Sunday, March 7, 2021

முகம் மாற்றிய மொபைல் - பகுதி 1

முகம் மாறிய கொலைகாரன் - பகுதி 1 
_____________________________________


 "ஆ ......." 

 மதுமிதாவின் பயம் கலந்த பெருங்குரல் அந்த பங்களா முழுவதும் எதிரொலித்தது. கிச்சனில் மதிய சாப்பாட்டுக்கு சாம்பார் செய்ய முருங்கைக்காய் வெட்டிக்கொண்டிருந்த சமையல்காரி தனம் அப்படியே போட்டுவிட்டு சத்தம் வந்த முதலாளியின் ரூமுக்கு ஓடி வந்தாள். அதற்குள் தோட்டக்காரன் முனுசாமி அறையை நெருங்கிவிட்டிருந்தான். மதுமிதா, அந்த அறையின் உட்பக்கத்தில் வாசலருகே மல்லாந்த நிலையில் மயங்கிக் கிடந்தாள். இருபது வயதின் இளமை அவளின் முகத்திலும் தெரிந்தது. 

 "அம்மா .... மதுமிதாம்மா .........ஓடிப் போய் தண்ணி கொண்டா' 

 தனம் வேகமாய் சென்று தண்ணி கொண்டுவந்தாள். முகத்தில் தெளித்தார்கள். 

 தண்ணீர் பட்டதும் மெதுவாக கண்ணைத் திறந்த மதுமிதா, "அப்பா...அப்பா...."

 அவள் கை காட்டிய இடத்தில் கட்டிலில் ராஜமாணிக்கம் ஒருக்களித்த நிலையில் கிடக்க, அவரின் வயிற்றில் ஒரு அடி பெரிய கத்தி! முழுவதும் உள்சென்ற நிலையில் கைப்பிடி மட்டும் வெளியே தெரிந்தது. சிங்க உருவம் பொறிக்கப்பட்ட அந்த கைப்பிடி முழுவதும் ராஜமாணிக்கதின் இரத்தம் பீறிட்டு அடித்து குளிப்பாட்டிக்கொண்டிருந்தது. 

மதுமிதா தன் மொபைலை தேடினாள்.அருகே இருந்த கம்ப்யூட்டர் மேஜையின் கால் அருகே விசிறியடித்ததைப் போல அநாமத்தியாக கிடந்தது அது. மெதுவாக எழுந்து போய் அதை எடுத்தாள். முனுசாமியும் தனமும் தாங்கள் என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் மதுமிதாவின் கட்டளைக்காக காத்திருந்தனர். 

ராஜமாணிக்கம் ஏதோ முனங்கிகொண்டே இருந்தார். அவரின் இரத்தம் மெத்தையை குளிர்வித்துக்கொண்டிருந்தது.சுவரில் அழகுக்காக மாட்டப்பட்டிருந்த கேடயம், கத்தியை இழந்து அரை நிர்வாணமாய் காட்சியளித்தது. மொபைல் பட்டனைத் தொட்டு 'பேஸ் ரெகக்னிஷன் ஆப்' மூலம் ஆன் செய்தாள். 

 அந்த சில வினாடிகளில் அவளின் மனம் எதையோ உணர்ந்தது. சப்-கான்சியஸ் மனதில் எதுவோ புதிதாக நுழைந்தது போன்ற உணர்வு.

 "அம்மா, உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவோம்மா" தனம் அழுதுகொண்டே பேசினாள். 

 இயல்பு நிலைக்குத் திரும்பிய மதுமிதா, பக்கத்து டவுண் நாகர்புதூர் மருத்துவமனைக்கு தகவல் தந்துவிட்டு மூவரும் சேர்ந்து ராஜமாணிக்கத்தை காரில் தூக்கி வைத்தனர். மதுமிதா பின்னிருக்கையில் உட்கார, ராஜமாணிக்கத்தின் தலை அவளின் மடியில் இருந்தது. அதற்குள் டிரைவர் வந்துவிட, பூஞ்சோலை கிராமத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாகர்புதூருக்கு வேகமாக கார் விரைந்தது. ராஜமாணிக்கம் எதையோ மீண்டும் மீண்டும் முனகிக்கொண்டிருந்தார். 

"சீக்கிரம் போங்க டிரைவர்" என்ற மதுமிதா, மொபைலை 'பேஸ் ஆப்' மூலம் மீண்டும் ஆன் செய்ய அந்த சில நொடிகள் அவள் மனதிற்குள் என்னவோ செய்தது. காண்டாக்ட் லிஸ்ட்லில் நம்பர் தேடி, இன்ஸ்பெக்டர்க்கு போன் செய்தாள். 

 "அங்கிள்... அப்பாவை...... யாரோ குத்திட்டாங்க ...." 

 'வாட்?' 

 "கற்பகம் ஹாஸ்பிட்டல் இருக்கிறேன், நீங்க சீக்கிரம் வாங்க அங்கிள், எனக்கு பயமாயிருக்கு" 

 'அழாதேம்மா, உடனே வர்றேன்' 

என்றவர், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தியிடம் பூஞ்சோலையில் உள்ள ராஜமாணிக்கம் வீட்டுக்கு போகுமாறு சொல்லிவிட்டு வெளியே வந்து ஜீப்பில் ஏறி நாலாவது ரோட்டில் உள்ள அந்த மருத்துவமனைக்கு விரைந்தார்.SPக்கு போன் பறந்தது. 

 மருத்துவமனை வராண்டாவில் மதுமிதா ஒரு நர்ஸின் தோளில் சாய்ந்துகொண்டு அழுதவாறு இருந்தாள். நர்ஸ் அவளைத் தேற்றிக்கொண்டிருந்தார். மருத்துவமனை வளாகத்திற்குள் இன்ஸ்பெக்டர் பரசுராமனின் ஜீப் நுழைந்தது. ஆறடி உயரம், நன்றாக ஷேவ் செய்த முகத்தில், மூக்குக்கு கீழே வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட செங்கல்கள் போல டை அடிக்கப்படட திக்கான மீசை முடிகள், அழகாக ட்ரிம் செய்யப்பட்டிருந்தன. எக்சர்சைஸ் உடம்பு, கஞ்சி போட்டு அயன் செய்த சீருடை, நடையில் மிடுக்கு, கடமையில் எப்போதுமே நேர்மை! 

பூஞ்சோலை கிராமமும் இன்ஸ்பெக்டர் பரசுராமனின் கண்ட்ரோலில் தான் வருகிறது. எலெக்க்ஷன், அரசியல்வாதிகளின் வரவு தவிர்த்து இன்ஸ்பெக்டருக்கு மற்ற நேரங்களில் அங்கே வேறெந்த வேலையும் வராது. அந்த சமயத்தில் ராஜமாணிக்கத்துடன் ஏற்பட்ட பழக்கம் இன்று வரை தொடர்கிறது. எல்லாவற்றையும் ராஜமாணிக்கம் பார்த்துக்கொள்வார். 

பூஞ்சோலைக்கு எல்லாமே ராஜமாணிக்கம் தான் எல்லாமும் ராஜமாணிக்கத்திற்குத்தான். மொத்தமே மூன்று தெருக்கள் தான். எண்ணி ஐம்பது வீடுகள். அனைவருமே ராஜமாணிக்கத்திற்காக அவர் எஸ்டேட்டில் உழைக்கிறார்கள். பூஞ்சோலையிலிருந்து சில கிலோமீட்டர்களில் 300 ஏக்கரில் தோட்டம். வேலை செய்பவர்களின் குழந்தைகள் படிக்க பக்கத்து டவுனுக்கு செல்ல வேன் வசதி செய்து கொடுத்திருக்கிறார். அனைவருக்கும் மெடிக்கல் இன்சூரன்ஸ் வசதி செய்து கொடுத்திருக்கிறார். பூஞ்சோலையைப் பொறுத்தவரை அந்த மக்களுக்கு இவர் தான் தெய்வம். பூஞ்சோலையில் இரண்டு ஏக்கரில் மிகப்பெரிய பங்களா. 

சென்னையில் கல்லூரி படிப்பு முடித்து கடந்த மாதம் தான் மதுமிதா ஊருக்கு வந்தாள். அவ்வளவு பெரிய பங்களாவில் இவர்கள் இருவரும் தான். மனைவி செண்பகவல்லி புகைப்படத்தில் மாலையுடன் சிரித்துக்கொண்டிருந்தாள். தோட்டக்காரன், டிரைவர், சமையல்காரி எல்லோருக்குமே எதிர்த்தெருவில் தான் வீடு. கம்பியூட்டர் தவிர்த்த மற்ற நேரங்களில் பக்கத்துவீட்டு குழந்தைகள் தான் மதுமிதாவுக்கு பொழுதுபோக்கு. அதனாலேயே அவளுக்கு சீக்கிரம் திருமணம் முடித்துவிடவேண்டும் என்று ராஜமாணிக்கம் மாப்பிளை பார்க்க ஆரம்பித்தார். 

இன்ஸ்பெக்டர் பரசுராமன் டாக்டர் அறைக்குள் நுழைந்தார். டாக்டரின் பதிலை எப்படி மதுமிதாவிடம் சொல்வது என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே அவரின் மொபைல் சிணுங்கியது. 

 "சார், பாரென்சிக் டிபார்ட்மென்ட்டிலிருந்து நான்கு பேர் வந்திருக்காங்க" என்றார் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி 

கான்ஸ்டபிள் முருகனை மதுமிதாவை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் பூஞ்சோலைக்கு விரைந்தார். அங்கே பாரென்சிக் ஆபீசர் விஜய் தன் டீமுடன் பங்களா முழுவதையும் இஞ்ச் பை இஞ்சாக அலசிக்கொண்டிருந்தார். பங்களாவுக்குள் நுழைந்த இன்ஸ்பெக்டர் பரசுராமன், காரிலிருந்து இறங்கி தோட்டக்காரனை அருகில் கூப்பிட்டார். 

"என்ன நடந்தது?"

 'நா இந்தா நிக்குதுங்களே குரோட்டன்ஸ், இதுகளுக்கு தண்ணி பாய்ச்சிக்கிட்டிருந்தீங்க. திடீருனு மதுமிதாம்மா பயங்கரமா அலறுனாங்க. நா உடனே ஓடி போனே'
"வேற யாரும் வீட்டுக்கு வந்திருந்தாங்களா?"

 'இல்லேங்க, சத்தம் கேட்டு நான் உள்ளே போகவும் தனமும் வந்துட்டா.ரூமுக்குள்ளே வாசல் பக்கத்துல மதுமிதாம்மா மயங்கி கிடந்தாங்க. தண்ணி தெளிச்சு எழுப்பினோம். அப்போ தான் கட்டில ஐயா குத்து பட்டு கிடக்கிறத பார்த்தோம்'. 

 கைரேகை மற்றும் சந்தேகப்படும் வகையில் இருந்த பொருட்களை விஜய் & டீம் எடுத்துக்கொண்டு இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிட்டு கிளம்பியது. தனத்தை கூப்பிட்டார். பயந்துகொண்டே தனம் வந்தாள். 

 "உன் வீடு எங்கே இருக்கு?" 

 'தோ ... எதுத்த தெரு தாங்க' "தினமும் எத்தனை மணிக்கு இங்கே வருவே?" 

'காலையில 6 மணிக்கெல்லாம் வந்துடுவேன். உடனே காபி போட்டுடு ஐயா ரூமுக்கு கொண்டு போய் குடுப்பேன். அப்புறம் சமையல் செய்ய போயிடுவேன்' 

"தினசரி ராஜமாணிக்கம் என்னவெல்லாம் செய்வாரு, அவரை பார்க்க யாரெல்லாம் வருவாங்க?" 

 "ஐயா டிபன் சாப்பிட்டுடு ரெடியாவும் போதே தோட்டக்காரரும் டிரைவரும் 9 மணிக்கெல்லாம் வந்துடுவாங்க. டிரைவர் காரை தொடச்சி ரெடியா வச்சிருப்பாரு. உடனே தோட்டத்துக்கு போவாங்க. மத்தியானம் வந்து சாப்பிட்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பாங்க. சாயந்திரம் அஞ்சு மணிக்கெல்லாம் ஒரு மணி நேரம் வாக்கிங் போவாங்க. எப்பவாவது உர கம்பனிக்காரங்க வருவாங்க, டவுன்ல இருந்து நெல் கொள்முதல் மொத்த வியாபாரிங்க வருவாங்க. அவ்வளவு தாங்க'. 

போஸ்ட்மார்டம் முடிந்து உடல் மதுமிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸில், அப்பா அருகில் அமர்ந்து மதுமிதா அழுது கொண்டே இருந்தாள். பங்களா உள்ளே ஆம்புலன்ஸ் நுழைந்ததும், இன்ஸ்பெக்டர் அருகில் சென்று கதவைத் திறந்தார். தனம் மதுமிதாவைத் தாங்கிப் பிடித்துகொண்டாள். பங்களாவின் பின்புற வளாகத்தில் ராஜமாணிக்கம் அடக்கமானார். இன்றைய சூழ்நிலையில் மதுமிதாவிடம் எதுவும் கேட்கவேண்டாம் என்று நினைத்தவர், ஒரு கான்ஸ்டபிளை மட்டும் அங்கே காவலுக்கு நிறுத்திவிட்டு வீட்டுக்கு கிளம்பினார். 

 மறுநாள் அதிகாலை 6 மணிக்கே இன்ஸ்பெக்டர் அங்கே வந்து விட்டார். கான்ஸ்டபிளை விறைப்பாக சல்யூட் அடித்தார். வீட்டுக்குள் சோபாவில் மதுமிதா உட்க்கார்ந்திருப்பது தெரிந்தது. காலிங்பெல்லை அழுத்தினார். திரும்பிய மதுமிதா கொஞ்சம் தெளிவு பெற்று இருப்பதாக அவருக்குப் பட்டது.

 "எப்படிம்மா இருக்கே?" 

 மீண்டும் ஆழ ஆரம்பித்தாள். 

 "நேற்று என்ன நடந்தது? நீ பார்த்ததை சொல்லு" 

 'அப்பா கத்துற சத்தம் கேட்டு நான் அவர் ரூமுக்கு வந்தேன். அப்போ ஒருவன் அவசரமாக வெளியே ஓடினான். "நீ அவனைப் பார்த்தியா?"

 'ஆமா அங்கிள். எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு' 

 லேப்டாப் கொண்டுவரப்பட்டு மதுமிதா சொன்னது மாதிரி கண், காது, மூக்கு என்று வரையப்பட்டது.
 
'இவன் தான் , இவனே தான் அங்கிள், இவன் தான் அப்பாவை கொன்றவன், சீக்கிரம் அரெஸ்ட் பண்ணுங்க அங்கிள்' 


லேப்டாப் திரையைப் பார்த்து கத்தினாள் மதுமிதா. 

 அனைத்து ஸ்டேசன்களுக்கும் அவனின் புகைப்படம் அனுப்பப்பட்டது. அன்று மாலை நாகர்புதூரில் ட்ராபிக் சரி செய்துகொண்டிருந்த ஹான்ஸ்டபிள் முருகன், அவசரமாக இன்ஸ் பெக்டருக்கு போன் செய்தான். ஸ்டேஷனில் பைல்களை பார்த்துக்கொண்டிருந்த பரசுராமன் மொபைலை எடுத்துப்பேசினார். 

 "சார், அந்த போட்டோல இருக்கிறமாதிரியே ஒருத்தன் பைக்ல வந்தான். ஏன் ஹெல்மெட் போடலனு நிறுத்தி வைச்சிருக்கேன், சீக்கிரம் வாங்க" போன் பேசிவிட்டு அவன் அருகில் வந்தார் கான்ஸ்டபிள் முருகன். 

அவனுக்கு 25 வயது இருக்கும். எண்ணெய் தேய்க்காத தலை. கட்டிடம் போட்ட சட்டை. அயன் பண்ணாத பாண்ட். காலில் சற்று கிழிந்த லூனார் செருப்பு.

 "பேரென்ன?"

 'மித்ரன் சார்' 
 (தொடரும்)

No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram