குள் வண்டி ரோட்டில் திரும்பி வேகம் பிடித்தது. நல்லசிவத்திடம் சொன்னாள்.

"திரும்பி போய் கொடுத்துவிடுவோமா" என்றார் நல்லசிவம்

'வேண்டாம், வீட்டுக்கு போவோம், இன்னைக்கு ஒரு இலட்ச ரூபாய் எனக்கு கிடைக்கும்னு கடவுள் நினைச்சிருக்கார்' என்ற கோமளம்,

'என்னங்க, நான் மீன் வாங்க வெளியில் கிளம்பும் போது நம்ம சிவா என்ன சொன்னான் தெரியுமா?'

"என்ன சொன்னான்?"

உங்களுக்கு இன்னிக்கு சர்பிரைஸா ஒரு இலட்ச ரூபாய் கிடைக்கும்னான். அதே மாதிரி கிடைச்சிருக்கு' என்றாள்.

நல்லசிவத்துக்கு 'திக்' என்றது.

வீட்டு பால்கனியில் பைக்கை நிறுத்தி, செருப்பை கழற்றிவிட்டு நல்லசிவம் உள்ளே நுழைந்தார்.
"டேய் சிவா, நீ சொன்னமாதிரியே எனக்கு ஒரு இலட்ச ரூபாய் கிடைச்சிருக்கு" சந்தோஷத்தில் வீட்டுக்குள் ஓடினாள் கோமளம்.
'மீன ராசிக்கு பம்பர் பரிசு கிடைக்கும் னு காலண்டர்ல போட்டிருந்துச்சு. அதான் அப்படி சொன்னேன், இதோ பாருங்க' என்று சுவரில் தொங்கவிட்டிருந்த பிள்ளையார் படம் போட்ட தினசரி காலண்டரை காட்டினான் சிவா.
சந்தோஷத்தில் திக்குமுக்காடினாள் கோமளம்.
"கொஞ்சம் தலை வலிக்குதுனு படுக்கப்போனார் நல்லசிவம். காலையில பொங்கின சோறு இருக்கு. தயிர் சாதம் பிசைஞ்சி தரேன், கொஞ்சமா சாப்பிட்டுட்டு படுங்க"
நல்லசிவம் ஸ்டேஷனுக்குப் போன்செய்து விடுப்பு கேட்டு மேலதிகாரியிடம் பேசிவிட்டு சாப்பிட்டார்.
ஒரே குழப்பமாக இருந்தது அவருக்கு.
சிறிது கண்ணயர்ந்தவர், மாலையில் எழுந்து வீட்டின் முன்புறம் உள்ள செடிகளை பார்வையிட்டுக்கொண்டே டீ குடித்துக்கொண்டிருந்தார். வெளியே ரோட்டில் சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்தார்.
"டேய் செல்லகிறுக்கு! கீழே இறங்குடா, அது சிக்னல் போஸ்ட். அதையெல்லாம் ஆப் செய்யக்கூடாது" முதியவர் சொன்னதை காதில் கேட்காமல் அந்த மனநிலை பிறழ்ந்தவர், தொடர்ந்து சிக்னல் போஸ்ட்டில் ஏறிக்கொண்டிருந்தார். அந்த பெரியவரின் சத்தம் கேட்டு பக்கத்து கடையில் இருந்து நாலைந்து பேர் ஓடிவந்து அவனை கீழே இறக்கினர்.
'இவன் தொல்லை தாங்கமுடியலை, ஏதாவது ஒரு சைக்கியாட்டிரிஸ்ட் கிட்ட கொண்டு போய் காட்டுங்க பெரியவரே' என்று அவனின் கையைப் பிடித்து பெரியவரிடம் கொடுத்துவிட்டு அவர்கள் தங்கள் கடைகளுக்குத் திரும்பினார்.
நல்லசிவத்துக்கும் சைக்கியாட்டிரிஸ்ட் தாமோதரன் ஞாபகம் வந்தது.
வீட்டிற்குள் வந்து மொபைலில் போன் செய்தார்.
"என்ன சார், எப்படி இருக்கீங்க, பேசி ரொம்ப நாளாச்சு" எதிர்முனையில் சைக்கியாட்டிரிஸ்ட் தாமோதரன் பேசினார்.
'நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?' என்ற நல்லசிவம், சிவப்பு வண்டி, ஆரஞ்சு பழம், பர்ஸ், ஒரு இலட்ச ரூபாய் என்று தன் மகன் பற்றிய அனைத்துவிபரங்களையும் சொல்லி முடித்தார்.
மேலும்,
"ஒரு கட்டத்தில் சிவாவுக்கு, பின்னால் நடக்கப் போகும் விஷயங்களை முன்னாலேயே உணரும் சக்தி அவனுக்கு இருப்பது தெரியவரும். இந்த மாதிரி பணம் கிடைப்பது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும் போது எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், ஏதாவது உயிரைப் பறிக்கிற கெட்ட விஷயம் நடந்தால், அதை தெரிந்திருந்தும் தன்னால் தடுக்கமுடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி அவனை பெரும்பாடு படுத்திவிடும். அதிலிருந்து அவனால் மீள்வது கடினம். எப்படியாவது இதை சரிபண்ணவேண்டும் டாகடர்" என்றார்.
"நான், ஒரு கான்பெரன்ஸுக்காக ஹைதராபாத் வந்திருக்கிறேன், நாளைக்கு சாயந்திரம் நாகர்கோவில் வந்திடுவேன். நீங்க, நாளை மறுநாள், சண்டே காலையில பத்து மணிக்கு உங்க பையனை கூட்டிட்டு வாங்க, நான் பார்க்குறேன், கவலைப்படாதீங்க, எல்லாம் சரியாகிடும்" என்றார்.
சரி என்று போனை துண்டித்தார் நல்லசிவம்.
மறுநாள் சனிக்கிழமை 11 மணி.
அப்பா, ஸதர்ன் கம்பியூட்டர் கம்பெனிலயிருந்து இன்னிக்கு 11 மணிக்கு வர சொல்லியிருந்தாங்க. போயிட்டு வரேன்.
ஷிவா, பைக்கில் டவர் ஜங்ஷனுக்கு கிளம்பினான். WCC கல்லூரி வழியாக நேரே சென்று கம்பனியின் முன் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளுக்கு நடுவே இருந்த இடைவெளியில் தன் பைக்கையும் நிறுத்தினான்.
இரண்டாவது மாடியில் இருந்தது ஸதர்ன் கம்பியூட்டர். உள்ளே போய், மானேஜரைப் பார்த்து பேசிவிட்டு வெளியே வந்தான். மணி நண்பகல் 12:30. அவன் மொபைல் சிணுங்கியது.
நிலாவாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டே பேண்டின் பின்புற பாக்கெட்டில் இருந்து போனை எடுத்தவன், அவள் முகம் திரையில் தெரிய 'ஹலோ' என்றான்.
"நல்ல மூட்ல இருக்கீங்களா?"
'ஆமா, ஏன் அப்படி கேக்கிறே'
'ஏன் கேட்கமாட்டே, இன்னிக்கு எனக்கு மிலன் ஹோட்டல்ல பார்ட்டி வைக்கிறேன்னு சொன்னே, ஞாபகம் இருக்கா? உனக்கு எல்லாத்தையும் நான் தான் எப்பவும் ஞாபகப்படுத்தவேண்டியிருக்கு'
"அதை மறக்கமுடியுமா, உனக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன், நீ எங்க இருக்கே?"
"A.S ஷாப்பிங் மால்ல இருக்கேன்"
'அஞ்சு நிமிஷத்துல வரேன்'
நிலாவையும் சுமந்துகொண்டு சிவாவின் KTM 200 Duke பைக், மிலன் த்ரீ ஸ்டார் ஹோட்டலின் பார்க்கிங் ஏரியாவுக்குள் நுழைந்தது.
முதல் மாடியில் இருந்த Bay ரெஸ்டாரண்ட்டிற்குள் நுழைந்தனர்.
மங்கிய ஒளி. அளவான ஏ.சி. சுவரில் கதகளி, மோகினியாட்டம் ஆடும் பெண், சேர மங்கைகள் என்று ஓவியங்கள் led ஒளியில் மின்னின.
மேஜையின் எதிரெதிரில் இருவரும். பேரர் வந்தார்.
"இரண்டு மட்டன் பிரியாணி"
'கூல்டிரிங்ஸ் ஏதும் வேணுமா சார்?'
"கூல்டிரிங்ஸ் வேண்டாம், சப்போட்டா ஜூஸ் மட்டும்" என்றாள் நிலா
"எனக்கு ஒரு மாங்கோ"
பேரர் நகர்ந்தார்.
அந்த மங்கிய ஒளியிலும் நிலாவின் கண்கள் பளிச்சிட்டன. பாகை மானி கொண்டு அளந்து வரைந்த நெற்றி, அதில் 35 டிகிரியில் இரண்டு சிறிய பிறைகள். அதனுள் அடைபடமுடியாமல் தவிக்கும் அகன்ற பெரிய கண்கள்.
"உன் கண்ணு எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? ரெண்டு நாவல் பழங்களை வெள்ளை துணியில் பொதிஞ்சி வச்சி, மூடி திறக்கிற மாதிரி " சிவா வர்ணித்தான்.
'ம்...அப்புறம்....' இடது முழங்கையை மேஜையில் ஊன்றி உள்ளங்கையை நாடியில் வைத்துக்கொண்டு கேட்டாள் நிலா.
"நேர்பாதியா அரிஞ்சி வச்ச சின்ன கொல்லாம்பழம் மாதிரி மூக்கு"
'நேத்து முந்திரி தோட்டத்துக்கு போயிருந்தியா?' செல்ல சிரிப்புடன் மேசையில் இருந்த பிளவர் வாஷை வலது கையால் சிறிது நகர்த்தி வைத்தாள்.
"உன் உதடு இருக்கே........"
'போதும் ...போதும், அடுத்து நீ எங்க வருவேனு தெரியும்' வெட்கப்பட்டாள் நிலா.
"உன் விரல்கள் எவ்வளவு மென்மையா இருக்கு தெரியுமா?" அவள் கையைப் பிடித்தான்.
'இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்' என்றவள் கையை இழுத்துக்கொண்டாள்.
"ம்கூம் , என்று சலித்துக்கொண்டவன், எப்படிடி சிலை மாதிரி உன்ன எங்க மாமா பெத்தாரு?"
'மாமா இல்ல மாமி' என்று திருத்தியவள் தன் துப்படாவை சரிபடுத்திக்கொண்டாள்.
"மாமா இல்லாம மாமி மட்டும் எப்படி? எனக்குப் புரியலையே" கிண்டல் சிரிப்புடன் நிலாவைப் பார்த்தான்.
'சீ ....போடா, உனக்கு எப்பவும் இதே நினைப்பு தான்'
தன் சட்டை பாக்கெட்டிலிருந்து அந்த சிவப்பு நிற சிறிய பாக்ஸை எடுத்து திறந்தான் சிவா. உள்ளே ஒரு தங்க மோதிரம். நிலாவின் வலது கை மோதிரவிரலில் மாட்டிவிட்டான்.
"எப்படி இருக்கு?"
'ரொம்ப நல்லா இருக்கு. உன்னோட கிப்ட் எனக்கு முக்கியமில்லை, சிவா. நீ தான் எனக்கு முக்கியம், என்னை நீ இதே மாதிரி எப்பவும் பாத்துக்கணும்' என்ற நிலாவின் கண்கள் கலங்கின.
"ஏய்...என்ன, செண்டிமெண்டா, எப்பவும் உன்னை நான் இதே மாதிரி பாத்துப்பேன், ஓகே வா, சிரிச்சாதான் நீ அழகா இருப்பே, எங்க... சிரி"
நிலா கலகலவென்று சிரித்தாள்.
பிரியாணி வந்தது. சாப்பிட்டு ஜூஸ் குடித்து எழுந்தனர்.
நிலாவை வேதநகரில் அவள் வீட்டில் இறக்கிவிட்டு தன் வீட்டுக்கு வந்தான் சிவா.
மறுநாள்-
ஞாயிற்றுகிழமை என்பதால் காலையில் நல்லசிவம் கொஞ்சம் லேட்டாகவே எழுந்தார். குளித்துவிட்டு அன்றைய பேப்பரில் கண்களை கொஞ்சநேரம் ஓடவிட்டார்.
"அடுத்தவாரத்திலிருந்து ஸதர்ன் கம்பியூட்டர்ல வேலைக்கு வர சொல்லியிருக்காங்கப்பா, இப்போ நான் கொஞ்சம் வெளிய போய் ப்ரெண்ட்டை பார்த்துட்டு வறேன்" வெளியே கிளம்பிய சிவாவை நிறுத்தினார் நல்லசிவம்.
'கொஞ்ச நாளாவே அடிக்கடி டென்ஷன் ஆகுறேன்னு அம்மா சொல்றா, எனக்கும் அது புரியுது, அதனால தலைவலி வருது, கூடவே பிரஷர் வேற. சைக்கியாட்டிரிஸ்ட் தாமோதரன் கிட்ட ரெண்டு நாளைக்கு முன்னாடி பேசினேன். இன்னிக்கு பத்துமணிக்கு அப்பாயின்மென்ட் தந்திருக்கார். என்னை கொஞ்சம் அங்கே கூட்டிக்கொண்டு போறியா?'
"சரிப்பா, வாங்க போகலாம்"
'பின் பக்கக் களத்தை கிளீன் பண்ணிகொண்டிருந்த கோமளத்திடம், ரெண்டு பேரும் கொஞ்சம் வெளிய போயிட்டுவர்றோம் என்று சொல்லிவிட்டு சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே வந்தார் நல்லசிவம்.
இருவரும் பைக்கில் தாமோதரன் கிளினிக்குக்கு வந்தனர்.
வெட்டூர்ணிமடத்தில் இருந்த அந்த இரண்டு மாடி கட்டடத்தின் முதல் மாடியில் கிளினிக் இருந்தது. உள்ளே நுழைந்தனர். நாலைந்து பேர் அமர்ந்திருந்தனர். ரிஷப்ஷனில் பெயர் கொடுத்துவிட்டு இவர்களும் நாற்காலிகளில் அமர்ந்தனர்.
சுவரில் டாக்டர் தாமோதரனின் மனநல மருத்துவம் படித்ததற்கான சர்டிபிகேட் கண்ணாடி பிரேமிற்குள் தொங்கிக்கொண்டிருந்தது. இரண்டு பெரிய இல்யூஷன் படங்கள் சுவரின் இரண்டு பக்கங்களிலும் ஜன்னலுக்கு மேலே மாட்டப்பட்டிருந்தன. மூலையில் ஒரு தொட்டியில் இரண்டடி வளர்ந்த மணி பிளான்ட், நூலுடன் பின்னிப்பிணைந்து மேல்நோக்கி சென்றுகொண்டிருந்தது.
அரை மணி நேர காத்திருப்புக்கு பின் இவர்கள் உள்ளே அழைக்கப்பட்டனர்.
"வாங்க, உட்காருங்க"
மேஜையின் அந்த பக்கம் தாமோதரன் அமர்ந்திருக்க, நல்லசிவமும் சிவாவும் இந்தப்பக்கம் அமர்ந்தனர்.
பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்யப்பட்ட கபாலம், மூளை, அதன் பாகங்கள், ஒரு உலக உருண்டை என்று பாதி மேஜை நிறைந்திருந்தது.
நல்லசிவம் பேசத் தொடங்கினார்.
"போன்ல நான் சொன்னேன்ல டாக்டர், அடிக்கடி தலை வலிக்குது, டென்சன், தேவையே இல்லாம பயம் வருது, அதான் உங்களை பார்க்கலாம்னு வந்தேன்"
'ஒண்ணும் பயப்படத்தேவையில்ல, ஹிப்னோடைஸ் பண்ணி பாத்துருவோம், அந்த சேரில் உட்காருங்க' என்று ஒரு பெரிய மசாஜர் மாதிரியான சேரை காட்டினார் தாமோதரன்.
நல்லசிவம் உடல் பயத்தில் லேசாக அதிர்ந்ததை சிவா பார்த்தான்.
"வேண்டாம், டாக்டர், ஏதாவது ஊசி போட்டு மாத்திரை தாங்க போதும், ஹிப்னாஸிஸ்லாம் வேண்டாம்" நல்லசிவம் பயந்தார்.
"அப்பா, இதுல பயப்பட ஒண்ணுமே இல்ல. படங்கள்ல பார்த்திருப்பீங்களே, ஒண்ணும் ஆகாது"
"வேண்டாம்டா, எனக்கு பயமா இருக்கு, நாம போகலாம் என்று எழுந்தார் நல்லசிவம்.
"அப்பா! என்ன சின்ன புள்ள மாதிரி பயந்துகிட்டு. டாக்டர், நீங்க, என்னை முதல்ல ஹிப்னோடைஸ் பண்ணுங்க, அதைப் பார்த்துட்டு அப்பாவுக்கு பயம் கொஞ்சம் நீங்கும்" என்ற சிவா அந்த நாற்காலியில் போய் அமர்ந்தான்.
டாக்டர் தாமோதரன் நல்லசிவம் அருகில் வந்து காதருகே, 'உங்க போலீஸ் டிரிக் நல்லாவே வேலை செய்யுது' என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு சிவா அருகே வந்தார்.
ஒரு ஆப்ஜெக்டை சிவாவின் முகத்தருகே தொங்கவிட்டு அதையே பார்க்கச்சொன்னார். கொஞ்சம் கொஞ்சமாய் அதை வலமும் இடமுமாய் ஆட்ட ஆரம்பித்தார்.
.........3.....2.....1
சிவா அரை மயக்கத்தில் ஆழ்ந்தான்.

மீதியை தெரிந்துகொள்ள எனக்கு PM செய்யவும்

No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram