Friday, March 12, 2021

பின்னல் உறவு (சிறுகதை)

நாலு தெருக்களே உள்ள பாலாங்குளத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் பண்ணையாறு எந்த சலனமும் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. பங்கஜமும் தனமும் குளித்து முடித்து  வாளியில் துவைத்த துணிகளை எடுத்துக்கொண்டு ஊருக்குள் வந்தனர்.

"ஏ..... சிவகாமி, கொஞ்சம் நில்லு" கதவை சாத்திவிட்டு, கடைக்கு செல்ல வெளியே வந்த  சிவகாமியை அழைத்தாள் பங்கஜம்.

 "உன் மக பிரியா, பக்கத்து தெரு பையன் கூட, அடிக்கடி பேசுறா. நேத்து என்னடானா, நீ வெளிய போயிருந்தபோ,  உன் வீட்டுக்குள்ளயே அந்த பையன் போயிட்டான்" பங்கஜத்துக்கு  பேச வாய்ப்பு கொடுக்காமல் தனம் முந்திக்கொண்டாள்.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சிவகாமி திகைக்க, தனமும் பங்கஜமும் ஏதோ சாதித்த திருப்தியில் முன்னே நடக்க, "உங்க முதுகுல உள்ள அழுக்கு அப்படியே இன்னும் இருக்கு" என்ற சிவகாமியின் குரலை பொருட்படுத்தாமல்  தங்கள் வீடுகளுக்குத் திரும்பினார்.

 சிவகாமிக்கு தலை சுற்றியது.

'என் மகளை குறை சொல்ல இவள்களுக்கு என்ன தைரியம்?' என்ற கோபம் ஒரு புறமிறுக்க,  பிரியா அந்த பையனை உண்மையிலேயே காதலிக்கிறாளா? அப்படினா அவ அப்பாகிட்ட எப்படி சொல்றது? என பல குழப்பங்கள். கடைக்கு போனவள், எதுவும் வாங்காமலேயே வீடு திரும்பினாள்.

சிவகாமியின் மனம் பின்னோக்கி ஓடியது.

சுந்தரதுக்கு அரசு வேலை,பேருந்து ஓட்டுநர்.ஒருநாள் விட்டு ஒருநாள் வீட்டுக்கு வருவார். ஒருநாள் பேருந்தில் அடைக்கலம் என்றால் மறுநாள் வீட்டில் நித்திரை. ஒரே மகன் என்பதால் அவரின் அப்பா கட்டிய  வீடு அவரின் காலத்திற்குப் பின் இவர்களுக்கு என்றானது. தெருவை ஒட்டி தெற்கு பார்த்த பழைய காலத்து ஓட்டு வீடு. முன் வாசலில் மேலும் கீழுமாய்  இரட்டைக்  கதவு. கீழ்  பாதியை  மட்டும் எப்பொழுதும் சாத்தி  வைப்பார்கள். உள்ளே நுழைந்தவுடன் இரு  புறமும் மூன்றடி உயரத்தில்  "ப "வடிவ திண்ணைகள். நடுவிலே முற்றம். அதை தாண்டி உள்ளே நுழைந்தால்  இடது புறம் அடுப்பங்கரை. வலப்புறம் ஒரு சிறிய அறை. பின்னால் கொஞ்சம் களம். சுற்று சுவர் கட்ட பணம் இல்லாமல், தென்னை ஓலையால் மறைப்பு ஏற்படுத்தியிருந்தார் சுந்தரம்.  தான் கல்லூரி படிக்கவில்லையே என்ற எண்ணத்தில் தன் ஒரே மகளை அவள் ஆசைப்பட்டதை எல்லாம் படிக்க வைத்தார்.  "நகை சேர்க்கவேண்டாமா, சம்பாதிக்கிற பணம் எல்லாத்தையும் படிப்புக்கே செலவு பண்ணிட்டா எப்படினு" கேட்கும் சிவகாமி வாயை ஏதாவது சொல்லி அடைத்துவிடுவார்.

இப்போது அதே மகள் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு வந்து விட்டுவிட்டாளே  என்று அவள்  மனம் வருந்தியது. எப்படி சுந்தரத்திடம் சொல்வது என்று யோசித்தவள் அப்டியே கட்டிலில் சாய்ந்து உறங்கிப்போனாள்.

 "அம்மா............அம்மா" சத்தம் கேட்டு விழித்தாள் சிவகாமி. கதவைத்  திறந்து கொண்டு வந்தாள் பிரியா.

 "பசிக்குதும்மா, சீக்கிரம் சாப்பாடு போடு"

'ஏண்டி .....கொண்டு போன சாப்பாடு என்னாச்சு?'  

 "என் ப்ரெண்டு சுமி, இன்னிக்கு சாப்பாடு கொண்டு வரலம்மா. ரெண்டு பேரும் என் சாப்பாட்டை சாப்பிட்டோம். அதான் பசி அடங்கல, சீக்கிரம் சோறு போடும்மா" என்றவள் தாயின் நாடியை பிடித்து கொஞ்சி முத்தம் தந்தாள்.

 இவளிடம் கேட்கவா வேண்டாமா என்ற குழப்பத்துடன் சிவகாமி, வழக்கமாக பிரியா சாப்பிடும் தட்டில்  சோறு போட்டு பருப்பு குழம்பு ஊற்றி உருளைக்கிழங்கு பொரியல் வைத்து கொடுத்தாள்.

"அம்மான்னா அம்மா தான், இப்படி ஒரு அம்மா கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்" என்று தாயின் கன்னத்தில் செல்லமாய் ஒரு தட்டு தட்டி, கூடத்தில் இருந்த டிவியை ஆன் செய்து சாப்பிட ஆரம்பித்தாள்.

டிவியில் விஜய் சேதுபதி காதல் செய்துகொண்டிருந்தார்.

 'வேற படம் ஏதாவது வையேண்டி"  

"போம்மா, நீ இன்னும் பழைய காலத்திலேயே இருக்கே" என்றவள் வால்யூமை கூட்டினாள்.

 'அந்த சத்தத்தையாவது குறையேண்டி'

 ஏனோ எரிச்சலாய் வந்தது சிவகாமிக்கு.

இரவு படுத்தவளுக்குத்  தூக்கம் வரவில்லை.
 
"கொக்கரக்கோ ...... கோ"

அதிகாலையிலேயே எழுந்து  வீட்டின் முற்றத்தைப்  பெருக்கி சாணம் தெளித்து கோலம் போட்டாள். களத்தை கூட்டி பெருக்கினாள். காபி போட்டு, சுந்தரத்துக்குப் பிடித்த  புட்டு அவித்துக்கொண்டிருந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்ட்து. சுந்தரம் வந்து விட்டார். டவலையும்  பேஸ்ட் வைத்த பிரஷையும் எடுத்துக்கொண்டு பின்புற களத்தில் இருந்த சிமெண்ட் தொட்டிக்கு வந்தார்.குளித்துக்கொண்டிருக்கும் போதே, சிவகாமி அருகில் வந்தாள்.  

"என்னங்க, நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கவேண்டாமா?"

'நீ தானே அவ கம்பியூட்டர் படிக்கட்டும் னு சொன்னே. இன்னும் எவ்வளவு நாள் படிக்கணும்?'

"ஆறு மாசம்"

'ம் ... தரகர் கிட்ட சொல்லி வைக்கிறேன்'

"இல்லீங்க, அது .....வந்து...... அடுத்த தெரு சுதாகர் பையன், நம்ம பிரியாவை விரும்புறாம்போல இருக்கு, ரெண்டு பேரும் அடிக்கடி பேசிக்கிறாங்களாம், பங்கஜம் சொன்னாள். அதான்....."

'நல்ல பையன் தானே! அவன் அப்பா பரசுராமன் தான் கொஞ்சம் வீம்பு பிடிச்சவரு. வந்து பொண்ணு கேட்டா கட்டிக்  கொடுப்போம்'

"உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. அவன் அம்மா கோமதி, அன்னைக்கு ஆஸ்பத்திரியில வச்சி ஒரு 100 ருபாய் கை  மாத்தா  கேட்டதுக்கு, எல்லார் முன்னாலேயும் என்ன பேச்சி பேசினா! அவ பிள்ளைக்கு என் மகளை கட்டித்  தர  மாடடேன்" என்று பட பட வென பொரிந்தவள் அடுப்பங்கரைக்கு சென்று விட்டாள்.

குளித்துமுடித்து வீட்டுக்குள் வந்தவர்,

"இன்னைக்கு கம்பியூட்டர் கிளாஸ் இல்லையாம்மா" என்ற அப்பாவின் குரல் கேட்டு நெளித்து எழுந்தாள் பிரியா.

'போகணும்பா. அப்பா!....கம்பியூட்டர் படிச்சா வெளிநாட்டுல வேலை கிடைக்கும். அதனால பாஸ்போட் எடுக்கணும்'

"சரிம்மா, நான் ஏற்பாடு பண்றேன்.

சிவகாமி எதுவும் பேசவில்லை.

பிரியா கம்பியூட்டர் வகுப்புக்கு கிளம்பினாள்.

"நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன்" என்றவர், கீழ்க் கதவை சாத்தி கொண்டி வைத்துவிட்டு படியிறங்கினார். ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்தவர்,

 அந்த பையன், வேலைக்காக வெளிநாடு போயிட்டானாம், இனியாவது டென்ஷன் இல்லாம இரு"

'ம் ....' என்றவள்

'சீக்கிரம் பிரியாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையா பாருங்க. அவ்வளவு தான், சொல்லிட்டேன்'

ஆறு மாதங்கள் உருண்டது.


சுந்தரம் வீட்டின் முன் காலையிலேயே டெம்போ வண்டியில்,  களை, தென்னந்தட்டிகள், இரண்டு பெரிய வாழை மரங்கள், மண மேடை என்று திருமண பொருட்கள் வந்து இறங்கின.

பிரியாவுக்கு என்னவென்று புரியவில்லை. அவளின் எண்ண ஓட்டத்தைப்  புரிந்த சிவகாமி,

'என் அண்ணன் மகன்  சிவாவுக்கும் உனக்கும் நாளை மறுநாள்  கல்யாணம்' என்றவள் மகளை சட்டை செய்யாமல் மற்ற வேலைகளில் மூழ்கினாள்.

பிரியாவுக்கு 'பக்' என்றது. உடனே லண்டனில் இருக்கும் சுதாகருக்கு வாட்ஸப் மெசேஜ் அனுப்பினாள்.

லண்டனில் சுதாகர், உடனடியாக சென்னையில் இருக்கும் UK தூதரகத்தில், அடுத்த நாளுக்கு அப்பாயின்மென்ட் வாங்கினான். 'மேக் மை ட்ரிப்' ல் டிக்கெட் போட்டு லண்டன் ஏர்போட்டுக்கு வந்தான்.

"பிரியா, நாளைக்கு விடியற்காலம் ஐந்து மணிக்கு ஊருக்கு வந்துடுவேன். உன் சர்டிபிகேட்டும் பாஸ்போர்ட்டும்  ரெடியா எடுத்து வச்சிக்க. மேரேஜ் ரெஜிஸ்ட்டர் கிட்ட ஏற்கெனவே பேசிட்டேன்" வாட்ஸப்பில் பதில் மெசேஜ் பண்ணிவிட்டு பிளேனில் ஏறினான்.

மறுநாள்-,

'என்னங்க..., பிரியாவை காணோம்' சிவகாமியின் சத்தம் கேட்டு ஊரே முழித்தது. சுந்தரத்துக்கும்  கோபம்.

ரெஜிஸ்ட்டர் மேரேஜ் முடித்து, உடனே சென்னையில் இருக்கும் UK தூதரகத்துக்கு வந்தவர்கள், அவனின் வேலைக்கான காண்ட்ராக்ட், வீட்டு காண்ட்ராக்ட், மேரேஜ் சர்டிபிகேட் அனைத்தையும் கொடுத்தனர். சுதாகர், 'பெர்மனென்ட் ரெசிடென்ஸ்' என்பதால் மதியமே விசா கிடைத்தது. அடுத்த விமானத்தில் லண்டன் வந்தனர்.

<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjX7mzzkg-pgIxH1YEnEMs6Q0r2lnzrp-U78wQFyO7czdCT9PdUuLvybQyHbo1HYDn7mLxft4wv0u9W5-iO_Jt3kPgE9Q0kZk-OPvS6mNT6-yZbjRdUl1hO3Sp8kIiUNS4g-9fMyJEp9Jn6/s1200/1.jpg" style="display: block; padding: 1em 0px; text-align: center;"><img alt="" border="0" data-original-height="630" data-original-width="1200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjX7mzzkg-pgIxH1YEnEMs6Q0r2lnzrp-U78wQFyO7czdCT9PdUuLvybQyHbo1HYDn7mLxft4wv0u9W5-iO_Jt3kPgE9Q0kZk-OPvS6mNT6-yZbjRdUl1hO3Sp8kIiUNS4g-9fMyJEp9Jn6/s320/1.jpg" width="320" /></a></div>
நாட்கள் உருண்டன.

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய சுந்தரத்திடம்,

"ஏ ...சுந்தரம், பார்ட்டி ஏதும் கிடையாதா?"  கூப்பிட்டது உறவினர் கணேசன்.

சுந்தரம் எதுவும் புரியாமல் முழிக்க,

"பிரியாவுக்கு ஒரே பிரசவத்துல மூணு பிள்ளைங்களாம். ஒரு பையன், ரெண்டு பொண்ணுங்க. லண்டன்ல உள்ள பெரிய ஆஸ்பத்திரியில சுக பிரசவமாம்" பரசுராமன் எல்லாருக்கும் மிட்டாய்  கொடுத்துட்டு இருக்கார். மனைவி கோமதி இறந்து போன சோகத்துல இருந்தவர், இப்போ மறுபடியும் பேத்தியா பிறந்திருக்கானு ரொம்ப சந்தோஷமா இருக்கார்.

சுந்தரத்துக்கும்  உள்ளுக்குள்  சந்தோஷம் பீறிட்டது. ஆனாலும் அவரின்  வீராப்புங்கிற போர்வை அந்த சந்தோஷத்தை மூடி மறைத்தது.

"எப்போ?"

'நேத்து'

"சுக பிரசவக்குகிறதால நாளைக்கே வீட்டுக்கு விட்டுருவாங்களாம். அப்புறம், ஒரு நர்ஸ் தினமும் வீட்டுக்கு போய் உதவி செய்வாளாம்"

கேட்டும் கேட்காதது மாதிரி பக்கத்து டீ கடைக்கு நடந்தார் சுந்தரம்.

" லட்டு ஒண்ணு கொடுங்க"

'என்னண்ணே, வடை தானே எப்பவும் சாப்பிடுவீங்க...இன்னிக்கு என்ன .....லட்டு கேட்கறீங்க?' என்ற கடைக்காரரிடம் நீங்களும் ஒண்ணு சாப்பிடுங்க என்று இரண்டு லட்டுக்கான பணத்தை கொடுத்துவிட்டு மீண்டும் பேருந்தில் ஏறினார் சுந்தரம்.

நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாயின.

டூட்டி முடிந்து மாலை வீட்டுக்கு வந்த சுந்தரம், ஈஸி சேரில் சாய்ந்துகொண்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தார்.அவரின் மொபைல் சிணுங்கியது.

"ஹலோ"

'தாத்தா.....தாத்தா'

போனை காதில் இருந்து எடுத்து நம்பரைப் பார்த்தவர், புது நம்பராக இருக்வே, மீண்டும் காதில் வைத்தார்.

"எப்படி இருக்கீங்கப்பா, நான் பிரியா பேசுறேன்"

'என் ராசாத்தி! எப்படிம்மா இருக்கே, அப்பாவை மறந்துட்டியேம்மா' சுந்தரத்தின் குரல் தழுதழுத்தது.

'மாப்பிள்ளை எப்படிம்மா இருக்காவ, பிள்ளைங்க எப்படிம்மா இருக்காங்க?'

கண்களில் கண்ணீர்.மீண்டும் அவரே தொடர்ந்தார்.

'முதல பேசுனது என் பேரனாம்மா, இன்னிக்கு அவனுக்கும், பேத்திங்களுக்கும்  ரெண்டாவது பிறந்தநாள் தானேம்மா'  பேச்சில் சந்தோஷம் தெரிந்தது.

"ஆமாம்பா"
 
'உங்க எல்லாரையும் பாக்கனும்போல இருக்குமா, எப்போமா ஊருக்கு வருவீங்க?'

"நாளைக்கு காலையில அஞ்சு மணிக்கெல்லாம்  வந்துடுவோம். இப்போ ஏர்போட்டுல தான் இருக்கோம்பா"

சுந்தரத்தின் உற்சாக பேச்சு சிவகாமியை கூடத்துக்கு வரவழைத்தது.

'அம்மா, பக்கத்துல நிக்குறா, கொடுக்குறேன்' என்றவர், போனை சிவகாமியின் காதில் வைத்தார்.

"பாட்டி ...............எப்படி இருக்கீங்க?"

போனை தட்டி விட்டவள், 'இவ்வளவு நாளும் தெரியாத பாட்டி இப்போதான் தெரியுதோ' கோபத்தோடே அடுப்பங்கரைக்குள் நுழைந்தாள்.

"அம்மாவுக்கு இன்னும் கோபம் குறையலியாப்பா?"

'அவளைப் பத்திதான் உனக்கு தெரியுமேம்மா' என்று சமாளித்தவரிடம்

"பிளேன் கிளம்ப போகுதுப்பா, நாளைக்கு நேர்ல பேசுவோம்" என்ற பிரியா மொபைலை சுவிட்ச் ஆப் செய்தாள்.

சிவகாமி படுத்துவிட்டாள்.பேரன் கூப்பிட்ட 'பாட்டி' என்ற வார்த்தை சிவகாமியை ஏதோ செய்தது. நேரம் செல்லச் செல்ல  அவளின் கண்கள், தண்ணீர் திறந்து விட்ட கார்பரேஷன் குழாயானது.

விடியற்காலை மூன்று மணிக்கு கதவு திறக்கும் சத்தம் கேட்டது. எழுந்து லைட்டைப்  போட்டார் சுந்தரம்.

"அஞ்சு மணிக்கெல்லாம் மகள், மருமகன், பேரப்பிள்ளைங்க எல்லாம் வந்துடுவாங்க. மாப்பிள்ளை வீட்ல அவங்க அப்பா பரசுராமன் மட்டும் தானே. அதான், நான் போய் சீக்கிரம் சமையல் செய்து ரெடி பண்ணி வைக்கப் போறேன்" என்று சந்தோஷமாய் சொன்ன  சிவகாமி,  பக்கத்துத்  தெருவில் இருக்கும் மாப்பிள்ளை  வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தாள்.
                                              -ஜேசு ஞானராஜ், ஜெர்மனி

Sunday, March 7, 2021

முகம் மாற்றிய மொபைல் - பகுதி 1

முகம் மாறிய கொலைகாரன் - பகுதி 1 
_____________________________________


 "ஆ ......." 

 மதுமிதாவின் பயம் கலந்த பெருங்குரல் அந்த பங்களா முழுவதும் எதிரொலித்தது. கிச்சனில் மதிய சாப்பாட்டுக்கு சாம்பார் செய்ய முருங்கைக்காய் வெட்டிக்கொண்டிருந்த சமையல்காரி தனம் அப்படியே போட்டுவிட்டு சத்தம் வந்த முதலாளியின் ரூமுக்கு ஓடி வந்தாள். அதற்குள் தோட்டக்காரன் முனுசாமி அறையை நெருங்கிவிட்டிருந்தான். மதுமிதா, அந்த அறையின் உட்பக்கத்தில் வாசலருகே மல்லாந்த நிலையில் மயங்கிக் கிடந்தாள். இருபது வயதின் இளமை அவளின் முகத்திலும் தெரிந்தது. 

 "அம்மா .... மதுமிதாம்மா .........ஓடிப் போய் தண்ணி கொண்டா' 

 தனம் வேகமாய் சென்று தண்ணி கொண்டுவந்தாள். முகத்தில் தெளித்தார்கள். 

 தண்ணீர் பட்டதும் மெதுவாக கண்ணைத் திறந்த மதுமிதா, "அப்பா...அப்பா...."

 அவள் கை காட்டிய இடத்தில் கட்டிலில் ராஜமாணிக்கம் ஒருக்களித்த நிலையில் கிடக்க, அவரின் வயிற்றில் ஒரு அடி பெரிய கத்தி! முழுவதும் உள்சென்ற நிலையில் கைப்பிடி மட்டும் வெளியே தெரிந்தது. சிங்க உருவம் பொறிக்கப்பட்ட அந்த கைப்பிடி முழுவதும் ராஜமாணிக்கதின் இரத்தம் பீறிட்டு அடித்து குளிப்பாட்டிக்கொண்டிருந்தது. 

மதுமிதா தன் மொபைலை தேடினாள்.அருகே இருந்த கம்ப்யூட்டர் மேஜையின் கால் அருகே விசிறியடித்ததைப் போல அநாமத்தியாக கிடந்தது அது. மெதுவாக எழுந்து போய் அதை எடுத்தாள். முனுசாமியும் தனமும் தாங்கள் என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் மதுமிதாவின் கட்டளைக்காக காத்திருந்தனர். 

ராஜமாணிக்கம் ஏதோ முனங்கிகொண்டே இருந்தார். அவரின் இரத்தம் மெத்தையை குளிர்வித்துக்கொண்டிருந்தது.சுவரில் அழகுக்காக மாட்டப்பட்டிருந்த கேடயம், கத்தியை இழந்து அரை நிர்வாணமாய் காட்சியளித்தது. மொபைல் பட்டனைத் தொட்டு 'பேஸ் ரெகக்னிஷன் ஆப்' மூலம் ஆன் செய்தாள். 

 அந்த சில வினாடிகளில் அவளின் மனம் எதையோ உணர்ந்தது. சப்-கான்சியஸ் மனதில் எதுவோ புதிதாக நுழைந்தது போன்ற உணர்வு.

 "அம்மா, உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவோம்மா" தனம் அழுதுகொண்டே பேசினாள். 

 இயல்பு நிலைக்குத் திரும்பிய மதுமிதா, பக்கத்து டவுண் நாகர்புதூர் மருத்துவமனைக்கு தகவல் தந்துவிட்டு மூவரும் சேர்ந்து ராஜமாணிக்கத்தை காரில் தூக்கி வைத்தனர். மதுமிதா பின்னிருக்கையில் உட்கார, ராஜமாணிக்கத்தின் தலை அவளின் மடியில் இருந்தது. அதற்குள் டிரைவர் வந்துவிட, பூஞ்சோலை கிராமத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாகர்புதூருக்கு வேகமாக கார் விரைந்தது. ராஜமாணிக்கம் எதையோ மீண்டும் மீண்டும் முனகிக்கொண்டிருந்தார். 

"சீக்கிரம் போங்க டிரைவர்" என்ற மதுமிதா, மொபைலை 'பேஸ் ஆப்' மூலம் மீண்டும் ஆன் செய்ய அந்த சில நொடிகள் அவள் மனதிற்குள் என்னவோ செய்தது. காண்டாக்ட் லிஸ்ட்லில் நம்பர் தேடி, இன்ஸ்பெக்டர்க்கு போன் செய்தாள். 

 "அங்கிள்... அப்பாவை...... யாரோ குத்திட்டாங்க ...." 

 'வாட்?' 

 "கற்பகம் ஹாஸ்பிட்டல் இருக்கிறேன், நீங்க சீக்கிரம் வாங்க அங்கிள், எனக்கு பயமாயிருக்கு" 

 'அழாதேம்மா, உடனே வர்றேன்' 

என்றவர், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தியிடம் பூஞ்சோலையில் உள்ள ராஜமாணிக்கம் வீட்டுக்கு போகுமாறு சொல்லிவிட்டு வெளியே வந்து ஜீப்பில் ஏறி நாலாவது ரோட்டில் உள்ள அந்த மருத்துவமனைக்கு விரைந்தார்.SPக்கு போன் பறந்தது. 

 மருத்துவமனை வராண்டாவில் மதுமிதா ஒரு நர்ஸின் தோளில் சாய்ந்துகொண்டு அழுதவாறு இருந்தாள். நர்ஸ் அவளைத் தேற்றிக்கொண்டிருந்தார். மருத்துவமனை வளாகத்திற்குள் இன்ஸ்பெக்டர் பரசுராமனின் ஜீப் நுழைந்தது. ஆறடி உயரம், நன்றாக ஷேவ் செய்த முகத்தில், மூக்குக்கு கீழே வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட செங்கல்கள் போல டை அடிக்கப்படட திக்கான மீசை முடிகள், அழகாக ட்ரிம் செய்யப்பட்டிருந்தன. எக்சர்சைஸ் உடம்பு, கஞ்சி போட்டு அயன் செய்த சீருடை, நடையில் மிடுக்கு, கடமையில் எப்போதுமே நேர்மை! 

பூஞ்சோலை கிராமமும் இன்ஸ்பெக்டர் பரசுராமனின் கண்ட்ரோலில் தான் வருகிறது. எலெக்க்ஷன், அரசியல்வாதிகளின் வரவு தவிர்த்து இன்ஸ்பெக்டருக்கு மற்ற நேரங்களில் அங்கே வேறெந்த வேலையும் வராது. அந்த சமயத்தில் ராஜமாணிக்கத்துடன் ஏற்பட்ட பழக்கம் இன்று வரை தொடர்கிறது. எல்லாவற்றையும் ராஜமாணிக்கம் பார்த்துக்கொள்வார். 

பூஞ்சோலைக்கு எல்லாமே ராஜமாணிக்கம் தான் எல்லாமும் ராஜமாணிக்கத்திற்குத்தான். மொத்தமே மூன்று தெருக்கள் தான். எண்ணி ஐம்பது வீடுகள். அனைவருமே ராஜமாணிக்கத்திற்காக அவர் எஸ்டேட்டில் உழைக்கிறார்கள். பூஞ்சோலையிலிருந்து சில கிலோமீட்டர்களில் 300 ஏக்கரில் தோட்டம். வேலை செய்பவர்களின் குழந்தைகள் படிக்க பக்கத்து டவுனுக்கு செல்ல வேன் வசதி செய்து கொடுத்திருக்கிறார். அனைவருக்கும் மெடிக்கல் இன்சூரன்ஸ் வசதி செய்து கொடுத்திருக்கிறார். பூஞ்சோலையைப் பொறுத்தவரை அந்த மக்களுக்கு இவர் தான் தெய்வம். பூஞ்சோலையில் இரண்டு ஏக்கரில் மிகப்பெரிய பங்களா. 

சென்னையில் கல்லூரி படிப்பு முடித்து கடந்த மாதம் தான் மதுமிதா ஊருக்கு வந்தாள். அவ்வளவு பெரிய பங்களாவில் இவர்கள் இருவரும் தான். மனைவி செண்பகவல்லி புகைப்படத்தில் மாலையுடன் சிரித்துக்கொண்டிருந்தாள். தோட்டக்காரன், டிரைவர், சமையல்காரி எல்லோருக்குமே எதிர்த்தெருவில் தான் வீடு. கம்பியூட்டர் தவிர்த்த மற்ற நேரங்களில் பக்கத்துவீட்டு குழந்தைகள் தான் மதுமிதாவுக்கு பொழுதுபோக்கு. அதனாலேயே அவளுக்கு சீக்கிரம் திருமணம் முடித்துவிடவேண்டும் என்று ராஜமாணிக்கம் மாப்பிளை பார்க்க ஆரம்பித்தார். 

இன்ஸ்பெக்டர் பரசுராமன் டாக்டர் அறைக்குள் நுழைந்தார். டாக்டரின் பதிலை எப்படி மதுமிதாவிடம் சொல்வது என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே அவரின் மொபைல் சிணுங்கியது. 

 "சார், பாரென்சிக் டிபார்ட்மென்ட்டிலிருந்து நான்கு பேர் வந்திருக்காங்க" என்றார் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி 

கான்ஸ்டபிள் முருகனை மதுமிதாவை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் பூஞ்சோலைக்கு விரைந்தார். அங்கே பாரென்சிக் ஆபீசர் விஜய் தன் டீமுடன் பங்களா முழுவதையும் இஞ்ச் பை இஞ்சாக அலசிக்கொண்டிருந்தார். பங்களாவுக்குள் நுழைந்த இன்ஸ்பெக்டர் பரசுராமன், காரிலிருந்து இறங்கி தோட்டக்காரனை அருகில் கூப்பிட்டார். 

"என்ன நடந்தது?"

 'நா இந்தா நிக்குதுங்களே குரோட்டன்ஸ், இதுகளுக்கு தண்ணி பாய்ச்சிக்கிட்டிருந்தீங்க. திடீருனு மதுமிதாம்மா பயங்கரமா அலறுனாங்க. நா உடனே ஓடி போனே'
"வேற யாரும் வீட்டுக்கு வந்திருந்தாங்களா?"

 'இல்லேங்க, சத்தம் கேட்டு நான் உள்ளே போகவும் தனமும் வந்துட்டா.ரூமுக்குள்ளே வாசல் பக்கத்துல மதுமிதாம்மா மயங்கி கிடந்தாங்க. தண்ணி தெளிச்சு எழுப்பினோம். அப்போ தான் கட்டில ஐயா குத்து பட்டு கிடக்கிறத பார்த்தோம்'. 

 கைரேகை மற்றும் சந்தேகப்படும் வகையில் இருந்த பொருட்களை விஜய் & டீம் எடுத்துக்கொண்டு இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிட்டு கிளம்பியது. தனத்தை கூப்பிட்டார். பயந்துகொண்டே தனம் வந்தாள். 

 "உன் வீடு எங்கே இருக்கு?" 

 'தோ ... எதுத்த தெரு தாங்க' "தினமும் எத்தனை மணிக்கு இங்கே வருவே?" 

'காலையில 6 மணிக்கெல்லாம் வந்துடுவேன். உடனே காபி போட்டுடு ஐயா ரூமுக்கு கொண்டு போய் குடுப்பேன். அப்புறம் சமையல் செய்ய போயிடுவேன்' 

"தினசரி ராஜமாணிக்கம் என்னவெல்லாம் செய்வாரு, அவரை பார்க்க யாரெல்லாம் வருவாங்க?" 

 "ஐயா டிபன் சாப்பிட்டுடு ரெடியாவும் போதே தோட்டக்காரரும் டிரைவரும் 9 மணிக்கெல்லாம் வந்துடுவாங்க. டிரைவர் காரை தொடச்சி ரெடியா வச்சிருப்பாரு. உடனே தோட்டத்துக்கு போவாங்க. மத்தியானம் வந்து சாப்பிட்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பாங்க. சாயந்திரம் அஞ்சு மணிக்கெல்லாம் ஒரு மணி நேரம் வாக்கிங் போவாங்க. எப்பவாவது உர கம்பனிக்காரங்க வருவாங்க, டவுன்ல இருந்து நெல் கொள்முதல் மொத்த வியாபாரிங்க வருவாங்க. அவ்வளவு தாங்க'. 

போஸ்ட்மார்டம் முடிந்து உடல் மதுமிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸில், அப்பா அருகில் அமர்ந்து மதுமிதா அழுது கொண்டே இருந்தாள். பங்களா உள்ளே ஆம்புலன்ஸ் நுழைந்ததும், இன்ஸ்பெக்டர் அருகில் சென்று கதவைத் திறந்தார். தனம் மதுமிதாவைத் தாங்கிப் பிடித்துகொண்டாள். பங்களாவின் பின்புற வளாகத்தில் ராஜமாணிக்கம் அடக்கமானார். இன்றைய சூழ்நிலையில் மதுமிதாவிடம் எதுவும் கேட்கவேண்டாம் என்று நினைத்தவர், ஒரு கான்ஸ்டபிளை மட்டும் அங்கே காவலுக்கு நிறுத்திவிட்டு வீட்டுக்கு கிளம்பினார். 

 மறுநாள் அதிகாலை 6 மணிக்கே இன்ஸ்பெக்டர் அங்கே வந்து விட்டார். கான்ஸ்டபிளை விறைப்பாக சல்யூட் அடித்தார். வீட்டுக்குள் சோபாவில் மதுமிதா உட்க்கார்ந்திருப்பது தெரிந்தது. காலிங்பெல்லை அழுத்தினார். திரும்பிய மதுமிதா கொஞ்சம் தெளிவு பெற்று இருப்பதாக அவருக்குப் பட்டது.

 "எப்படிம்மா இருக்கே?" 

 மீண்டும் ஆழ ஆரம்பித்தாள். 

 "நேற்று என்ன நடந்தது? நீ பார்த்ததை சொல்லு" 

 'அப்பா கத்துற சத்தம் கேட்டு நான் அவர் ரூமுக்கு வந்தேன். அப்போ ஒருவன் அவசரமாக வெளியே ஓடினான். "நீ அவனைப் பார்த்தியா?"

 'ஆமா அங்கிள். எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு' 

 லேப்டாப் கொண்டுவரப்பட்டு மதுமிதா சொன்னது மாதிரி கண், காது, மூக்கு என்று வரையப்பட்டது.
 
'இவன் தான் , இவனே தான் அங்கிள், இவன் தான் அப்பாவை கொன்றவன், சீக்கிரம் அரெஸ்ட் பண்ணுங்க அங்கிள்' 


லேப்டாப் திரையைப் பார்த்து கத்தினாள் மதுமிதா. 

 அனைத்து ஸ்டேசன்களுக்கும் அவனின் புகைப்படம் அனுப்பப்பட்டது. அன்று மாலை நாகர்புதூரில் ட்ராபிக் சரி செய்துகொண்டிருந்த ஹான்ஸ்டபிள் முருகன், அவசரமாக இன்ஸ் பெக்டருக்கு போன் செய்தான். ஸ்டேஷனில் பைல்களை பார்த்துக்கொண்டிருந்த பரசுராமன் மொபைலை எடுத்துப்பேசினார். 

 "சார், அந்த போட்டோல இருக்கிறமாதிரியே ஒருத்தன் பைக்ல வந்தான். ஏன் ஹெல்மெட் போடலனு நிறுத்தி வைச்சிருக்கேன், சீக்கிரம் வாங்க" போன் பேசிவிட்டு அவன் அருகில் வந்தார் கான்ஸ்டபிள் முருகன். 

அவனுக்கு 25 வயது இருக்கும். எண்ணெய் தேய்க்காத தலை. கட்டிடம் போட்ட சட்டை. அயன் பண்ணாத பாண்ட். காலில் சற்று கிழிந்த லூனார் செருப்பு.

 "பேரென்ன?"

 'மித்ரன் சார்' 
 (தொடரும்)

வண்ணத்துப் பூச்சி (சிறுகதை)

"அனந்தபுரி எக்ஸ்பிரஸ்  ரயில், இன்னும் சிறிது நேரத்தில் எக்மோர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படத் தயாராகவுள்ளது". அறிவிப்பை கேட்டுக்கொண்டே ஆட்டோவில் இருந்து இறங்கி ரயில் நிலையத்தில் நுழைந்த பிரணவ் வேகமாக அந்த நடை மேடையை நோக்கி நடந்தான். முதுகிலே ஒரு ஷோல்டர் பை, அவனின் சில நாட்களுக்கான டிரஸ்களை தன்னுள் அடக்கிக்கொண்டிருந்தது. கழுத்தில் அவன் வேலை செய்யும் கணிப்பொறி கம்பனியின் ஐடி கார்டு. ரயிலில் ஏறி தனக்குரிய பெர்த்தில் அமர்ந்தான். ஹாரன் சத்தத்துடன் ரயில் முன்னோக்கிப்  புறப்பட்டது. அவனின் மனமோ பின்னோக்கி சென்றது.

 பணகுடிக்கு அருகில்  மேற்குத்  தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தான் அவனின் விவசாய பண்ணை வீடு. அப்பாவுக்கு  இயற்க்கை விவசாயத்தில் ஆர்வம். ஐந்து  ஏக்கரும் இயற்கை விவசாயமே. பாகற்காய், வெண்டை, பீர்க்கங்காய், வெள்ளரி, பூசணி, கத்தரி என்று பெரும்பாலும்  காய்கறிகள் தான். அரை ஏக்கரில் மட்டும் அரைக்கீரை, தண்டங்கீரை, முளைக்கீரை, வெந்தயக்கீரை, வல்லாரை, பாலக்கீரை, பசலைக்கீரை முடக்கொத்தான் என்று பல கீரை வகைகள். வாரத்தில் மூன்று நாட்கள் காவல்கிணறு விலக்கில் உள்ள காமராஜர் சந்தைக்கு காய்கறிகளையும் கீரைகளையும் மாலை வேளையில் குட்டி யானை ஆட்டோவில் கொண்டு செல்வார். இயற்கை விவசாயம் என்பதால் அவரின் காய்கறிகளுக்கு எப்போதுமே கிராக்கி தான்.

அந்த தோட்டம் தான் பிரணவின் விளையாட்டு மைதானம். தினமும் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் காபி குடித்துவிட்டு அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்று விடுவான். அங்கு பலவண்ணங்களில்
 பறந்துகொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சிகளிடம் பேசுவதுதான் அவனின் பொழுதுபோக்கு. அவனின் பேச்சுக்கேற்ப அவைகளும் தங்களின் இறக்கைகளை அசைத்து அவனுக்குப் பதில் சொல்லும். அவன் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தபோது அவனின் சித்தப்பா ஒருசில ஆட்களுடன் வந்து அப்பாவுடன் தகராறு செய்துகொண்டிருந்தார்.  அப்பாவும் பதிலுக்கு பேசினாலும் சித்தப்பா மற்றும் அடியாட்களின் சத்தத்துக்கு முன்னால் அப்பாவின் பேச்சு சங்கு சத்தத்தின் முன் விசிலாகிப் போனது. அம்மா ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள். மறுநாள் பள்ளியிலிருந்தவனுக்கு வந்த தகவல் அவனை பயம் கொள்ள வைத்தது. அழுது அழுது சோர்ந்து போனான்.சித்தப்பாவை போலீஸ் பிடித்துச்சென்றது.பிரணவ் தனி மரமானான்.

அந்த பண்ணைத் தோட்டத்துக்காக சித்தி கேஸ் போடிருப்பதாக சொன்னார்கள். வக்கீலும் மற்ற உறவினர்களும்  அவனை சென்னையிலுள்ள அரசு ஹாஸ்டலில் சேர்த்து விட்டனர்.அவ்வப்போது வக்கீல் மட்டும் வந்து பார்த்துவிட்டுப்போவார். அங்கு படித்து, இப்பொழுது ஒரு வெளிநாட்டு கணிப்பொறி கம்பெனியில்  டீம் லீடராகப் பணிபுரிகிறான்.நேற்று தான் வக்கீல் வந்து சொன்னார், கேஸ் இவன் பக்கம் ஜெயித்து பண்ணை வீடு இவனுக்கே கிடைத்துவிட்டது என்று. பதினைந்து வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் சொந்த ஊருக்குப் போகிறான்.

"டிக்கெட் காட்டுங்க" டிக்கெட்  செக்கர் வந்து கேட்ட போது தான் சுயநினைவுக்கு வந்தான்.வண்டி செங்கல்பட்டு தாண்டியிருந்தது.

டிக்கெட்டை காட்டிவிட்டு ஹோட்டலில் வாங்கி வந்த பரோட்டாவை சாப்பிட்டான். தன் பெர்த்தில் ஏறி படுத்தவன் அப்படியே உறங்கிப் போனான்.

"இட்லி வடை பொங்கல் .........இட்லி வடை பொங்கல்...................."

கண்விழித்துப் பார்த்தான். காலை சூரியன் ரயிலின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து நுழைந்து மறைந்தது மரங்களின்  உதவியினால்.

"சார், இனி  எந்த ஸ்டேஷன் வரப்போகுது?"

'பணகுடி'

அவசரமாக எழுந்தான். தன் பையில் பெட் ஷீட்டை அடைத்தான். ரயில் நின்றது.

இறங்கினான்.

ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நின்றிருந்தார். வக்கீல் ஏற்கெனவே சொல்லியிருந்தால் அடையாளம் காண சுலபமாய் இருந்தது.இருவரும் ஆட்டோவில் பண்ணை வீடு வந்தனர்.பால்கனியுடன் கூடிய மச்சு வீடு. பெயிண்ட் போய், வெளிறிப்  காட்சியளித்தது.

தோட்டம் முற்றிலும் மாறி இருந்தது. தென்னை, மா, கொய்யா என்று நிறைய மரங்கள். கண்ணுக்கெட்டிய தூரத்தில் கொய்யா  மரத்தின் அருகே  ஒரு பெரிய  ரோஜா செடி சிகப்பு பூக்களால்  கண்களுக்கு விருந்து படைத்தது. அம்மா அப்பாவின் ஞாபகம் வந்து அந்த கண்களை குளமாக்கியது. வாசல் படியை தொட்டு கும்பிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

"இட்லி சுட்டு வைச்சிருக்கேன் ஐயா"

'நான் குளிச்சிட்டு வந்து சாப்பிடுறேன்' என்றவன்,

"தோட்டத்தில் காய் கறிகள் ஏதும் போடலியா"

'கத்தரியும் வெண்டையும் குறுணி விதைப்பாட்டுல  போட்டிருக்கு. நானும்  என் வீட்டுக்காரரும் தான் இதுவரை பார்த்துகிட்டு இருந்தோம். உங்க சித்தி தான் பணம் தருவாங்க. இப்போ, வக்கீல் ஐயா தான் எங்களையே தொடர்ந்து பாத்துக்கச்  சொன்னார். ஆனா, நீங்க தான் முடிவு பண்ணனும். எங்களுக்கு இதை விட்டா  வேற போக்கிடம் இல்ல. கொஞ்சம் தயவு காட்டுங்கய்யா'

"உன் பேர் என்ன?"

'கண்ணம்மா'

"நான் இதை பத்து வருஷத்துக்கு இங்க பணகுடியில இருக்கிற ராஜாராம் செங்கல் சூளை முதலாளிக்கு லீசுக்கு கொடுக்கலாம்னு இருக்கேன். நேத்தே போன்ல எல்லா விவரங்களையும் அவர்கிட்ட நானும் வக்கீலும் பேசிட்டோம். இரண்டு நாள்ல லீஸ் டாக்குமெண்ட் ரெடியானதும் வாங்கிட்டு திரும்பவும் சென்னை கிளம்பிடுவேன். உங்களைப்  பத்தியும் அவர் கிட்ட சொல்றேன். கவலைப்படாதீங்க"

கண்ணம்மாவுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

குளித்துவிட்டு இட்லி சாப்பிடவன், வெளியே வந்து பால்கனியில் நின்றான். சுத்தமான காற்று அவனை தாலாட்டியது. மனம் உற்சாகமானது. கண்களை சுழல விட்டான்.

"ஹே ..................................." உள்ளம் உற்சாகத்தில் ரீங்காரமிட்டது. கொய்யா மரத்தின் அருகில் இருந்த   அந்த  பெரிய ரோஜா செடியின் பூக்களை சுற்றிலும் நிறைய வண்ணத்துப்பூச்சிகள்! சந்தோஷம் அவனை மீண்டும் நான்காம் வகுப்புக்கே கொண்டு சென்றது.  ஓடினான்.

"ஹே ........................" அருகில் சென்று கைகளை அசைத்தான்.

பதிலுக்கு அவையும் இறக்கைகளை படபடத்தன. சந்தோசக் கூத்தாடினான். வானமும் அவனுடன் சேர்ந்து கொண்டது. மாமரத்தில் நின்ற  மயில் தோகை விரித்து ஆடியது. வண்ணத்துப்பூச்சிகள் ரோஜா இலைகளுக்கு அடியில் ஒவ்வொன்றாய் பதுங்கியது. அவைகளை தொந்தரவு பண்ண விரும்பாமல் மழையில் நனைந்துகொண்டே பால்கனிக்கு வந்தான். வீட்டு வாசலின் நிலைக்கு மேலே பலவண்ணங்களில் பூக்கள் பூத்துக்குலுங்கும் ஊட்டி மலர் தோட்டத்தில் எடுத்த புகைப்படம். அதில் அழகான பிங்க் நிறத்தில் ஒரு வண்ணத்துப் பூச்சி. மழைக்குப் பயந்து வந்திருக்கவேண்டும். நிஜ பூக்கள் என்று நினைத்துவிட்டதோ என்னவோ!

<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhy4eMF7IIcBapP1TYvuXPZ2VQR3pimAzGTr6vHDMZd83fK1lk1EBan_Sgv_-f8-NuuflVnozIblNsGhyXB7eDBYhoc9TfWfejZ4IMwand4YRi9GsbloHVTcOyEGtcNrEj65HMCkYiPkKBL/s931/1.jpg" style="display: block; padding: 1em 0px; text-align: center;"><img alt="" border="0" data-original-height="931" data-original-width="931" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhy4eMF7IIcBapP1TYvuXPZ2VQR3pimAzGTr6vHDMZd83fK1lk1EBan_Sgv_-f8-NuuflVnozIblNsGhyXB7eDBYhoc9TfWfejZ4IMwand4YRi9GsbloHVTcOyEGtcNrEj65HMCkYiPkKBL/s320/1.jpg" width="320" /></a></div>
தலையை டவலால் துவட்டிக்கொண்டே, மேலே புகைப்படத்தைப் பார்த்தவன் மீண்டும் துள்ளிக் குதித்தான்.  இறக்கைகளில் கருப்பு பார்டரில் பிங்க் நிறம். அதில் நெற்றிப் பொட்டைப் போன்ற வடிவத்தில் மூன்று மஞ்சள் திட்டுகள்!. இதுவரையிலும் அவன் எந்த வண்ணத்துப் பூச்சியையும் இதுவரையில் பார்த்ததில்லை. அதை கையில் எடுத்து கொஞ்சவேண்டும் போல இருந்தது அவனுக்கு.

"உன் பேரென்ன?"

'கண்ணம்மான்னு  காலையிலேயே சொன்னேங்களேய்யா' உள்ளே சமையல் கட்டிலிருந்து சத்தம் வந்தது.

"இவ  வேற" என்று முணுமுணுத்தவன், வீட்டின் முன் கதவை சாத்திவிட்டு, மீண்டும் மெதுவாக,

"ஏய் ....பிங்கு .......உன் பேரென்ன?"

'...............'

"சொல்ல மாட்டியா? நான் உனக்கு ஒரு பேர் வைக்கட்டுமா?"

'ஆம்' என்பது போல் அந்த வண்ணத்துப் பூச்சி தன் இறக்கைகளை ஒருமுறை விரித்து மூடியது.

"பிரிஸில்லா....எப்படி இருக்கு. பிடிச்சிருக்கா?"

மீண்டும் இறக்கைகள் திறந்து மூடின.

கதவைத் திறந்து  பார்வையை உள்ளே நீட்டினான். கண்ணம்மாவை காணோம். மீண்டும் பூட்டியவன்,

"என்னை கல்யாணம் கட்டிக்கிறியா?"

'..........'

"ஏய் ...பிரிஸில்லாலா..... லா.....லா .....என்னைக்  கட்டிக்கிறியா?" அவனின்  குரல் தேனில் குழைந்து ஒரு டெசிபல் ஆனது.

பிரிஸில்லாவின் இறக்கைகள் மெதுவாக திறந்து ஒருமுறை அடித்து மீண்டும் மூடியது.


"ஹே ...................................."  ஆனந்தத்தில் கைகளைத் தூக்கி சத்தமிட்டான்.

வாசல் கதவு திறந்தது. கண்ணம்மாதான் நின்றிருந்தாள்.

"ஒண்ணுமில்ல" என்றவன், உள்ளே சென்று ஒரு நாற்காலியை எடுத்து வந்து பால்கனியில் போட்டு கையில் மொபைலை நோண்ட ஆரம்பித்தான். கண்ணம்மா உள்ளே நுழைந்ததும் பிரிசில்லாவை அவனின் மொபைல் பருகிக்கொண்டிருந்தது.

மழை நின்றிருந்தது.

பிரிஸில்லா வெளியே பறந்தாள்.

"ஏய்...சாயந்திரம் வந்துடு" என்றவன் தன் மெயில்களைப்  பார்க்கத்தொடங்கினான்.

"ஐயா, சாப்பிட வாங்க"

சாப்பிட்ட பின்  ஒரு குட்டித் தூக்கம் போட்டவன், ஐந்து மணி வாக்கில் கையில் காபி டம்ளருடன் அந்த ரோஜா செடியை நோக்கி சென்றான்.பக்கத்தில் கத்தரி செடிகள் நிறைய காத்திருந்தன.

அங்கே, அனைத்து  வண்ணங்களும் கால் முளைத்து பறப்பது போல அந்த ரோஜா செடியை சுற்றிலும் வண்ணத்துப் பூச்சிகள். நடுநாயகமாக பிரிசில்லா பறந்துகொண்டிருந்தாள்.

"ஏய் பொண்டாட்டி...நீ இங்கே தான் இருக்கிறியா? வீட்டுக்கு வர மாட்டியா?"

பிரிஸில்லா மெதுவாக அவனின் தோளில் வந்து அமர்ந்தாள்.

சந்தோஷத்தின் உச்சத்துக்கே போனான் அவன்.

"நீஙக எல்லோரும் தான்  அவளுக்கு திருமண தோழிகள். ஓகே வா?" என்றான் மற்ற வண்ணத்துப் பூச்சிகளைப் பார்த்து.

'ஆம்' என்பது போல அவை அனைத்தும் ஒரே நேரத்தில் இறக்கை அடித்தன. கைகளால் அவைகளுடன் வாலிபால் விளையாடினான்.

மாலை மயங்கியது.

கண்ணம்மா காலையில் வருவதாக சொல்லிவிட்டு அவள் வீட்டுக்கு சென்றுவிடாள்.

வீட்டுக்குள் வந்தவன் கொஞ்சநேரம் டிவி பார்த்தான். நேற்றைய பயண களைப்பின் தொட்ட குறை கண்களை சொக்கியது. சாப்பிட்டவன் அப்படியே சோபாவில் தூங்கிப் போனான்.

காலையில் , கண்ணம்மா பால் வாங்கி வந்து தன்னிடம் இருந்த சாவியால் கதவைத் திறந்து காபி போட்டு
அவனை எழுப்பினாள்.

காபியை வாங்கிக்கொண்டு பால்கனிக்கு வந்தான். வாசல் நிலைக்கு மேலே இருந்த படத்தைப் பார்த்தான். பிரிசில்லா இன்னும் வரவில்லை. குளித்துவிட்டு மீண்டும் பால்கனிக்கு வந்தான்.

ம்கூம். எந்த வண்ணத்து பூச்சிகளையுமே காணவில்லை. செல்லமாய் கோபித்துக்கொண்டான். இன்னிக்கு முழுவதும் உங்களிடம் பேசமாட்டேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

"ஐயா, மதியம் என்ன சமைக்கணும்?"

'நேத்து தோட்டத்துல நிறைய கத்தரிக்காய்கள்  பார்த்தேன். அந்த சாம்பார் வையுங்க'

"இன்னிக்கு காலையில தான் பூச்சிமருந்து அடிச்சிருக்கு. இன்னும் இரண்டு நாளைக்கு எந்த காயையும் பறிக்க கூடாதுங்க"

'என்னது, பூச்சி மருந்தா? யாரை கேட்டு அடிச்சீங்க' என்று கோபத்துடன் சொன்னவனுக்கு உள்ளுணர்வு  ஏதோ சொல்லியது.

அப்படின்னா என் பிரிஸில்லா......கடவுளே........வேகமாக அந்த ரோஜா செடியை நோக்கி ஓடினான். அங்கே அவன் கண்ட காட்சி ....

ஐயோ பிரிஸில்லா............பிரிஸில்லா.........அவள்  மட்டுமல்ல, நேற்று அவனிடம் சந்தோஷமாய் பேசிய அனைத்து வண்ணத்துப் பூச்சிகளும் ரோஜா செடி மூட்டுக்கு அருகே அசைவற்றுக் கிடந்தன. எறும்புகள் அவற்றை இழுத்துச்சென்று கொண்டிருந்தன.

பிரிஸில்லாவின் ஒரு இறக்கையை காணோம்.மெதுவாக அதை கையில் எடுத்தான்.

பிரிஸில்லா.......ஈன  குரலில் மெதுவாக கூப்பிட்டவன், வாயின் அருகில் கொண்டு சென்று தன் இதழ் பதித்தான். அவனின் கண்ணீர் பட்டு அந்த ஒற்றை இறக்கையும் தனியானது.  ஒரே நாள்ல என்னை தவிக்க விட்டுட்டு போயிட்டியே....பெருங்குரலெடுத்து அழுதான். அப்படியே உட்கார்ந்தான். சூரியன் உச்சிக்கு வந்து சுட்டது. அந்த ரோஜா செடியின் மூட்டிலேயே பிரிஸில்லாவை அடக்கம் செய்தான்.

மூன்று நாட்கள் ஆனது.

மெதுவாக இயல்பு நிலைக்கு வந்திருந்தான். கண்ணம்மாவின் கணவன்  ராஜாராமை அழைத்து வந்திருந்தான் . லீஸ் டாக்குமெண்ட் முழுவதையும் படித்த பிரணவ், புதிதாக ஒரு வரியை சேர்த்தான்.

"எக்காரணம் கொண்டும் பூச்சி மருந்து அடிக்கக்  கூடாது. இயற்கை விவசாயம் மட்டுமே செய்ய வேண்டும்"

சம்மதித்த ராஜாராம் கண்ணம்மாவின் கணவனிடம் கண்டிப்பாக அதை கடைபிடிக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு  கையெழுத்திட்டார். பணமும் டாக்குமெண்டும் கை மாறின. ராஜாராம் கிளம்பினார். எப்போதும் போல் வீட்டையும் தோட்டத்தையும் பார்த்துக்கொள்ள கண்ணம்மாவிடம் சொல்லிவிட்டு பிரணவும் தன் ஷோல்டர் பையை எடுத்துக்கொண்டு வாசல் கதவைத் திறந்து பாலக்கனிக்கு வந்தான்.

அவன் கண்கள் அனிச்சையாக வாசல் நிலையில் மாட்டியிருந்த படத்துக்கு சென்றது. அங்கே அவன் கண்ட காட்சி ............ கருப்பு பார்டரில் பிங்க் நிறத்தில் நெற்றிப் பொட்டைப் போன்ற  மூன்று மஞ்சள் திட்டுக்களுடன்   அழகான வண்ணத்துப் பூச்சி  தன்  இறக்கைகளை அடித்துக்கொண்டிருந்தது.

அவனைப்  பார்த்ததும் மெதுவாக பறந்து வந்து அவன் தோளில் அமர்ந்தது. அவனுள் உற்சாகம் ஊற்றெடுத்தது.

"ஹே................"   கையை நீட்டினான். உடனே உள்ளங்கையில் வந்து அமர்ந்தது.

"எனக்கு ஒரு முத்தம் தருவியா?"

மெதுவாக கையை மடக்கி கன்னத்தில் அருகே கொண்டு சென்றான்.

தன்  இறக்கைகளை விரித்து அவன் கன்னத்தில் படபடத்தது அந்த வண்ணத்துப் பூச்சி. அவனின் ஆனந்த  கண்ணீரை அதன் இறக்கைகள் துடைத்தன. மெதுவாக உதடு குவித்தான். உதட்டில் வந்து அமர்ந்து தன் காலால் அவன் உதட்டை தடவி விட்டு, ரோஜா செடியை நோக்கிப் பறந்தது.

அங்கே, தூரத்தில்  ரோஜா செடியை சுற்றிலும் நிறைய வண்ணத்துப் பூச்சிகள் பறந்துகொண்டிருந்தன.
                                                              -ஜேசு ஞானராஜ், ஜெர்மனி

ஈட்டி குத்திய பேராசை (திரைக்கதை சுருக்கம்)

சர்ர்ர்ர்ர்ர்ர் .............க்ரீச்............

அந்த 10 மாடி ஹோட்டலின் போர்டிகோவில் சிறிய உருமலுடன் அந்த போலீஸ் ஜீப் வந்து நின்றது. இன்ஸ்பெக்டர் ஜீவா வேகமாக இறங்கி உள்ளே சென்றார். ரிசப்ஷனில், ஜெர்மனியின் பிளாக் ஃபாரெஸ்ட்டில் வாங்கிய 'கூக்கூ' கடிகாரம் காலை 9 மணி என்று கூவியது. லிப்ட்க்கு வந்தார். கான்ஸ்டபிள் இருவர் அவருடன் இணைந்து கொண்டனர்.
1...2...3...4...5. லிப்ட் கதவு திறந்தது. காரிடாரில் வேகமாக நடந்து ரைட் சைடில் திரும்பி மூன்றாவது அறைக்குள் நுழைந்தனர். உள்ளே ஹோட்டல் மேனேஜர் ஷிவ்ராஜ் பேரருடன் நின்றுகொண்டிருந்தார். கட்டிலில் ஒருவர், கால் மேல் கால் போட்டபடி தலையணைக்கு முதுகை அணை கொடுத்த நிலையில் மயக்கத்திற்கு சிந்தனையை லீசுக்கு கொடுத்திருந்தார்.அவரின் இடது கை, 'பெட் சைடு டேபிளி'ல் உள்ள ஒரு மனித தலையின் மேல் இளைப்பாறிக்கொண்டிருந்தது. தன் உயிர், ஏழு கடல் தாண்டி பெரிய மலையின் சிறிய குகையில் வாழும் கிளியின் உடலில் உள்ளது என்று அந்த தலையின் கண்கள் பயம் கலந்த மிரட்சியுடன் சொல்லிக்கொண்டிருந்தது.
உள்ளே நுழைந்த இன்ஸ்பெக்டரிடம்,
"சார், இவர் கண்ணன், இந்த ஃபுளோரோட பிரேக்பாஸ்ட் இன்-சார்ஜ் பேரர். இவர் தான் முதல்ல பார்த்தது" என்றார் மானேஜர்.
' இண்டர்காம்ல பக்கத்து ரூமிலிருந்து தண்ணீர் கேட்டாங்கனு கொண்டு போகும் போது இந்த கதவு திறந்திருந்தது சார். 'டூ நாட் டிஸ்டர்ப்' டேக் கும் இல்ல. அதனால கூப்பிட்டுப் பார்த்தேன். அனக்கம் ஏதும் இல்லாததால் உள்ளே வந்தேன். கொலை நடந்திருந்தது' பேசிய பேரர் கண்ணன் பயத்தில் உறைந்திருந்தான்.
டொக் ...டொக்...
"கம்....மின்" இன்ஸ்பெக்டர் குரலில் 'யார்?' என்ற கேள்வி இருந்தது.
போரென்சிக் டிபார்ட்மெண்டிலிருந்து இருவர் உள்ளே நுழைந்தனர்.
'பாடி, கட்டிலுக்கு அடியில் இருக்கு சார்' மேனேஜர் சொன்னார்.
அவர்கள் தடயங்களை சேகரிக்கத்தொடங்கினர்.
கதவைத் தள்ளிக்கொண்டு ஒரு இளம்பெண் வேகமாக உள்ளே வந்தாள்.
"என்னங்க.............என்னங்க............ இப்படி ஆகிடுச்சே, உங்க அண்ணன் கூட வெளிய போகாதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா?.........................." அழுதுகொண்டே அந்த தலையை கட்டிப்பிடிக்க போனவளை கான்ஸ்டபிள் பிடித்துக்கொண்டார்.
'யாருமா நீ? இது யாரு உன் புருஷனா?'
"ஆமாங்க" அழுதுகொண்டே பதிலளித்தாள் ஸ்வப்னா.
'கட்டில்ல இருக்கிறவரு?'
"அது என் வீட்டுக்காரரோட அண்ணன் சார்"
குடும்பப் பிரச்சினை தான் காரணம் என்று இன்ஸ்பெக்டர் ஜீவாவுக்கு சுலபமாகப் புரிந்துவிட்டது. அவர், கான்ஸ்டபிளிடம்
"மயக்கத்தில் இருக்கிறவரை உடனடியா ஹாஸ்பிடல்ல சேருங்க. அந்த பொண்ணுகிட்ட, வீட்டு அட்ரஸை வாங்கிக்குங்க, போஸ்ட் மார்டத்துக்குப் பிறகு, பாடிய மார்ச்சுவரில வாங்கிக்க சொல்லுங்க" என்றவர் மினிஸ்டரின் மரம் நடுவிழாவுக்கு வேகமாக கிளம்பினார்.
விழா முடிந்து இன்ஸ்பெக்டரிடம் வந்த மினிஸ்டர், "எனக்கு பாதுகாப்பு வேண்டாம்னு நிறைய தடவை கமிஷனர் கிட்ட சொல்லிட்டேன். ஆனாலும் அவர் கேட்க மாட்டேங்குறார்" என்றார்.
'இது எங்க கடமை சார்'
"பணமும் பொண்ணும் தான் ஒருத்தனை தப்பு பண்ண வைக்குது. எனக்கு அந்த ரெண்டு மேலயும் ஆசை இல்ல. அதனால எதிரிகளும் இல்ல!" என்று சிரித்துக்கொண்டே சொன்ன மினிஸ்டர் காரில் ஏறி கிளம்பினார்.
மினிஸ்டரின் வார்த்தைகள் இன்ஸ்பெக்டருக்கு ஏதோ சொன்னது. கான்ஸ்டபிள் முருகனுக்குப் போன்செய்து,
"கான்ஸ்டபிள் குமாரை, ஹோட்டல்ல அந்த பேரர் கண்ணன் தங்கி இருக்கிற ரூமை சர்ச் பண்ண சொல்லுங்க.................நீங்க ஸ்வப்னாவை பாலோ பண்ணுங்க" என்றார்.
மதியம் 2 மணி. ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஜீவா முன்னால் மண்டியிட்ட நிலையில் பேரர் கண்ணன்.
"இந்த 10 இலட்சரூபாய் உனக்கு யார் கொடுத்தது? மறைக்காம எல்லாத்தையும் சொல்லிடு. இல்லனா உன் குடும்பம் மொத்தத்தையும் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்துடுவேன்" ஜீவா மிரட்டினார்.
உடலில் அடிபட்ட இடங்கள் தணுத்திருக்க, நிற்க திராணியில்லாமல் தரையில் உட்கார்ந்த பேரர் கண்ணன் சொல்ல ஆரம்பித்தான்.
"கோமாவுல இருக்கிறவர் பேரு சூரஜ், இறந்தவர் ஷங்கர். ரெண்டு பேரும் பிசினெஸ் பார்ட்னர்ஸ். அடிக்கடி எங்க ஹோட்டலுக்கு வருவாங்க. ஷங்கர் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக். அவர் மனசுக்கு பிடிச்சிருச்சின்னா அது யாரா இருந்தாலும் எப்படியாவது வளைச்சிடுவார். அப்படித்தான் சூரஜ் மனைவியும் ஷங்கர் வலையில் விழுந்தாங்க" சற்று நிறுத்தி தண்ணீர் குடிக்க,


அதே சமயம்-
கான்ஸ்டபிள் முருகன் பின்தொடர, ஸ்வப்னா அவள் வீட்டுக்குள் நுழைந்தாள். பக்கவாட்டு ஜன்னல் பக்கம் விரைந்தார் முருகன்.
சோபாவில் 28 வயது மதிக்கத்தக்க ஒருவன்.
கதவை தாளிட்டவள், வேகமாக ஓடிவந்து அவனை கட்டிக்கொண்டாள்.
"இனி எந்த பிரச்சினையும்இல்லீங்க. நீங்க கவலைப்படாதீங்க"
அவன் முகத்தில் சற்று நிம்மதி.
கான்ஸ்டபிள் முருகன் முகத்தில் குழப்பம்.
புருஷன் இறந்த துக்கம் இவளுக்கு கொஞ்சம் கூட இல்லையே! இவன் கள்ள புருஷனா? உள்ளே நுழையலாமா? என்று நினைத்தவர், பின் மனதை மாற்றிக்கொண்டு, அவர்கள் சந்தோஷத்தில் நாம் ஏன் கரடியாக இருக்கவேண்டும் என்று ஸ்டேஷனுக்கு கிளம்ப தயாரானார்.
போலீஸ் ஸ்டேஷனில் பேரர் தொடர்ந்தான்
"சூரஜை கொன்றுவிட்டால், பிசினஸ் முழுவதும் ஷங்கருக்கே கிடைக்கும் கூடவே போனஸாக சூரஜ் மனைவியும் கிடைப்பாள் என்பதால் என்னிடம் சூரஜுக்கு நிறைய தூக்கமாத்திரை போட்டு கூல்டிரிங்ஸ் கொடுக்க சொன்னார். அதற்காக எனக்கு 10 இலட்சரூபாய் தந்தார். நானும் அது மாதிரியே காலையில 8 மணிக்கு ஆப்பிள் ஜூஸில் தூக்கமாத்திரைகளை கலந்துகொடுத்தேன். அப்போது ஷங்கர் பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்தார். அப்புறம் அரை மணி நேரம் கழித்து ஷங்கருக்கு டிபன் என்ன வேண்டும் என்று கேட்கப்போனேன். அப்போது தான் ஷங்கர் தலையில் சூரஜ், கை வைத்தபடி மயங்கி கிடந்தார்" இது தாங்க நடந்தது என்றான்.
இன்ஸ்பெக்டர் ஜீவா குழப்பத்தின் உச்சத்துக்கே போய் விட்டார். அப்படியானால்,
அந்த பெண் ஸ்வப்னா? யார் அவள்? ஷங்கருக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? பல கேள்விகள் அவருக்குள்.
அங்கே ஸ்வப்னா வீட்டில்-
கான்ஸ்டபிள் முருகன் ஸ்டேஷனுக்கு கிளம்ப எத்தனித்த சமயம், அவர் பார்வை எதேச்சையாக
சோபா அருகில் இருந்த மேஜையில்படிந்தது. உடனடியாக ஜீப்பை அனுப்பி வைக்குமாறு ஸ்டேஷனுக்குப் போன் செய்தார்.
ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் மற்றும் அனைவரும் குழப்பத்தில் இருக்க, முருகன் ஜீப்பில் இருந்து இறங்கினார். கூடவே கையில் விலங்குடன் ஸ்வப்னா மற்றும் அவள் கணவன்.
இருவர் முகமும் அழுததால் வீங்கிப்போயிருந்தது.
ஸ்வப்னாவின் கணவன் ரகு பேச ஆரம்பித்தான்.
"என் கடைக்கு அடிக்கடி வருவார் ஷங்கர். என் மனைவியை பார்த்த நாள் முதல் அவரின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. ஒருநாள் நான் இல்லாத நேரம், வீட்டுக்கே வந்து ஸ்வப்னாவுக்கு தொந்தரவு செய்தார். ஸ்வப்னா ரொம்ப மனமொடிந்துவிட்டாள்.இதற்கு ஒரே வழி ஷங்கரை இந்த உலகத்தை விட்டே அனுப்புவது தான் என்று முடிவு பண்ணினேன். சில நாட்கள் அவனை பின் தொடர்ந்தேன். இன்று காலையில் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்த நான், நேராக அவன் ரூமுக்கு சென்றேன். குளித்துவிட்டு வெளியே வந்தான். கொண்டு போயிருந்த கத்தியால் என் ஆத்திரம் தீர அவன் தலையை தனியாக்கினேன். அவன் தலை கீழே உருளாமல் இருக்க, கட்டிலில் மயக்கத்தில் இருந்தவரின் கையை அதன் மேல் வைத்து சப்போர்ட் கொடுத்தேன். உடலை கட்டிலின் அடியில் தள்ளினேன். பின் வெளியேறிவிட்டேன்" தன் மனைவி ஸ்வப்னாவைப் பரிதாபமாக பார்த்தான் ரகு.
ஸ்வப்னா தொடர்ந்தாள்.
"போலீசில் மாட்டாமல் இருக்க, இதை குடும்ப பிரைச்சினை போல சித்தரிக்கவே நான் அங்கு வந்து அழுது அப்படி நாடகம் ஆடினேன், ஆனா மேஜையில் இவர் வைத்திருந்த இரத்தம் படிந்த கத்தி காட்டிக்கொடுத்துவிட்டது, எங்களை மன்னிச்சிடுங்க" அழுதாள் ஸ்வப்னா.
அப்போது, "சூரஜ் இறந்துவிட்டார்" என்று மருத்துவமனையிலிருந்து போன் வந்தது.
இன்ஸ்பெக்டர் ஜீவா ஒரு முடிவுக்கு வந்தார்.
அன்று மாலை-
ஸ்வப்னா தன் கணவன் ரகுவுடன் கோவிலில் சந்தோஷமாக சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தாள். பேரர் கண்ணன் தன் பேராசை மனதை சாமியின் ஈட்டிக்கு அடியில் சமர்பித்துக்கொண்டிருந்தான். போலீஸ் குற்றப்பத்திரிகையில் சூரஜ், ஷங்கரை கொன்றுவிட்டார்.
ஜீவா, ஜீப்பில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். தூரத்தில், மேடையில் மினிஸ்டர் பேசிக்கொண்டிருந்தார்.
"பணமும் பொண்ணும் தான் ஒருத்தனை தப்பு பண்ண வைக்குது. எனக்கு அந்த ரெண்டு மேலயும் ஆசை இல்ல".
மினிஸ்டர் பேச்சைக் கேட்டு, இன்ஸ்பெக்டர் ஜீவாவின் அருகில் இருந்த அந்த 10 இலட்ச ரூபாய் சூட்கேஸ் அமைதியாய் சிரித்தது.

மச்சக்காரி (திரைக்கதை சுருக்கம்)

"அம்......ம்ம்ம்மே....ஆ ..." என்ற குரலுடன் கோளையும் சேர்ந்தே வாயிலிருந்து வழிந்தது ஐந்து வயது ரியாவுக்கு. கண்களின் பார்வையும், தொடர்ந்த தலையாட்டுதலுமே அவள் சராசரி குழந்தை இல்லை என்று சொல்லாமல் சொல்லிற்று.

மகளின் குரல் கேட்டு சமையலறையிலிருந்து ஓடிவந்த விமலா, ரியாவின் வாயில் வடியும் கோளை நீரை தன் முந்தானையால் துடைத்துவிட்டாள்.
அம்மாவைப் பார்த்ததும் கன்ன சதைகள் லேசாகி விரிந்தது ரியாவுக்கு. அவள் சிரிக்கிறாள் என்பது விமலாவுக்குப் புரிந்தது. ஆனால் உதட்டிலும் வாயசைவிலும் எந்த ஒரு மாறுதலுமில்லை. தன் மகளை வாரி எடுத்து அணைத்துக்கொண்டாள்.
"அம்மா, சமைக்கவேண்டாமா செல்லம்!" மகளின் நாடியைப் பிடித்து கொஞ்சினாள்.
"வா...கிச்சனில் இருந்து விளையாடு" என்றவள் மகளை தூக்கிக்கொண்டு கிச்சனுக்கு சென்றாள். பொம்மைகளை தரையில் பரப்பி, ரியாவை நடுவில் இருத்தினாள்.
நிமிர்ந்தவள் கண்களில் கண்ணீர்.
மருத்துவராயிருந்தும் தன் மகளை குணப்படுத்தமுடியவில்லையே என்ற கவலை, தன் மேலேயே அவளுக்கு வெறுப்பை உண்டாக்கியது. முன் ஹாலில் டிவியில் ஓடிக்கொண்டிருந்த செய்தி, அவள் காதுகளுக்கு வேலை கொடுத்தது.
"கடந்த வாரம் நாகர்கோவில் வந்திருந்த, ஜெர்மனி குடியுரிமை பெற்று அங்குள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம் விஞ்ஞானி மிஸ்.மரியா, லாரி மோதி உயிரிழந்தார். அன்னாரின் பூதவுடல், புனித அந்தோனியார் சர்ச் வளாகத்தில் உள்ள கல்லறைத்தோட்டத்தில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது".
தனியார் தொலைக்காட்சியில் இரவு எட்டரை மணி செய்தியை 'பாப் கட்' செய்திருந்த இளம்பெண் வாசித்த மறுகணமே 'டொட்டொடொய்' ம்யூஸிக்குடன் விளம்பரம் ஒளிபரப்பானது. செய்தி வாசித்த அதே அரிவை, "என் நீளமான தலைமுடிக்கு 'டார்ஸ்' தேங்காய் எண்ணெய் தான் காரணம்" என்று 'விக்' முடியுடன் காதலனிடம் கொஞ்சிக் கொண்டிருந்தார்.
******
அதே டிவி செய்தியை டாக்டர் மதனும் தன் இருப்பிடத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
தொலைக்காட்சி செய்தியிலிருந்து கண்களை எடுக்காமலேயே "பிரேம்......நீ ரெடியாகிட்டியா?" என்றார்.
'இதோ கிளம்பறேன் சீனியர்' என்ற பிரேம் உடனே வெளியேறினான். அவனின் நடையில் வேகம் தெரிந்தது.
முன்னிரவு-
பத்து முறை ஆலய மணியடித்து “உனது நாட்டில் வாழும் அயல்நாட்டுக்காரர்களுக்குக் கெடுதல் செய்யாதே, லேவியராகமம் 19:33" என்ற வாசகம் ஸ்பீக்கரில் ஒலித்தது.
அவன் மெதுவாக கல்லறை தோட்டத்து வாயில் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தான். பகலில் பெய்த மழை, கீழே விழுந்து கிடந்த காய்ந்த சருகுகளை நனைத்திருந்தது. வேகமாகவே நடந்தான். தூரத்தில் எங்கோ நாய் குறைத்தது. பெரிதாக வளர்ந்திருந்த வேப்பமரத்தின் வடக்கு நோக்கிய கிளையில் இரண்டு ஆந்தைகள் கொஞ்சிக்கொண்டிருந்தது. மரியாவின் கல்லறையை அடைந்தான்.
நிறைய மாலைகள்! ரோஜா, அரளி, சம்பங்கி, கேந்தி என்று ஒரு மலர் குடும்பமே அங்கு சட்டசபை நடத்தியது. மாலைகளை ஒதுக்கி குழியைத் தோண்ட ஆரம்பித்தான். அப்போதுதான் மூடியிருந்த குழியாதலால் சீக்கிரமே தோண்டிவிட்டான். சவப்பெட்டியை உடைத்து மரியாவை வெளியே எடுத்தான். தன் மூளையில் பதிவாகியிருந்த டாக்டர் படிப்பு அவனுக்கு இந்த சமயத்தில் மிகவும் உதவியாக இருந்தது. ஒரு மணி நேரத்தில் வேலையை முடித்தவன், மீண்டும் குழியை மூடி, மாலைகளைப் போட்டான். இரையெடுத்த பாம்புகள் போல அவைகள் ஆங்காங்கே சுருண்டு விழுந்தன.
வேகமாக நடந்து கேட் அருகே வந்தபோதுதான் அங்கே நின்றிருந்தவனை கவனித்தான். அதிர்ச்சியில் உறைந்தே போனான். இந்த நிகழ்வை இரண்டு மீன் விழிகள் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தன. வலது கண்ணின் ஓரத்தில், ஆண்ட்ராய்டு போன் காமிரா அளவு மச்சம் அந்த கண்களை இன்னும் அழகாக்கியது. அவர்கள் இருவரையும் அந்த மச்சக்காரியின் ஆப்பிள் போன் 'கிளிக்'கியது.
*****


நள்ளிரவு 12:30 மணி-
"சக்ஸஸ் சீனியர்" என்ற உற்சாகக் குரலுடன் நுழைந்தான் பிரேம். அவன் கைகளில் ஃபார்மால்டிஹைடு திரவத்தில் கண்ணாடி சீசாவில் மூழ்கியிருந்தது விஞ்ஞானி மிஸ். மரியாவின் மூளை.
அதை தன் கைகளில் வாங்கிய டாக்டர் மதனின் முகம், ராக்கெட் கிளம்பும் போது வெளிப்படும் தீக்குழம்பின் வெளிச்சம் போல பிரகாசமாக ஒளிர்ந்தது. இந்த மூளையில் இருக்கிற 100 பில்லியன் நரம்பில், ஒரு நரம்பின் முழு செயல்பாடுகளையும் 'எண்டு டு எண்டு' கண்டுபிடிச்சாக் கூட போதும்! உலகின் தலை சிறந்த நியூராலஜிஸ்ட் நான்தான். அவரின் பேச்சில் ஆர்வமும், துடிப்பும், வெறியும் கலந்திருந்தது.
"பிரியா எங்கே சீனியர்?" தன் வேஷ்டியையும் தலையில் கட்டிஇருந்த முண்டாசையும் கழற்றிக்கொண்டே கேட்டான் பிரேம்.
'அவ இப்போ தான் வீட்டுக்கு கிளம்பினா'
"சரி, டாக்டர், நானும் கிளம்பறேன், நாளைக்கு காலையில வர்றேன்" என்றவன், பேண்ட் ஷர்டுக்கு மாறி மூக்குக்கு கீழே ஒட்டி வைத்திருந்த முறுக்கு மீசையையும் கழற்றி மேஜை டிராயரில் வைத்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்.
காலையில் பிரேமுக்கு முன்னமே வந்திருந்த பிரியா, டாக்டரின் லாபரேட்டரியில் உள்ள கம்பியூட்டரில் மூளை பற்றிய அவரின் குறிப்புகளைப் படித்துக்கொண்டிருந்தாள்.
'ஹே பிரியா' உற்சாகத்துடன் உள்ளே நுழைந்தான் பிரேம்.
"வா .......உனக்காகத்தான் வெயிட்டிங்....நேற்றைய த்ரில் அனுபவம் எப்படி இருந்தது, சொல்லு" ஆர்வமானாள் பிரியா.
'சீனியர் எங்கே?'
"வெளிய போயிருக்கார்..... நீ சொல்லு"
'வெட்டியான் வேடத்துல உள்ளே போனா யாருக்கும் சந்தேகம் வராதுன்னு பெரிய மீசை, முண்டாசு, வேட்டி சகிதம் கல்லறை தோட்டத்துக்கு போனேன்' என்றவன் ஜன்னல் வழியே வெளியே பார்த்து 'மழை வரும் போல இருக்குல்ல' என்றான்.
"டேய் ....சீக்கிரம் சொல்லுடா" ஆர்வத்தில் சிணுங்கினாள் பிரியா.
'மரியாவோட மூளையை எடுத்து பாட்டில்ல போட்டுக்கொண்டு வெளிய வரும்போது ஒருத்தர் வந்துட்டார். எனக்கு 'திக்'னு ஆயிடிச்சு. பேண்ட் சட்டை, டை னு பாக்க 'டிப்டாப்பா இருந்தார். என்னை வெட்டியான்னு நினைச்சுகிட்டு,
"ஐயா, நான் கம்பியூட்டர் என்ஜினியர், 'விர்ச்சுவல் ரியாலிட்டி' அப்ளிகேஷன் ப்ராஜெக்ட் ஒண்ணு பண்ணிக்கிட்டிருக்கேன். அதுக்கு இந்த கல்லறை தோட்டத்தை நைட் எபெக்ட்ல 360 டிகிரி கோணத்துல படம் எடுக்கணும். நான் உள்ளே போய் புகைப்படம் எடுக்கலாமானு கேட்டார்".
நான் பதில் சொல்றதுக்குள்ளே, 'இந்த பணத்தை வைச்சுக்குங்க' என்றவர், நடுப்பகுதிக்கு கூட்டிட்டுப் போகச்சொன்னார். நான், மண்வெட்டியையம் பாட்டிலையும் கீழே வச்சுட்டு உள்ளே கூட்டிட்டுப்போனேன்.
ஜன்னலுக்கு வெளியே மழை சடசடவென பெய்ய ஆரம்பித்தது.
'நீங்க போட்டோ புடிச்சுக்குங்க, நான் அவசரமா வீட்டுக்கு போகனும்'னு அவர்கிட்ட சொல்லிட்டு பாட்டிலையும் எடுத்துக்கிட்டு இங்கே வந்துட்டேன் என்றவன்,
பாக்கெட்டுக்குள் கைவிட்டு 500 ரூபாய் நோட்டுக்கட்டை காட்டினான்.
'எனக்குக் கிடையாதா பிரேம்?'
"எல்லாமே உனக்குத்தான்" என்றவன், அவள் கன்னத்தில் முத்தம் பதித்தான்.
'டாக்டர் மதனோட இந்த மூளை ஆராய்ச்சி மட்டும் சக்சஸ் ஆச்சுன்னா, அவர் கிட்ட அசிஸ்டண்ட்டாக இருக்கிற நாமளும் உலகம் முழுக்க பிரபலமாயிடுவோம்' சந்தோக்ஷமாய் சொன்ன பிரேமின் வார்த்தைகளை ஆமோதித்தவளாய் அவனுடன் ரிஷப்ஷனுக்கு நடந்தாள்.
அப்போது பிரேமின் போன் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தான்.
புது எண்ணிலிருந்து அவனின் வாட்ஸப்புக்கு ஒரு போட்டோ வந்திருந்தது.
நேற்றிரவு கல்லறைத்தோட்ட கேட் வாசலில் அவனும் அந்த கம்பியூட்டர் இன்ஜினியரும் பேசும் போது எடுக்கப்பட்ட புகைப்படம். அந்த படத்தில், வாயை பெரிதாக பிளந்து, கோரமாய் சுட்டெரிக்கும் பார்வையுடனான மரியாவின் முகத்தை, கம்பியூட்டர் கிராபிக்ஸ் மூலம் ஒன்றிணைத்திருந்தது. பார்த்தவன் அதிர்ந்தான். பிரியாவும் தான்!.
அதே சமயம், உள்ளே லேபராட்டரிக்குள்-
பீரோவுக்குள் இருந்து மெதுவாக வெளியே வந்தாள் விமலா.
தன்னுடன் கொண்டுவந்திருந்த பென் டிரைவை கம்பியூட்டரில் சொருகினாள். கீபோர்டில் அவள் விரல்கள் விளையாடின. சில நிமிடங்களிலேயே முக்கிய ஃபைல்கள் இடம் மாறின. பென் டிரைவை உருவியவள், வேகமாக கதவை நெருங்கினாள். அப்போது உள்ளே வந்த பிரேம்,
"யார் நீ.....இங்கே என்ன பண்றே? ......" குழப்பத்தில் எதுவும் புரியாமல் அவளை விசாரிக்க, அதற்குள் அவளின் இடது கைமுட்டி அவனின் தொடை இடுக்கைப் பதம் பார்த்தது. பிரேம் நிலைகுலைந்து கீழே விழுந்தான்.
"பிரியா ............" அலறியவனின் கன்னத்தில் 'பளார்' என்று அறைந்தாள்.
தடுமாறியவன், அவளை இறுகப் பிடித்தான். இருவரும் தரையில் உருண்டனர். மஞ்சள் நிற சேலைக்கு மேட்ச்சாக அவள் அணிந்திருந்த செயின் அவன் கையில் மாட்டி கீழே விழுந்தது.
சத்தம் கேட்டு ஓடிவந்த பிரியா, ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து அதிர்ந்தாள். உள்ளே ஓடி வருவதற்குள், விமலா அவனைத் தள்ளி விட்டு வெளியே ஓடிப்போனாள்.
பிரியாவும் பிரேமும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
சற்று நேரத்தில் டாக்டர் மதன் குடையை மடக்கிக்கொண்டே உள்ளே நுழைந்தார். உடனே பிரேம், அந்த புகைப்படத்தை காட்டினான்.
நேற்று பிரேம், மூளையை எடுத்ததை யாரோ கவனித்திருக்கிறார்கள் என்று மதனுக்குப் புரிந்தது..
'யாராய் இருக்கும்' என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே பிரியா, சற்று முன் அங்கு நடந்த களேபரங்கள் அனைத்தையும் கூறி கீழே கிடந்த அந்த சங்கிலியையும் மதனிடம் கொடுத்தாள். அதில் இருந்த "வி" என்ற ஆங்கில எழுத்து டாலரைப் பார்த்தவுடன் டாக்டருக்கு முழுவதும் புரிந்துபோயிற்று.
வந்தவள் விமலா தான்.
உங்களுக்கு முன்னர், என்னிடம் அசிஸ்டன்டாக வேலை பார்த்தவள். இப்போது அவளும் இந்த மூளை ஆராய்ச்சியில் தான் ஈடுபட்டிருக்கிறாள். விஞ்ஞானி மரியாவின் மூளையை எடுக்கத்தான் வந்திருப்பாள்.
"மூளை பத்திரமாக இருக்கிறதா?" பதட்டத்துடன் வினவினார் டாக்டர்.
'அது பத்திரமாத்தான் இருக்கு'
வேகமாக லேபுக்குள் சென்றவர், பாட்டில்லைத் திறந்து கண்ணாடி குச்சியால் மூளையைத் தொட்டவர் அதிர்ந்தார். அது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட டம்மி மூளை.
*****
விமலா வீட்டில்-
நெற்றியில் கூகுள் ஹெட் செட்டுடன் விர்ச்சுவல் ரியாலிட்டியில், நேற்றிரவு எடுத்த கல்லறைத் தோட்ட புகைப்படத்துக்குள் உலவிக்கொண்டிருந்த விஜயிடம்,
"காபி....." என்றாள் மனைவி விமலா.
ஹெட் செட்டை கழற்றியவன், மடியில் இருந்த மகள் ரியாவை கீழே இறக்கிவிட, அப்போது....
கதையின் முடிவைத் தெரிந்து கொள்ள எனக்கு PM செய்யவும்.

My article on Dinamani


 


https://www.dinamani.com/specials/world-tamils/2021/mar/01/tamil-seat-at-the-university-of-cologne-germany-european-tamils-%E2%80%8B%E2%80%8Brequest-3572449.html?fbclid=IwAR2O-wvLefbFS7eJsq6vJRs90b9AN1qf0vbS47BVhAufwC7KTsoD9h0OUaI

ஜெர்மனியில் மேற்படிப்பு

 "ஜெர்மனியில் மேற்படிப்பு" பற்றிய நான் எழுதிய கட்டுரை 'இந்து தமிழ்' நாளிதழில் வெளியாகியிருந்தது. ஜெர்மனியில் மேற்படிப்பு படிக்க விரும்புபவர்கள், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் தாராளமாக என்னை தொடர்பு கொள்ளலாம்.