நான் எழுதியுள்ள "மேனாமினுக்கி" திரைக்கதை சுருக்கம் இங்கே:
மேனாமினுக்கி
*********************
மாலை மங்கத்தொடங்கியது. வானத்து நிலா மேக்கப் போட்ட புதுப்பொண்ணு மாதிரி பொர்ணமியாய் முகிலினூடே நீந்திக்கொண்டிருந்தாள். ஒரு கூடை மேகங்கள், செக்யூரிட்டி காவலர்களாய் நடை பயிலும் குழந்தை மாதிரி கூடவே ஊர்ந்து வந்தன. அந்த கடன் ஒளியில் புதுக்குடி கிராமமே மஞ்சள் பட்டாடை போர்த்தியதாய் ஒளிர்ந்தது. ஐம்பது குடும்பங்களே உள்ள அந்த கிராமத்துக்கு ஊர்த்தலைவர் நல்லசிவம் தான் எல்லாமும். அவர் பேச்சுக்கு மறு பேச்சு யாரும் பேசமாட்டார்கள்.அருகில் இருக்கும் நகரத்துக்கு போக ஒரு மணி நேரம் வனத்துக்குள் நடக்கவேண்டும். அனைவருக்குமே தொழில் பனை ஏறுதலும் விவசாயமும் தான். நல்ல சிவம் வீடும் ஓட்டு வீடு தான். என்ன! மற்றவர்கள் வீட்டை விட பின் பக்க மாட்டு தொழுவம் கொஞ்சம் பெரிய களத்துடன் விஸ்தாரமாக இருக்கும். அவ்வளவு தான்.
வடக்கு பார்த்த வாசல்.கிழக்கு மேற்காய் நீளவாக்கில் ஒரே ரூம். அதை இரண்டாகப் பிரித்திருந்தார் நல்லசிவம். பின் கதவைத் திறந்தவுடன் இரண்டு படி இறங்கினால் வலது புறத்தில் ஓலை வேய்ந்த அடுப்பங்கரை. இடது புறம் ஆரம்பித்து "ட" வடிவில் சாய்வாக ஓடு வேயப்பட்ட மாட்டுப்பறை. அதன் நடுவே கிழக்கு பார்த்த புறக்கடைவாசல். நல்லசிவம் மாடுகளை இந்த வாசல் வழியாகத் தான் தோட்டத்திலிருந்து வரும் போது உள்ளே கொண்டுவருவார். அடுப்பங்கரைக்கு எதிர்த்தாப்பில் ஒரு கட்டில். அதில் தான் நல்லசிவம் இரவு படுத்துக்கொள்வார். மாட்டுக்கும் காவல். அடுப்பங்கரையை ஒட்டி தெற்குப்பக்கம் உரக்குழி. பின் பக்க மண் சுவர் இடுப்பு வரை மட்டுமே. அதன் மேல் பனை ஓலைகளை வைத்து சுவராக உயர்த்தியிருந்தார்.
இன்றும் அப்படித்தான். மாடுகளை பத்திக்கொண்டு தோட்டத்திலிருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். "செய்திகள் வாசிப்பது ....என்று ஏதோ ஒரு வீட்டின் ரேடியோ சத்தம் போட்டது. அதற்குப் போட்டியாக நல்லசிவத்தின் மாடு "ம்மா........" என்றது. செங்கமலம் மாட்டுத்தொழுவ கதவை வேகமாகத்திறந்தாள். மாடுகள் ஒவ்வொன்றாக உள்ளே நுழைந்து தண்ணீர் பானை அருகில் அடைக்கலம் புகுந்தன. மாட்டு தண்ணீர் இருக்கும் பானை தரையில் இரண்டடி உயரத்தில் சிமெண்ட் போட்டு சுவருடன் பதிக்கப்பட்டிருந்தது. ஒரு காளை மாடு வேகமாக அதனுள் வாயை நுழைத்தது.
"ங்கள..... உனக்கு கொஞ்சமும் பொறுமை இல்ல"
என்று அதை விரட்டிவிட்டு, தவிட்டை மாட்டுதண்ணீர் பானைக்குள் விட்டு அருகில் இருந்த கருக்கு நீக்கிய ஒரு அடி உயர பனை மட்டையால் தண்ணீரை கலக்கினாள். அதற்குள் நல்ல சிவம் உள்ளே வந்து கதவைப் பூட்டி தாழிட்டார்.
"நீ போ ...இனி நான் பார்த்துக்கறேன்" என்றவர், செங்கமலத்திடம் மட்டையை வாங்கி கொஞ்சம் புண்ணாக்கையும் போட்டு நன்றாக கலக்கினார். அருகில் இருந்த பெரிய சிமெண்ட் தொட்டியில் இருந்த தண்ணீரை(உபயம்: சின்ன மகள் சுகந்தி) மொண்டு பிண்ணாக்கு கரைவதற்காக இன்னும் கொஞ்சம் பானையில் ஊற்றி ஒவ்வொரு மாட்டுக்கும் தண்ணீர் காட்டினார்.பாலைவன சோலை கண்ட ஒட்டக வயிறான மாடுகள், தங்கள் இடங்களில் ஐக்கியமாயின. கொஞ்சம் வைக்கோலையும் காய்ந்த சோளத் தட்டையையும் எடுத்து போட்டுவிட்டு சாப்பிட உட்கார்ந்தார்.
"பவளம்! சாப்பிட்டியாம்மா? "
'ஆமாப்பா' தையல் சத்தத்துடன் பவளத்தின் சத்தமும் சேர்ந்து வந்தது.
இரண்டு பெண்களுமே அவருக்கு இரண்டு கண்கள் மாதிரி. அதிலும் மூத்தவள் பவளம் கொஞ்சம் ஸ்பெஷல்.
சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரேடியோ கேட்டார். மனம் பவளத்தை நினைத்தது.
பவளம் பிறக்கும்போது எல்லா குழந்தைகளைப் போலத்தான் இருந்தாள். இரண்டாவது வயதில் அவள் நடையில் மாற்றம் தெரிந்தது. நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்புறம் தான் தெரிந்தது பவளத்தை தாக்கியிருப்பது இளம்பிள்ளை வாதம் என்று. அதன் பின் சற்று குனிந்து வலது கையை கால் முட்டியில் வைத்து கொஞ்சம் அழுத்திதான் நடப்பாள். உள்ளூரில் 5 ம் வகுப்பு படிப்பு முடிந்ததும் பக்கத்து ஊருக்கு நடந்து போவது கஷ்டம் என்று படிப்பு அத்தோடு நின்று போனது. சென்னையிலிருந்து வந்த தூரத்து உறவு மாமாதான் அவளுக்குனு ஏதாவது வருமானம் வரும் படி செய்ய வேண்டும் என்று தையல் மெஷினை வாங்கித்தந்தார். முதலில் ஒரு காலால் மிதிக்க மிகவும் கஷ்டப்பட்டாள். அப்புறம் பழகிவிட்டது. அந்த ஊரில் திருவிழா, காது குத்து, கல்யாணம் என்று எந்த ஒரு நல்ல காரியத்துக்கும் துணி தைக்க எல்லோரும் பவளத்துகிட்டத்தான் வருவாங்க. அந்த ஊருலேயே அவ மட்டும் தான் டெயிலர்.
மகளைப் பற்றி நினைத்தவர் அப்படியே தூங்கிப் போனார்.
மறுநாள் சாயந்திரம் வழக்கம் போல பவளம் துணி தைத்துக்கொண்டிருந்தாள். ரேடியோவில் 'விதி' திரைப்படம் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. மோகன் பூர்ணிமாவிடம், "உன்னை பார்த்ததிலிருந்து பைத்தியமா ஏங்குறேன், அலையுறேன், இன்னும் என்னென்னலாமோ செய்யுறேன்" என்று காதல் வசனம் பேசிக்கொண்டிருந்தார். இருபத்திஐந்து வயது பவளத்தின் கைகள் தையல் மெஷினின் சிறிய சக்கரத்தை முன்னோக்கி சுற்ற, அவள் மனம் பின்னோக்கி 5ம் வகுப்பு படிக்கச் சென்றது.
***************
சுந்தரம் அவளை விட இரண்டு வயது அதிகம்னாலும் மூன்றாம் வகுப்பிலும் ஐந்தாம் வகுப்பிலும் பெயிலாகி ஐந்தாம் வகுப்பில் பவளத்துடன் தான் படித்தான்.
"ஏண்டி பவளம்!, அந்த சுந்தரம் பையன் உன்னை லவ் பன்றானாம்" தோழி நந்திதா தான் சொன்னாள்.
'ஏல சுந்தரம், என்ன பார்த்து என்னல சொன்ன?'
"ஐ லவ் யூ"
'வால ....எங்க அம்மாகிட்ட சொல்லிக்கொடுக்கேன்' சுந்தரத்தின் சட்டை காலரைப் பிடித்தாள் பவளம்.
"தூரப் போடி!" அவளை கீழே தள்ளிவிட்டு ஓடினான் சுந்தரம். சுந்தரத்தின் மீது கோபமாக வந்தது பவளத்துக்கு.
நாட்கள் உருண்டது.
பெரிய மனுஷியாகி பொங்கலன்று பட்டுப் பாவாடை உடுத்தி, வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கரும்பு தின்றுகொண்டிருந்தாள் பவளம்.
"ஏ ...பவளம், பாவாடை தாவணியில நீ எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா?" கல்லூரி படிக்கும் சுந்தரம் சந்தோஷமாய் சிரித்துக்கொண்டே அருகில் வந்தான்.
அவன் அப்படி சொன்னது, பவளத்துக்கு ஆயிரம் கூடை பூக்களை சேவகிகள் வரிசையாக நின்று சொரிவது மாதிரி இருந்தது. இன்னும் கொஞ்சம் எதாவது சொல்லேன் என மனம் ஏங்கியது. நாணம் தடுத்து உதடுகள் சுளுக்கு கொண்டு கோணின.
"நீ தான் கல்யாணம் வேணாம்னு இருக்கிறியே. இல்லனா நானே உன்னை கல்யாணம் கட்டிப்பேன் தெரியுமா" ஸ்டைலாக தன் தலை முடியை கோதிய படியே திண்ணையில் அவள் அருகே அமர்ந்தான்.
'கட்டிக்கோ' என்று அவள் மனம் சொன்னது.
மாப்பிள்ளை பலர் வந்து அவளைப் பெண்பார்த்து, கால்கள் பற்றித் தெரிந்தபின் 'வேண்டாம்' என்று சொல்ல, அந்த அவமானங்களை தாங்கமுடியாமல் 'எனக்கு கல்யாணம் வேண்டாம், அதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை' என்று அப்பாவிடம் சொல்லிவிட்டாள். இப்போது சுந்தரம் 'கல்யாணம் கட்டிக்கிறேன்' என்று சொன்னதை கேட்டு அவளில் தூங்கிக்கொண்டிருந்த பெண்மை, வேகமாக அடிக்கும் பட்டாம்பூச்சியின் சிறகுகள் போல ஆசையில் துடித்தது. ஆனாலும் வெட்கம் வார்த்தையை வாயிலிருந்து வெளியே வரவிடாமல் தடுத்தது.
"சரி .....நான் வரேன், ஃபிரெண்ட பார்க்கப் போகணும்" என்ற சுந்தரம் திண்ணையிலிருந்து எழுந்து தெருவில் நடக்க ஆரம்பித்தான்.
இப்போதும் அதே 'ஐ லவ் யூ சொல்லி என்னை கட்டிக்கோ, அம்மாகிட்ட சொல்லமாட்டேன்' பவளத்தின் மனம் ஏங்கியது. அவன் போன திசையையே பார்த்துக்கொண்டு இருந்தாள் பவளம்.
அடுத்த சில வருடங்களில் சுந்தரத்துக்கு கல்யாணம் நிச்சயமாயிருப்பதாக அம்மா செங்கமலம் சொன்னாள். அது யாராயிருக்கும், அவள் எப்படி இருப்பாள், ஒரு வேளை என்னை விட அழகா இருப்பாளோ ....பல கேள்விகள் பவளத்தின் மனதில் கொஞ்சம் பொறாமையாய் எழுந்தன.
"என் வருங்கால மனைவிக்கு நீ தான் ஜாக்கெட் தச்சி தரணும், இந்தா துணி" அருகில் கிடந்த ஸ்டூலில் அமர்ந்தான் சுந்தரம்.
'பொண்ணுக்கு எந்த ஊரு?'
"பக்கத்துல தான், சிவந்திப்பட்டி"
'என்ன படிச்சிருக்கா?
" 10ம் வகுப்பு, ஆனா, நல்லா இங்கிலீஷ் பேசுறா தெரியுமா. 'ஐ கோ ஃபீல்டு டெய்லி' ங்றா, 'யு ஈட் பொட்டடோ?' னு கேக்குறா. எனக்கு ஆச்சரியமா இருந்துச்சி தெரியுமா" சுந்தரத்தின் பேச்சில் மனைவி பற்றிய பெருமை தெரிந்தது.
தடபுடலாக சுந்தரத்தின் திருமணம் நடந்தது. யார் கண் பட்டதோ அடுத்த மாதத்திலேயே அவள் மீது மாட்டை ஏவி சுந்தரத்தை தனிக்கட்டை ஆக்கியது காலம். அந்த கவலையில் குடிக்க ஆரம்பித்தான் சுந்தரம்.
*******************
"பவளம்............!" அப்பாவின் குரல் கேட்டு இயல்பு நிலைக்கு வந்தாள் பவளம். கைகள் தையல் மெஷினின் சக்கரத்தை நிறுத்தியது. ரேடியோவில் விதி திரைப்படம் முடிந்து "காதலின் தீபம் ஒன்று, ஏற்றினாளே என் நெஞ்சில்....." என்று S.P.B பாடிக்கொண்டிருந்தார்.
அருகில் கிடந்த ஸ்டூலில் அமர்ந்தவர், "எப்படிம்மா இருக்கே?" என்றவர் கையால் அவளின் தலையை மெதுவாக தடவினார்.
"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்மா" அவர் குரல் கம்மியது.
'சொல்லுங்கப்பா'
"நான் உனக்கு ஏதாவது குறை வச்சிருக்கேனாமா"
'அப்படியெல்லாம் ஒண்ணுமில்லப்பா, நான் நல்லாத்தான் இருக்கேன். ஏன்பா அப்படி கேட்கறீங்க?'
தலையை குனிந்தவர் சற்று நேரம் அமைதியாக இருந்தார். பின் மெதுவாக ஆரம்பித்தார்.
"தங்கச்சிய நாளைக்கு பெண் பார்க்க வர்றாங்கம்மா. நானும் உனக்காக எத்தனையோ மாப்பிள்ளை பாத்துட்டேன். எல்லோரும் பணத்துல தான் குறியா இருக்கிறாங்க. ஏன் கடவுளே என்னை ஏழையா படைச்சானு அந்த கடவுள் மேல கோபம் தான் வருது. அதுக்கு மேல என்னால ஒண்ணும் செய்ய முடியலம்மா" நல்லசிவத்தின் கண்களில் கண்ணீர் கரை புரண்டது.
'நான் இப்படி நொண்டியா பிறந்ததுக்கு கடவுள் என்ன செய்வார். பாவம்! அவரை திட்டாதீங்கப்பா. எனக்கு கல்யாண ஆசையே இல்லனு நான் தான் முன்னமே உங்ககிட்ட சொல்லிட்டேனேப்பா. தங்கச்சிக்கு இந்த வரனை எப்படியும் முடிச்சிடுங்க. அவ பிள்ளையை நான் எடுத்து கொஞ்சணும்னுதான் என் மனசு கிடந்து துடிக்குது. அதுக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா' தன் ஆசைக்கு சமாதி கட்டிய பவளம் பரிவோடு பேசினாள்.
அடுத்த சில மாதங்களிலேயே சுகந்திக்கு பக்கத்து ஊரு மாப்பிளையுடன் திருமணம் நடந்தது.
பவளத்துக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என்ற ஏக்கத்துலேயே நல்லசிவமும் செங்கமலமும் கடவுளிடம் சண்டை போட சொர்கத்துக்கு சென்றுவிட்டார்கள்.
பவளம் மட்டும் இப்போது அந்த வீட்டில். மாடுகள் பணமாக மாறி பவளத்தின் பேங்க் அக்கவுண்டில் உட்கார்ந்துகொண்டது.
தொடக்கத்தில் ஒரு சில காலிப்பயல்களின் தொல்லைகள் பவளம் வீட்டுப்பக்கம் வாலாட்டினாலும் போகப்போக அவளின் பொறுமையால் அனைவரும் ஒதுங்கினார்.
பவளத்துக்கு இப்போ முப்பத்தஞ்சு வயசு. தலையில் ஒருசில முடிகள் நரைத்துவிட்டன. துணிகள் தைத்து முடித்து இரவு தூங்கப்போகும் போது மணி பத்து. கொஞ்ச நேரத்திலேயே வீட்டின் பின்பக்கம் சத்தம் கேட்க, கதவை லேசாகத் திறந்து எட்டிப்பார்த்தாள். மாட்டுத்தொழுவ புறக்கடை கதவு திறந்திருந்தது. பயத்தில் மிரண்ட அவளின் கருவிழிகள், பளிங்குத் தரையில் உருட்டி விட்ட கோலிகுண்டுகளைப் போல தொழுவம் முழுதும் ஓடி கட்டிலில் வந்து நின்றது. சுந்தரம் தான் குப்புற படுத்திருந்தான். மலையாள வித்வான் சுருதி தப்பி பாடிய தமிழ் பாடல் போல, அவன் பேச்சு இருந்தது. குடித்திருப்பதை புரிந்துகொண்டாள். கதவை முழுவதுமாகத் திறந்து கிந்தியபடியே படிகளில் இறங்கிவந்தாள். சுந்தரத்தின் லுங்கி அவிழ்ந்து கட்டிலின் கற்பை மறைத்துக்கொண்டிருந்தது.
"சுந்தரம்........." நிலவொளியினூடே மெதுவாகக் கூப்பிட்டாள்.
திரும்பி மல்லாந்து படுத்தவன் மீண்டும் அபஸ்வர சங்கீதம் படித்தான்.
முதன்முறையாக ஒரு ஆண் மகனை நிர்வாணமாக அப்போது தான் பார்க்கிறாள். இதுநாள் வரையிலும் சுந்தரத்தின் முகத்தை மட்டுமே பார்த்து பழகியவளுக்கு அவனின் அங்கங்கள் ஒவ்வொன்றும் ஆச்சரியத்தை கொடுத்தது. நெஞ்சு நிறைய முடி!. முறுக்கேறிய கைகள்!!.
சற்று மேடான தொந்தியுடன் கூடிய வயிற்றைப் பார்த்து 'இவ்வளவு பெரிய வயிறா?' என்று பிரமித்தாள். மெதுவாக அவளின் பார்வை கீழ் நோக்கி நகர்ந்தது. அங்கே அவனின் ஆண்மை துடித்துக்கொண்டிருந்தது. ஆச்சரியத்தின் உச்சமா அல்லது ஏக்கமாய் மாறிய ஆசைக்கு கிடைத்த தீனியா என்று சொல்லத்தெரியாத உணர்வு அவளுக்கு. கங்குவின் இளந்தீயில் வாட்டப்படும் சோளக்கதிர், மெதுவாக சூடாகி பொறிவது போன்று அவளின் இரத்தம் சூடாகி உடல் முழுக்க இனம்புரியாத சூட்டை உண்டுபண்ணியது. அடுத்த சில கணங்களிலேயே, காய்ச்சல்காரியின் டெம்பரேச்சர் போல அவளின் உடம்பு கொதிக்க ஆரம்பித்தது. பௌர்ணமி நிலவின் குளிர்ச்சி, அவளின் உடல் சூட்டில் பற்றி எரிந்தது. அந்த வெக்கையின் தாக்கம் அடுத்த வீட்டு சுவரையும் தாண்டி உள்ளே படுத்திருந்த பெரியவரை வியர்வையால் நனைத்தது.பக்கத்துவீட்டு பசுமாடு ஹீனக்குரலில் தன் துணையை அழைத்தது.
பவளத்தின் கைகள் அவளையறியாமலே மெதுவாக அவனை நோக்கி நீண்டது. மேலும் ஒரு அடி முன் வைக்க முனைந்தாள். அந்த கிந்திய நடையில், கீழே கிடந்த கடாப் பெட்டியில் தலை குப்புற விழுந்தாள். பெட்டியில் இருந்து உருண்டு வெளியே வந்து, அருகில் இருந்த கல் தூணை பிடித்துக்கொண்டு மெதுவாக எழுந்தாள். கீழே விழுந்ததில் அவளிடம் இருந்த காமப் போதை சற்று குறைந்திருந்தது.
'இவ்வளவு நாள் நல்ல பிள்ளையாய் இருந்துவிட்டு இப்போது தப்பு பண்ண பாக்கிறியே' அவளின் மனம் சொன்னது.
கால்கள் அவளை வீட்டுக்குள் அழைத்தது.
"எது நல்ல பிள்ளைக்கு அடையாளம்?" முதன் முறையாய் அவளின் பார்வை, மனதைப்பார்த்து கேட்டது.
பவளத்தின் ஏக்கப்பார்வையும் மனமும், பட்டிமன்ற இரு அணிகளாய் .மாறின.
'நல்ல பிள்ளையா இருந்து எதையும் அனுபவிக்காம அப்படியே செத்துபோக சொல்றியா. எனக்கு என்ன குறை? என் கூட படிச்சவங்க எல்லாம் பிள்ளை குட்டியோட சந்தோஷமா இருக்காங்களே. எனக்கும் அந்த ஆசை இருக்காதா?' அவளின் ஏக்கப் பார்வை மனதை கேட்டது.
"இவளுக்கு விதிச்சது அவளவுதான். கால் மட்டும் ஒழுங்கா இருந்தா இவளுக்கும் இப்போ கல்யாணம் ஆகியிருக்கும்" அவளின் மனம் சொன்னது.
'அப்போ உடல்ல ஊனம் இருந்தா ஆசையையும் அடக்கிவச்சுக்கணுமா'
"அப்படிதானே இதுவரைக்கும் நடந்துக்கிட்டிருக்கு. அது தான் உலக நியதி"
'உன் நியதியை கொண்டு உடைப்புல போடு. ஆணாதிக்க சமுதாயம் அவங்களுக்கு எது வசதியோ அதை மட்டும் தான் அங்கீகரிக்கும். நான் ஒண்ணு கேக்குறேன், இப்போ கூட, வைப்பாட்டியா இருக்க ரெடின்னு நான் சொன்னா, உடனே வேட்டிய தூக்கிட்டு எத்தனை ஆம்பளைங்க வருவாங்க தெரியுமா? அப்போ எங்க போகுமாம் அந்த உலக நியதி'
"வாதத்துக்கு நீ எப்படியும் பேசலாம். ஆனா நிதர்சனம்னு ஒண்ணு இருக்கே. அதையெல்லாம் நினச்ச உடனே மாத்த முடியாது. அதுக்கு இன்னும் பல காலம் ஆகும்"
'அது வரைக்கும் நான் உயிரோடு இருக்கணுமே, அப்போ என் இளமை என்கிட்ட இருக்காதே' பார்வையின் பேச்சு பவளத்தின் மனதுக்கு கோபத்தை உண்டுபண்ணினாலும், சுந்தரத்தின் மேல் அந்த பார்வை நடந்து போகும்போது தேன் குடித்த வண்டு போல சுகந்தமாய் இருந்தது மனதுக்கு.
மரங்கள் காற்றில் ஆடி, பார்வையின் ஒவ்வொரு பதிலடிக்கும் ஆரவாரம் செய்தன. அந்த காற்றில் கொடியில் காயப்போட்டிருந்த பவளத்தின் சேலை பறந்துவந்து சுந்தரத்தின் மேல் விழுந்தது.
"யார் .....அது....என் மேல..... " என்று உளறியபடியே சுந்தரம் தலையை தூக்கி எட்டிப்பார்க்க, அவசரமாக பவளம் வீட்டுக்குள் நுழைந்தாள்.
கட்டிலில் படுத்தவளுக்கு தூக்கம் வரவில்லை.
"நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?" தன் மனதைப் பார்த்துகேட்டாள்.
மனம் அமைதியாக இருந்தது.
"ஏதாவது சொல்லேன். அப்போ தானே நானும் தொடர்ந்து பேச முடியும்" என்றாள்.
மீண்டும் அமைதி.
"டெய்லர் வேலையில நானும் ஒரு ஆணுக்கு நிகரா, ஏன்...அதுக்கும் அதிகமாகவே இப்போ பணம் சம்பாதிக்கிறேன். பேங்குல நிறைய பணம் போட்டு வச்சிருக்கேன். அப்புறமென்ன?"
'பணம் மட்டுமே வாழ்க்கைனு நினைக்கிறியா' மனம் திருப்பிக் கேட்டது.
"இல்ல தான். நானும் ஒத்துக்குறேன். ஆனால் வாழ்க்கைக்கு பணம் முக்கியம் தானே. அவ்வளவு ஏன்? பணம் இல்லாம தானே என் கல்யாணமே நின்னு போச்சு. அன்னிக்கு எனக்கு கல்யாணம் ஆகியிருந்தா இப்போ என் பிள்ளைக்கும் 10 வயசு ஆகியிருக்கும். இப்போ நான் முடிவு பண்ணிட்டேன். நாளைக்கு சுந்தரத்துக்கிட்ட கல்யாணம் பற்றி நேரடியாவே கேட்கப்போறேன்".
வெட்கமாய் சிரித்தாள்.
அவளின் முத்துப்பல்வரிசையில் விளக்கு ஒளி பட்டு அது வீடு முழுவதும் மின்னல் வெட்டியது. ஓட்டு இடுக்கு வழியே வெளியே கசிந்த அந்த ஒளியைப் பார்த்து, சூரியன் உதிக்கப்போவதாக நினைத்த சேவல் 'கொக்கரக்கோ......கோ ' என்று கூவியது.
அதிகாலையிலேயே எழுந்து மாட்டுத்தொழுவத்துக்கு வந்தாள் பவளம். சுந்தரத்தை காணவில்லை.
குளித்து தலையில் மல்லிப்பூ சூடி நெத்தியில் பொட்டு வைத்தாள். கண்ணாடியில் பார்க்க, தேவதை மாதிரி இருப்பது போல் தெரிந்தது அவளுக்கு.
எப்போதும் துணி தைக்க மெஷினில் உட்காருபவள், அன்று தெரு கதவை திறந்து வைத்து, வாசல் படியில் உட்கார்ந்தாள். தூரத்தில் சுந்தரம் நடந்து வருவது தெரிந்தது. கூட வருவது யார்? அவன் கையை உரிமையாய் பிடித்துக்கொண்டு பட்டு சேலை சரசரக்க தலை நிறைய மல்லிப்பூவுடன். அது ......அது .....அவள் ....இரண்டு கால்களையும் தரையில் நன்றாக ஊன்றி ஸ்டைலாக நடந்து வருவது ........அவள்......
கதையின் மீதியை தெரிந்துகொள்ள எனக்கு PM செய்யவும்- ஜேசு ஞானராஜ்
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram