Wednesday, May 29, 2019

ஜெர்மனியில் கல்விக்கண் திறந்த மூன்சென் தமிழ்ச்சங்கம்

ஜெர்மனியில் கல்விக்கண் திறந்த முன்சென் தமிழ்ச்சங்கம்
_____________________________________________
புலவர்களைப் கவி புனையச் சொல்லி, அவர்களுக்கு பொற்கிழியையும், பொற்காசுகளையும் வழங்கிய மன்னர்களுக்கு மத்தியில் தன் பாடலின் மூலம் பல நல்ல உள்ளங்கள் கல்விச்சாலைகள் ஆரம்பிக்க ஊக்கப்படுத்திய அதிவீரராம பாண்டிய மன்னனின் புகழ், தமிழுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். அப்படி என்ன பாடலை அவர் எழுதினார் என கேட்கிறீர்களா? பதில் உள்ளே!
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பது போல, கடந்த ஒரு மாத காலமாகவே, எம் தமிழர்களின் சந்தோஷம், ஜெர்மனியின் முன்சென் நகரையும் தொற்றிக்கொண்டது. ஏன் தெரியுமா? இங்கு வாழும் தமிழ் மக்கள், தஞ்சை தமிழ் இணையப் பல்கலைக்கழகத்ததுடன் இணைந்து "முன்சென் தமிழ் அகாடமி"யை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
இது தமிழ்ப் பள்ளி என்று ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாது. நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பாணியில், கலை மற்றும் கலாச்சாரம், பண்பாடு, நாட்டுப்புற கலைகள், இலக்கியம், நூல் நிலையம் என்று ஒரு பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளையும் உள்ளடக்கியுள்ளது இந்த அகாடமி. கல்வி மற்றும் பாடப்பிரிவுகள், மாணவர் சேர்க்கை, கட்டண விகிதம் என அனைத்தையுமே நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மாதிரி இவர்களே நிர்ணயித்துக்கொள்ளலாம்.
ஒரு வருடத்திற்கும் மேலாக பலரின் கடின உழைப்புக்குக் கிடைத்த பலன் தான் இந்த தமிழ் அகாடமி. 2018-ம் ஆண்டு முன்சென் தமிழ்ச்சங்கம் ஆரம்பித்தபோதே இந்த தமிழ் அகாடமிகான விதை ஊன்றப்பட்டது. அதைப்பற்றி தெரிந்துகொள்ள திரு.செல்வகுமார் பெரியசாமி அவர்களை அலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டோம்.
பேசும் போதே அவர் குரலில் அத்தனை உற்சாகம்! அவர் பேசும் போது " அமெரிக்கா, UK மற்றும் சிங்கப்பூரில் உள்ள தமிழ் சங்கங்களிடம், பள்ளிக்கூடம் அமைப்பது தொடர்பாக பேசி சில விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.அதன் பின்னர் , தஞ்சை தமிழ் இணைய பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொண்டு , பாடத்திட்டங்கள் சமபந்தமாக சில விளக்கங்கள் கேட்டு தெளிவு பெற்ற பின்னர், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் எங்களுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. தமிழில் டிப்ளமோ மற்றும் இளங்கலை பாடத்திட்டங்கள் வரை எங்கள் எதிகாலப் பட்டியலின் நீளம் ரொம்ப அதிகம்" என்றார். மேலும் தொடர்ந்து அவர் பேசும் போது "திரு.திலக் ஸ்ரீராம் அவர்கள், முன்சென் நகர அலுவலகங்களில் அனுமதி வாங்குவது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு முறைகள் போன்ற வேலைகளைப் பார்த்துக்கொள்ள, திரு.நிர்மல் ராமன் அவர்கள் பள்ளியின் கட்டமைப்பு, செயல்முறை, மற்றும் மக்கள் தொடர்பு சம்பந்தமான வேலைகளைப் கவனித்துக் கொண்டார்" என்றார்.
அவரைத்தொடந்து இந்த அகாடமிக்கு விதை ஊன்றிய திரு. அருண் சின்னமணி பேசும் போது " முன்சென் நகர நிர்வாகம், தங்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை "Grundschule an der Swanthalerstr" பள்ளியை பயன்படுத்திக்கொள்ள அனுமதி தந்திருக்கிறார்கள்" என்றார். தன்னார்வத் தொண்டர்களை ஒன்றிணைத்து அகாடமி சம்பந்தமாக அனைத்து வேலைகளையும் உடனுக்குடன் முடித்து சித்திரை திருநாளில் திறப்புவிழா ஏற்பாடுவரை இவரின் பங்கு மகத்தானது.
இங்கு அமைந்துள்ள இந்தியத் தூதரகமும் இவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, பக்க பலமாய் துணை நிற்கிறது. மேலும் தமிழ் இசை மன்றத்திற்குத் தேவையான இசைக் கருவிகளை வாங்கிக்கொடுக்கவும் எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது.
ஜெர்மனியைப் பொறுத்தவரையில், கல்வியாண்டு செப்டெம்பரில் ஆரம்பிப்பதால், இவர்களும் தமிழ் அகாடமி வகுப்புகளை அதே மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளார்கள். ஆனால், தற்போது ஆயத்தவகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ 40 பிள்ளைகள் இது வரையிலும் பதிவு செய்திருக்கிறார்கள்.5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பாடல்கள் சொல்லிக்கொடுப்பது என்றும், 6 முதல் 11 வரை உள்ள பிள்ளைகளுக்கு எழுதுவது, படிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவது என்றும் அகாடமி குழுவினர் முடிவு செய்துள்ளனர்.தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நபர்கள் உள்ள இந்த குழு பயிற்றுவித்தலில் கவனம்செலுத்த, மற்றோர் குழு பாடத்திட்டங்கள் வரையறுத்தல், தேர்வுத் தாள் தயாரித்தல் போன்ற பணிகளை ஈடுபட்டுள்ளது.
மூன்றாவதாக, இன்னொரு 10 நபர்கள் கொண்ட நிர்வாகக் குழுவானது, மாணவர் சேர்க்கை, வருகைப் பதிவேடு, பள்ளியில் மாணவ மாணவிகளின் பாதுகாப்பு, சமூக ஊடகங்களில் அகாடமி பற்றிய செய்திகளை அப்டேட் செய்வது போன்ற வேலைகளை கவனித்துக்கொள்ளும்.
மிருதங்கம், நாதஸ்வரம் போன்ற நம் தமிழ் கலாச்சாரம் சம்பந்தமான இசைக்கருவிகள் பயிற்றுவித்தல், சிலம்பாட்டம் கற்பித்தல் போன்ற நம் மரபு சார்ந்த கலைகளும் இனி வரும் காலங்களில் கற்றுக்கொடுக்கப்படும் என்பது சந்தோஷமான கூடுதல் செய்தி!
கடந்த வார ஆயத்த வகுப்புக்கு தன் 7 வயது மகள் லியோவுடன் வந்திருந்த திருமதி. கவிதா ஜியோ நம்மிடம் " முன்சென் நகரைப் பொறுத்தவரை, தமிழ் பள்ளி என்பது ஒரு கனவு தானோ! என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் இப்படி ஒரு அகாடமி ஆரம்பித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இனி என் மகளும் 'பொன்னியின் செல்வன்' படிப்பாள்" சொல்லும் போதே அத்தனை பெருமிதம் அவரது குரலில்!.
கலை,கலாச்சாரம், மொழி மற்றும் பாரம்பரியம் என்னும் உயரிய குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள முன்சென் தமிழ் சங்கத்துடன் ரயில் தண்டவாளம் போல இந்த தமிழ் அகாடமியும் நடை பயில ஆரம்பித்திருக்கிறது.ஆம்! சித்திரை 1 ம் தேதி மிகப் பிரமாண்டமாக திறப்புவிழா நடத்தினார்கள். எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் கடவுளை நினைத்து குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பிப்போம். ஆனால் இங்கோ, அந்த இறைவனே வந்து விளக்கேற்றினார். என்ன! ஆச்சரியமாக இருக்கிறதா? "குழந்தையும் தெய்வமும் ஒன்று" என்று நம் முன்னோர்கள் காரணமாய்தான் சொல்லியிருக்கிறார்கள்.
இப்படி பலரின் முயற்சியாலும், கடின உழைப்பாலும், ஜெர்மனியின் முன்சென் நகரில் இன்று தமிழ் அகாடமி உயர்ந்து நிற்கிறது.விவேகானந்தர் தேடிய 100 இளைஞர்களில் இந்த நல்ல உள்ளங்களுக்கு நிச்சய இடம் உண்டு.
ஆம்! அதிவீரராம பாண்டியரின் வெற்றிவேற்கையின் "எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்" என்பது முன்சென் தமிழ்ச்சங்கத்துக்கு சாலப்பொருந்தும்.
அவர்களின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்!
Photo: முன்சென் தமிழ்ச்சங்கம்
Like my FB Page: "J5 News"
Visit my blog: www.jfivenews.blogspot.com

No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram