Friday, June 21, 2019

ஜெர்மனியில் தமிழ தரவு விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம்!

ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரமே கடந்த 12-ம் தேதி மாலை உற்சாகம் கொண்டு புதுப்பொலிவுடன் விளங்கியது. ஒயிட்ஹால் மீடியா என்ற அமைப்பு 5வது முறையாக ஸ்டீஜ்ன்பெர்கர் பிராங்பேர்ட்ல் டேட்டா அனலிடிக்ஸ் கான்பரென்ஸை நடத்தியது. டாய்ச்ச டெலிகாம், இ.ஆன் போன்ற ஜெர்மனியின் மிகப்பெரிய நிறுவனங்களின் சிஇஓ, சிஓஓ-க்கள் பார்வையாளர்களாய் அமர்ந்திருக்க, மேடையில் அழகான பெண் ஒருவர் தோன்றி, அடுத்து, டேட்டா அனலிடிக்ஸ் பற்றி பேச திரு. விஜய் பிரவின் மகராஜன் அவர்களை அழைக்கிறேன் என்றதுமே, பலத்த கரவொலிகளுக்கு நடுவே டேட்டா அனலிடிக்ஸில் நிபுணத்துவராய் விளங்கும் அந்த 28 வயது இளைஞர் மேடையேறினார். எதிரே அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பவர்கள் அனைவருமே வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் என்ற போதிலும் இவரின் பேச்சு எந்த ஒரு பிசிறும் இல்லாமல் செம்மையாக இருந்தது. கேள்வி நேரத்தில் இவரின் தெளிவான பதிலைக் கேட்டு பல சிஇஓ-க்கள் பிரமிப்பின் உச்சத்திற்கே போய்விட்டனர்.


கான்பெரன்ஸ் முடிந்தவுடன் அவரை அணுகி 'வாழ்த்துக்கள்' சொன்னோம். உங்கள் பேட்டி வேண்டுமே! என்றவுடன், ஞாயிறுக்கிழமை மாலை 6 மணிக்கு வாங்க என்றார். இதோ அவருடைய பிரத்தியேகப் பேட்டி:

உங்கள் பூர்வீகம்?

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள தெற்கு அச்சம்பட்டி கிராமத்தில் பிறந்து, அப்பாவின் பணி காரணமாக தூத்துக்குடிக்கு இடம் பெயர்ந்தோம். அப்பா மகராஜன், தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆய்வகக்கூடத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகவும், அம்மா சந்திரா, வைப்பாரில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாகவும் பணியாற்றுகிறார்கள்.'வாத்தியார் பிள்ளை மார்க்' னு சொல்லுவாங்களே, அதுக்கேத்தமாதிரி 10 மற்றும் 12ம் வகுப்புகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்று, ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் 56 ஆயுவு கட்டுரைகள் சமர்ப்பித்து வாங்கிய 'சிறந்த மாணவர் விருது'ம் தான் என்னை எனக்கே புரிய வைத்தது. சிங்கப்பூரில் உள்ள "நேஷனல் யூனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர்" பல்கலைக்கழகத்தில் 'தானியங்கி இயந்திரங்கள்' பற்றி பேசி அவார்டும் வாங்கியிருக்கிறேன். ஐஐடி கான்பூரின் 'தூதுவர்' என்ற பதவியும் கல்லூரி காலத்திலேயே எனக்குக் கிடைத்தது. இவை எல்லாம் எனக்கு மீண்டும் மீண்டும் சாதிக்கவேண்டும் என்ற ஆசையை மனதில் வேரூன்ற வைத்தது.

ஜெர்மனிக்கு வந்தது எப்படி?

மின் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் படிக்க ஜெர்மனிவந்தேன். படிப்பு முடிந்தவுடன் டேட்டா அனலிடிக்ஸ் பிரிவில் வேலைகிடைத்தது. இந்த துறை எனக்கு பிடித்துப் போகவே அதில் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். பின், சீமன்ஸ் நிறுவனத்தின் மெட்ரோ ரயில் ப்ராஜெக்ட்டில் இணைந்தேன். சேர்ந்த 9 வது மாதத்திலேயே அந்த ப்ராஜெக்ட்டை சிறப்பாக செய்து முடித்ததால் அதிக பட்சம் 3 சதவீதம் சம்பள உயர்வு கொடுக்கும் இடத்தில் எனக்கு 8.4% கொடுத்து பதவி உயர்வும் தந்தார்கள்.

அது என்ன டேட்டா அனலிடிக்ஸ்?

டேட்டா என்றாலே நம் அனைவர்க்கும் நினைவுக்கு வருவது கஸ்டமர் முகவரி, மொபைல் நம்பர் போன்றவை தான். ஆனால் டேட்டா அனலிடிக்ஸ் என்பது அணுவைத் துளைத்து புரோட்டான், நியூட்ரான் ஐ துல்லியமாக அளவிடுவது போல நம் மொபைலில் நாம் எடுக்கும் ஒரு புகைப்படத்தை வைத்து, அது எடுக்கப் பட்ட இடம், அதன் அட்சரேகை, தீர்க்கரேகை விபரங்கள், அந்த இடத்தின் அருகில் உள்ள கடைகள் மற்றும் அவை அளிக்கும் சலுகைகள் என்று அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். நாம் முகநூல் பார்க்கும் போது "உங்களுக்கு இவரைத் தெரிந்திருக்கலாம்" என்று மற்றவர்களை நமக்குக் காட்டுமே! அதுவும் டேட்டா அனலிடிக்ஸின் அடிப்படையில் தான்.மொத்தத்தில் இதுவும் ஒரு செயற்கை நுண்ணறிவு தான்.

டேட்டா அனலிடிக்ஸ் கான்பரென்ஸில் பேச அழைப்பு வந்தது எப்படி?
ஒயிட்ஹால் மீடியா எங்கள் சீமென்ஸ் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, டேட்டா அனலிடிக்ஸில் என் நுண்ணாய்வுத் திறமையைப் பற்றி கூறியிருக்கிறார்கள். உடனே, எனக்கு மெயில் அனுப்பி சில விஷயங்களை கேட்டறிந்தனர்.பின், ஒரு பக்க அளவில் டேட்டா அனலிடிக்ஸ் பற்றி ஒரு கட்டுரை எழுதி அனுப்பச்சொல்லியிருந்தனர். சில வாரங்கள் கழித்து, மூன்றாவதாக வீடியோ கான்பெரன்ஸில் என்னிடம் சில நுணுக்கமான விஷயங்களை விளக்கச்சொல்லி கேட்டனர். அதன் பின்னர் நடந்தது தான் உங்களுக்குத்தெரியுமே!

உங்க குடும்பம் பற்றி?

கடந்த நவம்பரில் திருமணம். மனைவி இரத்தினமங்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி துறையில் முதுகலை பட்டம் பயின்றவர். இப்போது, ஜெர்மன் மொழி கற்றுக்கொண்டிருக்கிறார்.

எதிர்காலத் திடடம்?

படித்துக்கொண்டிருக்கும், வாழ்வில் முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டி அவர்களும் என் போல சாதனைகள் பல பண்ண வழிமுறைகள் வகுத்துக்கொண்டிருக்கிறேன். கூடியவிரைவில் அது பற்றிய அறிவிப்பு உங்களை வந்துசேரும்.

அவர் முயற்சிகள் கைகூடி மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம்.

என் கட்டுரை தினமணியில்......


http://bit.ly/2Y5e8e6

என் கட்டுரை தினமலரில்......

ஜெர்மனியில் இந்தியத் தூதரகம் கொண்டாடிய யோகா தினம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் இந்திய தூதரகம் சார்பாக யோகா தினம் கொண்டாடப்பட்டது.








கடந்த சில வாரங்களாகவே வாட்ஸப் மற்றும் முகநூல் வாயிலாக பிராங்பேர்ட்டில் நடக்கவிருந்த யோகா நிகழ்ச்சி பற்றிய அழைப்பிதழ் பலராலும் பரிமாறப்பட்டுகொண்டிருந்தது. அதுவே நிறைய பேருக்கு இந்நிகழ்ச்சி பற்றி தெரிய உதவியாக இருந்தது. டெக்னாலஜி முன்னேற்றத்தில் இதுபோன்ற சில நல்ல விஷயங்களும் நடக்கத்தான் செய்கிறது.
மாலை 5 மணிக்கு பிராங்பேர்ட்டில் உள்ள 'வால்தெர்-பான்-க்ரோன் பெர்க் பிளாட்ஸ்' என்ற இடத்தில நிகழ்ச்சி ஆரம்பமானது. உடலுக்கு இதமாக சூரியன் 30 டிகிரி வெப்பத்தில் பிரகாசிக்க, அருகிலேயே குளிர்ந்த நீரூற்று உள்ளதைக் குதூகலிக்கச்செய்ய, என்று சூழ்நிலைகள் அற்புதமாக அமைந்திருந்தது.
நிகழ்ச்சித் தொடக்கத்தில், தேவதைகள் போல வெள்ளை உடை மற்றும் இறக்கைகளுடன் ஆண், பெண்கள் மேடையில் நின்றுகொண்டிருந்ததைப் பார்க்க, கொள்ளை அழகு!
பிராங்பேர்ட்டின் இந்தியத் தூதரக அதிகாரி திருமதி.பிரதிபா பார்க்கர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.சமஸ்கிருத ஸ்லோகன் ஒலிக்க நிகழ்ச்சி ஆரம்பமானது.
முன்னதாக வந்து டீ சர்ட் பெற்றுக்கொள்ளலாம் என்று ஏற்கெனவே அறிவித்தபடியால் பலர் சரியான நேரத்திற்கு முன்னதாக வந்து பெற்றுக்கொண்டனர். ஒரு சிலர் தங்களுக்கு வசதியான தளர்வான உடைகளை அணிந்து வந்திருந்தனர்.சேலையிலும் சிலரைக் காணமுடிந்தது.
மேடையில் யோகா நிபுணர்கள் செய்து காட்ட, வந்திருந்த அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
3 வயது குழந்தையும் யோகா செய்ததைப் பார்த்தபோது, துள்ளிக்குதித்த நம் மனதும் அந்த குழந்தையோடு சேர்ந்து யோகா செய்தது.
பிராங்பேர்ட்டின் இந்திய தூதரக அதிகாரி பிரதிபா பார்க்கர் அவர்களும் மற்றவர்களுடன் இணைந்து யோகா செய்தது அவரின் அர்பணிப்புக்கு ஒரு சான்று. அருகே, ஒருசில ஸ்டால்களில் யோகா சம்பந்தமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
கடந்த 15ம் தேதி கொலோன் நகரத்திலும் இந்திய தூதரகம் சார்பாக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
புகைப்படங்கள்: இந்திய தூதரகம், பிராங்பேர்ட்

Tuesday, June 11, 2019

ஜெர்மனி கிளினிக்கில் ஒரு நாள்.......


இன்று காலை 10:15 மணிக்கு பிராங்பேர்ட்ல் உள்ள காது, மூக்கு, தொண்டை நிபுணரின் கிளினிக்குக்கு சென்றிருந்தேன். கொஞ்ச நாட்களாகவே மூக்குப் பிரச்சினை. போலன் அலர்ஜியாக இருக்கும் என்று தொடக்கத்தில் ஒருசில ஸ்பிரே வகையறாக்களைத் தந்தார். குளிர் காலத்தில் பூ, இலை என்று அனைத்தையும் இழந்து மொட்டையாக இருக்கும் மரங்கள், ஏப்ரல் மாதத்தில் பூக்களைத் துளிர்விடும். பூ மலர்ந்த பின்னர் தான் இலைகள் வெளிவரும். செர்ரி, ஆப்பிள் என்று பல மரங்களில் முதலில் பூக்கள் தான். அந்த பூக்களின் மகரந்தம் காற்றில் பரவி, பலருக்கு ஓவ்வாமையை உண்டாக்கும். ஏப்ரல் மாதத்தில் பலருக்கு இந்த போலன் அலர்ஜி பிரச்சினை தான். ஆனால் எனக்கு ஜூன் மாதமாகியும் பிரச்சினை தொடரவே, மாற்று மருந்தாக களிம்பு தந்தார். அதைப் போட்ட பின், கண் எரிச்சல் ஆரம்பமானது. கடந்தமுறை டாக்டரிடம் போனபோது கண் பிரச்சினையையும் சொன்னேன். ரிசப்ஷனில் சொல்லி அலர்ஜி டெஸ்ட் எடுக்க அப்பாயின்மென்ட் வாங்கி டெஸ்ட் எடுங்கள். பின் முடிவு செய்வோம் என்றார்.

ஜெர்மனியைப் பொறுத்தவரையில் மருத்துவம் என்பது முதல் வகுப்புத்தரம். ஆனால், எடுத்தவுடன், அதிக டோஸ் மருந்து எதுவும் தரமாட்டார்கள். "நம் உடலே தன்னை சரியாக்கிக்கொள்ளும்" என்பது அவர்களின் தாரக மந்திரம்.அது மிகவும் சரிதான்!

இரண்டு வாரங்கள் காத்திருந்து, நேற்று அப்பாயின்மென்ட் கிடைத்தது. என் பேமிலி டாக்டர் பற்றிய விவரங்களை முதல் முறை சென்றபோதே கொடுத்திருந்தபடியால்,

"மூக்கு சம்பந்தமாக, இது வரைக்கும் நான் எடுத்த மருத்துவ சிகிச்சை விபரங்கள் என் பேமிலி டாக்டருக்கு அனுப்பிவிடீர்களா" என்று ரிசப்ஷனில் கேட்டு உறுதி செய்து கொண்டு காத்திருக்கும் அறைக்கு சென்றேன். ஜெர்மனிக்கு யார் வந்தாலும், முதலில் அவர், தன் வீட்டின் அருகில் உள்ள மருத்துவர் ஒருவரைப் பார்த்து விபரங்களைக் கூறி அங்கு பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னாளில், காய்ச்சல், தலைவலி அல்லது உடல்நலமில்லாமல் விடுப்பு எடுக்கவேண்டும் என்று எதுவென்றாலும் முதலில் இவரிடம் தான் நாம் செல்ல வேண்டும். நோய்க்கு மருந்து தந்து, எத்தனை நாட்கள் வீட்டில் ரெஸ்ட் எடுக்கவேண்டும் என்ற காரணத்துடன் 3 கடிதங்களை நமக்குத் தருவார். அதில் ஒன்றை நம் அலுவலகத்துக்கும், இன்னொன்றை மருத்துவ காப்பீடு நிறுவனத்திற்கும் அனுப்ப வேண்டும். 3-வது நகல் நமக்கானது.

காத்து, மூக்கு மாதிரி சிறப்பு மருத்துவரைப் பார்க்க விரும்பி அவர்களிடம் சென்றால், அங்கு நம் பேமிலி டாகடர் விபரங்களைச் சொல்ல வேண்டும். அப்போது தான், நம் மருத்துவ குறிப்புக்கள் பேமிலி டாக்டருக்கு போகும்.அதே சமயம் நமக்கு மருந்து தருவதற்கு முன் பேமிலி டாக்டரிடம் ஏதேனும் விளக்கங்கள் தேவையென்றாலும் கேட்டு தெரிந்துகொள்வார். உண்மையிலேயே இது ஒரு நல்ல சிஸ்டம். திங்கள் முதல் வெள்ளி வரை பேமிலி டாக்டரிடம் செல்லலாம். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் அங்கு செல்ல முடியாது. அவருக்கும் விடுமுறை தான்! அந்த நாட்களில் ஒரு சில மருத்துவமனைகள் இயங்கும். அங்கு தான் செல்ல வேண்டும். இது போக, ஏதாவது எமெர்ஜென்சி என்றால் ஆம்புலன்சுக்கு போன் செய்தால் உடனே வந்து நம்மை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வார்கள். எப்போதுமே நம் மருத்துவ காப்பீட்டு அட்டையை நம்மிடம் வைத்திருக்கவேண்டும். அதைக் காட்டினால் தான் நம் விபரங்களை அவர்கள் கம்பியூட்டரில் எடுக்க முடியும்.

காத்திருக்கும் அறையில் இருந்த புத்தகத்தைப் புரட்டினேன். வெயில் காலம் ஆரம்பித்துவிட்டபடியால் அறையில் இருந்த ஹீட்டர் 'ஆப்' செய்யப்பட்டு ஏசி 'ஆன்' ஆகியிருந்தது. நம் ஊர் மாதிரி அல்லாமல், டாகடர் இந்த அறைக்கு வந்து நோயாளியிடம் கை குலுக்கிய பின், தன் அறைக்கு அழைத்துச் செல்வார். எனக்கு அலர்ஜி டெஸ்ட் எடுக்க வேண்டி இருந்ததால் அந்த நபர் வரவுக்காக காத்திருந்தேன். பத்து நிமிடத்தில் வந்து என்னை பக்கத்து ரூமுக்கு அழைத்துச்சென்றார்.

இடது கையில், முழங்கைக்கும் மணிகட்டுக்கும் இடையில், பேனாவால் 10 கட்டங்கள் வரைந்து அதில்
1 முதல் 10 வரை நம்பரையும் எழுதினார். ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு துளி வீதம் 10 வித மருந்துகளை ஒரு சொட்டு வைத்து, ஊசியால் மெல்லிதாக குத்தி, பின் ஊசிகளை குப்பைக் கூடையில் போட்டார். ஸ்டாப் வாச் ஒன்றில் 5 நிமிடங்கள் செட் செய்து என் அருகில் வைத்து , கோவில் மணி போன்ற சிறிய சைஸ் மணி ஒன்றையும் என்னிடம் தந்தார்.ஸ்டாப் வாச் நின்றதும் மணியை அடிக்க சொன்னார். அடித்தேன். வந்து கையை தடவிப்பார்த்தார். சொட்டு மருந்து வைத்த இடங்களில் சிலது தடித்தும் மற்றவை எந்த மாற்றம் இல்லாமலும் இருந்தது.

கம்பியூட்டரில் அனைத்தையும் பதிவேற்றியவர், மீண்டும் காத்திருக்கும் அறையில் வெயிட் பண்ண சொன்னார். சென்றேன். டாக்டர் வந்து என்னிடம் கை குலுக்கி, தன் அறைக்கு அழைத்துச் சென்றார். மூக்கிற்கும் கண் எரிச்சலுக்கும் மருந்து கிடைத்தது. வாங்கிக்கொண்டு பேமிலி டாக்டரிடம் சென்றேன். 3 நாட்கள் விடுமுறைக்கான கடிதங்களைத் தந்தார். இம்முறை சரியாகிவிடும் என்று நினைக்கிறன். நம்பிக்கை தானே வாழ்க்கை!

என் கட்டுரை விகடனில்.....


என் கட்டுரை விகடனில் .......
https://www.vikatan.com/news/world/159517-muddy-game-held-at-germany.html




என் கட்டுரை  விகடனில்.....
https://www.vikatan.com/news/world/159322-german-policeman-belittles-a-person-after-fatal-truck-accident.html

Monday, June 10, 2019

தினமணியில் என் படைப்பு......

என் கட்டுரை தினமணி மற்றும் தினமலரில் ..............

ஜெர்மனியில் சகதி விளையாட்டு


கோடைகாலம் வந்துவிட்டாலே ஜெர்மனியர்களுக்கு கொண்டாட்டம் தான். அதுவரையிலும் தலை முதல் கால் வரை இழுத்துப் போர்த்திக்கொண்டவர்கள் இப்போது தான் அந்த உடைகளிலிருந்து தங்களை சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்வார்கள். இந்த 3 மாதங்களைத் தவறவிட்டால், அப்புறம் விட்டமின் டி- க்காக அடுத்தவருடம் வரை காத்திருக்க வேண்டும்.அதனால் இந்த கோடை காலத்தில் பல விளையாட்டுப் போட்டிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். அதில் ஒன்று தான் சகதியில் சேற்றிலும் உருண்டு புரளும் விளையாட்டு.
ஜெர்மனியிலுள்ள ஆர்ன்பெர்க் நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த விளையாட்டில் சுமார் 15,000 பேர் கலந்து கொண்டனர்.போட்டியாளர்கள் சேறு, சகதி மற்றும் அழுக்கு நீர் என்று 20 க்கும் மேற்பட்ட தடைகளை கடந்து செல்லும் வகையில் போட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது. உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இந்த போட்டிக்கு இருப்பதால் இது போன்று இன்னும் 2 போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற உள்ளன.
ஆக மொத்தத்தில் இந்த கோடை காலம் ஜெர்மானியர்களுக்கு கொண்டாட்டம் தான்!

Sunday, June 9, 2019

கொசுவால் கிடைத்த பரிசு- ஜெர்மனியில் சுவாரஸ்யம்


ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுத்தால்.....
இலவு காத்த கிளிக்கு மாம்பழம் கிடைத்தால்.....

அப்படி ஒரு பரிசு ஜெர்மனியைச் சேர்ந்த க்ளாஸ் டாம் என்பவருக்கு கிடைத்திருக்கிறது.ஆம்! ஜெர்மனியில்  இயற்கை புகைப்படக்கலைஞர்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட போட்டியில் அவருடைய
'கொசுவை எதிர்கொண்ட சுண்டெலி'யின் புகைப்படத்துக்கு முதல்  பரிசு கிடைத்துள்ளது.

ஒவ்வொருவருடமும் ஜெர்மனியில் உள்ள இயற்கை புகைப்படக்கலைஞர்கள் சங்கம் சார்பாக 7 பிரிவுகளில் அதாவது:- பறவைகள்,  பாலூட்டிகள், பிற விலங்குகள், செடிகள்,இயற்கைநிலக்காட்சி, இயற்கைஸ்டுடியோ மற்றும் ஆக்க்ஷன்என்ற வகையில்  புகைப்பட போட்டி நடத்தப்படுகிறது.அதில் க்ளாஸ் டாமின் புகைப்படம் முதல் பரிசை தட்டிச்சென்றது.






இதைப்பற்றி அவர் கூறும் போது" டோர்ட்முண்ட் நகரிலுள்ள ரோம்பெர்க் பூங்காவிற்கு  நண்பருடன் செல்வது வழக்கம். குளிர் காலங்களில் பலர்  பறவைகளுக்கு பிரட் துண்டுகளை உணவாக விசிறி செல்வதையும் கவனித்திருக்கிறேன். சிந்தி சிதறி கிடைக்கும்  பிரட் துண்டுகளை மாலையில் எலிகள் வந்து உண்ணும். அதை சிலமுறை புகைப்படமும் எடுத்திருக்கிறேன்.ஆனால் எதுவுமே எனக்கு திருப்தியளிக்கவில்லை. ஆனால் இந்த பரிசு பெற்ற புகைப்படத்துக்காக பலமுறை காத்திருந்து, சரியான பின்புல ஒளியில் போட்டோ எடுக்கும் போது அங்கே ஒரு கொசு வர, புகைப்படம்  சிறப்பாக அமைந்தது" என்றார்.






7 பிரிவுகளில் பரிசுகள் தனித்தனியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இந்த புகைப்படம் அவை எல்லாவற்றிற்கும் முதன்மையாக முதல் பரிசை தட்டிச்சென்றுள்ளது. க்ளாஸ் டாம்  பலமுறை சிறந்த புகைப்படத்துக்கான பரிசு வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Photo: www.gdtfoto.de