Tuesday, June 11, 2019

ஜெர்மனி கிளினிக்கில் ஒரு நாள்.......


இன்று காலை 10:15 மணிக்கு பிராங்பேர்ட்ல் உள்ள காது, மூக்கு, தொண்டை நிபுணரின் கிளினிக்குக்கு சென்றிருந்தேன். கொஞ்ச நாட்களாகவே மூக்குப் பிரச்சினை. போலன் அலர்ஜியாக இருக்கும் என்று தொடக்கத்தில் ஒருசில ஸ்பிரே வகையறாக்களைத் தந்தார். குளிர் காலத்தில் பூ, இலை என்று அனைத்தையும் இழந்து மொட்டையாக இருக்கும் மரங்கள், ஏப்ரல் மாதத்தில் பூக்களைத் துளிர்விடும். பூ மலர்ந்த பின்னர் தான் இலைகள் வெளிவரும். செர்ரி, ஆப்பிள் என்று பல மரங்களில் முதலில் பூக்கள் தான். அந்த பூக்களின் மகரந்தம் காற்றில் பரவி, பலருக்கு ஓவ்வாமையை உண்டாக்கும். ஏப்ரல் மாதத்தில் பலருக்கு இந்த போலன் அலர்ஜி பிரச்சினை தான். ஆனால் எனக்கு ஜூன் மாதமாகியும் பிரச்சினை தொடரவே, மாற்று மருந்தாக களிம்பு தந்தார். அதைப் போட்ட பின், கண் எரிச்சல் ஆரம்பமானது. கடந்தமுறை டாக்டரிடம் போனபோது கண் பிரச்சினையையும் சொன்னேன். ரிசப்ஷனில் சொல்லி அலர்ஜி டெஸ்ட் எடுக்க அப்பாயின்மென்ட் வாங்கி டெஸ்ட் எடுங்கள். பின் முடிவு செய்வோம் என்றார்.

ஜெர்மனியைப் பொறுத்தவரையில் மருத்துவம் என்பது முதல் வகுப்புத்தரம். ஆனால், எடுத்தவுடன், அதிக டோஸ் மருந்து எதுவும் தரமாட்டார்கள். "நம் உடலே தன்னை சரியாக்கிக்கொள்ளும்" என்பது அவர்களின் தாரக மந்திரம்.அது மிகவும் சரிதான்!

இரண்டு வாரங்கள் காத்திருந்து, நேற்று அப்பாயின்மென்ட் கிடைத்தது. என் பேமிலி டாக்டர் பற்றிய விவரங்களை முதல் முறை சென்றபோதே கொடுத்திருந்தபடியால்,

"மூக்கு சம்பந்தமாக, இது வரைக்கும் நான் எடுத்த மருத்துவ சிகிச்சை விபரங்கள் என் பேமிலி டாக்டருக்கு அனுப்பிவிடீர்களா" என்று ரிசப்ஷனில் கேட்டு உறுதி செய்து கொண்டு காத்திருக்கும் அறைக்கு சென்றேன். ஜெர்மனிக்கு யார் வந்தாலும், முதலில் அவர், தன் வீட்டின் அருகில் உள்ள மருத்துவர் ஒருவரைப் பார்த்து விபரங்களைக் கூறி அங்கு பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னாளில், காய்ச்சல், தலைவலி அல்லது உடல்நலமில்லாமல் விடுப்பு எடுக்கவேண்டும் என்று எதுவென்றாலும் முதலில் இவரிடம் தான் நாம் செல்ல வேண்டும். நோய்க்கு மருந்து தந்து, எத்தனை நாட்கள் வீட்டில் ரெஸ்ட் எடுக்கவேண்டும் என்ற காரணத்துடன் 3 கடிதங்களை நமக்குத் தருவார். அதில் ஒன்றை நம் அலுவலகத்துக்கும், இன்னொன்றை மருத்துவ காப்பீடு நிறுவனத்திற்கும் அனுப்ப வேண்டும். 3-வது நகல் நமக்கானது.

காத்து, மூக்கு மாதிரி சிறப்பு மருத்துவரைப் பார்க்க விரும்பி அவர்களிடம் சென்றால், அங்கு நம் பேமிலி டாகடர் விபரங்களைச் சொல்ல வேண்டும். அப்போது தான், நம் மருத்துவ குறிப்புக்கள் பேமிலி டாக்டருக்கு போகும்.அதே சமயம் நமக்கு மருந்து தருவதற்கு முன் பேமிலி டாக்டரிடம் ஏதேனும் விளக்கங்கள் தேவையென்றாலும் கேட்டு தெரிந்துகொள்வார். உண்மையிலேயே இது ஒரு நல்ல சிஸ்டம். திங்கள் முதல் வெள்ளி வரை பேமிலி டாக்டரிடம் செல்லலாம். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் அங்கு செல்ல முடியாது. அவருக்கும் விடுமுறை தான்! அந்த நாட்களில் ஒரு சில மருத்துவமனைகள் இயங்கும். அங்கு தான் செல்ல வேண்டும். இது போக, ஏதாவது எமெர்ஜென்சி என்றால் ஆம்புலன்சுக்கு போன் செய்தால் உடனே வந்து நம்மை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வார்கள். எப்போதுமே நம் மருத்துவ காப்பீட்டு அட்டையை நம்மிடம் வைத்திருக்கவேண்டும். அதைக் காட்டினால் தான் நம் விபரங்களை அவர்கள் கம்பியூட்டரில் எடுக்க முடியும்.

காத்திருக்கும் அறையில் இருந்த புத்தகத்தைப் புரட்டினேன். வெயில் காலம் ஆரம்பித்துவிட்டபடியால் அறையில் இருந்த ஹீட்டர் 'ஆப்' செய்யப்பட்டு ஏசி 'ஆன்' ஆகியிருந்தது. நம் ஊர் மாதிரி அல்லாமல், டாகடர் இந்த அறைக்கு வந்து நோயாளியிடம் கை குலுக்கிய பின், தன் அறைக்கு அழைத்துச் செல்வார். எனக்கு அலர்ஜி டெஸ்ட் எடுக்க வேண்டி இருந்ததால் அந்த நபர் வரவுக்காக காத்திருந்தேன். பத்து நிமிடத்தில் வந்து என்னை பக்கத்து ரூமுக்கு அழைத்துச்சென்றார்.

இடது கையில், முழங்கைக்கும் மணிகட்டுக்கும் இடையில், பேனாவால் 10 கட்டங்கள் வரைந்து அதில்
1 முதல் 10 வரை நம்பரையும் எழுதினார். ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு துளி வீதம் 10 வித மருந்துகளை ஒரு சொட்டு வைத்து, ஊசியால் மெல்லிதாக குத்தி, பின் ஊசிகளை குப்பைக் கூடையில் போட்டார். ஸ்டாப் வாச் ஒன்றில் 5 நிமிடங்கள் செட் செய்து என் அருகில் வைத்து , கோவில் மணி போன்ற சிறிய சைஸ் மணி ஒன்றையும் என்னிடம் தந்தார்.ஸ்டாப் வாச் நின்றதும் மணியை அடிக்க சொன்னார். அடித்தேன். வந்து கையை தடவிப்பார்த்தார். சொட்டு மருந்து வைத்த இடங்களில் சிலது தடித்தும் மற்றவை எந்த மாற்றம் இல்லாமலும் இருந்தது.

கம்பியூட்டரில் அனைத்தையும் பதிவேற்றியவர், மீண்டும் காத்திருக்கும் அறையில் வெயிட் பண்ண சொன்னார். சென்றேன். டாக்டர் வந்து என்னிடம் கை குலுக்கி, தன் அறைக்கு அழைத்துச் சென்றார். மூக்கிற்கும் கண் எரிச்சலுக்கும் மருந்து கிடைத்தது. வாங்கிக்கொண்டு பேமிலி டாக்டரிடம் சென்றேன். 3 நாட்கள் விடுமுறைக்கான கடிதங்களைத் தந்தார். இம்முறை சரியாகிவிடும் என்று நினைக்கிறன். நம்பிக்கை தானே வாழ்க்கை!

No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram