Monday, May 27, 2019

என்ன மீசையை முறுக்குகிறாயா?

updated version of "விசித்திர மீசைகள்"

கடந்த வாரம், பெல்ஜியத்தின் ANTWERP ல் உள்ள குயின் எலிசபெத் ஹால் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது. மேடையில் இருந்த அனைவருமே விதவிதமான தாடி மீசையில்!. பார்வையாளர்களோ சந்தோஷத்தின் விளிம்பில்!!அப்படி என்ன நிகழ்ச்சி என்கிறீர்களா? யாருடைய தாடி, மீசை அழகாக இருக்கிறது என்பதற்கான போட்டி தான் இது. இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் இந்த விழாவுக்கு
அமெரிக்கா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல மீசை ஜாம்பவான்கள் வந்திருந்தனர்.
ஜெர்மனியின் Black forest என்ற ஊரில் 1990 ம் ஆண்டு, Höfener Beard Club தொடங்கப்பட்டு அதன் மூலம் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை போட்டி நடத்த முடிவெடுக்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில், மூன்றாவது நாள் முழுக்க முழுக்க பெண்களுக்காக. குழப்பமாக இருக்கிறதா? செயற்கை தாடி மீசையில் யார் அழகு என்ற போட்டி தான்!




மீசையைப் பொருத்தவரையில் பல பழமொழிகளும், முதுமொழிகளும் நம் வழக்கத்தில் உள்ளன.
" குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டலை"
"கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை"
"மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை"
"அத்தைக்கு மீசை முளைத்தால்...."
வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தில் கூட,
" என்ன மீசையை முறுக்குகிறாயா! அது ஆபத்தின் அறிகுறி"
தமிழ் நாட்டைப் பொருத்தவரை, மீசை வேண்டாம் என்று நினைக்கிற இளைஞனை பார்ப்பது அபூர்வம். அந்த அளவிற்கு மீசை மேல் ஒரு ஈர்ப்பு அனைத்து இளைஞர்களுக்குமே உண்டு. மீசையின் இரண்டு ஓரத்தையும் சிறிது முறுக்கி விட்டு தானும் போலிஸ் என்ற நினைப்பில் உலாவரும் டீன் ஏஜ் பருவத்தினரின் கனவுகள் பல.
மீசையைப் பொருத்தவரையில் விதிவிலக்காக ஒரு சிலர் உண்டு. முறுக்கிய மீசையுடன் வெள்ளை வெட்டி சட்டையில் தங்களை எதற்கும் பயப்படாத தைரியசாலியாக காட்டிக்கொள்வதை பெருமையாக எண்ணுவார்கள். நம் வீட்டு தாத்தா, பூட்டன் போன்ற பெரியவர்களின் புகைப்படங்களை பார்த்தால் இரண்டு பக்கமும் மீசையை அழகாக சீவி மேல் நோக்கி வளைத்து விட்டிருப்பார்கள். அந்த மீசையின் அடர்த்தியே அவைகளின் நாட்டாமையை பறைசாற்றும்.
முறுக்கிய மீசை வானத்தைப் பார்த்தவண்ணம் இருந்தால் வீரத்தின் அடையாளம் என என்னும் நமக்கு நேரெதிர் சீனர்கள். அவர்களின் மீசை பூமியை பார்த்து தொங்கிய வண்ணம் இருக்கும். வட நாட்டினரையோ வெளிநாட்டினரையோ எடுத்துக்கொண்டால் மீசை வைத்திருப்பவர்களை எண்ணி விடலாம்.உலகை அழவைத்த
ஹிட்லருக்கும் அரை மீசை!
உலகை சிரிக்க வைத்த சார்லி சாப்ளினுக்கும் அரை மீசை!!
என்ன ஒரு முரண்பாடு!!
ஒருவரை சவாலுக்குத் தயாரா என்றால் கூட உடனே "தோத்துட்டா ஒரு பக்க மீசையை எடுத்திருவியா" என்று தான் முதலில் கேட்ப்பார்கள்.திருச்சி மாவட்டத்தில் மங்கலம் என்னும் ஊரில் மீசையுடன் இருந்த ஒரு புத்தர் சிலையைக் சில வருடங்களுக்கு முன் கண்டுபிடித்தனர்.
விவேகனந்தரின் மாணவியான நிவேதிதையை தமது குருவாக கொண்டவரான நம் தமிழ் கவி பாரதியின் மீசையை மறக்கமுடியுமா? ஐயர் வீட்டிலும் மீசை உண்டு என்பதை பாரதியிடம் மட்டுமே காணமுடியும். புரட்சிக் கவி என்றால் சும்மாவா?
எட்டையபுரம் அரண்மனையிலேயே வேலை கிடைத்தும் சில காலம் மட்டுமே அதில் இருந்து பின் தன விருப்பப்படி கவி புனைவதிலேயே முழு மூச்சாய் இருந்தார்.யானைக்கு வெள்ளை நிறம் தான் பிடிக்காது. ஆனால் தமிழுக்கு வந்த சோதனை! இவரின் கருப்பு மீசையும் பிடிக்காமல் போனது தான் சோகத்தின் உச்சம்.
டோசி மெட்ரிக் முறையில் தெற்கு குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சியின்படி, மீசை, தாடிகளை வளர்ப்பவர்களுக்கு புற்றுநோய்க்கு காரணமன கதிரியிக்கத்தின் பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளது.முகச் சருமத்தில் ஏற்படும் சூரியக்கதிர்களின் பாதிப்பு குறித்து கண்காணிக்கப்பட்டதில், பெரிய மீசை வளத்திருப்பவர்களின் சரும பாதிப்பு, மீசையை மழித்துவிட்டிருக்கும் நபர்களின் பாதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதெல்லாம் சரி! 'மீசைப் போட்டியில் யார் ஜெயிச்சதுனு இன்னும் சொல்லலியே' னு கேக்குறீங்களா? இதோ அதற்கான விடை:
அழகான மீசை, அரை தாடி, முழு தாடி என்று பல பிரிவுகளில் போட்டிகள் நடை பெற்றன. அதில், ஜெர்மனியைச் சார்ந்த திரு.வுல்ப்கேங் ஸ்நைடர், அழகான மீசைக்கான முதல் பரிசினைப் பெற்றார். அரசத் தோரணைக்கான மீசைகுறிய பரிசு மீண்டும் ஒரு ஜெர்மனியருகே. பெயர்: திரு. யூஜென் ஹிப்.
உண்மையான மீசை போன்ற மேக்கப் போட்டிருந்த மியூகே மீட்டே என்ற ஜெர்மானியப் பெண்மணி, பெண்களுக்கானப் போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்றார்.
இந்த போட்டியை நேரிலே பார்க்கணும்னு ஆசையா? அடுத்த போட்டி 2021 ம் ஆண்டு, 500 போட்டியாளர்களுடன் நியூசிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது. என்ன! டிக்கெட் போட்டுட்டீங்களா?
Photo Courtesy : worldbeardchampionships .com

No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram